(92) சிறையிலிருந்தே வசனம் எழுதிய கலைஞர்!
"வீரன் வேலுத்தம்பி' திரைப்படம் என் லைஃப் டைம் படம். நான் ஹீரோவாக நடித்த படம். தலைவர் கலைஞர் கைவண்ணத்தில் இராம.நாராயணன் சார் இயக்கத்தில் நடித்தேன்.
தலைவர் கலைஞர் அப்போது சிறையில் இருந்தார். அங்கிருந்தபடியே... காட்சிகளையும், வசனங்களையும் எழுதிக் கொடுத்தார்.
சிலசமயம் இராம.நாராயணன் சாரும், எஸ்.எஸ்.சந்திரன் மாமாவும் சிறைக்குச் சென்று கலைஞரிடம் ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கி வருவார்கள். சிலசமயம் நானும், இராம.நாராயணன் சாரும் சென்று வாங்கி வருவோம்.
விஜிமா, பார்ட்னர் கார்த்தி, சந்திரசேகர், அம்பிகா, நளினி, தியாகு, ஜெய்கணேஷ் சார்... என பலரும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தனர். "நம்ம ரவி ஹீரோவா நடிக்கிற படம்'’ என்கிற மகிழ்ச்சியில் சம்பளம் வாங்காமலேயே நடித்துக் கொடுத்தார்கள்.
வில்லன் நடிகரான நான், ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இப்படி பல ஹீரோக்கள் ஒத்துழைப்பு தந்தனர்? "இந்தக் காலத்தில் அந்த மாதிரி உதவுவார்களா?' என்று கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது.
இந்தப் படத்திற்காக தலைவர் கலைஞர் எழுதிய "சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி' என்கிற பாடலை சகோதரர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துப் பாடியிருந்தார். அண்ணன் மு.க.முத்து அவர்கள் திரையில் தோன்றி இந்தப் பாடலைப்பாடி நடித்தார். இது படத்தில் டைட்டில் ஸாங்காக இடம்பெற்றது.
"உமர் முக்தர்' படத்தில் உமர் இறந்ததும் அவரின் காலில் தண்டை மாட்டுவதுபோல் ஸீன் இருக்கும். அதேபோன்ற ஸீனை இந்தப் படத்திலும் வைத்தோம்.
"வீரன் வேலுத்தம்பி' வெற்றிப்படமாக அமைந்தது.
"கலைப்புலி' தாணு சார் தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில் விஜிமா, ரூபினி, வில்லனாக நான் நடித்த படம் "கூலிக்காரன்'.
இது இந்திப்பட ரீ-மேக். அமிதாப் செய்த வேஷத்தில் விஜிமாவும், அம்ஜத்கான் செய்த வேஷத்தில் நானும் செய்தோம். விஜிமாவின் அண்ணனாக நாகேஷ் சாரும், அண்ணியாக ஸ்ரீவித்யா மேடமும் நடித்திருந்தனர். இதில் எனக்கு ரிச்மேன் கெட்-அப். தாணு சாரின் நண்பரான டெய்லர் குமார் மூலம் எனக்கான காஸ்ட்யூம்களை மிகுந்த அக்கறையோடு தயார் செய்தார் தாணு சார். தாணு சார் நல்ல ரசிப்புத்தன்மை உடையவர். எனது கேரக்டருக்கான மேனரிஸமாக... கோட் பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து, இருமி... துடைப்பது என உருவாக்கப்பட்டது.
ஸ்ரீவித்யாவிடம்... விஜிமாவைப் பற்றி சொல்லி எச்சரித்துவிட்டு... அந்த மேனரிஸத்தை நான் செய்கிற காட்சிக்கு தியேட்டரில் பலத்த கிளாப்ஸ் கிடைத்தது.
எனக்கும், சிலுக்கு ஸ்மிதாவுக்குமான பாடல் காட்சி விஜய-வாஹினி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. காட்சிப்படி அப்போது அங்குவரும் விஜிமா, ‘அண்ணனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டதாக’அழுவார். நான் ரோஜா இதழ்களை கிள்ளிப் போட்டபடி விஜிமாவைப் பார்ப்பேன். இதைப் பார்த்து தாணு சார் ரொம்பவே ரசித்தார்.
