Skip to main content

கர்ஜனை! -"இளையவேள்'’ராதாரவி (96)

(96) கூட்டம்னா ரஜினிக்கு அலர்ஜி!

ண்ணன் இளையராஜா சகோதரர்களின் "பாவலர் கிரியேஷன்ஸ்' தயாரித்த படம் ‘"ராஜாதி ராஜா. பல ஹிட் படங்களின் டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள், ரஜினி சாரை வைத்து இயக்கிய முதல் படம் இது. ரஜினி சார் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ராதா, நதியா இருவரும் நாயகிகள். நான் இதில் கொஞ்சம் கோமாளித்தனமான வில்லன் வேஷம் செய்திருந்தேன்.

கதைப்படி விஜயகுமார் அண்ணனின் முதல்தாரத்துப் பையன் ரஜினி. இரண்டாம்தாரம் ஒய்.விஜயா. நான் ஒய்.விஜயாவின் அண்ணன்.

ஒய்.விஜயாவும், நானும், வசந்தும், ஜி.சீனிவாசன் அண்ணனும் சேர்ந்து சொத்துக்காக விஜயகுமார் அண்ணனைக் கொன்றுவிடுவோம்.

இந்தக் கொலையை துப்புத்துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடிப்பார் ரஜினி சார்.

அமெரிக்காவில் படித்துவிட்டு தயாகம் திரும்புவார் ரஜினி சார். (இன்னொரு ரஜினி சார் கிராமத்தில் இருப்பார்.)

முதலில் ஜனகராஜ் அவர்களை அமெரிக்க ரிடர்ன் "ரஜினி ராஜா' பெயரில் அனுப்புவார்கள் எஸ்டேட்டுக்கு. அதன்பிறகுதான் "ராஜா ரஜினி' எஸ்டேட்டுக்கு வருவார்.

radharavi


நான் என் அப்பாவின் ஸ்டைலை டச்-பண்ணி கோமாளித்தனமான வில்லனாக எனது கேரக்டரைச் செய்ய...

""ஏன் இவ்வளவு கோமாளித்தனமா செய்றீங்க? வில்லன் வேஷத்தை சீரியஸா பண்ணக்கூடாதா?''’என ரஜினி சார் என்னிடம் கேட்டார்.

""அதில்ல சார்... வில்லன்னா கிரிமினல் புத்திசாலித்தனம் கொண்டவனா இருப்பான். அவனுக்கு நல்லதும் தெரியும், கெட்டதும் தெரியும். "அமெரிக்க ரிடர்ன் ராஜா'ன்னு முதல்ல ஜனகராஜ்தான் இங்க வர்றதா கதை. ஜனகராஜ் நகைச்சுவையாக கூத்தடிப்பார். ‘"அமெரிக்காவுல படிச்சிட்டு வர்ற பணக்கார இளைஞன் இப்படியா கூத்தடிப்பான்?'னு புத்திசாலியான வில்லனுக்கு சந்தேகம் வந்துடுமே. ஜனகராஜ் கூத்தடிப்பதை ஏத்துக்கிற நான் லூஸுத்தனமான வில்லனா இருந்தாத்தானே லாஜிக் சரியா இருக்கும்? அதனாலதான் இப்படிப் பண்றேன் இந்த வில்லன் கேரக்டரை''’’ எனச் சொன்னேன்.

இவ்வளவு உளவியல் லாஜிக்கோடு நான் என் கேரக்டரை செய்வதற்கான நியாயத்தை உணர்ந்த ரஜினி சார்... ரொம்பவே பெருமைப்பட்டார்.

ரஜினி சார் படங்களில் பாம்பு ஸீன் ஒன்று எப்படியாவது இடம்பெறும். காமெடியாகவோ... சீரியஸாகவோ... ஏதோ ஒரு வகையில் ரஜினி பாம்புடன் தோன்றும் காட்சி இடம்பெறுவதை ரஜினி சார் சக்ஸஸ் சென்ட்டிமெண்ட்டாக நினைத்தார்.

இந்தப் படத்திலும் அப்படி ஒரு காட்சி இடம்பெற விரும்பினார் ரஜினி சார்.

""ராதாரவியை உள்ளங்கையை மடக்கியபடி கையை நீட்டச் சொல்லுவேன். அவரும் நீட்டுவார். நான் ஒரு மந்திரம் சொல்லுவேன். உடனே அவர் கையில் ஒரு பாம்பு வரும். இப்படி ஒரு காட்சி வைங்க''’என டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் அவர்களிடம் ரஜினி சார் சொன்னார்.

இதை டைரக்டர் ஏற்கவில்லை.

