(111) சீன்களான சொந்த வாழ்க்கை நிகழ்வுகள்!

"பாண்டித்துரை' படத்தின் கதைப்படி நானும், சுமித்ராவும் கணவன் மனைவி. சுமித்ராவின் தம்பி பிரபுமா. நான் சிலுக்குவுடன் நெருக்கமாக இருப்பேன். இதனால் மைத்துனர் பிரபுமா தட்டிக்கேட்க... எங்களுக்குள் தகராறு ஏற்படுகிற காட்சி. கோபிசெட்டிபாளையத்தில் எமரால்டு ஹவுஸ் ஹோட்டலுக்கு எதிரே ஒரு வீட்டில் ஷூட்டிங்.

இந்த ஸீன் எடுக்கும்போது... நான் அந்த காட்சி சூழலை நினைத்து அழுதேன்.

""ஏன் அழுறீங்க?'' என சகோதரர் டைரக்டர் மனோஜ்குமார் கேட்டபோது... ""எங்க வீட்டுல நடந்த ஒரு சம்பவத்த இந்த ஸீன் ஞாபகப்படுத்தீருச்சு'' என்றேன்.

Advertisment

மறுநாள் படப்பிடிப்பில்...

மாமா-மைத்துனர் தகராறு முற்றி... "எனக்கும், உனக்கும் இடையே இனி ஒட்டுமில்ல... உறவுமில்ல...' என நான் என் மனைவியாக நடித்த சுமித்ராவிடம் சொல்லிவிட்டுப் போவேன். "புருஷனே உறவு இல்லை என்கிறபோது கணவனை இழந்தவளுக்கு சமம்' என்பதைக் குறிக்கும் விதமாக பிரபுமா வெள்ளைச்சேலையை சுமித்ராவுக்கு கொடுக்கும் காட்சி.

radharavi

Advertisment

""என்னங்க டைரக்டரே... புருஷன் உயிரோட இருக்கிறப்ப... பொண்டாட்டிக்கி வெள்ளைச் சேலை தர்றது சரியா இருக்குமா?'' என நான் கேட்க...

""நேத்தைக்கு எடுத்த ஸீன் உங்க லைஃப்ல நடந்தது. இன்னிக்கி எடுக்கிற ஸீன் என் லைஃப்ல நடந்தது...'' எனச் சொன்ன மனோஜ்குமாரின் கண்கள் பனித்திருந்தன.

கோபியை அடுத்த பாரியூரில் என் நண்பரின் குடும்பம் ஒரு உணவகம் நடத்தி வந்தது. படத்தில் இந்த உணவகத்தை மனோரமா அம்மாவின் உணவகமாக காட்டினோம். பல நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடந்ததால்... படத்தின் கேமராமேன் அஹமத்தும், உணவக உரிமையாளரான என் நண்பரின் மூத்த மகளும் விரும்பி, திருமணம் செய்துகொண்டார்கள்.

பிரபுமாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைகிற காட்சியை எடுத்துக்கொண்டிருந்தபோது... குஷ்பு திடீரென மயங்கி விழுந்துவிட்டார். எல்லோருக்கும் அதிர்ச்சி. நான் உடல் மெலிந்து இருந்த நேரம் அது. (காரணம் பெட்டிச் செய்தியில்) இருந்தாலும் சிரமப்பட்டு, குஷ்புவைத் தூக்கி காரில் ஏற்றி, ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தோம்.

நான் பார்த்த தமிழ்ப்பட டைரக்டர்களிலேயே... காலை, மதியம், இரவு என மூன்று நேரமும், ஒவ்வொருவருக்கும் என்ன உணவு வேண்டும் எனக்கேட்டு, எழுதிக்கொண்டு, கேட்டபடி ஏற்பாடு செய்பவர் சகோதரர் மனோஜ்குமார். அவரது படப்பிடிப்பில் கலைஞர்களை ஒரு தாயைப்போல பார்த்துக்கொள்வார்.

"பாண்டித்துரை' வெற்றிப்படமாக அமைந்தது.

