பிரம்மாண்ட டீமின் பிரமாத விருந்து!
"வாழ்க வளர்க'’படத்தின் கதைப்படி நான் கை,கால் விளங்காமல் கட்டிலில் படுத்திருப்பேன். என்னைத் தனியே விட்டுவிட்டு, தீபா வெளியே சுத்த கிளம்புவார். தீபாவை நான் தடுக்க வேண்டும். அதற்காக ஒரு டெக்னிக் செய்வேன்.
இது... சின்னாளபட்டி வெள்ளையத்தேவன் அவர்கள் செய்யும் டெக்னிக். அதைத்தான் நான் படத்தில் செய்தேன்.
நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்... சின்னாளபட்டியைச் சேர்ந்த நம்பிராஜன் என்கிற சக்திவேல் அண்ணன், அந்தப்பகுதியில் சினிமா ஷூட்டிங் நடத்த பக்காவாக ஏற்பாடுகளைச் செய்பவர். ராஜ்கிரண் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜெயிக்க உதவியவர். ராஜ்கிரணிடம் வடிவேலுவை அறிமுகம் செய்துவைத்து, வடிவேலுவின் சினிமா பிரவேசத்துக்கு காரணமானவர் சக்திவேல் அண்ணன். அவருடைய அப்பா வெள்ளையத்தேவன் செய்யும் காரியங்கள் நகைச்சுவையாக இருக்குமாம். தன் அப்பாவின் செயல்கள் பற்றி வடிவேலுவிடம் சக்திவேல் அண்ணன் சொன்ன அனுபவங்கள் பல... வடிவேலுவின் சூப்பர்ஹிட் காமெடியாக சினிமாவில் வந்திருக்கிறது.
என்னிடமும் தன் அப்பாவைப்பற்றி சக்திவேல் அண்ணன் பல அனுபவங்களைச் சொல்லியிருக் கிறார்.
வீட்டுத் திண்ணையில் வெள்ளையத்தேவன் அவர்கள் உட்கார்ந்திருக் கும்போது... தர்மம் கேட்கிறவர்கள் யாராவது... "மு...ரு...கா...' என ராகமாகப் பாடினால், உடனே "வா முருகா'’எனக் கூப்பிட்டு... "சாப்பிடு முருகா...'’என சாப்பாடு போட்டு... காசும் கொடுப்பாராம். தர்மம் வாங்கியவர் கிளம்பிப் போனதும், சக்திவேல் அண்ண னிடம்... “"இப்ப ‘முருகானுட்டு வந்தானே ஒருத்தன்... அவனைப் பிடிச்சிட்டு வா...'’என்பாராம்.
தர்மம் வாங்கியவரை கூப்பிட்டு வந்த வுடன் ""எங்க... பாட்ட பாடு'' என்பாராம். "மு...ரு...கா...'’ என அவர் பாடியதும், ""இதுதான் தெரியு மில்ல... அடுத்த வரி பாடு'' என்பாராம். தர்மம் வாங்கியவர் பாடத் தெரியாமல் முழித்தால் குடுத்த காசை திரும்ப வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுவாராம்.
அதில் ஒரு அனுபவம்...
வெள்ளையத்தேவன் அவர்கள் கை,கால் வராமல் கட்டிலில் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். அப்போது சக்திவேல் அண்ணன் வெள்ளையும் சொள்ளையுமாக ட்ரெஸ் செய்துகொண்டு கிளம்ப... ‘"நாம இப்படி படுத்துக்கிடக்கோம்... இவன் மட்டும் ஊர்சுத்த கிளம்புறானா?'’ என எண்ணியவர்... “மாப்ள... (மகனை சிலசமயம் அப்படித்தான் அழைப்பாராம் வெள்ளையத்தேவன்)... "கோழிகள்லாம் என்மேல் ஏறி விளையாடுது. என்னால எந்திரிச்சு விரட்ட முடியல. கோழிய எறிஞ்சு விரட்டுறதுக்கு அஞ்சாறு கல்லு பொறுக்கி கொடுத்திட்டுப் போ மாப்ள...'’’ என கேட்டி ருக்கிறார். சக்திவேல் அண்ணனும்... சின்னச் சின்ன உருண்டைக் கற்களை பொறுக்கி, அவர் கையில் கொடுக்க... "மாப்ள... இப்ப நீ எப்படி வெளியே போறேனு பார்க்குறேன்'’என அந்தக் கற்களை மகனை நோக்கி குறி பார்த்தபடி தயாராக இருப்பாராம். ’"மீறிப் போனா... மண்டை உடையுமே'’ என சக்திவேல் அண்ணன்... தன் அப்பா தூங்கும் வரை உட்கார்ந்துவிடுவாராம்.