நான் தங்கத்தால் செய்யப்பட்ட காரில் வருவேன். விபத்து ஏற்பட்டு... கார் உருகி... நான் தங்கக்குழம்பில் மூழ்கிச்சாகும் காட்சியும் இந்தப் படத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டது.
"கூலிக்காரன்' படப்பிடிப்பு கர்நாடகாவில் குதிரைமூக்கு எனும் இடத்தில் நடைபெற்றது. அதற்காக மங்களூருவில் தங்கியிருந்தபோதுதான்... இந்திப் பட ஷூட்டிங்கிற்காக வந்த கோவிந்தாவுக்கு விஜிமா நீச்சல் கற்றுக் கொடுத்தார். எனக்குப் பிடித்த இந்தி நடிகை ராக்கி. அவரை இங்கு தங்கியிருந்தபோது சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
பிரமாண்டமான ஆக்ஷன் காட்சியை ஹெலிகாப்டர் வைத்து எடுக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்த நேரத்தில்...
சென்னையிலிருந்து எனக்கு போன்.
நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா, கார் டிரைவரை அடித்துவிட்டார். ஃபெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் டிரைவர்ஸ் யூனியன் ஸ்டிரைக்கில் ஈடுபட... ஃபெப்சியும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. அப்போது முதல்வராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தார். "அம்பிகா-ராதா தரப்பிற்கு முதல்வரின் சப்போர்ட் இருக்கு' எனச் சொல்லப்பட்டது. டிரைவர்ஸ் யூனியனின் தலைவராக அப்போது இருந்த தாசரி பத்மா மிகவும் போல்டான லேடி. பிரச்சினையை சும்மா விடுவதாக இல்லை அவர். டிரைவர்ஸ் யூனியன் ஆட்கள் பந்தல் போட்டு போராட்டம் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.
நடிகர்சங்கத் தலைவராகவும் ஃபெப்சி அமைப்பின் உபதலைவராகவும் நான் இருந்ததால்... பிரச்சினையைக் குறித்துப் பேச... என்னை அழைத்தனர்.
விஜிமா எனக்காக டைரக்டர் ராஜசேகர் சாரிடம் பேசி, தாணு சார் ஒப்புதலுடன்... நானும், ஸ்டண்ட் தொழில்நுட்ப கலைஞரான "கன்'ஏக்நாத்தும் கிளம்பி ஹோட்டல் அறைக்கு வந்தோம்.
சென்னைக்கு விமானத்தில் கிளம்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது "கன்'ஏக்நாத்திடம்... "இங்கிலீஷ் படங்கள்ல "பாம்' வெடிக்கிற காட்சி வர்றப்போ... தியேட்டரே அதிர்றமாதிரி உணர்வு வருது. நம்ம படங்கள்ல அவ்வளவு லைவ்வா இருக்கிறதில்லையே ஏன்?' எனக் கேட்டேன்.
""பாம் வெடிக்க வைக்கிறதுக்கான கனெக்ஷன் உள்ள வயரை கேமராவில் ஃபிக்ஸ் பண்ணீருவோம். ரிமோட்டை அழுத்தினதும் பாம் வெடிக்கும்போது... கேமராவும் அதிரும். அதனால் அப்படி பதிவாகும் காட்சி... தியேட்டர்ல ஆடியன்ஸுக்கு லைவ்வா உணரவைக்கும். ஆனா... இங்க கேமரா ஷேக் ஆகுறத கேமிராமேன்களும், டைரக்டர்களும் விரும்புறதில்ல...'' என்றார்.
சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறக்கியதும் டிரைவர்ஸ் யூனியனைச் சேர்ந்த சிவாவும், இப்போதைய தலைவர் ராஜேந்திரனும் காரில் அழைத்துச் சென்றனர். போராட்ட இடத்திற்குப் போனால்... பந்தல் பிரிக்கப்பட்டு... வெறிச்சோடிக் கிடந்தது. போராடியவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு... நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்ஸ்பெக்டர் என்னிடம் "நீங்க ஏன் இங்க வந்தீங்க?'’எனக் கேட்டார்.
