"ஹலோ தலைவரே, தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு உற்சாக மாகவும் சிறப்பாகவும் பொங்கல் வைத்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.''”

Advertisment

"ஆமாம்பா, தேர்தல் நேரத்தில் நம் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களிலும் பண்ணை வீடுகளிலும் பொங்கலைக் கொண்டாடி இருக்கிறார்களே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, பொங்கல் விழாவைக் கொண்டாடினால்தான் தமிழ் மக்களை ஈர்க்க முடியும்ன்னு அகில இந்திய கட்சித் தலைவர்களும் நம்பறாங்க. அந்த வகையில், பிரதமர் மோடி இந்த ஆண்டும் பொங்கல் வைத்து தமிழர் திருநாளைக் கொண்டாடி இருக்கிறார். மத்திய அமைச்சர் எல்.முருகனின்  டெல்லி இல்லத்தில்  கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும், 13 ஆம் தேதி பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்தான் பிரதமர் மோடியும் கலந்துகொண்டு பொங்கல் கொண்டாடினார். அந்த  விழாவில் தமிழர்களின் கிராமியக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட  கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தன. கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் நடிகை மீனாவையும் கலந்துகொள்ள வைத்தார் முருகன். அதே போல இந்த வருடம், அவர் எந்த நடிகையை கலந்துகொள்ள வைக்கப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு, விழா தொடங்கும் நேரம் வரை தமிழக பா.ஜ.க.வினர் மத்தியில் பரவி யிருந்தது. இந்நிலையில், பிரதமரின் பொங்கல் விழாவில் "பராசக்தி' திரைப்படக் குழுவினரான சிவகார்த்தி கேயன், ரவிமோகன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண் டது பலரின் புருவங்களை உயரச் செய்தது. ஜனநாயக னுக்கும் பராசக்திக்குமான போட்டி, "பராசக்தி' படத்தில் அன்றைய காங் கிரஸ் அரசு மீதான விமர் சனங்களை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்யப் பார்க்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.''

rang1

"அதுசரிப்பா, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி இறங்கப்போகிறாரே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, பிரதமர் மோடி வருகிற 23 ஆம் தேதி தமிழகம் வருவது  உறுதியாகி இருக்கிறது. சென்னை வரும் அவர் கவர்னர் மாளிகையில் தங்க இருக்கிறாராம். அடுத்து, சென்னையில் பிரமாண்டமான பொதுக்கூட்டத் தில் அவர் பேச இருக்கிறாராம்.  இதுவரை இல்லாத அளவிற்கு சென்னையில் பெரிய அளவிற்கு அவர் ரோட் ஷோவையும்  நடத்தப்போகிறாராம்.  மோடி நிகழ்ச்சிகளை அ.தி.மு.க.வும் சேர்ந்து ஏற்பாடு செய்வதால், அதிக கூட்டத்தைக் கூட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது. மோடியின் பிரச்சார மேடையில் பா.ம.க. அன்புமணி, டி.டி.வி. தினகரன் ஆகியோரையும் பங்கேற்கச் செய்யவிருக்கிறார்களாம்.''”

"சரிப்பா, கூட்டணி குறித்து ராகுலின் மனநிலையை ஸ்மெல் செய்ய தி.மு.க. முயற்சித்திருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே... ஆட்சி அதிகாரத்தில் பங்குவேண்டும் என்று கூட்டணிக் கட்சியான  காங்கிரஸ் எழுப்பிவரும் குரல், தி.மு.க. தலைமையை எரிச்சலாக்கிவருகிறது. இது ராகுலுக்குத் தெரிந்தே எழுப்பப்படுகிற கோரிக்கையா என்று அறிய  விரும்பிய தி.மு.க. தலைமை, தி.மு.க.வுடன் நெருங்கிய நட்பு பாராட்டிவரும் காங்கிரஸ் நிர்வாகிகள் மூலம், கிரீஷ் சோடங்கரிடமே இது குறித்து விசாரிக்கச் சொன்னது. கோவாவைச் சேர்ந்ந்த இந்த கிரீஷ் சோடங்கர், காங்கிரஸின் மேலிட பொறுப் பாளராக இருப்பவர். இவரும் "கூட்டணி ஆட்சியே எங்கள் நோக்கம்' என்று பேசிவருகிறார். எனவே, இவரிடம்  அந்த காங்கிரஸ் நிர்வாகிகள் தி.மு.க.வின் இந்த ஐயம் பற்றிக் கேட்டனர். அப்போது, சோடங்கர் "ராகுல்ஜியிடம் 3 முறை ஆலோசனை நடத்தினேன். அவர்தான்  கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை வலி யுறுத்துங்கள் என்று என்னிடம் சொன்னார். அதனால், ஆட்சி அதிகாரத்தில் பங்குவேண்டும் என்பது ராகுல்ஜியின் குரல்'’ என்று சொல்லி யிருக்கிறார். இதையறிந்த தி.மு.க. தலைமை, ஆழ்ந்த யோசனையில் இருக்கிறதாம்.''”

