Skip to main content

கர்ஜனை! - இளையவேள் ராதாரவி (101)

(101) போராட்டக் களத்தில் சமாதானக் கொடி!

மிழகத்தின் முதல் பெண்அமைச்சர் என்கிற பெருமைக்குரியவர் பர்மாவின் ரங்கூன் நகரத்தில் பிறந்தவரான ஜோதி வெங்கடாசலம் அவர்கள்.

பர்மாவிலிருந்து கணவருடன் வந்த 1953-54-ல், ராஜாஜி அவர்களின் அமைச்சரவையில் பெண்கள் நலத்துறை அமைச்சராக இருந்தார். 1962-63-ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

ஜெர்மனியில் இருக்கும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஈ.க.த.ஒ.) பயிற்சிபெற என் பெரிய மாமாவையும், மாமாவின் நண்பர் சீதாராமன் அவர்களையும் அங்கு பயிற்சிபெற அரசாங்கம் தேர்வு செய்தது. தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும்... பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் விரைந்து கிடைக்க உதவினார். அந்தச்சமயம் ஜோதி வெங்கடாசலம் அவர்கள் ஒரு கார் வாங்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.

radharavi


போன அத்தியாயத்தில்... என் அப்பா வைத்திருந்த இம்பாலா செவர்லெட் டூரர் (ஆட்டோமேடிக் டாப்) காரைப் பற்றியும், அதில் மாடுகளுக்கான வைக்கோல் தீவனம் ஏற்றிச் சென்றதையும் பற்றிச் சொல்லியிருந்தேனே...

அந்தக் காரை ஜோதி வெங்கடசாலம் அவர்களுக்கு தர முன்வந்தார் என் அப்பா. அவர் இலவசமாக பெற மறுத்ததால், ஒரு தொகை வாங்கிக்கொண்டு ‘லீகல் புரசீஜர்படி அந்தக் காரை அவரிடம் கொடுத்துவிட்டார் அப்பா.

ஏவி.எம். நிறுவன தயாரிப்பில் 1985-ல் நான் "உயர்ந்த உள்ளம்'’படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது... திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் எம்.ஆர்.ராதா தனலட்சுமியம்மாள்’ காலனியில் "எம்.ஆர்.ராதா நினைவகம்' என்ற பெயரில் என் அப்பாவுக்கு நினைவகமும், சிலையும் அமைக்க பணம் தேவைப்பட்டபோது... ‘சார், "அடுத்த படத்துல கழிச்சுக்கலாம்'’எனச் சொல்லி அட்வான்ஸாக ஒரு தொகை கேட்டேன், ஏவி.எம்.சரவணன் சார் அவர்களிடம். ஆனால் அவரோ, நான் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு... நான் வாங்கிய தொகையையும், சம்பளமாக வாங்கிய தொகையையும் சேர்த்து ‘"உயர்ந்த உள்ளம்'’ படத்துக்கான சம்பளமாக புதிய ஒப்பந்தம் போட்டார். அதன்பிறகு... ஏவி.எம். படங்களில் என்னை அழைக்கவில்லை.

நான்கு வருடங்களுக்குப் பிறகு... 1989-ல் ஏவி.எம். தயாரிப்பில் ராஜா இயக்கத்தில் முதலாளி’அர்ஜுன் ஹீரோவாக நடித்த ‘"சொந்தக்காரன்'’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஆனால்... இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணம்... சினிமா டிரைவர்ஸ் யூனியன்தான்.

அப்போது நடந்தது மிகச்சிக்கலான அந்தச் சம்பவம்.

ஏவி.எம். கார்டன் வாசலில் ஒரு செட் போடப்பட்டிருந்தது. அந்த நேரம் அங்கு ஏதோ தகராறு நடந்துகொண்டிருந்திருக்கிறது. தீயை அணைக்க உதவி செய்யப்போன டிரைவர்ஸ் யூனியனைச் சேர்ந்த பாலு என்கிற தொழிலாளியை, சரவணன் சாரின் மகனும், தயாரிப்பாளருமான குகன் சார் கைநீட்டி அடிக்க... பாலுவின் கண்ணில் அடி பலமாக விழுந்ததில் கண் கலங்கிப்போனது.

இதனால் பிரச்சினை பெரிதாகி... சரவணன் சாருக்கும், குகன் சாருக்கும் எதிராக தொழிலாளிகள் திரள... நிலமை வெகுஉஷ்ணமாக இருந்தது. நான் சரவணன் சாருக்கு போன் செய்து ""சார்... நடிகர் சங்கத்துக்கு வாங்க, பிரச்சினைய பேசி சரிபண்ணிடலாம்'' என்றேன். ஆனால் நான் தொழிலாளர் அமைப்புக்கு ஆதரவாக பேசுவேன் என நினைத்து வர மறுத்தார்.

அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் சித்தப்பா அவர்கள், எனக்கு போன் செய்து... “""அந்தப் பிரச்சினையை சரிபண்ணப் பாருய்யா''’எனச் சொன்னார்.

""நான் அவர்கிட்ட பேசினேங்க சித்தப்பா... அவரு நடிகர் சங்கத்துக்கு வரமாட்டேங்கிறார்''’எனச் சொன்னேன்.

""சரி... நான் பேசிக்கிறேன்''’எனச் சொல்லிவிட்டார். மறுபடி போன் செய்து சரவணன் சார் வீட்டுக்குப் போய் பேசச் சொன்னார் கலைஞர் சித்தப்பா.

