நடிகை ராதிகா பன்முகம் கொண்டவர். திரைத்துறை, தொலைக்காட்சி உலகில் நடிகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி உருவாக்கம் என தொடர்ந்து ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார். குணச்சித்திர வேடங்களில் ராதிகாவின் நடிப்பு பெயர்பெற்றது. பல நாயகர்களின் அம்மா பாத்திரங்களில் ராதிகா நடித்துள்ளார். கொரோனா தொற்றால் சினிமா உலகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடங்கியிருந்தது. அரசு அறிவித்துள்ள தளர்வுகளால் மீண்டும் படப்பிடிப்புகள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. முன்னணி நடிகர்களின் படங்களின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "எதற்கும் துணிந்தவன்', கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் "வெந்து தணிந்தது காடு', ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் என முக்கிய படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறார் ராதிகா. ஹரி-அருண் விஜய் கூட்டணி, மாமா-மச்சான் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக இருவரும் தனித்தனியே பல படங்களில் பணிபுரிந்திருந்தாலும் தற்போதுதான் இணைந்து முதல் படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படத்திலும் ராதிகா இருக்கிறார். படப்பிடிப்புத் தளத்திலேயே கேக் வெட்டி அவரது பிறந்தநாளையும் கொண்டாடியிருக்கின்றனர். ஒரு ரவுண்ட் வந்துகொண்டிருக்கிறார் ராதிகா.
ஐசரி கணேஷ், சிம்பு, கௌதம்... மனது வைப்பார்களா?
கௌதம் மேனன்-சிம்பு கூட்டணி சிறப்பான கூட்டணி. இவர்களின் முதல் படமான "விண்ணைத் தாண்டி வருவாயா' அனைவரின் மனதையும் கவர்ந்த மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். இன்றும் கொண்டாடப்படும் படம். மீண்டும் இணைந்த இவர்கள் "அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அந்தப் படப்பிடிப்பின்போது சிம்பு சரியான ஒத்துழைப்பு தரவில்லையென்ற செய்திகள் வந்தன. கௌதம் பின்னர் கொடுத்த பேட்டியில் அதை ஒத்துக்கொண்டார். இருவருக்கும் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டது. ஒரு இடைவெளிக்குப் பிறகு, இருவரும் இணைந்து ஒரு குறும்படத்தை எடுத்து வெளியிட... அது வைரலானது. பின்னர் கௌதமின் நண்பரான ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் ஒரு படம் தொடங்கப்படுவதாக செய்தி வந்தது. அப்படத்திற்கு "நதிகளிலே நீராடும் சூரியன்' என்று பெயரிடப்பட்டு விளம்பரம் வந்தது. தற்போது திடீரென அந்த ப்ராஜெக்ட்டின் பெயர் மாற்றப்பட்டு "வெந்து தணிந்தது காடு' என்ற பெயரில் புதிய விளம்பரம் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் உருவாகிறது. சிம்பு ரசிகர்களுக்கு இச்செய்தி இனிப்பாக இருக்க... ஒரு இயக்குனருக்கோ இது இடியாக இருக்கிறது. மதிசுதா என்ற ஈழத்து இயக்குனர்தான் அவர். இவர் ஏற்கனவே "வெந்து தணிந்தது காடு' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து ஓடிடி தளத்தில் வெளியிட முயன்று வருகிறார். "மூடப்பட்ட பங்கர்களுக்குள் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன' என்ற விளக்கத்தோடு படத்தின் விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார். நூறுபேரின் பங்களிப்பில் அந்தப் படம் தயாராகியுள்ளது. இந்நிலையில் இதே பெயரில் கௌதம் மேனனின் பட அறிவிப்பு வந்துள்ளதால் மதிசுதாவின் படம் வியாபார சவால்களை சந்திக்கும். இதனால் இவர்கள் மனது வைத்து படத் தலைப்பை மாற்ற வேண்டுமென இயக்குனர் -நடிகர் கவிதாபாரதி உள்பட பலரும் சமூக ஊடகங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வனிதாவின் அடுத்த ப்ராஜக்ட்!
"வைரல்' நடிகை வனிதா விஜயகுமார் அவ்வப்போது சலசலப்பையும் பரபரப்பையும் உண்டாக்குபவர். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியேறினார். பவர் ஸ்டாருடன் வனிதா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாக, ஜெர்க் ஆனது சினிமா ரசிகர் உலகம். அது "பிக்-அப் ட்ராப்' என்ற படத்திற்கான புகைப்படங்கள் என்று விளக்கம் கொடுத்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்தார் வனிதா. இப்படி லைம்லைட்டிலேயே இருக்கும் வனிதாவின் கேரியரில் ஆரோக்கியமான ஒரு படியாக வெளிவந்திருக்கிறது ஒரு செய்தி. இயக்குநர் வசந்தபாலன், தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து "அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை இயக்குநர் வசந்தபாலன் இயக்குகிறார். இப்படத்தில், "கைதி', "மாஸ்டர்' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமான அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துஷாரா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை யமைக்கிறார். இப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வனிதா விஜயகுமார் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.