தி.மு.க.வுடன் சட்டமன்றத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்திருக்கிறார் காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்பாக தமிழக காங்கிரசின் சீனியர் லீடர்களிடம் 23-ஆம் தேதியிலிருந்து ஆலோசனையைத் துவக்கியிருக்கிறது இந்த ஐவர் குழு.
தி.மு.க.வில் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழு எதுவும் அமைக்கப்படாத சூழலிலும், எஸ்.ஐ.ஆர். பணிகளில் பா.ஜ.க.வின் சதிகளை எதிர்த்து சட்டப் போராட்டத்தை தி.மு.க. நடத்தி வருகிற நிலையிலும், இந்த ஐவர் குழுவை காங்கிரஸ் அமைத்திருப்பது அரசியலில் பலரையும் உற்றுக் கவனிக்க வைத்திருக்கிறது. காங்கிரஸில் என்ன நடக்கிறது? என விசாரித்தபோது ஏகப்பட்ட சீக்ரெட் தகவல்கள் நமக்கு கிடைத்தன.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஒரு கோஷ்டியும், அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் ஒரு கோஷ்டியும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில், தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகக் கூடாது என்கிற கோஷ்டிக்கு மல்லிகார் ஜுன கார்கேவும், கூட்டணியிலிருந்து வெளியேறி விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்கிற கோஷ்டிக்கு வேணுகோபாலும் தலைமை தாங்குகிறார்கள்.
இந்தச்சூழலில், ராகுல்காந்தியை சந்திக்கும் வேணுகோபால், "தமிழகத்தில் 58 ஆண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் இல்லை. இந்தமுறை அருமையான வாய்ப்பு நமக்கு வருகிறது. தி.மு.க.விடம் ஆட்சியில் பங்குவேண்டுமென நீங்கள் பேசுங்கள். அதற்கு திமுக ஒப்புக் கொள்ளவில்லையென்றால் விஜய் கட்சியை நாம் பரிசீலிக்க வேண்டும். ஆட்சி, அதிகாரம் இருந்தால்தான் கட்சியை வளர்க்க முடியும். அதனால் கூட்டணி ஆட்சிக்கான உத்தரவாதத்தை தி.மு.க. தலைமையிடம் வாங்குங்கள்'' என அழுத்தமாக தூபம்போட்டு வருகிறார்.
இதற்கு மாறாக, ராகுலை சந்திக்கும் மல்லிகார்ஜுன கார்கே, தி.மு.க. கூட் டணிதான் நமக்கு நம்பகமான கூட்டணி. இயல்பாக அரசியல் செய்யவும் முடிகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உங்கள் மீது அபரிமிதமான மரியாதை வைத்திருக்கிறார். காங்கிரசுக்குத் தேவையான அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் கிடைக்கவே செய்கிறது. இது மட்டுமல்ல, தேசிய அளவில் பா.ஜ.க.வை நாம் எதிர்க்க வேண்டுமானால் தி.மு.க.வின் வலிமை காங்கிரஸுக்குத் தேவை. பா.ஜ.க.வின் மக்கள் விரோத அரசை எதிர்க்க தி.மு.க. மாதிரியான நம்பிக்கையான பார்ட்னர் காங்கிரஸுக்கு வேறு யாருமில்லை. அதனால், கூட்டணி ஆட்சிக்காக தி.மு.க.விடம் மல்லுக்கட்டினால் காங்கிரசுக்குத் தான் அது இழப்பு.
அதேசமயம், விஜய் தனித்துப் போட்டி யிட்டால் கூட பா.ஜ.க. ஜீரணித்துக்கொள்ளும். ஆனால், காங்கிரசுடன் கூட்டணி வைக்க விஜய் முடிவெடுத்தால் அதனை பா.ஜ.க. தாங்கிக் கொள்ளாது. அதனால், எந்த சூழலிலும் பா.ஜ.க.வின் மறைமுக அழுத்தங்களிலிருந்து நடிகர் விஜய்யால் வெளியேற முடியாது. பா.ஜ.க.வின் அழுத்தத்தை மீறி நம்முடன் விஜய் வருவார் என நம்புவது இப்போதைய சூழலில் ஆரோக்கிய மானது இல்லை. அது மட்டுமல்ல, தனது செல்வாக்கு என்னவென்பதையும், தனது வோட் பேங்க் என்னவென்பதையும் ப்ரூப் பண்ணமுடியாத நபராக விஜய் இருக்கிறார். அவரை நம்பி, தி.மு.க.வை உதற நினைப்பது சரியல்ல என ராகுல்காந்தியிடம் வாதிட்டுவருகிறார் மல்லிகார் ஜுன கார்கே.
இப்படி காங்கிரஸின் தேசிய அளவிலான இரண்டு தலைவர்கள் தி.மு.க. கூட்டணி விவகாரத்தை முன்வைத்து ராகுல்காந்தியிடம் அழுத்தம் கொடுத்து வருவதை காங்கிரசின் சீனியர் லீடர்களும் காங்கிரசின் தமிழக எம்.பி.க்களும் சீரியஸாகவும் சீக்ரெட்டாகவும் விவாதித்து வருகின்றனர். மேலும், ராகுல்காந்திக்கு 2 தலைவர்களும் அழுத்தம் தருவதை சோனியாவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனே ராகுல்காந்தியை அழைத்துப் பேசிய சோனியா, தி.மு.க. தலைமை வருத்தப்படுகிற மாதிரி முடிவுகளை எடுக்கக் கூடாது என அறிவுறுத்தி யுள்ளார்.
இந்தநிலையில், சோனியாவிடமிருந்து தி.மு.க.வுக்கு ஒரு தகவல் பாஸாகியிருக்கிறது. அதனையொட்டி, ஸ்டாலினின் மிகுந்த நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினர் ஒருவர் டெல்லிக்கு சென்று ராகுல்காந்தியை சந்தித்து விவாதித்துவிட்டு வந்துள்ளார். இதனையடுத்து, கார்கேவையும் வேணுகோபாலையும் அழைத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ராகுல்காந்தி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதில், தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது. ஒரு எம்.பி. தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ. சீட் என 39 சீட்டுகள் நமக்கு வேண்டும். இதற்கு குறையாமல் தி.மு.க.விடம் பேசுங்கள் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார் ராகுல்.
இப்படிப்பட்ட நிலையில்தான் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் ஆகிய ஐவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் கார்கே. இந்தக் குழு, முதலில் காங்கிரஸ் தலைவர்களிடமும் நிர்வாகிகளிடமும் கருத்துக் களைக் கேட்கத் தொடங்கியிருக்கிறது‘’என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் டெல்லியோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் கதர்ச் சட்டையினர்.
____________
இறுதிச் சுற்று!
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 8 பேர் பலி!
தென்காசி மாவட்டம், இடைகால் அருகே, நவம்பர் 24 திங்களன்று, இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். காலை 11 மணியளவில், இடைகால் அருகே கே.எஸ்.ஆர். என்ற தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தபோது, தென்காசி நோக்கி வந்துகொண்டிருந்த எம்.ஆர்.கோபாலன் என்ற தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் சிக்கி, பேருந்துகளில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த இடத்துக்கு அருகிலிருந்தவர்கள், ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவரும் நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
-நாகேந்திரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/24/raghul-stalin-2025-11-24-15-18-47.jpg)