(97) ரஜினியிடம் சொன்ன 234 தொகுதி டயலாக்!
ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க முதல்வாய்ப்பாக "நான் மகான் அல்ல'’படம் எனக்கு வந்தது. ஆனால் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சார், எனக்கு கதை சொல்ல மறுத்தது உள்ளிட்ட சில காரணங்களால் அந்தப் படத்தில் நான் நடிக்க மறுத்தேன். ரஜினி சாருடன் நான் நடித்த முதல் படம் ‘"சிகப்புச் சூரியன்'.
(இதுபற்றி நான் ஏற்கனவே விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.)
இருந்தாலும்... "நான் மகான் அல்ல'’படத்தில் நான் நடிக்க மறுத்ததை வேறு மாதிரியாக திரித்து வதந்தி கிளப்பினார்கள்.
"ரஜினி கன்னடத்துக்காரர். அதனால் ரஜினிகூட நடிக்கமாட்டேன்'’ என நான் சொன்னதாக வதந்தி வெகுவேகமாக பரவியது. நான் சினிமாவில் நடிகனாக அறிமுகமானதே கன்னடப் படத்தில்தானே. ‘"கலைக்கு மொழி பேதம் கூடாது'’ என நினைப்பவன் நான். அரசியலில் ரஜினி சாருடன் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால்... ரஜினி சாருடன் நடிக்க நான் ஒருபோதும் தயங்கியதில்லை.
ரஜினி சாருக்கும், எனக்கும் இருக்கும் நட்பு பரவலாக வெளியே தெரியாது.
சினிமா, அரசியல், சமூகம் என பல விஷயங்களை விவாதித்துக்கொள்கிற நண்பர்கள் நாங்கள்.
கடந்த அத்தியாயத்தில் ரஜினி சாருடன் நடித்த "ராஜாதி ராஜா'’பட அனுபவத்தைச் சொல்லியிருந்தேன். இது ரஜினி சாருடன் எனது மூன்றாவது படம். இரண்டாவது படம் "குரு சிஷ்யன்'.
சமகாலத்தில் படம் பிடிக்கப்பட்டு... முன்பின் வெளியான படங்கள் என்பதால் சில அனுபவங்களை முந்திச் சொல்கிறேன். சில அனுபவங்களை பிந்திச் சொல்கிறேன்.
ரஜினி சாருக்கும், எனக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டது "குரு சிஷ்யன்'’படப்பிடிப்பில்தான்.
ரஜினி சார், பிரபுமா, சீதா, பாண்டியன், அறிமுகம் கௌதமி, அண்ணன் சோ, வினுசக்கரவர்த்தி சார், ரவிச்சந்திரன் சார் ஆகியோருடன் நான் வித்தியாசமான வில்லனாக நடித்த படம் இது. எஸ்.பி.முத்துராமன் சார் இயக்கியிருந்தார்.
இதில் மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய உண்டு.
இந்திப் படம் ஒன்றின் தழுவல்தான் "குரு சிஷ்யன்'.’
சக்திகபூர் செய்திருந்த வேஷத்தில் நான் நடித்தேன். எனது கேரக்டர் அதீத வில்லத்தனம்போல் தோன்றினாலும்... காமெடி அதிகமாக இருக்கும்.
நடிகர்திலகம் சிவாஜி அப்பா... எக்ஸலண்ட்டாக காமெடி செய்வார். அதுபோல காமெடியில் ரஜினி சாருக்கு ரொம்ப இண்ட்ரஸ்ட். அற்புதமான அப்ஸர்வர். நிறைய ஸ்டடி பண்ணி செய்வார். எங்களுடைய காம்பினேஷனின் முதல் காட்சி கே.ஆர்.விஜயா அம்மா கார்டனில் எடுக்கப்பட்டது.
எனக்கு ஒரு அடியாள் தேவை. "எமண்டீஸ்' என்ற பெயரில் அடியாளாக வேஷம் போட்ட ரஜினி சாரை வினுசக்கரவர்த்தி அண்ணன் என்னிடம் அழைத்து வருவார். நான் அவரை சோதிப்பேன்.
அப்போது என் அண்ணன் ரவிச்சந்திரனின் மகளான சீதா, தனக்கு பிரபு காதல் தொல்லை தருவதாக என்னிடம் சொல்லுவார்.
