(102) நிஜ அடி! கற்பனை வரி!

"சோலைக்குயில்' படப்பிடிப்பு கோத்தகிரியில் நடந்துகொண்டிருந்த நேரத்தில்...

படத்தின் ஹீரோவான ‘பார்ட்னர்’ கார்த்திக் ஒரு தனி வீட்டில் தங்கியிருந்தார். நான், தியாகு, எஸ்.எஸ்.மாமா (எஸ்.எஸ்.சந்திரன்) ஆகியோர் ரமேஷ் லாட்ஜில் தங்கியிருந்தோம். பார்ட்னர் எங்களைப் பார்க்க வந்தார்.

காரில் வெளியே கிளம்பினோம்.

Advertisment

பார்ட்னர் காரை ஓட்டினார்.

வழியில்... ஒரு கும்பல் குடித்துவிட்டு சாலையை மறித்து ராவடி செய்து கொண்டிருந்தது.

எங்க காரையும் வழிமறித்து வம்பு பண்ண...

Advertisment

பார்ட்னர் எவ்வளவோ சொல்லியும் வழிவிடாமல் தகராறு செய்ய... டிரைவர் இருக்கையிலிருந்து இறங்கிய பார்ட்னர்... நாலுபேர் கொண்ட அந்த கும்பலை சுழன்று சுழன்று அடித்து... ஓடஓட விரட்டினார்.

எங்களுக்கு பார்ட்னரின் இந்த அதிரடி வியப்பாக இருந்தது.

நான் என் கண்ணெதிரே பார்த்த ஒரே ஹீரோ... பார்ட்னர் கார்த்திக்தான்.

"சோலைக்குயில்' படம் ஹிட் படமாக அமைந்தது.

என் மகன் ஹரி ராதாரவி, கோத்தகிரி பப்ளிக் ஸ்கூலில் படித்தான்.

அவனைப் பார்க்க கோத்தகிரிக்குச் செல்லும்போதும்... அதன்பின்... கோத்தகிரியில் நான் வீடு கட்டியிருக்கிறேன். அங்கே ஓய்வுக்குச் செல்லும்போதெல்லாம்... "சோலைக்குயில்' படமும், பார்ட்னர் போட்ட சண்டையும் இப்போதும் ஞாபகத்திற்கு வரும்.

அண்ணன் கங்கைஅமரன் டைரக்ஷனில் எனக்கு முதல்படம் "அண்ணனுக்கு ஜே'. "முதலாளி' அர்ஜுன் ஹீரோ. சீதா நாயகி. நான் மைனர்த்தனமான வில்லன். மதுரை மாவுப்பாளையம் ஆர்த்தி ஹோட்டலில் தங்கியிருந்தபடி தினமும் தேனி -வீரபாண்டியில் படப்பிடிப்பிற்கு போய்வந்தோம். வழியில் கருமாத்தூரைத் தாண்டித்தான் போகவேண்டும். பிறமலைக்கள்ளர்களின் ஹெட்குவாட்டர்ஸ் போன்றது அந்த ஊர். அதுதான் நண்பர் நடிகர் சந்திரசேகரின் சொந்த ஊர். ""இந்த ஊரு இப்படி இருக்கு? இந்த ஊரு சந்துரு மெட்ராஸ்ல ஸ்டைலா இருக்கார்'' என உடன் வருபவர்களிடம் சொல்லுவேன்.

""ஏன் ரவி... "முதல் மரியாதை' படத்துல "மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டித் தேரு'னு வைரமுத்து எழுதுனாரு. இதெல்லாம் அப்படி என்ன பெரிய தேரா? இந்த ஊருக்காரர்ங்கிறதுக்காக இப்படி எழுதீருக்காரோ?'' என வீரபாண்டி கோயில் தேரைப் பார்த்துவிட்டு கவுண்டமணி அண்ணன் கேட்டார்.

நானும் பார்த்தேன். ரொம்ப சின்னத் தேராகத்தான் இருந்தது.

