இங்கே கலைஞர்- அங்கே எம்.ஜி.ஆர்.!

(85)

"உயர்ந்த உள்ளம்' படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோ ஃபர்ஸ்ட் ஃபுளோரில் நடந்துகொண்டிருந்தது. கமல் சார், அம்பிகா ஆகியோருடன் நானும் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தேன்.

என்னைப் பார்ப்பதற்காக விஜிமா வந்தார். அவரின் கார் எண் 2. அது மிகவும் பிரபலம்.

Advertisment

மாடியில் ... மேக்-அப் அறையில் நானும், விஜிமாவும் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது அம்பிகா என்னிடம்... "விஜயகாந்த் சாரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைங்க'’ எனக் கேட்டுக்கொண்டார். நானும் அறிமுகப்படுத்தி வைத்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினார்.

""என்னப்பா... ரவி! நீயும், உன் தங்கச்சியும் (ராதிகா) விஜயகாந்த் படங்கள்ல நடிச்சு... நீங்க ரெண்டுபேரும் நல்லபேரு வாங்கிட்டு.. அவரை ஒண்ணுமில்லாம ஆக்கிடுவீங்கபோல...'' என்றார் கமல்.

Advertisment

கமல் சாருக்கு விஜிமாவை பிடிக்காது என்றே நான் நினைக்கிறேன்!

இராம.நாராயணன் சார் டைரக்ஷனில் சந்திரசேகரும், நளினியும், நானும் நடித்த "வீட்டுக்காரி' படத்தின் முழுப்படப்பிடிப்பும் திருச்சியில் நடந்தது. என் சொந்த ஊர் திருச்சி என்பதால்... தினசரி காலையில் நாங்கள் தங்கியிருந்த லட்சுமி லாட்ஜ்ஜிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரை நடந்துபோய் டீ சாப்பிட்டு வருவோம் நானும், சந்துருவும். எம்.கே.டி.பாகவதர் வீடு உட்பட பல இடங்களை சந்துருவுக்கு காண்பித்தேன்.

இராம.நாராயணன் சார் டைரக்ஷனில், கங்கை அமரன் அவர்கள் தயாரிப்பில், சுரேஷ், நளினி, அண்ணன் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நான் நடித்த படம் "உரிமை'. படத்தில் இண்டர்வெல் விடும் நேரத்தில்தான் நான் எண்ட்ரி ஆவதுபோல காட்சியமைப்பு இருந்தது.

இந்தக் காட்சியில்... "நீ யார்?'’ எனக் கேட்பார் அண்ணன் ஸ்ரீகாந்த்.

"என்னடா... இண்டர்வெல்ல வந்தா அடையாளம் தெரியாதா?'’ என நான் பதிலுக்குக் கேட்பேன்.

எஸ்.எஸ். மாமா (எஸ்.எஸ்.சந்திரன்) தயாரித்து, இராம.நாராயணன் சார் இயக்கிய படம் "எங்கள் குரல்'.

சுரேஷ், நான், ஜீவிதா ஆகியோர் நடித்திருந்தோம்.

ஏ.வி.எம். கார்டனில் நடந்த "எங்கள் குரல்' படப்பிடிப்பை தலைவர் கலைஞர் அவர்களும், பக்கத்திலேயே... அம்பிகா- ராதா சேர்ந்து நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும் துவக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனால் ஸ்டுடியோ பகுதியில் ஒருவித இறுக்கமான நிலை நிலவியது. கலைஞர் முன்கூட்டியே வந்து "எங்கள் குரல்' படத்தை துவக்கிவைத்தார்.

அம்பிகா-ராதா படத்தைத் துவக்கிவைத்துவிட்டு... எம்.ஜி.ஆர்... கிளம்பப்போகிற தகவல் கிடைத்ததும் நானும், எஸ்.எஸ்.ஸும்... கை ஆட்டினோம். பதிலுக்கு கை ஆட்டினார். இருந்தாலும் புரட்சித்தலைவர் கை காட்டியது நமக்கா? என்கிற சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள... கும்பிடு போட்டோம். அம்பாஸிடரின் ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு.. கும்பிட்டார்.