நான் அடியாளாக வேஷம்போட்டு வந்திருக்கும் ரஜினி சாரிடம் “""அந்தப் பாபு பயல (பிரபுமா) தூக்கிட்டு வா'' என்பேன்.
""நீங்க கோடு போடுங்க. நான் ரோடே போடுறேன்'' என்பார்.
உடனே நான், ""நீ நம்ம ஊருக்கு ரொம்ப தேவைப்பா'' என்பேன்.
தன் சிஷ்யனான பிரபுமாவை அடித்து உதைத்துக் கொண்டு வருவதுபோல நாடகமாடி... பிரபுமாவை கொண்டுவருவார் ரஜினி சார்.
என்னிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்த பிரபுமா... அதைக்காட்டி மிரட்டி... ரஜினி சாரிடம் என்னை அடிக்கச் சொல்லுவார். ரஜினி சார் ""என்னோட பாஸ அடிக்க மாட்டேன்'' என மறுப்பார்.
""பரவால்ல... அடிப்பா என்னய'' என நான் சொல்லுவேன்.
ரஜினி சார் என்னை அடி வெளுத்துவிடுவார்.
""அதெப்படிப்பா 234 தொகுதியும் தேடி அடிச்சிருக்க?'' என நான் கேட்பேன்.
படப்பிடிப்பின்போது இந்த வசனத்தை நான் சொன்னதும்... “""அது என்ன?'' என கேட்டார் ரஜினி சார்.
""தமிழ்நாட்டுல 234 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கு'' என நான் அவரிடம் விளக்க... “""அப்படியா? வெரிகுட்'' என்று சிரித்தார்.
(தமிழகத்தில் 234 தொகுதிகள் என்கிற எண்ணிக்கை அப்போதுதான் ரஜினி சாருக்கு தெரியும்)
மைசூருவில் படப்பிடிப்பு நடந்தபோது... நான் ஒரு ஹோட்டலுக்கு தங்கச் சென்றேன். ரஜினி சார் வழக்கமாக தங்கும் "சதர்ன் ஸ்டே' ஹோட்டலில் தங்கினார். என்னையும் அதே ஹோட்டலில் தங்கச் சொன்னார். ("லிங்கா'’படப்பிடிப்பிற்காக போனபோதும் ரஜினி சார் ‘சதர்ன் ஸ்டே’ ஹோட்டலில்தான் தங்கினார். அதைக்காட்டிலும் பெரிய ஹோட்டலை அவர் தேடிப் போகவில்லை. அதுதான் ரஜினி சாரின் ஸ்பெஷாலிட்டி.)
பிரீமியர் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்தபோது... ஓய்வு நேரத்தில் தினமும் ரஜினி சாருடன் கிரிக்கெட் விளையாடுவோம்.
இப்போது கர்நாடக டூரிஸ ஹோட்டலாக இருக்கும் லலித் மஹால் பேலஸ் ஹோட்டலில் ஒரு கேக் ஷாப்பில் அழகான ஒரு இளம்பெண் வேலை பார்த்தார்.
நானும், பாண்டியனும் தினசரி அந்தப் பெண்ணை டாவடிப்போம். அதைப் பார்த்துவிட்டு ரஜினி சார் சிரிப்பார்.
ரஜினி சாரை பார்த்து ரசிக்க பெரும் கூட்டம் இருக்கும்போது... அவரோ... நாங்கள் செய்கிற குறும்பை ரசித்தார்.
ஒருதடவை ஹோட்டல் அறையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ரஜினி சார், உடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த பிரபுமாவிடம்... “""ராதாரவிய நம்பவே கூடாது. கேமரா முன்னாடி நிற்கைல... நாம கொஞ்சம் அசந்தாலும், நடிப்பில நம்மள தூக்கி சாப்பிட்ருவார்... அவர்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்'' எனச் சொல்லியிருக்கிறார்.
அவ்வளவு பெரிய ஹீரோ அப்படி பாராட்டும்போது நமக்கே பெருமையாகத்தானே இருக்கும்.
ரஜினி சார் ரொம்ப யதார்த்தமான மனிதர்.
இந்தப் படத்தில் அண்ணன் சோ அவர்களும் நடித்தார். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. எங்கள் கல்லூரிக் காலங்களில் நாங்கள் ரசித்த ஹீரோ அண்ணன் ரவிச்சந்திரனுடன் நடித்த அனுபவமும் மறக்க முடியாதது. மலேசியாவிருந்து வந்து தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவானவர்... எங்கள் திருச்சிக்காரர் அண்ணன் ரவிச்சந்திரன்.