அப்படிச் சொன்ன அனுபவத்தைத்தான் "வாழ்க வளர்க'’படத்தில் செய்தேன்.
""நீ வெளிய போனபிறகு கோழி என் மேல ஏறுது. விரட்றதுக்கு கல்லு பொறுக்கிக் குடு''’ என்பேன். தீபாவும் கற்களை பொறுக்கிக் கொடுப்பார்.
தீபாவை நோக்கி கற்களை வைத்து குறிபார்த்த படி... “""இப்பப் போடி பார்க்கலாம்''’’ என்பேன்.
"தூண்டா மணிவிளக்கு தூண்டாம நின்னெரியும்', "மூணுவேள சோறு போடலாம்'’-இப்படி நல்ல நல்ல பாட்டுக்கள தந்திருந்தார் அண்ணன் இளையராஜா.
விஜிமா, ராவுத்தர் தரப்பின் முதல் தயாரிப் பாக வந்த பிரம்மாண்டமான சினிமாஸ்கோப் படம் "உழவன் மகன்'.
விஜிமா இரண்டு வேடங்களில் நடித்திருந் தார். ராதிகா, ராதா, பண்டரிபாய் அம்மா, எம்.என்.நம்பியார் அப்பா, எஸ்.எஸ்.மாமா, செந்தில் அண்ணன்... இவர்களுடன் வில்லப்பண்ணையாராக நான் நடித்திருந்தேன்.
கதை -திரைக்கதை -வசனம் -பாடல்கள் -இணை இசை... ஆபாவாணன் அவர்கள் (ஆபாவின் ஒரிஜினல் பெயர் சின்னா). இயக்கம்- ஆர்.அரவிந்த்ராஜ். கோபிசெட்டிபாளையத்தில் படப்பிடிப்பு நடந்தது. கம்பெனி சார்பில் மாதவன், ராதா என இரண்டு மேனேஜர்கள் படப்பிடிப்பை கவனித்துக்கொண்டார்கள்.
விஜிமா-ராதிகா இல்லாத எங்களுடைய காம்பினேஷன் ஷூட்டிங் முதலில் தொடங்கியது.
படப்பிடிப்பைவிட பிரம்மாண்டமாக இருந்தது விருந்து உபசரிப்பு. காலை ஏழு மணிக்கு தொடங்கும் டிபன் விருந்து முற்பகல் 11 மணிவரை நடக்கும். 11 மணிமுதல் 12 மணிவரை ஜூஸ் கொடுப்பார்கள். ரோஸ் மில்க், இளநீர், மோர், டீ, காபி என எல்லாம் கொண்டுவருவார்கள். விருப்பப்பட்டதை வாங்கிக் குடிக்கலாம். 12 மணிமுதல் மாலை 4 மணிவரை மதியச் சாப்பாடு பரிமாறப்படும். மாலை 5 மணிமுதல் 6 மணி வரை மாலை சிற்றுண்டி தரப்படும். இரவு 7 மணிமுதல் 11 மணி வரை நைட் டிபன்.
நானும் எத்தனையோ பெரிய பெரிய கம்பெனி படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு உணவுப்பொழுதும் இவ்வளவு நேரம் நீண்டதில்லை.
நானும் பார்ட் டைம் புரொடக்ஷன் மேனேஜர் மாதிரி ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலைகளை கவ னித்துக்கொண்டதால்... ஒரு விஷயம் புரிந்தது. உணவுச் செலவு என் பது மிதமிஞ்சி கட் டுப்படுத்த முடியாத படி போவது தெரிந் தது. இது நியாய மாகப்படவில்லை.
இதனால் சென் னையிலிருந்த விஜிமாவுக்கு போன் செய்து... ""விஜிமா உடனே லொகே ஷனுக்கு வந்தா தேவலை''’என போன் செய்து சொன்னேன். விஜிமாவும் உடனே கிளம்பி வந்தார். அதன்பிறகே... உணவு உபசரிப்பு கட்டுக்குள் வந்தது.
(முதல் படம் தயாரிப்பவர்கள் காட்டும் உபசரிப்பு... அடுத்து அவர்கள் தயாரிக்கும் படத்தின்போது இருக்காது. ‘"ராகங்கள் மாறுவதில்லை' படத்தை தயாரித்த நிறுவனம்... பெரிய பந்தல் போட்டு உணவு உபசரிப்பு செய்தது. அதைப் பார்த்துவிட்டு ""அடுத்த படத்தின்போது இப்படி யெல்லாம் பெரிய உபசரிப்பு இருக்காது''’என்றேன். அதுபோலவே ஆனது. ‘"உழவன் மகன்'’உபசரிப்பை பார்த்துவிட்டும் "அடுத்த படத்தின்போது இம்புட்டு உபசரிப்பு இருக்காது'’ என்றேன். அது போலவே... "புலன் விசாரணை' படப்பிடிப்பின் போது... ரோஸ் மில்க், இளநீர் தரப்படவில்லை.)
