(107) பொம்மையில் துடித்த உண்மை இதயம்!
நண்பர் கண்ணன் இயக்கத்தில் "யார்?'’படத்தை தாணு-சேகரன் இருவரும் இணைந்து தயாரித்த காலத்திலிருந்தே தாணு சாருடன் எனக்குப் பழக்கம்.
விஜிமாவை ஹீரோவாக வைத்து "புதுப்பாடகன்'’படத்தை தயாரித்து இயக்கினார் தாணு சார். நானும் அந்தப் படத்தில் நடித்தேன்.
படத்தில் ஒரு சோகமான காட்சியில் என் தோளில் கிடந்த துண்டை கீழே நழுவவிட்டு நடித்தேன். அந்த நடிப்பை தாணு சார் மிகவும் ரசித்தார்.
நெருக்கமான நண்பராக இருக்கிறபோதும்... "இவரை தொடர்ந்து நண்பரா வச்சுக்கலாமா?'’என கேள்வி வருகிற அளவிற்கு சிலசமயம் தாணு சார் நடந்துகொள்வார்.
"கந்தசாமி'’படம் எடுத்துக்கொண்டிருந்தபோது... ""உனக்கு இதுல நல்ல கேரக்டர் இருக்கு''’ என்றார். பிறகு... தொடர்புகொள்ளவேயில்லை. அந்தப் படத்தின் டைரக்டர் சுசி.கணேசனும் எனது நண்பர்தான். அவர் எனக்கு போன் செய்து... ""படத்துல உங்களுக்கு ஒரு கேரக்டர் இருக்கு. நாளைக்கே ஷூட்டிங்''’என்றார்.
""திடீர்னு கூப்பிட்டா எப்படி? வாய்ப்புத் தரக்கூடாதுனு நினைச்சே கூப்பிடுறீங்களா?''’என கேட்டுவிட்டேன். (அந்த கேரக்டரில் சகோதரர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தார்)
""நீ நடிக்கிறத ஹீரோ விரும்பல''’என தாணு சார் சொன்னார்.
(விக்ரமிற்கும், எனக்கும் வெளிநாட்டில் நடந்த ஒரு பழைய பிரச்சினை. அதை பிறகு சொல்கிறேன்)
கதை ஒன்லைன் ஒன்றை தாணு சாரிடம் சொன்னேன். “""ரொம்ப நல்லாருக்கு... தெலுங்குல வெங்கடேஷை வச்சு எடுக்கலாம்... கதையை டெவலப் செய்ங்க''’’ எனச் சொல்லி, ஹெஸ்ட் ஹவுஸில் ரூம் போட்டுத் தந்தார்.
நானும், என் நண்பர் கே.ஆர்.செல்வராஜும் முழுக்கதையையும் ரெடி செய்தோம். ஆனால் அந்த படத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்.
சில வருடங்களுக்குப் பிறகு... நானே டைரக்ஷன் செய்யவிரும்பி... ஒரு ஒன்லைன் சொன்னேன். இந்தக் கதையும் நன்றாக இருப்பதாகச் சொல்லி... டெவலப் செய்யச் சொன்னார். கதையை முழுமையாக தயார் செய்து, பட்ஜெட்டும் போட்டுக்கொடுத்தேன்.
ஆனால்... அவர் ஒரு பட்ஜெட் சொன்னார். அவர் சொன்ன பட்ஜெட்டில் அந்த படத்திற்குரிய ஸ்டில்ஸ் வேண்டுமானால் எடுக்கலாம்.
அத்துடன்... படத்தை எடுத்து முடிக்கும் மூன்றுமாத காலத்திற்கு எனக்கு சம்பளமாக ஒரு தொகையைச் சொன்னேன்.
""அந்த மூணுமாத சம்பளத்தை தியாகம் பண்ணணும்''’என்றார்.
""அப்ப அந்த மூணுமாசமும் என்வீட்டுல இருக்கவங்க பருத்திக்கொட்டையும், புண்ணாக்குமா திம்பாங்க?''’எனக் கேட்டேன்.
அந்தப் படமும் எடுக்கப்படவில்லை.
"கபாலி'’படம் அறிவிச்சதும்... “""இதுல உனக்கு வேஷம் இருக்கு''’என்றார்.
ஷூட்டிங் தொடங்கிய நேரம்வரை என்னை அழைக்கவில்லை.
""பா.ரஞ்சித்து புது ஆட்களை வச்சு பண்ண விரும்புறார்''’எனச் சொன்னார்.
""இருக்கிறதுல ரொம்ப பழைய ஹீரோ ரஜினி சார்தான்''’எனச் சொன்னேன்.