நெல்லை மாவட்டம் மேலச்செவல் என்கிற ஊரில் "சின்னத்தாயி' படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தைத் தயாரித்தவர் அன்புச் சகோதரர் வேதா என்கிற வேதமூர்த்தி. லயோலாவில் நான் படித்தபோது எனக்கு சீனியர். மாணவர் பேரவைத் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேதா அவர்களும், எனது நண்பன் பிரடிக் குரியனின் அண்ணன் ஜேம்ஸ் குரியனும் போட்டியிட்டனர். நான் ஜேம்ஸ் குரியனுக்கு ஆதரவாக வேலை செய்தேன். எதிரே நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் சவ ஊர்வலத்திற்காக வந்துவிட்டு திரும்பிய வாத்தியக்காரர்களை அழைத்து வந்து மேளமடித்து, பிரச்சாரம் செய்தோம். ஜேம்ஸ் குரியன் ஜெயித்தார்.

சகோதரர் வேதாவின் குடும்பம், தி.மு.க. குடும்பம். கலைஞர் மீது அபரிமிதமான பற்றுகொண்டவர் வேதா. மாணவர் தேர்தலில் நான் அவருக்கு வில்லனாக இருந்தபோதும் "சின்னத்தாயி' படத்தில் எனக்கு ஹீரோ இமேஜ் உண்டாகும் கேரக்டரை கொடுத்தார்.

""அந்த சாமியாடி (வினு சக்கரவர்த்தி) மகனை (விக்னேஷ்) காதலிச்சதுக்காக சாமியாடிகிட்டவும், சாமுண்டிகிட்டவும் (நெப்போலியன்) இவ்வளவு துயரப்படும் சின்னத்தாய (பத்மஸ்ரீ) காப்பாத்த யாருமே இல்லையா?''ங்கிற பரிதவிப்பு படம் பார்க்கிற ஆடியன்ஸுக்கு வர்ற அந்த நேரத்துல... போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் கேரக்டரில் நான் வரும்போது... ரசிகர்களிடம் அப்படி ஒரு கைதட்டல். அதுவும் சாமியாடிய அடித்து, உதைத்து நான் கைது செய்யும்போது... தியேட்டரில் விசில் பறக்கும்.

(இந்தப் படத்தோட சண்டைக் காட்சியிலதான் என்னோட இதயத்துக்குப் பக்கத்துல அடிபட்டது.)

அண்ணன் இளையராஜா இசையில அருமையான பாடல்களோட... கிராமிய வாசனையோட எஸ்.கணேசராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். பெரிய வெற்றிப்படம் இது.

கடலோர பின்னணியில் சகோதரர் ஆர்.கே.செல்வமணி எடுத்த பிரமாண்டமான காதல் படம் "செம்பருத்தி'. இதுலதான் ரோஜா நாயகியாக அறிமுகமானார். நான் உட்பட பலரும் நடிச்ச இந்தப் படத்துக்கு பெரிய கிஃப்ட்... பானுமதி அம்மாவும் நடித்ததுதான்.

விசாகபட்டினத்திலிருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் ஷூட்டிங் ஸ்பாட். பானுமதி அம்மாவின் உடல்நிலைக்கேற்ப... அவரை சிரமப்படுத்தாமல் நேக்காக அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவந்தார் ஆர்.கே.செல்வமணி.

தினமும் படப்பிடிப்பிற்கு ஒருமணி நேரம், ஒன்றரைமணி நேரம் தாமதமாகத்தான் வருவார் பானுமதி அம்மா. காரிலிருந்து தரையில் கால் வைக்கும்போதே... "செல்வமணி இன்னைக்கி நான் சிக்கிரம் கிளம்பணும்' என்பார்.

"சரிங்கம்மா' எனச் சொல்லி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பார். ஆனாலும்... "தினமும் இந்தம்மா இப்படிச் சொல்றாங்களே' என புலம்புவார்.

"இந்தம்மா இப்பவே இப்படி இருக்காங்களே... அந்தக் காலத்துல பிஸியான ஹீரோயினா இருந்த இந்தம்மாவை வச்சு "நாடோடி மன்னன்' படத்தை எப்படித்தான் எடுத்து முடிச்சாங்களோ?' என நான் செல்வமணியிடம் சொன்னேன்.

அடுத்தநாள்... அதே லொகேஷன்...

பானுமதி அம்மா காரைவிட்டு இறங்கும்போதே சொன்னார்....

""செல்வமணி இன்னைக்கி நான் சீக்கிரம் கிளம்பணும்''

ஆர்.கே.செல்வமணி சொன்னார்...