"உழவன் மகன்'’படத்திற்காக ’ரெட்டைக் காளை தட்டுவண்டி ரேஸ்’ பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. எனக்குத் தெரிந்து இவ்வளவு பிரம்மாண்டமாக தட்டுவண்டி ரேஸ் வேறு எந்தப்படத்திலும் எடுக்கப்படவில்லை... இன்று வரை.
சூலூரில் தட்டுவண்டி ரேஸ் எடுக்கப்பட்டது. 400 அடி நீள ட்ராக் அமைக்கப்பட்டது தரையில். அதேநீளத்திற்கு மேலேயும் 400 அடி நீள ட்ராக் அமைத்தார்கள். ஆறேழு கேமராக்களை வைத்து படம் பிடித்தார்கள். இதையெல்லாம் முதன்முதலாக நான் பார்த்து வியப்படைந்தேன். ஆனால் ஆபாவாணனிடம்... எந்தச் சலனமுமே இருக்காது. அவர் முகத்திலும் அது தெரியாது.
ஷூட்டிங் பார்க்க திருவிழா கூட்டம். சுற்றுலா வந்த ஒரு வெள்ளைக்கார தம்பதியும் வந்திருந்தனர்.
இதற்குமுன் "சின்னஞ்சிறு கிளியே'’படத்திற்காக திருப்பத்தூர் ரோட் டில் தட்டுவண்டு ரேஸ் ஓட்டிய அனு பவம் எனக்கு இருந்ததால்... ஷூட்டிங் பிரேக்கில் அந்த வெள் ளைக்காரியிடம்... சரளமான ஆங்கி லத்தில்... ""இந்தப் படத்தோட ஹீரோ நான்தான்''’எனச் சொல்ல... "வாவ்...'’என்றபடி என்னருகே வந்தார். அவரை தட்டுவண்டியில் உட்கார வைத்து ஒரு ரவுண்ட் வந்தேன்.
"ஹீரோனு சொல்லி வெள்ளக்காரிய ஏமாத்துறீங்களா?'’என ராதிகா கிண்டல் அடித்தார்.
ஏதோ தட்டுவண்டி ஓட்டுவதில் முன்அனுபவம் இருப்பவரைப்போல ரொம்ப சாகஸமாக வண்டியை ஓட்டி அசத்தினார் விஜிமா.
தட்டு வண்டி ரேஸ் காட்சிக்காக கொண்டு வரப்பட்ட அவ்வளவு காளை மாடுகளுக்கும்... ஒரு மாட்டுக்கு ஒரு பெரிய சில்வர் பக்கெட் முழுக்க அரிசி நிரப்பப்பட்டு... உணவாக தரப்பட்டது. அதைப் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருந்தது.
(600 செம்மறி ஆடுகள்ல பத்துப் பதினஞ்சு குறைஞ்சாலும் படப்பிடிப்பு நடக்காது என்றார் ஆபாவாணன்)
திருத்தம்!
"கர்ஜனை'’அத்தியாயம் 91-ல் நான் நடித்த "ஓடங்கள்'’பட அனுபவம் பற்றிச் சொல்லியிருந்தேன். அதில் தரங்கம்பாடி கோட்டையில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில்... காட்சிப்படி கதாநாயகியின் மகளாக வரும் குழந்தை அழ... நான் குழந்தையின் வாயைப் பொத்துவதால் குழந்தை மூர்ச்சையாக வேண்டும். குழந்தையை தூங்கவைக்க முயற்சித்தபோது... அது அழுதுகொண்டிருந்ததால்... "ரெண்டு சொட்டு பிராந்தியை குழந்தைக்கு கொடுத்தா தூங்கிடும்'’என தமாஷாக சொன்னேன். நாங்கள் பேசிக்கொண்டி ருக்கும்போதே... குழந்தை அசதியில் தூங்கிவிட்டது. உடனே நான்... “""பக்கத்துலதான் பாண்டிச்சேரி இருக்கு. சரக்கப் பத்தி பேசினதுமே... குழந்தை தூங்கிருச்சு பாருங்க''’என கமெண்ட் அடித்தேன். பல வருஷங்கள் ஆகிவிட்டதால்... ஞாபகமறதியாக... அந்தக் குழந்தைக்கு, நான் கொஞ்சம் பிராந்தி கொடுத்ததாக வந்த தகவல் தவறு.
-ராதாரவி