"என்னை மக்களவையில் பேசவிட்டுப் பாருங்கள். மோடியால் பதில் சொல்லவே முடியாது'’என்று சில மாதங்களுக்கு முன் ராகுல்காந்தி சவால் விடுத்திருந்தார். அந்த சவாலுக்கான நேரம், நாடாளுமன்றத்தில் ஜூலை 20-ந் தேதி மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது வந்தது. ஆளுந்தரப்பை தெறிக்கவிட்டு, உலகளவில் "ட்ரெண்டிங்' ஆனார் ராகுல்காந்தி. நம்பிக்கையில்லா தீர்மானத்தை மோடி அரசு முறியடித்தாலும், ராகுலின் வாதங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

modi-raghulmodi-raghul

""ஆதாரமற்ற அவதூறு பேச்சு!'' -பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நாராயணன்

narayanan

""மோடி அரசின் 4 ஆண்டு ஆட்சி குறித்து எந்த ஒரு குற்றச்சாட்டையும் புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்க முடியாத சூழலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு உண்மைக்குப் புறம்பான விஷயங்களைச் சொல்லி அரசுமீது அவதூறை கிளப்ப நினைத்தது தவிடு பொடியாக்கப்பட்டது. ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக சொன்னதும், உடனடியாக நிர்மலா சீதாராமன் தகுந்த ஆதாரத்துடன் விளக்கியது உட்பட காங்கிரஸ் கட்சிக்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பேரிடியாக இறங்கியது என்பதே உண்மை.

காங்கிரஸ் ஆட்சி செய்த 2012-ஆம் ஆண்டே இந்த விமானங்களை தயாரிக்கும் டஸ்சால்ட் விமானம் எச்.சி.எல் உடன் பணிபுரிய முடியாது என்பதையடுத்து அந்த ஆண்டே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது கண்கூடாகத் தெரிந்த ஒன்றாகும். அதுபோல இந்த ஒப்பந்தத்தின் தன்மை குறித்து அப்போதைய ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த அவர்கள் கட்சியின் ஏ.கே.அந்தோணியே விளக்கியிருப்பதையும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பதில் கொடுத்தார்.

பொதுக்கூட்ட மேடையில் பேசுவதைப் போன்ற விஷயத்தை நம்முடைய ஜனநாயக கோவிலான பாராளுமன்றத்தில் ராகுல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. ராகுல்காந்தி பேச்சை முடித்தவுடன் பிரதமரின் அருகில் சென்று அவரை எழுந்திருங்கள் என்று சொல்லி கட்டியணைத்ததும், அதன் பிறகு அவரின் நண்பரைப் பார்த்து கண்ணடித்ததும் அவையின் மாண்பைக் குறைத்து, உலகம் முழுவதும் சிரிப்பாக சிரிக்கிறது. இப்படிப்பட்ட தலைவரை கொண்டுள்ள காங்கிரஸ் வரக்கூடிய தேர்தலில் மண்ணைக் கவ்வும்'' என்கிறார்.

""மக்களின் கேள்விக்கு பதில் எங்கே?'' -காங்கிரஸ் ஜோதிமணி

jothimani""பா.ஜ.க.வின் ஐ.டி செல், பல கோடிகளை செலவு செய்து ராகுலை "பப்பு'’என்று கட்டமைக்க தொடர்ந்து முயற்சிசெய்து அதில் வெற்றி அடைந்தார்கள் என்றுதான் நினைக்கிறேன். நாடாளுமன்றத்தில் ராகுலின் பேச்சுகளையும் செயல்பாடுகளையும் 2007-ஆம் ஆண்டு முதல் பார்த்துவருகிறேன். எளிய மக்களின் மீது அக்கறை உடையவராகவும், அன்பையும் கண்ணியத்தையும் மட்டுமே அரசியலில் முன்னெடுத்துப் போகவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளாக மதம், உணவு, நம்பிக்கைகள், உடைகள் தொடர்பான விஷயங்கள் குறித்து மட்டும்தான் விவாதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த 4 ஆண்டுகளில் இந்தியாவை 40 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று இருக்கிறார்கள். சமூக முன்னேற்றம், பொருளாதார, கருத்து ரீதியாகவும் சரி பின்னோக்கி அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அந்த மாதிரியான இடத்திலிருந்து மீண்டும் முன்னோக்கி கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ராகுல் குறிப்பிட்டதுபோல பல தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை இறைத்து உருவாக்கப்பட்ட பிம்பம்தான் மோடி. அதை வெறும் 48 எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சியின் தலைவர் அரைமணி நேரத்தில் உடைத்தெறிந்து பேசியிருப்பதுதான் நிகழ்கால திறமையாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது அரசு கடுமையாக எதிர்வினையாற்றும். ஆனால் அதைப்பார்த்து அரசு மவுனமாக இருக்கிறது. இதுகுறித்து பல கேள்விகளை எழுப்பினால் அதற்கு பதிலளிக்க மறுக்கிறார்கள்.

அரசியலில் மகாத்மா காந்தியைத்தான் தனது குரு என்று ராகுல் பலமுறை சொல்லியிருக்கிறார். அதனால்தான் அவர், பா.ஜ.க.வால் வெறுப்பு விதிக்கப்பட்ட பூமியில் அன்பை விதைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 4 ஆண்டுகளாக இந்தியாவின் கடைசி சாமானியனின் மனதில் எழும் கேள்விகளை நாடாளுமன்றத்தில் ராகுல் கேட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி ஏழைத்தாயின் மகனாக இருப்பதில் எந்தவிதமான குற்றமும் கிடையாது. மன்மோகன்சிங் இவரைவிட ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனால் அவர் எங்கும் அதைச் சொன்னது இல்லை. ராகுல்காந்தியின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், மக்களின் கேள்விகளைத்தான் அவர் கேட்கிறார் என்றுகூட தெரியாமல்... அந்த அளவிற்கு உண்மையிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறார்கள் மோடியும் அவரது கட்சியினரும். ராகுல்காந்தியைப் பார்த்து அவர்கள் சிரிக்கும்போது, இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் அவர்களை பார்த்துச் சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் இருக்கிறார்கள்'' என்கிறார்.

-சி.ஜீவாபாரதி