ரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சமூக பிரபலங்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் இரு வாரங்களுக்கு முன்பு அம்பலமானது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்பட 15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தும், அதனை பிரதமர் மோடி ஏற்க மறுப்பதால் நாடாளுமன்றத் தின் இரு அவைகளையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன எதிர்க்கட்சிகள். இதனால் தினமும் பரபரப்பாகவும் அமளிகளாகவுமே காட்சி தருகிறது நாடாளுமன்றம். இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறார் ராகுல்காந்தி.

ff

காலை சிற்றுண்டியுடன் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தது காங்கிரஸ் கட்சி. அதில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ஸா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிக்கர சோசலிஸ்ட் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், லோக் தந்திரிக் ஜனதா தளம் உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் ஆதிர்ரஞ் சன் சௌத்ரி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால் உள்பட எம்.பி.க்கள் 100 பேர் கலந்துகொண்டனர். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகள் மட்டும் கூட்டத்திற்கு வரவில்லை.

கூட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய ராகுல்காந்தி,”"நாட்டின் தற்போதைய சூழல் அபாயகரமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்காமல் போனால் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க.வின் ஆக்டோபஸ் கரங்கள் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கி விடும். நாம் பிரிந்து நின்று குரல் கொடுப்பதை பிரதமர் எளிதாக எடுத்துக்கொள்கிறார். அதனால் ஒன்றிணைந்து செயல்படுவதை நாம் ஒரு கொள்கையாக நிலை நிறுத்தினால்தான் மோடி அரசாங்கத்தால் சூழப்பட்டுள்ள ஆபத்துகளைத் தடுத்து தேசத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முடியும்'' என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

Advertisment

rr

ராகுல்காந்தி பேசியதையடுத்து திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் களில் ஒருவரான சஞ்சய் ரௌத் பேசுகை யில், ’"பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள் என மக்களை பாதிக்கும் எந்த விவகாரத்தையும் நாடாளு மன்றத்தில் விவாதிக்க மாட்டோம் என பிரதமர் மோடி பிடிவாதம் பிடிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப் பினை பிரதமரே ஏற்படுத்தித் தந்திருக்கிறார். நமது குரல் ஒரே புள்ளியில் இணையவேண்டும்''’ எனச் சொன்னார்.

இதே கருத்தை வலியுறுத்திய சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், ’"ஜனநாய கத்தை அசைத்துப் பார்க்கும் பிரச்சினைகளுக்கு காது கொடுக்காத பிரதமர் மோடி, மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்று வதில்தான் அக்கறை காட்டுகிறார். இதனை அனுமதிப்பது, எதிர்க்கட்சிகளே இந்திய நாடாளுமன்றத்தில் இல்லைங்கிற இமேஜ் சர்வதேச அளவில் உருவாகிவிடும். அதனால் எதிர்க்கட்சிகளின் பலத்தை காட்டவேண்டிய நேரம் இது''’ என தெரிவித்தார்.

Advertisment

இதே ரீதியில்தான் கூட்டத்தில் பேசிய பலரின் குரல் களும் ஒருமித்து எதிரொலித்தன என்கிறார்கள் நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி.க்கள். மேலும், "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் நாடாளுமன்றத்தை நோக்கி சைக்கிளில் செல்லலாம்'' என ராகுல்காந்தி சொன்னதை எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன. அதன்படி, ராகுல் உள்ளிட்ட அனைத்து எம்.பி.க்களும் சைக்கிளில் சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டோம்.