கவிஞர்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்திதானே. நான் தயாரிச்ச "சின்னமுத்து' படத்துல "வளஞ்சு நெளிஞ்சு ஓடுதடி ஆறு' என ஒரு பாட்டில் வைரமுத்து அண்ணன் எழுதினார். வடுகபட்டியில் இப்படி ஒரு ஆற்றை நான் பார்க்கவே இல்லை.

சிவாஜி அப்பாவின் "பார் மகளே பார்' படத்தில் "அவள் பறந்துபோனாளே' பாட்டில்... முத்துராமன் சாருக்காக பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் வரிகளில்... "என் நிழலுக்கும் உறக்கமில்லை' என கவியரசர் கண்ணதாசன் அய்யா எழுதியிருப்பார். உறக்கம் வராதவன் உலவும்போது... அவனின் நிழலும் உலவும். இதை அற்புதமாகச் சொல்லியிருப்பார். என்ன ஒரு கற்பனை வளம்...

தயாரிப்பாளர் சங்கிலி முருகன் அண்ணனுக்கு ஏரியாவில் கிடைக்கிற மரியாதையை... இந்த படப்பிடிப்பின்போது பார்த்து வியந்தேன்.

"இரட்டைக்குழல் துப்பாக்கி' படத்தில் பார்ட்னர் கார்த்திக்கும், நானும் கொள்ளையடிக்கும் நண்பர்களாக நடித்தோம். பார்ட்னர் கேரக்டர்... ஓரளவு நல்லவர். எனது கேரக்டர்... கெட்டவன்.

கேமராமேன் கர்ணன் சார் இயக்கினார்.

""பெங்களூர்ல ஒரு ஃபைட் எடுக்குறோம். அடுத்து... காஷ்மீர்ல ஒரு போட் ஃபைட் இருக்கு'' என்றார்.

"பெங்களூரு?... எனக்கு மிகப்பிடித்த ஊர். பார்ட்னருக்கும் பிடித்த இடம். அப்புறம்... காஷ்மீர் தால் ஏரியில போட்ல போய்க்கிட்டே ஸ்டண்ட். ஆகா...' என நினைத்து... அந்த ஃபைட் ஷூட்டிங்கிற்காக தயாராக இருந்தோம்.

(அதை ஏன் கேட்குறீங்க? கோவளம் கடற்கரையின் பேக்வாட்டர்... காஷ்மீரின் ஏரி. கோவளம் உப்பளம்... காஷ்மீரின் பனிப்பொழிவு. அரைபாடி லாரிதான் போட். இப்போ நினைத்தாலும் சிரித்து வயிறு வலித்துவிடும் ஷூட்டிங் அனுபவம்...)

______________________________

முத்து எங்க சொத்து!

சிங்கம்பட்டி ஜமீன் தாயப்பராஜா அவர்கள் எனக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதையும், அந்த நட்பின் நினைவலைகளையும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பிற்குச் சென்றால் தாயப்பராஜா அங்கு வந்துவிடுவார்.

"தலைமுறை' படப் பிடிப்பிற்காக அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பாஸ்கர் லாட்ஜில் தங்கியிருந்தோம்.

ஜமீன் தாயப்பராஜா அங்கே லோக்கலில் நான் பயன்படுத்திக்கொள்வதற்காக தனது காரைக் கொடுத்தவர்... கூடவே தனது டிரைவரான... ஒரு பையனையும் என்னிடம் விட்டு விட்டுப் போனார்.

டிரைவிங்கிற்கு புதுசு என்பதால் ரொம்பப் பதுவிசாக கார் ஓட்டினான் அந்த இளைஞன்.

நான் அந்தப் பையனைப் பற்றி விசாரித்தபோது... சிங்கம் பட்டி ஜமீன் வகையறாவான... தேவர் இனத்து பையன் என்றாலும்... கோயம்புத்தூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் வளர்ந்தவன் என்பது தெரிந்தது.

"தலைமுறை' படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பி விட்டேன்.

ரொம்ப நாளைக்குப்பிறகு... ""எனக்கு ஒரு நல்ல டிரைவர் வேணும்''’என ஜமீன் தாயப்ப ராஜாவிடம் சொன்னேன். அவரும் அனுப்பிவைத்தார்.