"தி.மு.க. மா.செ. ஒருவருக்கே பெரிய பட்டை நாமம் போடப்பட்டிருக்கிறதே?''”

"கோவை மாவட்டத்தில் தி.மு.க.வில் மா.செ.வாக இருக்கும் முருகன் பெயர்கொண்ட அந்த பிரமுகர், வரும் தேர்தலில் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு, வென்று, அமைச்ச ரவையிலும் இடம்பெற வேண்டும் என்கிற கனவில் மிதந்துவருகிறார். இதைத் தெரிந்துகொண்ட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவர், ’அண்ணே, உங்களுக்கு சீட்டு கொடுக்கவேண்டும் என்று தி.மு.க. தலைமையில், நம்ம சோர்ஸ் மூலம் சொல்லி வைத்திருக்கிறேன். அட்வான்ஸ் ஆக பெரிய ஒரு ரூபாய் கேட்கிறார்கள்’ என்று கூறி, மா.செ.விடம் இருந்து ஒரு கோடி ரூபாயை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். தான் ஏமாற்றப்பட்டதைத் தாமதமாகத் தெரிந்துகொண்ட அந்த மா.செ., இப்போது வேர்க்க விறுவிறுக்க யோகேஷை தேடி அலைந்துகொண்டிருக்கிறாராம். ஒரு கட்சியின் மா.செ.வுக்கே பட்டை நாமம் போட்ட அந்த கில்லாடி நபரைப்பற்றி கேள்விப்பட்ட பலரும், திகைத்துப்போயிருக்கிறார்கள்.''”

"ஜனநாயகன் பட நிறுவனத்தையும் அமலாக்கத்துறை குறி வைத்திருக் கிறதாமே?''”

"விஜய்யின் "ஜனநாயகன்' படத்தை கே.வி.என். என்கிற நிறுவனம்தான் தயாரித்தது. இப்போது அது அடுத்ததாக "டாக்ஸிக்' என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. இதன் டிரெய்லர் அண்மையில் வெளியானது. அதில்  பெண் குழந்தைகளை மிகவும் மோசமாக காட்டுகிறார்கள் என்கிற புகாரை கர்நாடகாவைச் சேர்ந்த அமைப்புகள் எழுப்பி வருகின்றன. "டாக்ஸிக்' படத்துக்கு டிரெய்லரிலேயே எதிர்ப்பு கிளம்பியிருப்பது கே.வி.என். நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கே.வி.என். நிறுவனம் ஒரு பினாமி நிறுவனமாகும். அதில் முதலீடு போட்டவர்களையெல்லாம் அமலாக்கத்துறை விசாரிக்கத் தயாராகிவருகிறதாம்.''”

"அ.தி.மு.க.வும் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறதே?''”

"தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையை எப்போதும் ஹீரோ என்று வர்ணிக்கும். அதேபோல் தங்கள் தேர்தல் அறிக்கையும் இந்தமுறை சிறப்பாக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் எடப்பாடி, அதற்கான குழுவை அமைத்திருக்கிறார். இந்த தேர்தல் தயாரிப்புக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச் செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் மாநிலம் முழுவதும் சென்று பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் சேக ரித்து வருகிறார்கள். அவர்களிடம் பேசிய எடப்பாடி, ‘"100 சதம் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகள் மட்டும் அறிக்கையில் இடம்பெற வேண்டும். அதேபோல பெண்கள், இளைஞர் கள், மாணவர்கள், விவசாயிகள், வேலையில்லா பட்டதாரிகள் என அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கக்கூடிய அளவிற்கு, அறிக்கையை தயாரிக்க வேண்டும்'’என்றெல்லாம் அறிவுறுத்தியிருக் கிறாராம்.''”  