கதைப்படி நானும், சுரேஷும் ஜப்பான் நாட்டு கப்பல் வியாபாரிபோல நடிப்போம்.

radharavi

சுரேஷ் மிக நீளமாக ஜப்பான் பாஷை என்ற பெயரில் வாய்க்கு வந்ததைப் பேச... அதற்கு ஒரு வார்த்தையில் மொழிபெயர்ப்பேன். சுரேஷ் ஒரு வார்த்தை பேசினால் அதற்கு மிக நீளமாக மொழி பெயர்ப்பேன்.

கல்லாப்பெட்டி சிங்காரம் அண்ணனுக்கு டவுட் வந்து கேட்பார்.

"ஜப்பான்ல சின்னது... தமிழ்ல பெரியது, ஜப்பான்ல பெரியது... தமிழ்ல சின்னது' என விளக்கம் சொல்வேன்.

வாய்க்கு வந்ததைப்பேசி... விளையாட்டுப்போக்காக நாங்கள் நடித்த இந்தப் படம் வர்த்தக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது.

சகோதரர் ராமராஜன் இயக்கியதுடன் ஒரு ஹீரோவாகவும், நான் ஒரு ஹீரோவாகவும் நடித்த படம் "ஹலோ யார் பேசுறது'.

மிக நேர்த்தியாக படத்தை இயக்கியிருந்தார் ராமராஜன்.

ஆனந்த்பாபு, ரம்யாகிருஷ்ணன் ஜோடி. நான் மெயின் வில்லன். நாகேஷ் அப்பா டைரக்ஷன். "பார்த்த ஞாபகம் இல்லையோ' என்பது படத்தின் பெயர். நாகேஷ் அப்பாவின் நண்பருடைய மகன் இந்தப் படத்தில் அஸோஸியேட் டைரக்டராக இருந்தார். அவர்தான் இப்போது புகழ்பெற்ற இயக்குநராக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார். (நாகேஷ் அப்பாவிடம் பணிபுரிந்த நன்றிக்காகத்தான்... நன்றியை காட்டும்விதமாகத்தான்... தன் படங்களில் நாகேஷ் அப்பாவையோ... நாகேஷ் அப்பாவின் மகன் ஆனந்த் பாபுவையோ நடிக்க வைக்கத் தவறுவதில்லை கே.எஸ்.ரவிக்குமார்).

ஒருமுறை இரவு சரியான மழை. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு. ரவிக்குமார் என் வீட்டு கதவைத்தட்டினார். அவர் வந்த ஜீப்பிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. "இங்க நிறுத்திட்டுப் போறேன். பார்த்துக்கங்க...' எனக் கேட்டார். அப்படியே செய்தேன்.

கவுண்டமணி அண்ணன் ஹீரோ. ஜீவிதா ஹீரோயின். நான் வில்லன். தேவர் ஃபிலிம்ஸ் தயாரித்த படம்... "பணம் பத்தும் செய்யும்'.

radharavi

"இந்தப் படத்தில் ராதாரவியைப் போட வேணாம்' என கவுண்டமணி அண்ணன் சொன்னதாக ஒரு தகவல் வர... அவரிடமே கேட்டு க்ளியர் செய்துகொள்ளலாம் என அவரின் வீட்டுக்குப் போனேன்.

""நான் உங்க நாடகக் கம்பெனியில வளர்ந்தவனாச்சே... நான் உன்னை வேணாம்னு சொல்வனா? நீ பெரிய வில்லன். நான் உன்கூட சண்டபோட்டு ஜெயிக்கிற மாதிரி இருந்தா ஜனங்க நம்புவாங்களா?'' எனக் கேட்டார் கவுண்டர்.

ஆனால் எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டு... அந்தப் படம் செம ஹிட்.

எம்.ஆர்.ஆர்.வாசு அண்ணனோட நாடக கம்பெனியில் நடிகராக இருந்தவர். நியூகாலேஜில் நாங்கள் படித்து முடித்து, பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டபோது... ஒரு நாடகம் போட்டோம். அதில் கவுண்டமணி அண்ணனும் ஒரு வேஷம் செய்தார்.

கவுண்டமணி அண்ணன் வெளிநாட்டுக்கு வரமாட்டார். உள்நாட்டிலேயே... அதிகம் நிகழ்ச்சிகளில் தலைகாட்டமாட்டார்.