அந்தப் பையனேதான்... டிரைவிங்கில் நல்ல அனு பவத்தோடு வந்தார்.

கிட்டத்தட்ட 25 வரு டங்களாக எனக்கு டிரைவ ராகவும், எங்கவீட்டுப் பிள்ளை களில் ஒருவராகவும் இருக்கிறார் முத்து.

முத்துவின் டிரைவிங்கே அலாதியானது. வேகமும், விவேகமுமான நம்பர்ஒன் டிரை வர்.

விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த முத்து, "பார்ட்னர்' கார்த்திக்கின் தீவிர ரசிகர். நற்பணி மன்றமும் வைத்திருந்தவர்.

முத்துவின் உறவுக்காரப் பெண் செல்வியை முத்துவுக்கு திருமணம் செய்து வைத்தோம். செல்வி மிகவும் வெள்ளந்தியான பெண்.

ஒருசமயம்... வீ.கே.ராமசாமி சித்தப்பாவின் மனைவி ரமணி அம்மாள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தபோது... "செல்வி... இவங்க ரமணியம்மா... நிறைய படங்கள்ல நடிச்சிருக்காங்க' என என் அம்மா அறிமுகப் படுத்திவைக்க... "குணசித்திர நடிகை' என்றோ... "கேரக்டர் ஆர்டிஸ்ட்' என்றோ சொல்லத் தெரியாத செல்வி... "சக நடிகையா?'’ எனக் கேட்டுவிட... ‘சகநடிகை’ என்றால் "ஜூனியர் ஆர்டிஸ்ட்' என்பதால்... "என்னைப் பார்த்து சக நடிகையான்னு கேட்கிறதா?' என செல்வியைத் திட்ட... செல்வி அழ... நான் சமாதானப்படுத்தி னேன்.

நான் எம்.எல்.ஏ. ஆனதும் சைதாப்பேட்டை 134-வது வட்டத்தைச் சேர்ந்த அ.தி. மு.க.காரர் பாஸ்கர் தன்னோட வீட்டில் எம்.எல்.ஏ. அலுவலகம் வைக்க இடம் கொடுத்தார். அவர் வீட்டு மாடியில்தான் முத்துவின் ஃபேமிலியை குடிவைத்தோம். முத்துவின் அப்பா வைத்தியர் என்பதால் உதவும் பண்பு முத்துவுக்கு உண்டு. ஒருசமயம் சென்னையில் வெள்ளம் வந்த போது... சைதாப்பேட்டையில்... நெஞ்சுவரை பெருக்கெடுத்த வெள்ளத்தில் நீந்தியபடி... வீடுவீடாக பால் பாக்கெட் கொடுத்தார் முத்து.

என் அம்மாவை மாடியி லிருந்து கீழே நான் தூக்கி வரு வேன். 2007-ல் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்ட பிறகு... என் அம்மாவை தூக்கிச் சுமந்து கீழே கொண்டுவருவார் முத்து.

தமிழகம் முழுக்க... நல்ல டிபன் கிடைக்கும் இடங் களையும், நல்ல மதிய உணவு கிடைக்கும் இடங்களையும், பெட்ரோல் கிடைக்கும் இடங் களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் முத்து.

டிரைவர் என்பதையும் தாண்டி... எனது டச்-அப் பாய் ஆகவும், எனக்கு நேரத்துக்கு மருந்து மாத்திரைகள் தரும் உதவியாளராகவும் இருக்கிறார் முத்து.

அமெரிக்காவிலிருந்து என் பெரிய அக்கா போன் செய்யும் போதெல்லாம் "முத்து எப்படி இருக்கான்?' என விசாரிக்காமல் இருக்கமாட்டார். அந்தளவு எங்களில் ஒருவராகிவிட்டார் முத்து.

ஒரு நல்ல குழந்தைச் செல்வத்தை முத்து தம்பதிக்குக் கொடுக்க... நானும், என் மனைவி யும் கடவுளை பிரார்த்திக் கிறோம்.