(95)
பிரம்மாண்ட சினிமாவும்.. நிஜ வாழ்க்கையும்!
""உழவன் மகன்' படப்பிடிப்பில் நிறைய அனுபவங்கள் கிடைத்தன.
பண்டரிபாய் அம்மா உடல்நலமில்லாமல் இருக்கிற காட்சியில் விஜிமா, நம்பியார் அப்பா, எஸ்.எஸ்.மாமா ஆகியோருடன் நானும் இருக்கிற காட்சி.
ஆடுபுலி ஆட்டம் ஆடும்போது சிறுசிறு கற்களை காய்களாக வைத்து நகர்த்துவார்களே... அதுபோல... கேமராமேன் ரமேஷ், டைரக்டர் அரவிந்த்ராஜ் ஆகியோருடன் ஆபாவாணன் அமர்ந்துகொண்டு... சிறுசிறு கற்களை வைத்து... ‘பண்டரிபாய் இருக்காங்க... விஜயகாந்த் இங்க நிற்கிறார்... இது நம்பியார் சாமி... கற்களை வைத்து நகர்த்தி... காட்சியை எப்படி எடுக்கவேண்டும் என விவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.
இதைப்பார்த்த நான்... ""எனக்கு ஒரு நல்ல கல்லா வைங்கப்பா'' என்றேன்.
இதில் ஆபாவுக்கு கோபம்.
பொதுவாக ஒரு காட்சி எடுத்து முடிக்கப்பட்டதும் ""ஓ.கே.'' என்றோ... இல்லையென்றால்... ""ரீ-டேக் போகணும்'' என்றோ சொல்லும் பழக்கம் ஆபா டீமிடம் கிடையாது.
அப்படியே ஆர்டிஸ்ட்டுகள் நின்றுகொண்டிருக்க வேண்டும்.
""ஓ.கே.வா? இல்லையா?'' என நாமாக கேட்டால்தான் ஓ.கே. அல்லது ரீ-டேக் என்பதை தெரிவிப்பார்கள்.
இது எரிச்சலை ஏற்படுத்தினாலும்கூட... பொறுமையை கடைப்பிடிக்க கற்றுத்தந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
"செம்மறி ஆடே செம்மறி ஆடே... செய்தது சரியா சொல்?' என்கிற விஜிமாவுக்கும், ராதிகாவுக்குமான டூயட் பாடல் காட்சி... செம்மறி ஆட்டுக்கூட்டத்துக்குள்ள எடுக்கப்பட்டிருக்கும்.
""600 செம்மறி ஆடுகள் வேணும். கொஞ்சம்கூட குறையக்கூடாது. குறைஞ்சா ஷூட்டிங் நடக்காது'' எனச் சொல்லிவிட்டார் ஆபாவாணன்.
ஐம்பது-நூறு செம்மறி ஆடுகளை டாப் ஆங்கிளில் காட்டினாலே... திரை நிறைஞ்சு தெரியும். ஆனாலும் 600 ஆடுகள் கேட்டார்.
அவர் கேட்டபடியே 600 ஆடுகள் கொண்டுவரப்பட்டு... அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
படத்தில் விஜிமா ஒரு கிராமத்து இளைஞன். இன்னொரு விஜிமா நகர இளைஞன். சென்னையில் மகாலிங்கபுரத்தில் ஒரு வீட்டில் இந்தப் படத்திற்கான காட்சி எடுக்கப்பட்டது.
இரண்டு விஜிமாவும் படுக்கையறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.
""என்ன இது... எம்.ஜி.ஆரோட "மாட்டுக்காரவேலன்' பட ஸீக்குவன்ஸா இருக்கு'' என்றேன்.
உடனே விஜிமா என்னை இழுத்துக்கொண்டுபோய்... ""இந்தப் படமே "மாட்டுக்காரவேலன்' மாதிரித்தான்'' என்றார்.
பொதுவா நான் ஒரு அவுட்-லைனா கதை கேட்டுட்டு என் கேரக்டரப்பத்தி விரிவா கேட்பேன். முழுக்கதையும் கேட்டா... ""அந்தப்படம் மாதிரி இருக்கு... இந்தப்படம் மாதிரி இருக்கு'' என நான் சொல்லி சங்கடம் வந்திடக்கூடாதே.
"உழவன் மகன்' படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டதுபோலவே... பிரம்மாண்டமான வெற்றியையும் பெற்றது.
