(103) படத்தில் காஷ்மீர்! நிஜத்தில் கோவளம்!
கர்ணன் சார் இயக்கத்தில் ’பார்ட்னர்‘கார்த்திக்கும், நானும் இணைந்து நடித்த படம்... ’"இரட்டைக்குழல் துப்பாக்கி'.
பார்ட்னரையும், என்னையும் வைத்து சென்னை மகாலிங்கபுரத்தில் ஒரு வீட்டு மாடியில் ஃபைட் ஸீன் எடுத்த கர்ணன் சார்... “""இந்த ஃபைட்டோட தொடர்ச்சிய பெங்களூரில் எடுக்கப்போறேன். அடுத்து ஒரு போட் ஃபைட் ஸீனை காஷ்மீர்ல எடுக்கப்போறேன்''’’ என்றார்.
எங்களுக்கு குஷி தாங்கவில்லை.
என் சினிமா பயணம் தொடங்கிய இடம் பெங்களூர். அந்த நகரம் எனக்குப் பிடிக்கும். அதுவுமில்லாமல்... ’பெங்களூருல பார்... பஃப்னு ஜாலியா இருக்கலாமே...’ அதனால்தான் குஷி.
நான் காரிலேயே பெங்களூர் சென்றேன். பார்ட்னர் ஃபிளைட்டில் வந்து சேர்ந்தார்.
கனிஷ்கா ஓட்டலில் தங்கினோம்.
""எப்படியும்... ரெண்டு மூணுநாள் ஷூட்டிங் போகும்... நாம, ஒரு நாள் கூடுதலா இருந்துட்டுப் போவோம்''’என இருவரும் பேசி வைத்துக்கொண்டோம்.
பெங்களூர் பேலஸில் ஷூட்டிங்.
எனக்கும், பார்ட்னருக்கும் புஸுபுஸுனு முயல்குட்டி முடி மாதிரி டிஸைன் பண்ணிய கோட்டுகளை காஸ்ட்யூமா கொடுத்தார்கள். அதை மாட்டிக்கொண்டோம்.
""ரெண்டு பேரும் மேல வாங்க... அப்படி பாருங்க... இந்த பைப்ப பிடிச்சு மேல ஏறுங்க...''’’ என கர்ணன் சார் சொல்லச் சொல்ல... அதன்படி செய்தோம். நாலைந்து ஷாட் எடுத்துக்கொண்டார்.
லஞ்ச் பிரேக்.
என்னென்னவோ கிடைக்கக்கூடிய பெங்களூரில் மதியச் சாப்பாடாக லெமன் ரைஸ் தந்தார்கள்.
"பரவால்ல... நைட்டு பாருக்கு போய் என்ஜாய் பண்ணலாம்'’என சமாதானப்படுத்திக் கொண்டு சாப்பிட்டு முடித்தவுடன்...
""ரவி... உங்க ரெண்டு பேருக்குமான காட்சிகளை எடுத்தாச்சு. நீங்க ஊருக்கு கிளம்பலாம்''’ எனச் சொன்னார் கர்ணன் சார்.
நொந்துபோய்... திரும்பினோம்.
ஒருநாள் தங்கலாம்தான். ஆனால்... காஷ்மீர் போட் ஃபைட் ஸீனுக்கு தயாராக வேண்டுமே!
சென்னையை அடுத்த கோவளம் கடற்கரை.
மணற்பரப்பில் வளைந்து நெளிந்து ஓடிய பேக்வாட்டரை.. காஷ்மீரின் தால் ஏரியாக்கினார். உப்பளத்தை பனிப்பிரதேசமாக்கினார். அரைபாடி லாரியைக் கொண்டுவந்து... அதில் என்னை உட்காரச் சொன்ன கர்ணன் சார்... ஒரு கயிறை என்னிடம் கொடுத்து, இழுக்கச் சொன்னார்.
ஒரு யூனிட் ஆளைக் கூப்பிட்டு... ஒரு பக்கெட் தண்ணீரை கையில் கொடுத்து என் முகத்தில் போர்ஸாக அடிக்கச் சொன்னார். அதாவது... அரைபாடி லாரி என்கிற போட்டில், கயிறை நான் வேகமாக ஆட்டியபடி... அதாவது வேகமாக போகிறேனாம். அப்போது ஏரியின் நீர் என் முகத்தில் அடிக்கிறதாம். அதுக்குத்தான் இந்த பக்கெட் தண்ணி. உடனே நான்... அதற்கேற்ப ரியாக்ஷன் செய்தேன்.
இதைப் பார்த்துவிட்டு கார்த்திக் சிரித்தார்.