"அமெரிக்காவில் படிச்சிட்டு வர்ற ஒரு இளைஞனுக்கு மந்திரம் தெரியுமா?'

"மந்திரம் தெரியும்னே வச்சுக்கிட்டா... அப்பாவை கொலை செய்தவங்களை கண்டுபிடிக்க அவன் ஏன் இவ்வளவு சிரமப்படணும்? மந்திரத்தால் கொலையாளியை கண்டுபிடிச்சிடலாமே?'

"இந்த பாம்பு காட்சி கதைக்கு எந்த விதத்தில் உதவும்?'’’

-இப்படியாக பதினைந்துவிதமாக ரஜினி சாரிடம் கேள்வியெழுப்பிய ஆர்.சுந்தர்ராஜன்... “"இப்படி ஒரு ஸீன் வைக்க முடியாது'’எனச் சொல்லிவிட்டார்.

இதனால் இருவருக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

படத்தின் கதாசிரியரும், இந்தப் படத்தின் தயாரிப்பு வேலைகளை முன்னின்று கவனித்துக்கொண்டவருமான பஞ்சு அருணாசலம் சார்... இருவரையும் சமாதானப்படுத்தினார்.

சென்ட்டிமெண்ட்டாக ரஜினி பாம்பு ஸீன் இடம்பெற விரும்புவதை உணர்ந்து... டைரக்டரின் அனுமதியோடு அந்த ஸீனை பஞ்சு அருணாசலம் சார் எடுத்தார்.

ரஜினி சார் என் கையை நீட்டச்சொல்லி... ‘"உட்டாலங்கடி கிரிகிரி...'’ என ஒரு மந்திரத்தைச் சொல்ல... என் கையில் பாம்பு வருவதுபோல அந்தக் காட்சி எடுக்கப்பட்டது.

"ராஜாதிராஜா'’அவுட்டோர் படப்பிடிப்பின்போது... ‘தான் ஒரு பெரிய ஹீரோ’ என்றெல்லாம் பந்தா காட்டாமல் எல்லோருடனும் சகஜமாக பழகி அரட்டை அடிப்பார் ரஜினி சார். அவரைப் பார்க்க லொகேஷனுக்கு கூட்டம்கூட்டமாக ரசிகர்கள் வருவார்கள். ரஜினி சாருக்கு பெரும்பாலும் கூட்டத்தைப் பார்த்தால்தான் அலர்ஜி. முடிந்தளவு... கூட்டத்திலிருந்து ஒதுங்கத்தான் பார்ப்பார்.

இந்தப் படத்தில்... எஸ்டேட் வரும் வழியில் இயற்கைக் காட்சிகளை ரசித்து, அதில் மனதை பறிக்கொடுத்து மயங்கி ரஜினி சார் ஒரு பாட்டுப்பாடுவதாக அவரின் ஓபனிங் ஸீன் உண்டு.

‘மலையாளக் கரையோரம் தமிழ்பாடும் குருவி...

அலை ஆடை கலையாமல் தலையாட்டும் அருவி...’

என்கிற அந்தப் பாடலில் ரஜினி சார் வொய்ட் அண்ட் வொய்ட் ட்ரெஸ்ஸில் வருவார்.

படம் பார்த்துவிட்டு... "என்னை இவ்வளவு அழகா சினிமாவில் காண்பிச்சது ராஜராஜன்தான்''’(கேமராமேன் ராஜராஜன்) என மகிழ்ச்சியோடு சொன்னார் ரஜினி சார்.

படம் வெளியாகி... சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

(கன்னடத்துக்கார ரஜினியுடன் ராதாரவி நடிக்க விரும்பலையாம்...)

_______________________
மனிதர் மாறிவிட்டார்!

என் நண்பரும், எனது முதல் சினிமாவான கன்னடப் படத்தில் என்னுடன் நடித்தவருமான ‘"நியூ பாப்புலர் டயர்ஸ்'’ குடும்பத்தைச் சேர்ந்த ஜீவாவைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தி.நகர், மங்கேஷ் தெருவில் ஜீவாவின் வீட்டுக்கு நான் ஜீவாவை பார்க்க போவதுண்டு. ஜீவாவின் வீட்டுக்கு எதிரே பிரபலமான "கர்ணா டெய்லர்’கடை' இருந்தது. அங்கே கட்டிங் பையனாக மதுரையைச் சேர்ந்த சந்திரன் பணியாற்றினார்.

radharavi"இதுதான் எம்.ஆர்.ராதாவோட மகன்'’என என்னைப் பற்றிக் கடையில் இருப்பவர்கள் சொல்லும்போதெல்லாம் ஆர்வமாக என்னைப் பார்த்திருக்கிறார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் சந்திரன். அதோடு... டி.எம்.சௌந்தரராஜன் பாடல்களை எந்நேரமும் கேட்டு ரசிக்கிற பழக்கம் உள்ளவர்.