லேட்டஸ்ட்டாக ‘"ஸ்கெட்ச்'’படம் எடுத்தார். அதிலும் எனக்கு வாய்ப்புத் தரவில்லை.
...இப்படி ஸ்கெட்ச் போட்டு, தான் தயாரிக்கிற படங்கள்லருந்து என்னைத் தூக்கிட்டார்.
"நாம் ஒருவரைப் பற்றி இப்படித்தான்... அப்படித்தான்...’என எடைபோட்டு வைத்திருப்பது சரியாக இருக்காது...' என உணரவைத்தவர் தாணு சார்.
என் மனைவி பாக்யலட்சுமி பெயரையும், என் பெயரையும் குறிக்கும் விதமாக ‘"பி.ஆர்.ஆர். ஆர்ட்ஸ்'’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கி "தை மாசம் பூவாசம்'’படத்தை தயாரித்ததையும், இந்தப் படத்தின் துவக்கவிழாவில் தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டதையும், இந்தப் படத்தில் வயதான வாத்தியார் வேஷத்தில் நடித்திருந்த என் நடிப்பைப் பார்த்து "மிகச் சிறப்பு ஒப்பனை, நடிப்பில் விஞ்சிவிட்டாய் உங்கொப்பனை'’என கலைஞர் சித்தப்பா பாராட்டியதையும் ஏற்கனவே விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
படத்தின் துவக்கவிழாவிற்கு ஏவி.எம்.சரவணன் சாரையும் அழைக்க விரும்பி, அவரைச் சந்தித்தபோது... "துவக்கவிழாவிற்காக ‘"தினத்தந்தி'யில் முழுப்பக்க விளம்பரம் தரவிருப்பதை'ச் சொன்னேன்.
""பூஜைக்கு எதுக்கு விளம்பரம். படம் தயாராகி முடியும்போது... இந்த விளம்பரத்தையெல்லாம் மறந்திருவாங்க. லெட்டர்பேடில் இன்விடேஷன் அடிங்க போதும்''’’ என அட்வைஸ் செய்தார்.
சரவணன் சார் சொன்னதை இன்றளவும் நான் பின்பற்றுகிறேன்.
"தை மாசம் பூ வாசம்'’ என் வாழ்க்கையில் முக்கியமான படம். ‘"சிறந்த குணச்சித்திர நடிகர்'’என்கிற விருதை இந்தப் படத்திற்காக "சினிமா எக்ஸ்பிரஸ்'’எனக்குத் தந்தது.
வலிவலம் தேசிகர் அவர்கள் மிகப்பெரும் நிலச்சுவான்தார். அவரின் பேரன் மனோ தயாரித்த படம் "வா அருகில் வா'.’
அவர்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் பரப்பிலான பல குளங்கள் உண்டு. அதில் இறால் மீன் வளர்ப்பும் செய்கிறார்கள். இந்த மீன்பண்ணையிலும், அவர்களின் பெரிய வீட்டிலும் படப்பிடிப்பு நடந்தது.
இந்த படத்தின் மூலம் எனக்கு மிகப்பிடித்த உள்ளமாகிவிட்டார்... உருவத்தில் குள்ளமான நடிகர் கிங்காங்.
இது த்ரில்லர் மூவி. பொம்மை பிரதானமாக நடித்திருக்கும். பொம்மை முகமூடியை போட்டுக்கொண்டு பொம்மையாக நடித்தவர் கிங்காங். முகமூடியைப் போட்டதும்... கிங்காங்கிற்கு வியர்க்கும். அவரின் குட்டி இதயம் ‘"டப்... டப்'’என துடிக்கும். நான் வாஞ்சையோடு அவரின் இதயத்தை தொட்டுப் பார்ப்பேன்.
""அடிக்கடி பிரேக் விட்டு ஷூட்டிங் பண்ணுங்க''’என கிங்காங்கிற்காக நான் கேட்டுக்கொண்டேன்.
டைரக்டர் கலைவாணன் கண்ணதாசன், எனக்கு மாமாவாக நடித்த நந்தகுமார் அண்ணன், அக்காவாக நடித்த விஜயசந்திரிகா, எனக்கு அடியாளாக நடித்த ‘கராத்தே’ தியாகராஜன்... (இப்போது காங்கிரஸ் பிரமுகராக இருக்கும் கராத்தே’ தியாகராஜன் சினிமாவில் நடிக்க வந்தவர்தான். அவரின் அறிமுகப்படம் "வா அருகில் வா'). இப்படி... எனக்குப் பிடித்தமான பலரும் இந்தப் படத்தில் இருந்ததால்... ஷூட்டிங் ரொம்ப என்ஜாய்மெண்ட்டாக இருந்தது.