""பார்ட்னர்... சிரிக்கிறீங்களா? அடுத்து நீங்க இதேபோல செய்யணும். அதை நினைக்கும்போதே எனக்குச் சிரிப்பு வருது''’என்றேன்.
பிறகு உப்பளத்தில் நான் இறந்து கிடப்பதுபோல படுக்கச் சொன்னார் கர்ணன் சார்.
காஷ்மீர் ஷூட்டிங் ஓவர்.
படம் பார்த்தேன்.
கர்ணன் சார் பெரிய கேமரா வித்தைக்காரருமாச்சே. எப்போதோ... காஷ்மீர் படப்பிடிப்பிற்கு போன இடத்தில் தன் உதவியாளர்களை வைத்து... ஓடுவது, மோதுவதுபோல... சில காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார். அவர்கள் அணிந்திருந்த மாதிரியான.. புஸுபுஸு கோட்டுகளை எனக்குக்கும் பார்ட்னருக்கும் கொடுத்திருந்தனர்.
கோவளத்தையும், காஷ்மீரையும் இப்படி மேட்ச் பண்ணிவிட்டார் கர்ணன் சார்.
கோடம்பாக்கம் -ட்ரஸ்ட்புரத்தில் கர்ணன் சாரின் அலுவலகம் இருந்தது. அடுத்த படத்தில் நடிப்பது சம்பந்தமாக பேச என்னை அழைத்தார். அலுவலகத்திற்குப் போனேன்.
"சிலோனில் நீ பெரிய கள்ளக்கடத்தல் மன்னன். வில்லனான உன்னைப் பிடிக்கிறதுக்காக ஹீரோ சிலோன் வருகிறான்... விஜயகாந்த்தையோ... கார்த்திக்கையோ ஹீரோவாக நடிக்க கேட்கலாம்னு இருக்கேன். ஹீரோ சிலோன் வருவது தெரிஞ்சு... நீ அமெரிக்கா போயிடுற. இதை மோப்பம் பிடிச்சு... ஹீரோ அமெரிக்கா வர... நீ அங்கிருந்து சுவிட்ஸர்லாந்துக்குப் போயிடுற. ஹீரோ அங்கவும் வர்றான். நீ இந்தியாவுக்கு வந்துடுற. நாலு நாடு... நாலு கெட்-அப் உனக்கு. இப்படி ஒரு சேஸிங் கதை...''’’என்றார் கர்ணன் சார்.
""அந்த நாடுகள்லயெல்லாம் ஷூட்டிங் பண்றோமா சார்?''“ எனக் கேட்டேன்.
""உன்னோட நாலுவிதமான கெட்-அப் போட்டோக்களை ஹீரோ கையில வச்சிருக்க மாதிரி காட்டினா போதாதா... படம் பர்க்கிற ஆடியன்ஸுக்கு அமெரிக்காவ தெரியுமா என்ன? அவ்வளவு செலவுபண்ணியெல்லாம் படம் எடுக்கக்கூடாது ரவி. சுவிட்ஸர்லாந்து பனிப்பிரதேச நாடு. அந்த போர்ஷனை மட்டும் காஷ்மீர்ல எடுப்போம்''’என்றார்.
"கோவளம்தான் காஷ்மீரா?'’ என நினைத்துக்கொண்டு... ""சரிங்கப்பா... கால்ஷீட் எப்ப ஃப்ரீயா இருக்குனு பார்த்துக்கிட்டு சொல்றேங்கப்பா''’எனச் சொல்லிவிட்டு வந்தேன்.
பிறகு... கால்ஷீட் டைட்டாக இருந்ததால்... ‘""இந்தப் படத்தில் நடிக்க இயலாது''’ என்பதைத் தெரிவித்தேன்.
மிகவும் லோவான பட்ஜெட்டில் படம் எடுப்பவர் கர்ணன் சார்... என்றாலும் கேமரா வித்தைக்காரர். அவர் கேமரா வைக்கிற ஆங்கிளே மிக அலாதியாக இருக்கும்.
"மணியோசை'’உட்பட என் அப்பா நடித்த சில படங்களில் கேமராமேனாக பணிபுரிந்திருக்கிறார் கர்ணன் சார்.
கோவளத்தை காஷ்மீராக நினைத்து நடித்த அனுபவம் அது என்றால்... குளுகுளு குலுமணாலியில் படப்பிடிப்பிற்குப் போன இடத்தில் பனிப்புயலிலும், பனிச்சரிவிலும் மாட்டிக்கொண்டு நடித்த த்ரில்லான அனுபவமும் உண்டு.
