அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி யின் தேர்தல் பிரச்சாரத்தை அண்மை யில் பிரதமர் மோடி துவக்கி வைத்த நிலையில்... தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி யின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இதற்காக 13-ந்தேதி தமிழகம் வந்த ராகுல், சென்னையி லுள்ள ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல், பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு, நாகர்கோயிலில் பொதுக்கூட்டம் என 3 நிகழ்வுகளில் கலந்துகொண்டு மோடிக்கு எதிரான தாக்குதலை நடத்தினார்.
ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் கலந்துரை யாடும் நிகழ்வு தமிழக காங்கிரசுக்குத் தெரியாது. இது அகில இந்திய மகிளா காங்கிரஸ் முன்வைத்து, ஒவ்வொரு மாநிலத்திலும் இளம் வாக்காளர்களைக் கவரும் நிகழ்வாகும். அகில இந்திய மகிளா காங்கிரசின் பொதுச்செயலாளர் நேட்டா டி-சௌசாவின் டீம்தான் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியை தேர்வு செய்து ஏற்பாடுகளை ஒருங் கிணைத்தது. அகமதாபாத்திலிருந்து 13-ந்தேதி பிற் பகல் 11:00 மணிக்கு சென்னை வந்த ராகுல்காந்தி ஜீன்ஸ் பேண்ட், டீ-சர்ட்டுடன் ஸ்மார்ட்டாக இருந்தார். ஏர்போர்ட்டில் ப.சிதம்பரம், கே.எஸ். அழகிரி, இளங்கோவன், குஷ்பு ஆகியோர் ராகுலை வரவேற்றனர். ""டிரெஸ் சேஞ்ச் பண் ணிட்டு நிகழ்ச்சிக்குப் போகலாமா?'' என ப.சிதம் பரம் கேட்டதற்கு, ""அரசியல்வாதி லுக் வேண் டாம். இப்படியே போகலாம்'' எனச் சொன்ன ராகுல், ப.சிதம்பரத்தையும் அழகிரியையும் தனது காரில் ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு விரைந்தார்.
கல்லூரியில் 3000 மாணவிகளுக்கு மத்தியில் போடப்பட்ட மேடையில் நின்றுகொண்டு அவர் கள் கேட்ட கேள்விகளுக்கு இயல்பாகவும் தடையின்றியும் அழுத்தமாகவும் ராகுல்காந்தி சொன்ன பதில்கள் மாணவிகளிடம் உற்சாகத்தைத் தந்தது. ""சார் என அழைக்க வேண்டாம். ராகுல் என பெயர் சொல்லி அழையுங்கள்'' என அவர் சொன்னபோதும், அப்படியே அவர்கள் அழைத்தபோதும், மாணவிகளின் ஆதரவுக் குரல்கள் உற்சாகமாக ஒலித்தன.
அரசியல், பொருளாதாரம், சமூகம், ஊழல் விவகாரங்கள், குடும்ப விசயங்கள் என மாறுபட்ட கோணங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுடன் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நடந்த கலந்துரையாடலை முடித்துவிட்டு ராகுல் கிளம்பியபோது, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள மாணவிகள் ஆர்வம் காட்ட, ப்ரோட்டகாலை மீறி அவர்களுக்கு ஒத்துழைத்தார் ராகுல்காந்தி. ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் ஹாலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பத்திரிகையாளர்களை ஒருங்கிணைக்கும் பணியை ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணாவிடமும் ப்ரஸ்மீட்டிற்கான ஏற்பாடுகளை தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜனிடமும் கட்சித் தலைமை ஒப்படைத்திருந்தது.
ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, இளங்கோவன், முகுல்வாஸ் னிக், குஷ்பு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 200 பேர் ஆஜராகியிருந்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த ராகுல்காந்தியை கராத்தே தியாகராஜனும், இலக்கியா நட ராஜனும் வரவேற்க அனுமதிக்கப்பட்டனர். கோபண்ணா ஆங்கி லத்தில் எழுதிய, "மோடி-ஒரு தவறு' என்கிற புத்தகத்தை வெளி யிட்டார் ராகுல். பத்திரிகையாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ""மக்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்க நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை. எல்லா கட்சிகளும் பத்திரிகை யாளர்களை சந்திக்கும்போது மோடி மட்டும் சந்திக்கப் பயப்படு கிறார்'' என்றவர், மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு அவலங்களைச் சுட்டிக்காட்டினார்.
