(99) சூப்பர் ஸ்டாரின் ஆட்டோ சவாரி!
என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சாரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவில் அப்போது தலைமை நிர்வாகியாக இருந்தார் நடராஜன் சார்.
(பின்னாளில் "சாய்மீரா' நடராஜன், "பிரமிட்' நடராஜன் எனப்பட்ட... நடிகராகவும் இருக்கும் நடராஜன்தான்)
கே.பி.சாருடன் ஒன்றாகப் படித்தவர். முதலாளியை (கே.பி.சாரை) காப்பாற்ற நடராஜன் சார் நினைத்தது சரி. அதற்காக அந்தக் கம்பெனிப் படத்தில் நடிக்க வருகிறவர்களை சாகடிக்கக்கூடாதே..
நடராஜன் சார் மீது இருந்த வருத்தத்தால் கவிதாலயா படங்களை தவிர்த்தேன்.
மீண்டும் கவிதாலயாவில் என்னை சேர்த்தவர் டைரக்டர் அமீர்ஜான் சார்.
ரஜினி சார், ஷோபனா மேடம், அண்ணன் வினுசகக்ரவர்த்தி, ’மாப்ள’ ரகுவரன்... ஆகியோருடன் நான் யதார்த்த வில்லனாக நடித்த படம் ... கவிதாலயா தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கிய‘சிவா.
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பப்புவர்மா இந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர். அவரது ஸ்டண்ட் அமைப்பில் நான் நடித்த முதல் படம் இது.
நம்ம தமிழ் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள் முடிந்தளவு ஒரிஜினலாக செய்யச் சொல்லி ஸ்டண்ட் கலையை நடிகர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். ஆனால்... பப்புவர்மா மாஸ்டர், நடிகர்களை பூ மாதிரி அலுங்காமல் பார்த்துக்கொள்வார். பெரும்பாலும் டூப் வைத்து எடுத்துவிடுவார். அதே சமயம்... அவரின் மேக்கிங் ஸ்டைல் இங்கிலீஷ் பட பாணியில் இருக்கும்.
மும்பை அந்தேரி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது.
ரஜினி சார் "ஹாலிடே இன்' ஹோட்டலில் தங்கியிருந்தார். நாங்கள் "சன் அண்ட் ஸாண்ட்' ஹோட்டலில் தங்கியிருந்தோம். இரண்டு ஹோட்டல்களும் பக்கம் பக்கம்தான்.
ரகுவரன், வினுசகக்ரவர்த்தி... இவங்களுக்கெல்லாம் டபுள்ரூம் போட்டிருந்தாங்க. நானும், எனது அஸிஸ்டெண்ட் குமாரும் தங்குவதற்கு மெகா சைஸ் ஷூட்ரூம் கொடுத்தார்கள்.
எனக்கோ ஆச்சரியம். தவறுதலாக எப்படியோ எங்களுக்கு சூட் ரூம் கிடைத்திருப்பதை அறிந்துகொண்டேன்.
"நடராஜன் சார் வந்தா சொல்லிக்கலாம், இல்லேன்னா சூட் ரூம்லயே தங்கீரலாம்' என நினைத்துக்கொண்டேன்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கிற இடத்தில் குட்டித் தூக்கம் போடுகிற பழக்கம் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் மாப்ள ரகுவரன் ரொம்ப சர்வசாதாரணமாக... குதிரை லாயத்தில் போய் படுத்து தூங்குவார்.
"இவ்வளவு பேட் ஸ்மல் அடிக்குது. இந்த மனுஷன் அதுல தூங்குறாரே...' என யூனிட்டே ஆச்சரியப்படும்.
ஒருநாள்... ரஜினி சாரை பார்ப்பதற்காக விஜயகுமார் அண்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்திருந்தார். ஷூட்டிங் முடிந்ததும் இருவரும் ஒரு காரில் ஹோட்டலுக்கு கிளம்பினார்கள்.
நான், எனது உதவியாளர் குமார், நடிகை வைஷ்ணவி, அவரது டச்-அப் உதவியாளர் ஆகிய நான்குபேரும் ஒரு காரில் கிளம்பினோம்.