""நடிகன்ங்கிறவன் பொட்டிக்குள்ள இருக்க வைரக்கல்லு மாதிரி. "சட்'டுனு தொறந்துட்டு... "சடார்'னு மூடிரணும் பொட்டிய. அப்பத்தான் இன்னொரு வாட்டி பார்க்கணும்னு ஆசை வரும்'' என அடிக்கடி நான் சொல்வேன். அப்படி இருந்தால்தான் நடிகனுக்கு மதிப்பு.

ஹீரோவாக நடித்த அவரால் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே தாக்குப்பிடிக்க முடியவில்லை.

காமெடி பண்ணிட்டு... பிறகு ஹீரோவாகி... மறுபடி காமெடிக்குத் திரும்பி... பெரிய லெவல்ல ஜெயிச்சவங்க... நாகேஷ் அப்பாவும், கவுண்டமணி அண்ணனும்தான். ஏவி.எம்.மில் இருக்கிற எல்லா ஃபுளோரிலும் கவுண்டர் இருப்பார்.

"பார்த்தியா ரவி... எத்தன ஹீரோவத்தான் நான் குதிரை மாதிரி இழுத்துட்டுப் போக வேண்டியிருக்கு'’ என்பார் என்னை பார்க்கும்போது.

என்னதான் இருந்தாலும்... ஹீரோவா நடிச்சதும் வரக்கூடிய ஒருவித மயக்கம் "பணம் பத்தும் செய்யும்' பெரிய ஹிட்டானதும் கவுண்டருக்கும் இருக்கத்தான் செய்தது.

"வைதேகி காத்திருந்தாள்' படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. கருப்பு ஃபேண்ட் போட்டுக்கொண்டு, கருப்பு ஷூவுக்குள் பேண்ட்டின் கீழ்ப் பகுதியை இன் செய்துகொண்டு, கருப்பு டிஸைன் சட்டையும், கருப்பு கூலிங் கிளாஸும் போட்டுக்கொண்டு... குதிரை ஓட்டுபவரின் ஸ்டைலில் காஸ்ட்யூம் செய்துகொண்டு மேடையில் பேசினேன்.

என்னுடைய இந்த கெட்-அப் டைரக்டர் விஜய்கிருஷ்ணராஜுக்குப் பிடித்துப்போய்விட... "திறமை' படத்துல உங்க கேரக்டருக்கான கெட்-அப் இதுதான்’ எனச் சொல்லிவிட்டார்.

சத்யராஜ், ரவீந்தர், நான், ரேவதி, செந்தாமரை, வடிவுக்கரசி உட்பட பலரும் இந்தப் படத்தில் நடித்தோம்.

இந்தப் படம் வெளியாகவிருந்த சமயம்தான்... பட வெளியீட்டை வரிசைப்படுத்தும் முறை கொண்டுவரப்பட்டது. ஃபிலிம் சேம்பர் ஏற்பாடு செய்திருந்த இந்த திட்டத்தின்படி... சேம்பர் தருகிற டோக்கன்படி படம் சென்ஸார் ஆகும். பிறகு ரிலீஸ் செய்ய வேண்டும்.

"திறமை' படத்திற்கும் டோக்கன் தரப்பட்டது. அதன்படி... தீபாவளிக்கு வெளியாகும் வாய்ப்பு அமைந்தது. ஆனால்... ஒரு பெரிய நடிகரின் படம் தீபாவளிக்கு வெளியாவதற்காக... ஏற்கெனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியை வேறொரு தேதிக்கு... தீபாவளிக்கு பிந்தைய தேதிக்கு மாற்றினர்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், வக்கீல், விநியோகஸ்தரான அன்பாலயா பிரபாகரனும் வக்கீல், நானும் வக்கீல். அதனால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என யோசித்தோம். இருந்தாலும் படத்தை விரைந்து ரிலீஸ் பண்ணவேண்டும் என்பதால்... பட பிரிண்ட் போடும் விஜய வாஹினி லேப்பிற்கு போனோம் மூவரும்.

(நாங்கள் காட்டிய திறமை)

படம் உதவி: ஞானம்