ஸ்டண்ட் மாஸ்டர் ஃபெப்சி விஜயன் டைரக்ஷனில், சுமன்-ராகசுதா (கே.ஆர்.விஜயா அம்மாவின் தங்கை மகள்) ஜோடியாக நடித்த தெலுங்குப் படத்தில் அரசியல்வாதி வில்லனாக நான் நடித்தேன்.
சைனாவுக்கு இந்திய ரகசியங்களை நாங்கள் கொடுப்பதை சுமன் கண்டுபிடித்து எங்களை சண்டையிட்டு பிடிப்பார். வில்லனான நான்... ஆடியன்ஸுக்கு சஸ்பென்ஸ் வைக்கிற விதத்தில் முழுக்க முகத்தை மறைத்து வருவேன். சண்டையின் உச்சகட்டத்தில் என் முகமூடியை சுமன் அவிழ்க்கும்போது... எனது முகம் தெரியும். அதனால் பெரும்பாலும் எனக்கு டூப் வைத்து எடுத்துக்கொண்டு... ஒரு நாள் மட்டும்... அந்த முகம் காட்டும் காட்சிக்காக ஷூட்டிங்கிற்கு நான் குல்லு- மணாலி சென்றேன்.
அந்த ஒருநாள்... மறக்கமுடியாத பல த்ரில் அனுபவங்களைத் தந்தது.
(உடலைச் சூடேற்றுவதற்காக பிராந்தியை உடல் முழுக்க தேய்த்துக்கொண்டேன் நான். ஹீரோ சுமன் மூர்ச்சையாகி உடல் விறைத்துப்போனார்.)
கலைஞர் சித்தப்பா!
என் அப்பாவுக்காக கலைஞர் சித்தப்பா எழுதிய "தூக்குமேடை' நாடகத்தில் பாண்டியன் என்கிற மாணவர் தலைவர் கேரக்டரில் கலைஞரை நடிக்க வைத்தார் அப்பா. மிகச்சிறு வயது என்றபோதும் கலைஞரின் எழுத்திற்கு பெரும் மரியாதை கொடுத்தார் அப்பா. "கலைஞர்' என்ற பட்டத்தை தந்து, அதை "தூக்குமேடை' நாடக போஸ்டர்களில் போட்டவர் அப்பா. பெரியார் தலைமையில் விழா எடுத்து கலைஞருக்கு நிதி அளித்தார்.
எம்.ஜி.ஆர். சூட்டிங் கேஸில் தண்டனைக்காலம் முடிந்தும்... வேறொரு வழக்கில் தொடர்ச்சியாக அப்பாவை சிறையில் அடைக்க சிலர் திட்டமிட்டபோது, அதை முறியடித்து, அப்பாவை ரிலீஸ் செய்தார் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் சித்தப்பா. காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலேயே... "இப்போது நடப்பதும் தமிழனின் ஆட்சிதான். அவரின் ஆட்சி தொடர வேண்டும்' என கலைஞருக்கு ஆதரவாக பேசினார் அப்பா.
என் வாழ்க்கையிலும் கலைஞர் அவர்கள் மிக தவிர்க்க முடியாத சக்திதான். சித்தப்பாவாக இருந்து எனது திருமணத்தை நடத்திவைத்தார். பல வேலைகளுக்கு மத்தியிலும் நான் நடித்த "ரத்தக் கண்ணீர்' நாடகத்தை முழுமையாகப் பார்த்து பாராட்டினார் கலைஞர் சித்தப்பா. என் அப்பாவிற்கு நான் நினைவகம் அமைத்தபோது, அதை திறந்து வைத்து சிறப்பித்தார் கலைஞர் சித்தப்பா. அரசியலிலும், ஒரு தலைவராக எனக்கு பல ஆலோசனைகளை வழங்கியவர் கலைஞர் சித்தப்பா.
சினிமாவில் நான் முதல்முதலாக கதாநாயகனாக நடித்தது கலைஞர் சித்தப்பாவின் எழுத்தில் உருவான "வீரன் வேலுத்தம்பி' படத்தில்தான். அதில் எனக்காக ஹீரோ இன்ட்ரொடக்ஷன் பாடலையும் எழுதியவர்.
இப்படி... என் சொந்த வாழ்க்கையில் சித்தப்பாவாக, என் அரசியல் வாழ்வில் பெரும்தலைவராக, என் சினிமா வாழ்க்கையில் ஒரு கதாசிரியராக என்னை வழிநடத்தியவர் கலைஞர் சித்தப்பா. அவரின் இழப்பு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல... எனக்கும் தாங்கமுடியாத இழப்புதான். தமிழ்மொழி, தமிழக மக்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ்நாடு... இவை இருக்கும்வரை கலைஞர் பெயர் இருக்கும்.