அதன்பிறகு நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், "லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும், தினசரி அலுவல் களை ஒத்திவைத்துவிட்டு ஒட்டுக்கேட்பு பிரச்சனையை விவாதிக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், "ஜனநாயகத்தை காப்பாற்ற அவையில் ஆக்ரோஷமாக குரல் எழுப்ப வேண்டியிருந்தது'' என்று நம்மிடம் விவரித்தனர் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.

dd

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, ‘’"சபை அலு வல்கள் தொடர்ந்து நடக்க வேண்டுமென பெரும்பான்மை யான எம்.பி.க்கள் விரும்புகிறார்கள். எதிர்க்கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப சபையை நடத்த முடியாது'' என்று எச்சரிக்கை செய்தபோதும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா எம்.பி.க்கள் அமைதியாகவே இல்லை. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "இந்த சபையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதுபோல எதிர்க்கட்சிகள் நடந்துகொள்கின்றன. இதை அனுமதிக்க முடியாது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரைன் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கடுமையாக பேசினார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் அமைதியாகவில்லை. முதல்முறையாக அவரவர் மாநில மொழிகளில் எம்.பி.க்கள் குரல் கொடுப்பதால், யார் என்ன பேசுகிறார்கள் என்பதே பல நேரங்களில் மற்றவர்களுக்குப் புரிவதில்லை. அமளிகள் நடப்பதை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் ஒருவித இறுக்கத்துடனே கவனித்தபடி இருந்தனர்.

எதிர்க்கட்சிகளின் கடுமையான அமளிகளுக் கிடையே சில மசோதாக்களை நிறைவேற்றி விடு கின்றது பா.ஜ.க. குறிப்பாக, ராணுவத் துறைக்கான அத்தியாவசிய சேவை மசோதா, சிறு குறு நிறுவனங்கள் திவால் சீரமைப்பு மசோதா, நடுவர் மன்ற சீரமைப்பு மசோதா உள்ளிட்டவைகளை கடந்த 3-ந் தேதி நிறைவேற்றியிருக்கிறது ஒன்றிய அரசு. எனினும், எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் பிரச்சினைகளால் நாடாளுமன்றத்தை நடத்துவதில் திணறிக்கொண்டிருக்கிறது மோடி சர்க்கார். எதிர்க்கட்சிகளுக்கு கடிவாளம் போட பா.ஜ.க. நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார் மோடி. அதில், "அமைச்சர் வாசிக்கும் அறிக்கையை பறித்து வீசுகிற மோசமான சம்பவங்கள் நடப்பது வேதனை தருகிறது. எதிர்க்கட்சிகள் மோசமாக நடந்து கொண்டாலும் அவையின் மாண்பினையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அவர்களைப் போல நீங்களும் மோசமாக நடந்துகொள்ளக் கூடாது'' என்று தனது எம்.பி.க்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்.

"இனி அமளியில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சண்யம் காட்டவேண்டாம்; அவை நட வடிக்கைகளில் கலந்துகொள்வதில் அவர்களுக் குத் தடை விதிக்கவேண்டும்' என்று மோடி விரும்புவதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 25-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டிருந்தார் மோடி. சபைகள் ஒத்தி வைக்கப்படுவதால் ஒன்றிய அரசிடம் பதட்டமே அதிகரித்தபடி இருக்கிறது. இந்தச் சூழலில், சபையை சுமுகமாக நடத்துவதற்கான ஒத்துழைப் பைக் கேட்டு காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து விவாதித்திருக்கிறார் வெங்கையா நாயுடு. அத்துடன், ராஜ்நாத்சிங், அமித்ஷா, பிரகலாத் ஜோஷி, பியூஸ் கோயல் ஆகியோருடனும் ஆலோ சித்திருக்கிறார். ஆனால், "பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கும் விவகாரத்தை நாடாளு மன்றத்தில் விவாதிக்காமல் அமைதியாவதில்லை' என்கிற முடிவில் இருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

இந்நிலையில் பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

_______________

நீதி விசாரணை?

ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, "இதுகுறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்தப்பட வேண்டும்'' என்று தீர்க்கமாகக் கூறியிருப்பது, பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளும் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசின்மீது நம்பிக்கை இழந்ததைக் காட்டுவதாக உள்ளது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் இந்து ராம், சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஆகியோர் பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "செல்போன்களை ஒட்டுக்கேட்பது கிரிமினல் குற்றமாகும். பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இச்செயலி மூலமாகக் கண்காணிக்கப் பட்டுள்ளனர். எனவே, நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்'' என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணாவுக்கு, கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 500 பேர் கடிதம் எழுதி, உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

-தெ.சு.கவுதமன்