வங்கி அதிகாரி இளங்கோ, பன்னீர் அண்ணன், வக்கீல் ராமன், செந்தில், காமராஜ், நடராஜன், கல்லூரி ஆசிரியர் ராமன், அவரது மகனான வேளாங்கண்ணியில் ஹோட்டல் வைத்திருக்கும் ஃபெலிக்ஸ்... என பலரின் நட்பும் இந்த படத்திற்காக நாகப்பட்டினம் தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்தபோது கிடைத்தது. (என் டச்-அப் பாய் சேகர் இப்போது வேளாங்கண்ணியில் கடை வைத்துள்ளார். இப்போதும் வேளாங்கண்ணி சென்றால் சேகரின் வீட்டுக்குச் செல்லாமல் வரமாட்டேன். நண்பர்களையும் பார்த்துவிட்டு வருவேன்)
"வா அருகில் வா'’படம் நூறு நாட்களுக்குமேல் ஓடியது. ஆனால் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள அப்போது படத்தின் டைரக்டர் கலைவாணன் கண்ணதாசன் உயிருடன் இல்லை. மாரடைப்பால் காலமானார்.
பி.எஸ்.வீரப்பா அவர்களின் கம்பெனி தயாரிப்பில், அமீர்ஜான் சார் இயக்கத்தில் பார்ட்னரும், நானும் நடித்த படம் "வணக்கம் வாத்தியாரே'.’
"ஷோலே'’படத்தில் அம்ஜத்கானின் என்ட்ரி ஸீன் ஸ்டைலில், இந்தப் படத்தில் எனது அறிமுகக் காட்சியை ஒகேனஹலில் எடுத்தார் அமீர்ஜான்.
நீளமான ஒரே ஷாட்டில் இந்த ஸீனை எடுக்க திட்டமிட்டதால் இரண்டு தடவை ரிகர்ஸல் பார்த்தோம்.
""ஃபிலிம் இந்த ரீல்கேன்ல எத்தனை அடி இருக்கு''’என கேமராமேன் ரவிபாபுவிடம் கேட்டார் அமீர்ஜான் சார்.
""200-250 அடி இருக்கும்''’என அவர் சொல்ல... ""புதுசா ரீல்கேன் மாத்திக்கங்க. ஏன்னா... ரிகர்ஸல்ல செஞ்சதவிட கூடுதலா ராதாரவி ஏதாவது செய்வார். இந்த ஷாட்டை எடுக்க 350 அடி ஃபிலிம் ஆகும்னு நினைக்கிறேன்''’என்றார்.
புது ரீல் மாற்றி ஷூட் பண்ணினார்கள். நானும் கூடுதலா சில ஸ்டைல்களை காட்டி நடித்தேன். 320 அடி ஃபிலிம் காலியாகிவிட்டது.
"ஸீனோட அளவை வைத்தே... ஃபிலிம் எவ்வளவு தேவைப்படும்' என கணக்கிடும் பக்கா டைரக்டர் அமீர்ஜான் சார்.
(ஒருநாள்... ஷூட்டிங் லஞ்ச் பிரேக்கில்... “பார்ட்னர்... ""நான் ஹோட்டல் ரூம்வரைக்கும் போய்ட்டு வந்திடுறேன்''’எனச் சொல்லிவிட்டு கிளம்பினார் பார்ட்னர் கார்த்திக். வெகுநேரமாக யூனிட் காத்திருக்க... பார்ட்னர் வரவே இல்லை...)
கதையான சம்பவம்!
"வா அருகில் வா'’படப்பிடிப்பு, வலிவலம் தேசிகர் அவர்களின் பெரியவீட்டில் நடந்துகொண்டிருந்த சமயம்... ஒருநாள் பகலில்... எங்களுடைய ஒட்டுமொத்த படக்குழுவினரையும் ஒரு பெரிய அறைக்குள் உட்காரச் சொல்லி, கதவைப் பூட்டினார்கள்.
"தேசிகர் குடும்பத்துப் பெண்கள் குளத்தில் நீராடச் செல்வதால்... சாங்கித்யம் செய்ய வேண்டியதால்... ஆண்கள் எதிர்ப்படக்கூடாது' என்று இப்படி எங்களை அறைக்குள் இருக்க வைத்தார்கள்.
இதை நான் தற்செயலாக டைரக்டர் பி.வாசு சாரிடம் சொன்னேன். பின்னாளில் ‘"சின்னத்தம்பி'’ படத்தை, இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் வாசு சார் உருவாக்கினாரோ... என்னவோ?