காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டு தகிடுதத்தங்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் கடந்த 7ஆம் தேதி பற்றவைத்த நெருப்பு, தற்போது தேர்தல் கமிஷன் மீதான நம்பிக்கையைத் தகர்த் திருப்பதோடு, பா.ஜ.க.+தேர்தல் கமிஷன் கூட்டணியை வெளிக்காட்டுவதாகவே அமைந் துள்ளது. தேர்தல் கமிஷன் மீது உச்ச நீதி மன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டதில், குறிப்பாக, பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் குறித்த வழக்கில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் ஃபார்மட்டில் இணைய தளத்தில் வெளிப் படைத்தன்மையுடன் வெளியிட வேண்டுமென்று தேர்தல் கமிஷனுக்கு குட்டு வைத்தது நீதிமன்றம்.

Advertisment

ராகுல் காந்தி இந்த விவகாரத்தை மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டமாக உருவாக்க முடிவெடுத்து, கடந்த 17ஆம் தேதி, பீகாரிலுள்ள சசாரமிலிருந்து தனது 16 நாள் 'வாக்காளர் அதிகார நடைபயணத்தை' தொடங்கினார். இது தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்த, உடனடியாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் கூட்டி னார். அதில் பத்திரிகையாளர்களிடம் பேசியவர், "சில கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். ஒட்டுமொத்த தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதிதான் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை. எங்கள் கடமைகளி லிருந்து ஒருபோதும் தவறமாட்டோம். தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் சந்தேகம் குறித்து மனுக்கள் தாக்கல் செய்யாமல், வாக்குத் திருட்டு என ராகுல்காந்தி குற்றம்சாட்டுவது அரசியலமைப்பை அவமதிப்பதாகும். தங்குவதற்கு வீடற்ற ஏழைகளின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளன. அதற்குத்தான் முகவரியில்   '0' எனக் குறிப்பிட்டுள்ளோம். ஏழைகளை போலி வாக்காளர்கள் எனக் கூற முடியுமா? வாக்குச்சாவடி சி.சி.டி.வி. பதிவில் வாக்களிக்க வரும் பெண்களின் உருவங்கள் பதிவாகியிருக்கும். அதை வெளியிடுவது பெண்களின் தனியுரிமையை மீறுவதாகும்.

raghul1

கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் 1 இலட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதை விசாரிக்க வேண்டுமென்றால் 7 நாட்களில் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று ராகுல் காந்தியை மிரட்டும்விதத்தில் பேசினார். அந்த சந்திப்பில் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் ஞானேஷ்குமார் பதிலளிக்காமல் தவிர்த்தார்.

Advertisment

அப்படி அவர் தவிர்த்த கேள்விகள் பலவும் முக்கியமானவை. 'ரேபரேலி, வயநாடு தொகுதி களில் ராகுல்காந்தி எழுப்பியுள்ள விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துமா? ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் தனித்தன்மை உறுதிசெய்யப்படுகிறது. ஆனால் வாக்காளர் அடையாள அட்டையில் அதுபோல் செய்வதில்லை. அப்படியானால் இது எப்படி மதிப்பிடப்படும்? ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை 7.24 கோடி வாக்காளர் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை படிவங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்டன? 2024ஆம் ஆண்டில், தேர்தலுக்கு முன்பாக அருணாச்சல பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் சிறப்பு தீவிர திருத்த (நஒத) நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பீகாரில் மட்டும் அதைச் செயல்படுத்துவது ஏன்?’ உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு தேர்தல் ஆணையர் பதிலளிக்காமல் கடந்துசென்றது பெருத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் உண்மையை விளக்குவதற்காக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்திவிட்டு, என்னவோ க்விஸ் ப்ரோக்ராம் போல முக்கியமான கேள்விகளை எதிர்கொள்ளாமல் "பாஸ்' செய்து தவிர்த்தது, தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்பாட்டையே அப்பட்டமாக வெளிக்காட்டியது!

தற்போது ராகுல்காந்தி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, குற்றச்சாட்டுகளை பிரமாணப் பத்திரம் மூலமாக ராகுல்காந்தி தெரிவிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையர் தெரிவித்தார். அதற்கு பதிலடியாக, ராம்கோபால் யாதவ் எம்.பி., "கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச தேர்தலின்போது சமாஜ்வாடி கட்சி வாக்காளர்கள் பலரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு வைத்தபோது, அதை தெளிவுபடுத்துமாறு அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலளிப்பதற்காக 18,000 பிரமாணப் பத்திரங்களை அகிலேஷ் யாதவ் சமர்ப்பித்தார். இதுநாள் வரை அதுகுறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகெப்படி ராகுல் காந்தியை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யக் கூறுகிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், "ராகுல் காந்தியின் கூர்மையான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் விளக்கங்கள் அதன் திறமையின்மைக்கு மட்டுமல்ல, கட்சி ரீதியான பாகுபாட்டையும் அம்பலப் படுத்தியுள்ளது'' எனக்கூறியுள்ளார். சி.சி.டி.வி. குறித்து தேர்தல் ஆணையர் சொன்ன கருத்து கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் இதுகுறித்து, "சி.சி.டி.வி. கேமராக்களை வாக்குச்சாவடிகளில் பொருத்தும் முன் ஒவ்வொரு பெண் வாக்காளரிடமும் தேர்தல் ஆணையம் அனுமதி பெற்றதா? வாக்குச்சாவடி ஒன்றும் உடை மாற்றும் அறை இல்லையே?' என்று காட்டமாக தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கெல்லாம் தேர்தல் ஆணையத்திடம் உரிய பதில் கிடைக்குமா?