இரவு நான் சரவணன் சார் வீட்டுக்குப் போனேன். அங்கே அண்ணன் வைரமுத்துவும் இருந்தார். ""சார்... நடிகர் சங்கத்துக்கு வந்தீங்கன்னா... அவங்க தரப்பையும் வரச்சொல்லி பேசி சமாதானமாகலாம்''’என நான் சொல்லிவிட்டு வந்தேன்.

கொந்தளிப்புடன் இருந்த டிரைவர்ஸ் யூனியன் ஆட்களோ... ஏவி.எம். ஸ்டுடியோ வாசலில் நின்று கடுமையான கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். சிலர்... ஸ்டுடியோ சுவரில் கரிக்கட்டையால் கண்டபடி எழுதிக்கொண்டிருந்தார்கள். நான் காரைவிட்டு இறங்கி அவர்களிடம் பேசினேன்.

""அநாவசியமான கோஷம் போடக்கூடாது, கரிக்கட்டையால எழுதக்கூடாது''’என சமாதானப்படுத்தி சாலையில் அவர்களை உட்கார வைத்தேன். அவர்களுக்கு மத்தியில் நானும் உட்கார்ந்துகொண்டு அவர்களுடன் பேசினேன்.

சரவணன் சாரும், குகன் சாரும் நடிகர் சங்கத்திற்கு வந்தனர்.

karthikகாளி அண்ணன் தலைமையில் டிரைவர்ஸ் யூனியன் ஆட்கள் வந்தனர்.

கொந்தளிப்போடு இருந்த டிரைவர்ஸ் யூனியன் ஆட்களை சமாதானப்படுத்தி... இருதரப்பையும் செப்பரேட் பண்ணி பேச்சுவார்த்தை நடத்தினேன்.

"மன்னிப்புக் கடிதம் கொடுத்தாத்தான் நாங்க இந்தப் பிரச்சினையை விடுவோம்'’ என்றார்கள் யூனியன் ஆட்கள்.

""சார்... நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறதா மட்டும் எழுதிக் கொடுங்க போதும்''’என்றேன்.

""சரவணன் சார் கடிதம் கொடுத்துட்டார். மனஸ்தாபத்தை மறந்து வேலையைப் பாருங்க''’’ என்றேன்.

சரவணன் சாருக்கு டிரைவர்ஸ் தரப்பில் மாலை போட்டார் காளி அண்ணன்.

(ஏற்கனவே... இதே டிரைவர்ஸ் யூனியனுடனான தகராறில் அம்பிகாவின் அம்மா ஒரு டிரைவரை அடிக்க... அது பிரச்சினையாகி... அம்பிகாவின் அம்மா கொடுத்த மன்னிப்பு கடிதத்தை டிரைவர்ஸ் யூனியனில் கொடுக்கவில்லை நான். என் வார்த்தையை ஏற்று பிரச்சினையை கைவிட்டனர். அதேபோல இந்த சம்பவத்திலும் சரவணன் சார் கொடுத்த கடிதத்தை நான் யூனியனில் கொடுக்கவில்லை. கிழித்துப்போட்டேன். என் வார்த்தையை ஏற்று வேலைக்குத் திரும்பினர்)

பிரச்சினையை பேசி முடித்ததற்காக... நன்றியாக... சரவணன் சார் "சொந்தக்காரன்'’படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருப்பாரோ... என்னவோ...?

இந்தப் படத்தில் கார்மேல் நான் தாவி விழுகிற ஸீன். அதை நான் மிகக்கச்சிதமாக செய்து முடித்ததும்... "பிரமாதம் முதலாளி'’என அர்ஜுன் என்னைப் பாராட்டினார்.

படத்தில் நடித்ததற்கான சம்பளத்திற்காக கடைசி செக் எனக்கு கொடுக்கப்பட்டதும்... அதை... பிரச்சினையில் பாதிக்கப்பட்டு ஒருபக்க கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்ட... டிரைவர் பாலுவிடம் கொடுத்தேன்.

""இந்தப் படத்துல நான் நடிக்க வாய்ப்பு அமைஞ்சதுக்கு காரணமே... நீங்கதான். இந்தாங்க முதலாளி... இந்த செக்கை வச்சுக்கங்க''’என கொடுத்தேன்.

மரியாதைக்காக அதை வாங்கிக்கொண்டு... பிறகு என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் பாலு.

பார்ட்னர்’கார்த்திக், ராகினி ஜோடியுடன் நான், எஸ்.எஸ்.சந்திரன் மாமா, நண்பர் தியாகு ஆகியோரும் நடித்த படம் "சோலைக்குயில்'.’

கோத்தகிரியைச் சேர்ந்த ராஜன் இயக்கினார். தமிழ்மணி அவர்கள் தயாரித்தார்.

பார்ட்னரும் நானும் நடித்த "சொல்லத் துடிக்குது மனசு'’படத்தில் "பூவே செம்பூவே' என்கிற அருமையான பாடல், படத்தில் எனக்கு அமைந்ததுபோல... "சோலைக்குயில்'’ படத்திலும் ‘"வசந்த பூங்காற்றே... கொஞ்சம் உறங்க தாலாட்டு'‘என்கிற அருமையான பாடல்... நான் பாடுவதாக அமைந்தது.

கோத்தகிரி படுகாஸ் மக்களின் பாடல் ஒன்றின் ட்யூன் இந்தப் பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது.

இது ’பார்ட்னர்’கார்த்திக்கிற்கு மறக்க முடியாத படம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோதுதான்... கார்த்திக்-ராகினி திருமணம் நடந்தது.

இது எனக்கும்கூட மறக்கமுடியாத படம்.

(குடித்துவிட்டு தகராறு செய்த நான்கு பேர்களை சுழன்று அடித்து துரத்திய ‘பார்ட்னர்’கார்த்திக். ரியல் ஹீரோ...)
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்