சினிமாவப்பத்தி முழுசா தெரிந்துகொள்ள நிறைய வருஷங்கள் ஆகும். ஆனால்... "உழவன் மகன்' என்கிற ஒரே படத்தில் சினிமாவை நன்றாகவே தெரிந்துகொண்டேன்.
ஆபாவாணனை ஒருமுறை தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் பார்த்தபோது... ""என்ன ஆபா... எப்படி இருக்கீங்க?'' என நலம் விசாரித்தேன். பதில் சொல்லாமல் போனவர்... ""நான் ஒருதடவை உங்களைப்பார்த்து விஷ் பண்ணினேன். நீங்க கண்டுக்காம போனீங்க'' என்றார்.
""ஏதாவது யோசனையா இருந்திருப்பேன். உங்களை எனக்குப் பிடிக்கலேன்னா... உங்க முகத்துக்கு நேராவே சொல்லீருவேன்'' என்றேன்.
அதன்பிறகு நானும், அவரும் நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம்.
நான் சினிமாவில் பிஸியாக இருந்தபோதும்... ஆபாவோட "கங்கா யமுனா சரஸ்வதி' சின்னத்திரை சீரியலில் நடித்தேன். அது ரொம்ப பிரபலமான சீரியல்.
நானும் என் நண்பரும், சினிமா வளர்ச்சியில் முக்கியமானவராக இருந்தவருமான டைரக்டர் அமீர்ஜான் சார் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருந்த நிலையில்... தி.மு.க.காரனான என்னை அ.தி.மு.க.காரரான கோவைத்தம்பி அவர்கள் தயாரிப்பில் "உழைத்து வாழவேண்டும்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை அமைத்துத் தந்தார்.
(கோவைத்தம்பி அவர்களால்தான் மோகன் என்கிற நல்ல நடிகர் உருவாகி... மக்களுக்குத் தெரிந்தார்)
விஜிமாவும், ராதிகாவும் நாயகன்-நாயகியாக நடித்தனர்.
அமீர்ஜான் சார் வொர்க்கிங் ஸ்டைல் வேற மாதிரியானது. highly technicaly qualified உள்ளவர். டான்ஸர் யூனியன், ஸ்டண்ட் யூனியன், எடிட்டர்ஸ் யூனியன், டைரக்டர்ஸ் யூனியன்... என பல யூனியன்களில் இருந்தவர். அவர் பெர்பக்ஷன் பார்ப்பது... சிலருக்கு தப்பாகத் தெரிந்தது. அவரை சங்கடப்படுத்தினார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் தினசரி ஏற்படுகிற நிலைமையைப் பார்த்தபோது... "இந்தப் படம் முடியாமல் நின்னுபோயிடுமோ' என நான் நினைத்ததுண்டு.
ஆனால்... எடுத்துக்கொண்ட வேலையை சிறப்பாக செய்து படத்தை முடித்தார் அமீர்ஜான் சார். இந்தப் படம் நன்றாகப் போனது.
தயாரிப்பாளர் பீட்டர் செல்வகுமார் தயாரித்து, இயக்கிய படம் "தாயம் ஒண்ணு'. நான் "முதலாளி' என அழைக்கும் அர்ஜுன் சார் ஹீரோ. எனக்கு கெஸ்ட் ரோல். படம் ரிலீஸுக்கு தயாராகவிருந்த நேரத்தில்... ராயப்பேட்டை அஜந்தா ஹோட்டலில் காபி சாப்பிட்டுவிட்டு... எதிர் வீட்டில்... என் பள்ளிக்கூட நண்பர் டேபிள் டென்னிஸ் வீரர் ராமச்சந்திரனை பார்க்கப்போவதற்காக வெளியே வந்தபோது... ஒரு சினிமா விநியோகஸ்தர் வந்தார். அந்தச் சமயம் வெளியூர் செல்லும் ஆம்னி பஸ் ஒன்று வந்தது. பஸ்ஸின் மேற்கூரையில் "தாயம் ஒண்ணு' என எழுதப்பட்ட படப்பெட்டி இருப்பதைப் பார்த்த அந்த விநியோகஸ்தர்... “""பீட்டர் எனக்கு செட்டில்மெண்ட் பண்ணணுமே. அதுக்குள்ள எப்படி பெட்டி கொடுத்தாங்க...'' என்றபடி ஜெமினி லேபிற்கு அவசரமாக ஓடினார்.
