Skip to main content

கர்ஜனை!-"இளையவேள்' ராதாரவி (105)

(105) சிவாஜி பிலிம்ஸ் கொடுத்த கைக்கடிகாரம்!

ன் நண்பர் பி.வாசு அவர்களின் இயக்கத்தில் எனக்கு முதல் படமாக அமைந்தது ‘"பொன்மனச் செல்வன்.'

ஹீரோ விஜிமா, ஹீரோயின் ஷோபனா. நான் ஜாக்கிசான் ரசிகர்மன்றத் தலைவராக நடித்தேன்.

சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கமல் சார், அமலா, சசிகலா, பிரபுமா, குஷ்பு ஆகியோருடன் நானும் நடித்த படம் "வெற்றிவிழா.' சிவாஜி ஃபிலிம்ஸில் இது எனக்கு முதல் படம்.

ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் "வெற்றி விழா'. படத்தின் ஒவ்வொரு ஷாட்ஸையும் ஸ்டைலிஷாக அமைத்து இயக்கியிருந்தார் நடிகர் பிரதாப்போத்தன்.

பார்ப்பதற்கு சீரியஸானவராக இருந்தாலும் மிகவும் ஜாலியான மனிதர் பிரதாப்போத்தன். இதில் எனக்கு மிக அருமையான போலீஸ் ஆபீஸர் வேஷம் கொடுத்தார்.

radharavi"தான் யார்?'’என்கிற உண்மையைத் தேடும் கமலுக்கு "நீ யார்'’என்கிற உண்மையைச் சொல்லுவது எனது கேரக்டர்.

அந்தமாதிரி ஒரிஜினல் போலீஸ் ஆபீஸர் போன்ற கேரக்டரை அதற்குப் பிறகு நான் பண்ணுவதற்கு வாய்ப்பே அமையவில்லை.

"வெற்றிவிழா'’என்கிற டைட்டிலுக்கேற்ப வெற்றிகரமாக ஓடிய படம் இது. நூறாவது நாள் விழாவில் சிவாஜி ஃபிலிம்ஸ் சார்பில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கைக்கடிகாரம் பரிசளித்தார்கள். அதை நான் இன்னும் மிகப்பத்திரமாக வைத்துள்ளேன்.

(கமல் சாருடன் "வெற்றிவிழா'’படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே... ரஜினி சாருடன் ‘"பணக்காரன்'’படத்திலும் நடித்தேன்.)

எஸ்.ஏ.சந்திரசேகரன் சார் டைரக்ஷனில், நான் பல படங்களில் நடித்துள்ளேன். அதில் ஒன்று "ராஜநடை.' விஜிமா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்தார். நான் கெட்ட போலீஸ் அதிகாரியாக நடித்தேன். குழந்தையாக இருந்த ஷாம்லி இந்தப் படத்தில் நடித்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாம்லி எப்போதும் அழுதுகொண்டே இருக்கும். ‘ஆக்ஷன்’ என்றதும் நடிக்கும் பாருங்க... அப்பப்பா... என்ன நடிப்பு!

காட்சி ஓகே.வானதும் மறுபடியும் அழ ஆரம்பிக்கும். ஷாம்லியின் அப்பா வந்து தூக்கிக்கொண்டதும் அழுகையை நிறுத்தும்.

மயக்க பிஸ்கெட்டை நாங்கள் ஷாம்லிக்கு கொடுக்க வேண்டும். அந்த பிஸ்கெட்டை நைஸாக அது எங்களுக்கே கொடுத்துவிடும். இந்த காட்சியிலெல்லாம் அசால்ட்டாக நடித்துவிடும் ஷாம்லி.

விஜிமா நடித்த சூப்பர்ஹிட் படம் "புலன் விசாரணை.' சகோதரர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்தார்.

இப்போது டைரக்டர் ஷங்கரை பிரமாண்ட டைரக்டர் என்கிறார்கள். அவருக்கு முன்பே பிரமாண்டமாக படம் எடுத்து பிரமிக்க வைத்தவர் சகோதரர் ஆர்.கே.செல்வமணி. கதைக்கு தேவையான இடத்தில் கிராண்டியர் காண்பிப்பார். அவர்தான் "புலன் விசாரணை' படத்தை இயக்கினார்.

செல்வமணி என்னிடம் கதை சொன்னார்.

கதையின் முதல்பகுதியில் நானும், இரண்டாவது பகுதியில் சகோதரர் ஆனந்த்ராஜும், க்ளைமாக்ஸில் சரத்குமார் சார்... என படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள்.