ரஜினி சாரும், விஜயகுமார் அண்ணனும் சென்ற கார் வழியில் பிரேக் டவுன் ஆகி நின்றது. எங்கள் காரில் இருவரும் ஏறிக்கொண்டனர்.
ஆறு பேர்கள் அமர்ந்ததால்... மிகவும் நெருக்கடியாகிவிட்டது காருக்குள். ஹோட்டல் இருப்பது ஜுகு பகுதியில். இதனால்... "ஒரு டாக்ஸி பிடிக்கலாம்' என்றார் ரஜினி சார்.
அதன்படி ஒரு டாக்ஸி பிடித்து... ரஜினி சார், விஜயகுமார் அண்ணனுடன் நானும் டாக்ஸியில் ஏறிக்கொண்டோம். கொஞ்சதூரம் போனது... டாக்ஸி பிரேக்டவுன் ஆகி நின்றுவிட்டது.
வழியில் ஒரு ஆட்டோ வந்தது. ரஜினி சாரைப் பார்த்ததும் ஆட்டோக்காரர் நிறுத்த... நாங்கள் மூவரும் அதில் ஏறிக்கொண்டோம்.
அமிதாப்பச்சன் அவர்களின் வீட்டைத் தாண்டித்தான் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் செல்லவேண்டும்.
அமிதாப் அவர்களைப் பார்க்க அவரின் வீட்டுமுன்பாக பெரும் கூட்டம் திரண்டிருந்தது. அதனால் ஆட்டோ மெல்லமாகச் செல்ல... அந்த கூட்டத்தில் இருந்த சிலர் ரஜினி சாரைப் பார்த்துவிட்டு... "ஹே... ரஜினிகாந்த்' என குரல்கொடுக்க... மொத்த கூட்டமும் கை அசைக்க... ரஜினி சாரும் உற்சாகமாக கை அசைத்தார்.
"நம்ம ஊர் நடிகருக்கு மும்பையில் இவ்வளவு செல்வாக்கா...' என பெருமைப்பட்டேன்.
"ஹாலிடே இன்' ஹோட்டலுக்குள் ஆட்டோவை அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் ஆட்டோவில் ரஜினி சார் இருப்பதைப் பார்த்ததும்... உற்சாகமான செக்யூரிட்டி... "ரஜினி சார்... நீங்க போங்க...' என ஆட்டோவை உள்ளே அனுமதித்தார்.
"வாங்க ரவி... டிபன் சாப்ட்டுட்டு போலாம்' என அழைத்தார்.
மூன்று பேரும் பல விஷயங்களை பேசியபடி டின்னர் சாப்பிட்டோம். பிறகு நான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினேன்.
(எனது 100-வது பட அனுபவமும், நூற்றாண்டு கடந்த பின்னும் என் அப்பா நடிகவேளைப் பற்றி இப்போதும் பேசப்படும் ஒரு வதந்தியும்)
படம் உதவி: ஞானம்
_________________
எப்போதும் தொடரும் உறவு!
நான் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த "வீரன் வேலுத்தம்பி' படம் வெளியான அன்று... சென்னை ராம் தியேட்டரில் ஏ.சி.பாக்ஸில் உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் உதவியாளர் குமார் ஒருவரை அழைத்து வந்தார்.
"அண்ணே... இவர் பேரு பிரபாகர். தென்சென்னை சிவாஜி ரசிகர்மன்றத் தலைவர். பெரிய ஆளுண்ணே. தீவிர தி.மு.க.காரர்' எனச் சொல்லி அறிமுகப்படுத்தினார்.
முரட்டுத்தனமாக இருந்த பிரபாகர் "தலைவரே... பிரமாதமா பண்ணீருக்கீங்க...' என என் நடிப்பை பாராட்டினார்.
நான் சிவாஜி அப்பாவின் ரசிகன். அவருக்கு மன்றம் வைத்திருந்தவன். தி.மு.க.காரன். அதனால் பிரபாகரை எனக்கு முதல் சந்திப்பிலேயே பிடித்துப்போய்விட்டது.
காலப்போக்கில் எனது ரசிகர்மன்ற பொறுப்பையும் ஏற்றார் பிரபாகர்.