"எனக்குனு சில பிரின்ஸிபில்ஸ் இருக்கு. நான் கொடுக்கிற செக் பணத்துக்கு நிகரானது...' என்றெல்லாம் "அம்மன்கோவில் கிழக்காலே' படத்தின் போது எனக்குச் சொன்னார் பீட்டர் செல்வகுமார் அவர்கள். (அது பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்)
நம்மளாலதான் சினிமானு நினைக்கக்கூடாது. நாம இல்லேன்னா சினிமாவும் இல்லேன்னு நினைக்கக்கூடாது. ஒருத்தருக்கு கிடைக்கிற சினிமா புகழ்ங்கிறது பெத்தவங்களோட ஆசிர்வாதம். என் அப்பா சினிமாக்காரர்களை சாடியவர்ன்னாலும் சினிமாவையும், நடிப்புக் கலையையும் நேசித்தவர்.
கடவுள் ஒரு முறை சொல்லாமல் கொடுப்பார். இரண்டாவது முறை... சொல்லிவிட்டுக் கொடுப்பார். இது வாழ்க்கைத் தத்துவம். இதை எப்போதும் நான் உணர்ந்து வைத்திருக்கிறேன்.
(ரஜினி விரும்பும் பாம்பு ஸீன் சென்டிமெண்ட். ஏற்க மறுத்த டைரக்டர். இதனால் உண்டான கருத்துமோதல்)
படம் உதவி- ஞானம்
-----------------------------------
அழைக்காமலே வந்த அன்பு அண்ணன்!
என் அப்பாவும், அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் தந்தையார் ஈ.வி.கே.சம்பத் அப்பா அவர்களும் ஒருவரை ஒருவர் ‘பார்ட்னர்’ என்று அழைத்துக்கொள்வார்கள். இளங்கோவன் அண்ணனின் திருமணத்திற்கு நான் என் அப்பாவுடன் போனேன். கல்யாண விழாவில் கலந்துகொள்ள வேண்டிய ஒரு தலைவர் மிகவும் தாமதமான நிலையிலும் வந்து சேராமல் இருந்ததால்... இளங்கோவன் அண்ணன் மிக கோபமாக கத்த... என் அப்பா சொன்னபிறகுதான் கோபத்தை அடக்கி ஸைலண்ட் ஆனார்.
இளங்கோவன் அண்ணன் அருமையாக இங்கிலீஷ் பேசுவார். high stakes... அதாவது... உயர்ந்த லெவலில் பேசக்கூடியவர். உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர். எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர்.
என் அப்பாவின் நூற்றாண்டு விழாவுக்காக ராஜா அண்ணாமலை மன்றத்தில் "ரத்தக்கண்ணீர்' நாடகம் போட்டேன். அப்போது நான் அ.தி.மு.க.வில் இருந்ததால் விழாவுக்கு யாரையும் அழைக்கவில்லை. அப்போது மத்திய அமைச்சராக இருந்த இளங்கோவன் அண்ணன்... வெளியூர் போகும் வழியில்... போஸ்டரைப் பார்த்துவிட்டு... வெளியூர் ட்ரிப்பை கேன்ஸல் செய்துவிட்டு அரங்கிற்குள் வந்தார். என் அம்மாவை காலைத்தொட்டு வணங்கி ஆசிபெற்றார்.
இதனால் இடைவேளையின்போது அவரை மேடையில் ஏற்றி மரியாதை செய்தேன்.
(புகைப்படத்தில் உள்ளபடி...எனது முதல் நாடக அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்த ""இளங்கோ கலைமன்றம்’ வீரப்பன் அண்ணன் அவர்கள், என் அப்பாவின் மேனேஜராகவும், எங்கள் வீட்டு நிர்வாகியாகவும் இருந்த சாம்பு பிள்ளை அப்பாவின் மகனும், என் அப்பாவைப் பற்றி "போர்வாள்' நூல் எழுதியவருமான சோமசுந்தரம் அண்ணன், இளங்கோவன் அண்ணன், சகோதரர் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். "திருமகன்' படப்பிடிப்பில் இருந்தபோது... ("ரத்தக்கண்ணீர்' போடப்போறீங்களா சார்? நான் வரலாமா?' எனக் கேட்டு வந்து நாடகம் பார்த்தார் எஸ்.ஜே.சூர்யா.)
""நடிகவேள் மீதுள்ள மரியாதையால்... யாரும் அழைக்காமலே நான் இங்கு வந்தேன். என் தந்தையைப் போன்றவர் நடிகவேள். திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய ஸேப்ட்டரான நடிகவேளின் நூற்றாண்டை இந்த நாடே கொண்டாடவேண்டும்''’ எனப் பேசி பெருமிதம் செய்தார் அண்ணன் இளங்கோவன்.