"அரசியலுக்கே முழுக்குப் போடப் போகிறேன் என்று ஓ.பி.எஸ். புலம்புகிறாராமே?''”

rang2

"ஆமாங்க தலை வரே, ஓ.பி.எஸ்.ஸை பொறுத்தவரை எப்படி யாவது அ.தி.மு.க.வில் சேர்ந்து, எடப்பாடிக்கு இணையான பதவியில் அமர்ந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் பிடிவாதமாக இருக் கிறார். அதனால் அமித்ஷா மூலம்  எடப்பாடிக்கு அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். ஆனால்  எடப்பாடியோ, அவரை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளும்படி இனியும் வலியுறுத்தாதீர்கள் என்று அமித்ஷா விடம் கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி விட்டாராம். இந்த நிலையில், த.வெ.க.வோடு கூட்டணி வைத்துக்கொள்வது பற்றி செங்கோட்டையனிடம் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். இதுகுறித்து செங்கோட்டையன் விஜய்யிடம் இதைச் சொல்ல, ’டி.டி.வி.தினகரனும் "நம் கூட்டணிக்கு வருவதாக இருந்தால், ஓ.பி.எஸ். டீமோடு நாம் கை குலுக்கலாம். இல்லையெனில் நாம் த.வெ.க.வில் ஓ.பி.எஸ்.ஸை சேர்ந்துகொள்ளச் சொல் லுங்கள். அவருக்கு ஒரு கௌரவமான பதவியைக்  கொடுக்கிறேன்'’ என்று சொல்லியிருக்கிறார் விஜய். இதைக்கேட்டு அப்-செட்டான ஓ.பி.எஸ்., ’"யாரும் நமது அணியை மதிக்கலை. பேசாமல், அரசியலுக்கே முழுக்கு போட்டுவிடலாமா? என்று நினைக்கிறேன்'’என்று தன்னைச் சந்திப்பவர் களிடம் ஏகத்துக்கும் புலம்புகிறாராம்.''”

"கோவில் காவலாளி அஜித்குமாரின் பெற்றோர் தங்கள் மகனின் மரணத்துக்கு நீதிகேட்டு, கோர்ட்டை நாடவிருக்கிறார்களாமே?''”

"கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ்காரர்களால் அடித்துக் கொல்லப் பட்ட விவகாரத்தில், அவர் மீது நகை திருட்டுப் புகாரை சுமத்திய நிகிதாவும் சிக்கினார். அஜித்குமா ருக்கு எதிராக போலீஸ் டீமை ஏவியவர் ஒரு டி.எஸ்.பி.  என்கிறார்கள். அவர் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கப் படவில்லை. இப்போது  கரூர் சம்பவம் மிகப்பெரிய வழக்காக உருவெடுத்து விஜய்யை விசாரிக்கும் அளவிற்கு சென்றுள்ள சூழ்நிலையில், தங்கள் மகன் அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தங்கள் மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், அஜித்குமாரின் பெற்றோர்,  நீதிமன்றத்தை அணுக இருக்கிறார்களாம்.  இது காவல்துறை தரப்பை பரபரப்பாக்கி இருக்கிறது.''”

"ஊழல் விவகாரத்தில் சிக்கியவருக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகளை கவர்னர் ரவி வாரிக் கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?''

"பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால், உயர்கல்வித்துறை ஒதுக்கிவைத்த முனைவர் ஜெயகாந்தனுக்கு , அறிவியல் துறையில் டீன், பல்கலைக்கழக செனட் உறுப்பினர், சிண்டிகேட் உறுப்பினர், நிதிக்குழு உறுப்பினர், என் ஐ.ஆர்.எஃப்  ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்திருக்கிறது காரைக்குடி அழகப்பா பல்கலை கழகம். இதற்காக கணிசமான தொகை கைமாறியதாகத் தகவல். இதில் கொடுமை என்னவென்றால் பல்கலைக்கழகத் திற்கான சிண்டிகேட் உறுப்பினரை நியமிப்பது கவர்னரின் வேலை. கல்வித்துறையின் சுற்றறிக் கையை மறைத்து, கவர்னருக்கே விபூதியடித் திருக்கிறாராம் காரைக்குடி பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி. இதுகுறித்து  பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் கவர்னரிடம் முறையிட்டிருக்கிறார்களாம்.''

"கோவையில் அரிசி கடத்தல் அதிகம் நடக்கிறதாமே?''”