எனக்கு ரசிகர் மன்றங்கள் பிடிக்காது. காரணம்... எந்த ஊருக்கும் சொந்த வேலையாகவோ... படப்பிடிப்பிற்காகவோ... போகும்போது முன்கூட்டியே ரசிகர்மன்ற பொறுப்பாளரிடம் தெரிவிக்கவேண்டும்.
நான் ஷூட்டிங்கிற்கோ... நாடகம் போடவோ... அரசியல் மீட்டிங் பேசவோ... அடிக்கடி வெளியூர் போகிறவன். இதெல்லாம் எனக்கு செட்டாகுமா?
இருந்தாலும்... பேரளவுக்கு மன்றம் உண்டாக்கி அதை பொறுப்பேற்று நடத்தினார் பிரபாகர்.
(இப்போதும்கூட... எனது மன்ற பொறுப்பாளர்களாக... திருச்சியில் தங்கராஜ் அண்ணன், கோவையில் இக்பால், ஈரோட்டில் நகுலன், பாரி... இப்படி சில நண்பர்கள் இருக்கிறார்கள்)
ஒரு கட்டத்தில் பிரபாகர், தன் சண்டியர்த்தனங்களை குறைத்துக்கொண்டு... என்கூடவே இருந்து, எனது கால்ஷீட் மேனேஜராகவும் ஆகிவிட்டார்.
எங்க சந்தானம் அண்ணனின் மகள் தீபாவும், பிரபாகரும் விரும்ப... சந்தானம் அண்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். தீபாவை வளர்த்தது என் மனைவி பாக்கியலட்சுமி. இதனால் நாங்கள் அண்ணனை சமாதானப்படுத்தி... பிரபாகருக்கும் தீபாவுக்கும் திருமணம் செய்து வைத்தோம்.
பிரபா-தீபா தம்பதியின் மகன் அமெரிக்காவில் பைலட்டிற்கு படித்துவருகிறான். மகள் சென்னையில் படிக்கிறாள்.
சண்டியர்தனத்தை 100-க்கு 100 சதவிகிதம் விட்டுவிட்டு... ரொம்ப சாத்வீகமாகிவிட்டார் பிரபாகர்.
முப்பதாண்டுகளாக என்னுடனும், எங்கள் குடும்பத்துடனும் இருக்கிறார்.
சினிமா இண்டஸ்ட்ரியில் என்னைத் தெரியாதவங்க இருக்கிறாங்களோ இல்லையோ... ஆனால் பிரபாகரைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.
எங்கள் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் உறுதியாக உடனிருக்கிறார் பிரபாகர்.
நடிகர் செந்தாமரை அண்ணனின் மகள் திருமணம் மதுரையில் கலைஞர் தலைமையில் நடந்தது.
"செந்தாமரை என்பது... குளத்தில் நீர்வற்றிப் போனால்... அதுவும் காணாமல் போகும். இருந்த குளத்தைவிட்டு போகாது. அதுபோலத்தான் சகோதரர் செந்தாமரை...' எனப் பேசினார் கலைஞர். (செந்தாமரை அண்ணன் தீவிர தி.மு.க.காரர். கலைஞர் மேல் மிகுந்த மதிப்பு உள்ளவர்.)
பிரபாகரை பார்க்கும்போதெல்லாம் எனக்கு கலைஞர் சித்தப்பா பேசியதுதான் நினைவுக்கு வரும்.
எந்த நிலையில் நான் இருந்தாலும் என்னைவிட்டுப் போகாதவர்.
கே.பாலசந்தர் சாரின் படங்களில் ஒரு உறவுமுறை குழப்பம் இருப்பது போல் காண்பிப்பார்.
அதுபோல பிரபாகரை நான் என்ன உறவில் கூப்பிடுவது என்கிற குழப்பம் எனக்கு வரும்.
உதவியாளர், ரசிகர்மன்ற பொறுப்பாளர், கால்ஷீட் மேனேஜர், மருமகன்... இப்படி பல உறவுகளில் இருக்கும் பிரபாகரன்... எனக்கு என்ன உறவு? என்கிற குழப்பம் வரும்.
அதனால் பிரபாகரை நான் இப்படித்தான் கூப்பிடுவேன்....
""டேய் பிரபாகர்''.