மோடி அரசின் ராணுவ தாக்குதல், ரஃபேல் ஊழல், விவசாயிகளின் அவலம், விவசாயிகளின் கடன், நீட் பிரச்சனை, ஏழு பேர் விடுதலை என கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு, ""மோடியின் ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகள் சிதைக்கப்பட்டு விட்டன. நாட்டில் வேலை வாய்ப்புகள் இல்லை. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் மக்களும் தொழில் நிறுவனத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பொய்யான தகவல்களையே தந்து வருகிறார் மோடி. ராணுவ வீரர்களை பாதுக்காக்க தவறிவிட்ட னர். தனிமைப்படுத்தப்படுவதாகவும், துன்புறுத்தப் படுவதாகவும், கலாச்சாரம் தாக்கப்படுவதாகவும் மக்கள் பயப்படுகின்றனர். தமிழகத்தை ரிமோட் கண்ட்ரோலில் இயக்குகிறார் மோடி. தமிழர் களுக்கு இது அவமானம். மாநில உரிமை கேள்விக்குறியாகியிருக் கிறது. விவசாயம், விவசாயிகள் மீதான அக்கறை மோடிக்கு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்வோம். எழுவர் விடுதலையை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்களின் விடுதலையை ஏற்கத் தயாராக இருக்கிறோம்'' என அசராமல் பதிலளித்தார் ராகுல்காந்தி.
ராகுல்காந்தியின் தமிழக பயணமும் மோடிக்கு எதிரான அவ ரது அரசியல் அதிரடிகளும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின ரிடம் உற்சாகத்தையும் இணக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
-இரா.இளையசெல்வன்
___________________
சொதப்பிய தங்கபாலு!
தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சென்னை ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் கலகல கலந்துரையாடல், செய்தியாளர் களுடன் சந்திப்பு என்று லைவாக பயணம் செய்துவிட்டு மாலை நாகர்கோவிலுக்கு வந்தார்.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி-திருவனந்த புரம் சாலை திக்குமுக்காடியது. ஸ்டாலினும் ராகுலும் மேடைக்கு வருவதற்கு முன்பே கூட்டம் தொடங்கி தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
ஐ.ஜே.கே. தலைவர் பாரி வேந்தர், கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், ம.ம.க. ஜவாஹிருல்லா, வி.சி.க. தலைவர் திருமா, சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோர் சுருக்கமாகப் பேசினர்.
பேசிய அனைத்துத் தலைவர்களும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியே கவலை தெரிவித்தனர்.
ஜனநாயகத்தை பாதுகாக்கத் தவறினால் நாடு சர்வாதிகாரப் பாதையில் தள்ளப்பட்டுவிடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தினர்.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசியபின்னர் ஸ்டாலின் பேசினார்.
""இந்து, ராம் என்ற இரண்டு வார்த்தைகளை வைத்து இந்திய மக்களை அச்சுறுத்தி வந்த மோடி, இப்போது ரஃபேல் விமான பேர ஊழலை வெளிக்கொண்டு வந்த "இந்து' என்.ராம் அவர்களைப் பார்த்து நடுங்குகிறார்'' என்று பஞ்ச் வைத்தார். ""ராகுல் தலைமையில் மத்தியில் அமையவுள்ள அரசு சாமானியர்களுக்கான அரசாக இருக்கும்''’என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நிறைவுரையாற்றிய ராகுல், ""ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்பார். கலைஞர் தனது உயிராக கருதிய தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்மொழியையும் பாது காப்போம். டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடியதைக் கண்டு கண் கலங்கினேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைவரிடமும் புழக்கத்தில் இருக்கும்படி வகை செய்யப்படும். திருவள்ளுவர் சொன்னதைப்போல, ரஃபேல் விவகாரத்தில் உண்மை வெல்ல வேண்டும். உண்மை வெல்லும்போது மோடி சிறைக்கு செல்வது உறுதி''’என்று முடித்தபோது, மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
ராகுலின் எளிமையான ஆங்கிலம், படிப்பறிவு கொண்ட குமரி மாவட்ட மக்கள் பலருக்கும் புரிந்தபோதும், மற்றவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும் என நினைத்து தங்கபாலுவை மொழிபெயர்க்கச் செய்தனர். ராகுல் ஒன்று பேச... தங்கபாலு ஒன்று சொல்ல ஒரே குளறுபடி.
-மணிகண்டன்
படங்கள் : ராம்குமார்