""அப்படியே கிளம்புங்கம்மா...''

_________________________

இதய சிகிச்சையும் நல்ல இதயங்களும்!

"சின்னத்தாயி' படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது...

என் இருதயத்திற்கு பக்கத்தில் பலமாக அடிபட்டுவிட்டது. தேவகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட கலைஞர் சித்தப்பா உட்பட பலரும் வந்து பார்த்தார்கள்.

இதய சிகிச்சை நிபுணரான டாக்டர் தணிகாசலம் என்னை பரிசோதித்துவிட்டு அப்பல்லோ ஹாஸ்பிடலுக்கு மாற்றினார்.

1991, ஆகஸ்ட்-27 என் கல்யாணநாள் அன்று ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

என் மனைவியும், என் அம்மாவும் என்னை அந்த நிலையில் பார்க்க விரும்பாமல்... நான் நலம் பெறுவதற்காக வீட்டிலிருந்தே பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்கள். என் தங்கை ரதிகலா என்னுடன் இருந்தார். ரதிகலாவும், திருமதி சுனந்தா லீலாராம் அவர்களும் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள்.

"ஆஞ்சியோ சிகிச்சை செய்யவேண்டும்' எனச் சொல்லிவிட்டார் டாக்டர்.

சிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டருக்கு என்னைக் கொண்டு போகிற நேரத்தில்... "என்ன தம்பி... இப்படி விட்டுட்டுப் போறீங்களே...?' என்றார் என் அப்பாவுக்கு மேக் அப் மேனாக இருந்து, எனக்கும் மேக் அப் மேனாக இருந்த கஜபதி அண்ணன்.

அவருடைய மகளுக்கு திருமணம் நடக்கவிருந்தது சில தினங்களில்.

அங்கிருந்த ஒரு துண்டு காகிதத்தில் தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு அவர்களுக்கு குறிப்பெழுதி கஜபதி அண்ணனிடம் கொடுத்தேன். ஒரு நல்ல தொகையை பாலு சார் கொடுத்து உதவினார். அப்போது நான் பாலு சார் தயாரிப்பில் "பாண்டித்துரை' படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். எனக்கான சம்பளத்திலிருந்து கஜபதி அண்ணனுக்கு கொடுக்கும் தொகையை கழித்துக்கொள்ளும்படியும் சொல்லி அனுப்பினேன்.

ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து, அறைக்குத் திரும்பிய பிறகு, என் அம்மாவும், என் மனைவியும் வந்து பார்த்தார்கள்.

பத்து நாட்கள் அப்பல்லோவிலேயே ரெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். பத்தாம் நாள் பில் வந்தது. பில்லைப் பார்த்ததும் மறுபடி காய்ச்சல் வந்துவிட்டது.

ஆஞ்சியோ சிகிச்சை காரணமாக உடல் இளைத்துவிட்டேன். என் குரலும் மென்மையாகிப்போனது.

வீட்டிலும் சிலநாட்கள் ஓய்வெடுத்தபின்... மறுபடி நான் கலந்துகொண்டது... கோககோலா கம்பெனியில் நடைபெற்ற "அமரன்' பட ஷூட்டிங்கில்தான்.

"அமரன்', "பாண்டித்துரை', "ரிக்ஷா மாமா', "செம்பருத்தி', "சின்னவர்', "இதுநம்ம பூமி', மற்றும் "சுகமான சுமைகள்' ஆகிய படங்களில் முன்பாதியில் நார்மலாகவும், பின்பாதியில் மெலிந்தும் தெரிவேன்.

"ரிக்ஷா மாமா' படத்தில் மாப்ள சத்யராஜ் ஹீரோ. நான் மெயின் வில்லன். தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் "என்னங்க படத்தை முடிக்காம இப்படி வெய்ட் பண்றீங்களே? மாற்று ஏற்பாடு ஏதாவது செய்ங்க' என டைரக்டர் பி.வாசு சாரிடம் சொல்லியிருக்கிறார். வாசு சாரோ... "ராதாரவி குணமடைஞ்ச பிறகுதான் ஷூட்டிங்' எனச் சொல்லியிருக்கிறார். சினிமா உலகம் என்றாலே... பொய்யான உலகம்தானே. அங்கும் பி.வாசு சார் மாதிரி நல்ல இதயம் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.