செல்வமணி கதையைச் சொல்லிவிட்டுப் போனதும் நான் யோசித்தேன்...

"இன்டர்வெலுக்கு முன்னாடியே நம்ம கேரக்டர் முடிஞ்சிடுதே. படம் பார்த்திட்டு வெளிய வர்ற ரசிகர்கள் நம்மை மறந்துடுவாங்களே' என்கிற பயம் ஏற்பட்டது எனக்கு.

ரசிகர்கள் நம்மை மறக்காமல் இருக்க ஏதாவது செய்யணுமே... "கெட்-அப்ல வித்தியாசம் காட்டலாம்... அதுதான் சரியா இருக்கும்'’என நானே முடிவு செய்தேன்.

என் தலைமுடியில் அதிகமான பகுதிகளை ஷேவ் செய்து... புது தோற்றத்திற்கு மாறினேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் என் கெட்-அப் குறித்து பரவலாகப் பேசப்பட்டது. விஜிமாவுக்கும், சகோதரர் ராவுத்தருக்கும் இந்த தகவல் எட்ட... என் கெட்-அப்பை வந்து பார்த்துவிட்டுப் போனார்கள் இருவரும்.

சகோதரர் ஆனந்த்ராஜ் தனது கேரக்டரை நன்றாகச் செய்திருந்தார்.

க்ளைமாக்ஸில் விஜிமாவுக்கும், சரத் சாருக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சி பாராட்டப்பட்டாலும்... பத்திரிகை விமர்சனங்களில் என் நடிப்பையும், கெட்-அப்பையும் குறிப்பிட்டு எழுதினார்கள்.

சகோதரர் ஆர்.கே.செல்வமணியின் திறமைக்கு ஒரு சான்று... அவரின் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி... அவர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (ஃபெஃப்சி) தலைவராக இருக்கிறார்.

எனக்கொரு ஆசை. சகோதரர் ஆர்.கே.செல்வமணி டைரக்ஷனில் நான் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும்.

சத்யா மூவிஸ் தயாரிப்பில் நான் நடித்த முதல்படம் ‘"பணக்காரன்.'’ அதனால் ஆர்.எம்.வீ. அய்யா அவர்களை சந்தித்து ஆசி பெற்றேன். என்னை என்கரேஜ் செய்து பேசினார். ஆர்.எம்.வீ. அய்யா அவர்களின் மருமகன் தியாகராஜன் சார் புரொடக்ஷன் கண்ட்ரோலர்.

ரஜினி சார், கௌதமி, சுமித்ரா, செந்தாமரை அண்ணன் உட்பட பலரும் நடித்தனர். நண்பர் பி.வாசு இயக்கினார்.

(ரிகர்ஸலில் ரஜினி சாரை குத்திக் காட்டுவதுபோல நான் பேசிய வசனத்தை ஷூட்டிங்கில் பேசச் சொன்னார் ரஜினி சார். நான் மறுத்தேன்.)

அப்பாவும் சித்தப்பாவும்!

santhanam

என் அப்பாவின் தம்பி பாப்பா நாயுடு சித்தப்பா, கண்ணம்மா பெரியம்மா (எங்க அம்மாவைவிட மூத்தவர் கண்ணம்மா. அதனால் ’பெரியம்மா’ என்றுதான் கூப்பிடுவோம்) இந்த தம்பதிக்கு சந்தானம், பாலா, மேனகா, லட்சுமிகாந்தன், புருஷோத்தமன், ராணி, ராஜு ஆகிய ஏழு பிள்ளைகள்.

மதுரையில் ரீகல் தியேட்டர் பக்கத்தில் பெரியபஜார் இருக்கும். அது மொத்தமும் சித்தப்பாவுக்கு சொந்தமானதாக இருந்தது. வாடகைக்கு விட்டிருந்தார். மதுரை மாப்பாளையம் சோமசுந்தரம் காலனியில் சொந்த வீடு இருந்தது. குடிப்பழக்கத்தால்... பஜார் கடைகளை விற்றார். மகள் திருமணத்திற்காக வீட்டை விற்றார் சித்தப்பா.