"ஆமாங்க தலைவரே... கோவை மாவட்டத்தில் அரிசிக் கடத்தலையும், தரமற்ற உணவுப் பொருட்களின் விற்பனையையும் தடுக்க வேண்டிய புட்செல் போலீஸ் டீமில் உதவி ஆய்வாளராக இருந்த செல்வம் என்பவர், உணவுப்பொருள் கடத்தல் டீம்களுக்கு பக்கபலமாக இருந்து வந்தாராம். இந்த விசயம் முன்பு புட்செல் எஸ்.பி.யாக இருந்த பாலாஜிசரவணன் கவனத்துக்குப் போக... செல்வத்தை கோவை மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தூக்கியடித்திருக்கிறார். இதனால் அரிசி கடத்தல் நின்றுபோயிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் புட்செல் எஸ்.பி. பாலாஜிசரவணன் சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆனார். இதைத் தெரிந்துகொண்ட புட்செல் எஸ்.ஐ செல்வம், மீண்டும் கோவை மாவட்டத்தில் தலைகாட்டியதோடு.. கடத்தல் காரர்களை அழைத்து, ’"நான்தான் கோவைக்கே ராஜா. மீண்டும் தொழிலைச் செய்யுங்கள். எனக்குத் தரவேண்டிய கட்டிங்கைக் கொடுங்கள்'’ என்றபடி, மீண்டும் அரிசிக் கடத்தலுக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாராம். இது குறித்து உளவுத்துறை குறிப்பு எழுதியுள்ளதாம்.''”

"நெல்லை கமிஷனருக்கு எதிராக ஒரு டீம் களமிறங்கியிருக்கிறதே?''

"திருநெல்வேலி கமிஷனராக நியமிக்கப் பட்டிருப்பவர்  மணிவண்ணன். இவர் ஏற்கனவே திருநெல்வேலி எஸ்.பி.யாக  இருந்தபோது, அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்தன. அந்தப் புகார்களை இப்பொழுது ஒவ்வொன்றாக தூசி தட்டி, வெளியே கொண்டு வருவதற்கு ஒரு டீம் முயற்சித்து வருகிறது. இதையறிந்து அதிர்ந்துபோன மணிவண்ணன், அவர்களின் முயற்சியைத் தடுப்பதற்கான ஆயத்தங்களில் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்களே.''’

"நியாயமான முறையில் நடை பெறும் அரசு பணி நியமன நடவடிக் கையில் ஒரு குழு நுழைந்து கல்லா கட்டுதாமே?'' 

"ஆமாங்க தலைவரே... மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என பல துறைகளுக்கு அரசுத் தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யவுள்ளார்கள். இதன்மூலம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதோடு, அரசின் மீதான நம்பகத்தன்மையும் அதிகரிக்கும். மேலும், இந்த பணி நியமனங்களை பணம் வசூலிக்காமல் நியாயமான முறையில் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர். இச்சூழலில், 4 பேர் கொண்ட ஒரு குழு, உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கு, அரசின் பெயரையும், அமைச்சர் பெயரையும் சொல்லி, அவர்களுக்கே தெரியாமல், ஒரு பணியிடத்திற்கு 40 லட்ச ரூபாய்வரை வசூல் வேட்டையை தொடங்கி கல்லாகட்டி வருகிறார்களாம். தமிழ்நாடு முழுவதுமே இதுபோல் வசூல் வேட்டை நடந்துவருகிறதாம். தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால் பணம் ரிட்டர்ன் என்ற உறுதிமொழியோடு வசூல் தீவிரமாக நடக்கிறதாம். இதன்மூலம், தேர்தல் நேரத்தில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படவுள்ளதாக வருந்துகிறார்கள் ர.ர.க்கள்.''

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். விரைவில் நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்  போட்டியிடப் போவதாக செய்தி கள் கசிகின்றன. எனினும் இதுபற்றி அறிவாலயம் அதி காரப்பூர்வமாக இன்னும் அறிவிக்க வில்லை.''

___________
இறுதிச் சுற்று! 

rangbox

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்னிறுத்தி 20 நாட்களுக்கும் மேலாகப் போராடிவந்த பகுதிநேர இடைநிலை ஆசிரியர் களுடன் புதன்கிழமை (14-1-2026) பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில், "பகுதிநேர ஆசிரியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. அவர்களின் ஊதியம் மேலும் 2,500 ரூபாய் உயர்த்தப்பட்டது'' எனும் அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம், 12,500-ஆக இருந்த அவர்களின் ஊதியம் 15,000 ஆக உயர்ந் துள்ளது.                      

-இளையர்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண் டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர். சென்னை தலைமைச் செய லகத்தில் புதன்கிழமை (14-1-2026) நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டு அதிகாரிகள், அரசு ஊழியர்களுடன் பொங்கல் கொண்டாடினர். இதனையடுத்து பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம், அனைவரும் வெல்வோம். தமிழ்நாடெங்கும் புதுப் பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! பொங்கலோ பொங்கல்!''’என்று தெரிவித்துள்ளார்.                                       

-இளையர்