"அடிமைப் பெண்'’படத்தில் பின்னணிப் பாடகராக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களை அறிமுகப்படுத்த புரட்சித்தலைவர் முடிவு செய்ததும்... "டி.எம்.எஸ்.ஸைத்தான் பாட வைக்கவேண்டும். டி.எம்.எஸ்.ஸை மாற்றாதீர்கள்'’என எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இரண்டாயிரம் பேர்களிடம் ரத்தக் கையெழுத்து வாங்கி... புரட்சித்தலைவருக்கு அனுப்பியவர் சந்திரன்.

நான் கல்லூரிக்கு அணிந்து செல்லும் உடைகளை சந்திரன் தைக்க ஆரம்பித்தார். அது எனக்குப் பிடித்திருந்தது.

நான் நடிகனானபிறகு... டி.கே.போஸ் அவர்களின் இயக்கத்தில் "என்னை விட்டுப் போகாதே'’ படத்தில் நடித்தபோது... சந்திரனை எனது காஸ்ட்யூமராக வைத்துக்கொண்டு... சினிமாவுக்கு கொண்டு வந்தேன்.

சந்திரன் எப்போதுமே பரபரப்பாக இருப்பார். ""காலைல ஏழு மணிக்கு வந்துரு சந்திரா''’’ என்றால்... காலை ஐந்து மணிகெல்லாம் வந்துவிடுவார். நமக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்ள வைப்பார். அதனால் ஏழு மணிக்கு சந்திரனை வரச் சொல்வதாக இருந்தால்... “காலைல ஒன்பது மணிக்கு வந்துரு’’ எனச் சொல்வேன். சரியாக ஏழுமணிக்கு வந்துவிடுவார்.

எனது தயாரிப்பான "சின்ன முத்து'’படம் வெளியீட்டுக்குப் பின்... மதுரையில் எனது தலைமையில் சந்திரனுக்கு கல்யாணம் நடந்தது. மகன், மகளை நன்கு படிக்க வைத்தார். இதிலெல்லாம் என் பங்கும் உண்டு.

யாராவது என்னைப்பற்றி குறைசொல்லிப் பேசினால்... உடனே தகராறு செய்வார். ஓவர் குடி. நான் அட்வைஸ் செய்தும் கேட்கவில்லை. குடியால் ஒரு விபத்து ஏற்பட்டு... காலில் ஆபரேஷன் செய்து பிளேட் வைக்க வேண்டியதாகிவிட்டது. அதனால் எனக்கான காஸ்ட்யூமர் பணியிலிருந்து விலகிப்போனார். குடிப்பழக்கத்தை விட்டுவிட்டதாக திரும்பவும் வந்தார் சந்திரன். எனக்கும் வேறு யார் காஸ்ட்யூமும் திருப்தி தராததால்... மறுபடி அவரை காஸ்ட்யூமராக்கிக்கொண்டேன். ஆனால்... மறுபடி அந்தப் பழக்கம் அவருக்கு வந்தது. அவரின் மகன்... பெங்களூருவில் ஒரு சிகிச்சை மையத்தில் சேர்த்து... இப்போது பாட்டிலைப் பார்த்தாலே தூர ஓடுகிறார் சந்திரன். எனக்கு ‘வில்பவர்’ ஜாஸ்தி. அதை சந்திரனுக்கும் சொல்லிக் கொடுத்தேன்.

சந்திரனின் மகன் குன்றத்தூரில் வீடு கட்டியுள்ளார். சின்னதாக அங்கே ஒரு டெய்லர் கடை நடத்துகிறார் சந்திரன். எப்போதும் அவர் கடையில் பத்து பேர்கள் இருக்கிறார்கள். காலையிலேயே எம்.ஜி.ஆர். பாடல்களை போட ஆரம்பித்துவிடுகிறார். அதை அந்த நண்பர்களுடன் சேர்ந்து கேட்டு ரசிக்கிறார்.

இப்போது சந்திரன் பரிசுத்தமாக இருக்கிறார்.

சந்திரனை மது பழக்கத்திலிருந்து மீட்ட நபரைப் பார்த்தால்... “""சந்திரனோட பரபரப்புத் தன்மையையும் போக்கி நிதானப்படுத்துங்க''’என்றுதான் கேட்டுக்கொள்வேன்.
 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்