எங்கள் பெரியம்மாவின் தம்பி ‘மதுரை அய்யலு நாயுடு அண்ட் சன்ஸ்’ என்கிற பெயரில் மோட்டார் ரீ-வைண்டிங் கடை நடத்தினார். (இப்போதும்கூட "அய்யலு அண்ட் சன்ஸ்'-க்கும், "துளசிதாஸ் கம்பெனி'க்கும்தான் இந்த தொழிலில் போட்டி)

எங்க சித்தப்பாவுக்கு எங்க அப்பாதான் உலகம். சின்ன வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு நாடகக் கம்பெனிக்கு போய்விட்ட எங்க அப்பாவை தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டி வந்தார்கள். மறுபடியும் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் அப்பா நாடகக் கம்பெனிக்கு கிளம்பியபோது... அண்ணனை பிரிய மனமில்லாத பாசக்கார தம்பியாக அப்பாவுடன் கிளம்பிப்போனவர் எங்க சித்தப்பா. அவருக்கு எங்க அப்பாதான் உலகம்.

சித்தப்பாவின் மூத்த மகனான எங்க சந்தானம் அண்ணனுக்கும் எங்க அப்பாதான் உலகம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். அதனால் அவரை ‘"கிங் ஆஃப் கிங்ஸ்'’என்றுதான் சொல்வோம். அப்பாவின் நாடகக் கம்பெனியில் எலெக்ட்ரீஷியன் வேலையை பிரதானமாகச் செய்தார்.

குளித்து முடித்தவுடன் தலைமுடி சுருளாக இருப்பதற்காக ஒருவிதமாக தலைப்பாகை கட்டுவார் எங்க அப்பா. அதேபோலவே சந்தானம் அண்ணனும் செய்வார். (இப்போ அண்ணனுக்கு தலை வழுக்கை ஆயிடுச்சு) வீட்டுக்குள் எல்லா வசதிகள் இருந்தாலும் வாசலில் உட்கார்ந்து தாடி, மீசையை மழிப்பார் அப்பா. அதுபோலவே வெளியில் உட்கார்ந்துதான் இவரும் செய்வார். இப்படி எங்க அப்பாவை ஃபாலோ-அப் செய்தார் சந்தானம் அண்ணன்.

ஒருசமயம்... எனக்கும், அப்பாவுக்கும் இடையே மனஸ்தாபம். இதனால் வீட்டில் யாருடனும் அப்பா பேசவில்லை. வீட்டில் சாப்பிடவும் இல்லை. ‘"சந்தானம்... ஓட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வா'’என அப்பா சொன்னதும்... பெரிய கேரியரில் வாங்கி வந்து கொடுப்பார். இதற்காக நாங்கள் சந்தானம் அண்ணனை திட்டுவோம். ஆனாலும் அப்பா உத்தரவை அமல்படுத்துவார். ஆவடியில் எங்க பெரியப்பா மகன் திருமணம். திடீரென மாப்பிள்ளை தாலிகட்ட மறுத்து பிரச்சினை செய்ய... “"சந்தானம்... நீ தாலி கட்டு'’என்றதும்... மறுபேச்சில்லாமல் சம்மதித்தார். பிறகு பெரியப்பா மகன் சமாதானமாகி தாலி கட்டினார்.

சந்தானம் அண்ணன்-மோகனா அண்ணி தம்பதிக்கு ரமேஷ், தீபா என இரு குழந்தைகள். என் மனைவி பாக்கியலட்சுமிதான் அந்தப் பிள்ளைகளை வளர்த்தார். தீபாவுக்கும், எனது மேனேஜர் பிரபாகருக்கும் திருமணம் செய்து வைத்தோம். ரமேஷுக்கும் திருமணமாகிவிட்டது.

சந்தானம் அண்ணன் எனது நாடகங்களுக்கும் எலெக்ட்ரீஷியன் பணிகளை செய்துவருகிறார். அதோடு தமிழக அரசின் குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சாரங்களுக்கு நாடகங்களும் போட்டு வருகிறார். அப்பாவின் புகழ்பெற்ற "ரத்தக்கண்ணீர்',’ ‘"தூக்குமேடை'’ நாடகங்களின் முக்கியமான காட்சிகளை எடுத்து சிறு நாடகங்களாக போட்டுவருகிறார்.

என் வீட்டுக்கு எதிரே இளங்கோ சாலையில் வசிக்கும் துபாய் ராஜேந்திரன், அவருடைய மகன், வாலகுரு அண்ணன், ஹரி, ராமகிருஷ்ணன், அய்யர், ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் சந்தானம்... என எல்லா தரப்பினருக்கும் தெரிந்த நபர் சந்தானம் அண்ணன். எங்கள் ஏரியாவில் என்னைத் தெரியாதவர்கள்கூட இருக்கலாம். ஆனால் எங்க சந்தானம் அண்ணனை தெரியாதவர்கள் இருக்க முடியாது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்