எங்கள் ஊரான திருச்சியைச் சேர்ந்த சுதா, தெலுங்கில் பெரிய நடிகை. ("டூயட்'’ படத்தில் பிரபுமாவுக்கு அம்மாவாக நடித்திருப்பார்) "குரு சிஷ்யன்'’படத்தில் பாண்டியனுக்கு சகோதரியாக நடித்திருந்தார். அவரை நான் கெடுப்பதற்காக தூக்கிக்கொண்டு போவேன். “"காப்பாத்துங்க' என கத்துவார் சுதா.
""உன்ன நான்தான் காப்பாத்தணும், நான்தான் கெடுக்கணும். முதல்ல கெடுத்திட்டு... அப்புறமா காப்பாத்துறேன்'' என வில்லத்தனத்தின் உண்மைத்தன்மையை வெளிக்காட்டுவதுபோல் வசனம் பேசினேன்.
ரஜினி சாருக்கு வில்லன் கேரக்டர்களில் ஈடுபாடு உண்டே. அதனால்... இந்த டயலாக்கை டப்பிங் தியேட்டரில் பலமுறை கேட்டு வியந்தார்.
கௌதமிக்கு இது முதல்படம். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார். க்ளைமாக்ஸில் கௌதமி என்னை அரெஸ்ட் செய்யும் ஸீன், தாம்பரத்தை அடுத்த மலைப்பகுதி கல்குவாரியில் எடுக்கப்பட்டது.
படப்பிடிப்பின் ஓய்வுவேளையில்... ""நீங்க அரசியல் எப்படித்தான் பேசுறீங்களோ? நிறைய மீட்டிங் பேசுறீங்கள்ல?'' என வியப்போடு கேட்டார் ரஜினி சார்.
(""நான் அரசியலுக்கு வந்தா... என்னை ஆதரிச்சு எப்படி பேசுவீங்க? என்னை எதிர்த்து எப்படிப் பேசுவீங்க?'' என கேட்டார் ரஜினி.
___________________
கலைக்கப்படாத கூடு!
நான் கல்லூரியில் படிக்கையில்... நண்பர் தாஜின் நாடகத்தில் என் பள்ளித்தோழன் மாரீஸ் வசனம் எழுதுவார். அப்படி உருவான ‘"கண்ணோட்டம்'’ நாடகத்தில் நானும், நடிகர் ராஜேசும் நடித்தோம். இதில் ராஜேந்திரனும் நடித்தார். அப்போதிருந்து ராஜேந்திரன் எனது நெருங்கிய நண்பர். நடிகர்சங்க கமிட்டி மெம்பர், டப்பிங் யூனியனில் கமிட்டி மெம்பர், உப தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர்... என பல பொறுப்புகளில் இருந்திருக்கிறார். ராஜேந்திரன் டிசிப்ளின் உள்ளவர். ஆனால்... அதே டிஸிப்ளினோடு மற்றவர்களும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
நடிகை ஸ்ரீலேகாவை திருமணம் செய்துகொண்டார். நான் இந்த தம்பதியை பார்க்கும்போதெல்லாம் “""என்ன இன்னும் குழந்தை பெத்துக்காம இருக்கீங்க?'' என கேட்பேன். இதனாலேயே... என்னைப் பார்க்கும்போது சிலசமயம் நழுவுவார்கள். இந்த தம்பதியின் ஒரே செல்ல மகன் சரவணன் தி.மு.க.வில் கட்சிப் பொறுப்பில் இருக்கிறார். அற்புதமான பையன் என் அன்பு மாப்பிள்ளை சரவணன்.
எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத ராஜேந்திரனை... மலேசியா போயிருந்தபோது வற்புறுத்தி கையில் பீர் பாட்டிலையும், வாயில் சிகரெட்டையும் கொடுத்து புகைப்படம் எடுத்து அவரின் மனைவிக்கு அனுப்பிவைத்து கலாட்டா செய்தது உண்டு.
ராஜேந்திரன் குடும்பமும், எங்கள் குடும்பமும் நட்பில் இன்றுவரை பிரிக்கப்படாத குடும்பமாக... கலைக்கப்படாத கூடாக இருக்கிறோம்.