"தொழிலாளிங்க என் குடும்பத்தினர்போல. அவங்ககிட்ட பேசி, நான் பிரச்சினையை சரி செய்றேன்.. அரெஸ்ட்டான மொத்தப்பேரையும் விடுவிங்க முதல்ல...' என்றேன்.
"பிரச்சினை வராதுனு நீங்க எழுதிக்கொடுங்க' என்றார்.
எழுதிக் கொடுத்தேன். எல்லோரும் விடுவிக்கப்பட்டனர்.
நான் சரசம்மாவைப் பார்த்துப் பேச அவரின் வீட்டுக்குப் போனேன்.
அம்பிகாவின் மேனேஜராக இருந்த ஏ.பி.எஸ்.மணி... முன்பு எங்கள் வீட்டின் நிர்வாகியாகவும் இருந்தவர். "ராதாமணி குயின் பாக்ஸ்' என்கிற ட்ரைகிளினிங் கடையை நடத்தி வந்தவர். அதன்பிறகே அம்பிகாவுக்கு மேனேஜரானார்.
"மேனேஜர் ஏ.பி.எஸ்.ஸை அந்த டிரைவர் அடிச்சிட்டார். அதைத்தான் நான் தட்டிக்கேட்டேன். இப்ப ஏ.பி.எஸ். எங்க இருக்கார்னே தெரியல' என சரசம்மா என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே... மாடியிலிருந்து இறங்கிவந்தார் ஏ.பி.எஸ்.மணி.
"இந்த விஷயத்துல முதலமைச்சரே எங்களுக்கு சப்போர்ட்டா இருக்கார்' என்றார் சரசம்மா.
"முதலமைச்சரே நடிகரா இருந்தவர்தான். தேவையில்லாம அவரை இழுக்காதீங்க' என்று சொன்னதுடன்... "மணி அண்ணே... நீங்களே சொல்லுங்க... சி.எம்.மை இதில் இழுக்கலாமா?' என்றேன்.
""இப்ப நான் என்ன செய்யணும்?''’என்றார் சரசம்மா.
""நடந்த சம்பவத்திற்காக மனவருத்தப்படுவதாக எழுதிக்கொடுங்க'' என்றேன்.
அப்படியே எழுதிக்கொடுத்தார் சரசம்மா.
நான் அந்த கடிதத்தை டிரைவர்ஸ் யூனியனில் கொடுக்கவே இல்லை. என்னிடமே வைத்துக்கொண்டேன்.
"சரசம்மா வருத்தம் தெரிவிச்சிட்டாங்க'’ என நான் சொல்ல... என்மேல் இருந்த நம்பிக்கையில் ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கியது டிரைவர்ஸ் யூனியன். மறுநாள் எல்லா ஸ்டுடியோக்களுக்கும் விசிட் அடித்து, ஷூட்டிங் நடப்பதை உறுதி செய்துகொண்டபின்... மறுபடி மங்களூரு வந்து... குதிரைமூக்கில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.
ஆங்கிலப் படங்களில் குண்டு வெடிப்பு காட்சிகள் எடுக்கப்படும் முறை குறித்து என்னிடம் "கன்'ஏக்நாத் தெரிவித்த தகவல்களைச் சொன்னேன். அதன்படி ஒரு காட்சி எடுக்கப்பட்டது.
பிரமாண்டமாக தயாரான "கூலிக்காரன்' படம் நன்றாக ஓடியது.
(நடிகை சரிதாம்மாவுக்கு வந்த சிக்கலும், மிரட்டலும். அவரைப் பாதுகாத்தேன் நான்)
_____________
அந்த ஜோக், புரளியானது!
என் அப்பா நடிகவேள் குறித்து பல கட்டுக்கதைகள் உண்டு.
என் அப்பா காரில் போகும்போது... ஒரு இளைஞர் ராங்காக குறுக்கே வர... டிரைவர் "தே... பயலே' என திட்ட...
"அப்படியெல்லாம் திட்டாத... அது என் புள்ளையாக்கூட இருக்கலாம்' என அப்பா சொல்வார்... என ஒரு கதை உண்டு. ஆனால்... இது டி.எஸ்.பாலையா பெரியப்பா சொன்னது. இந்த ஜோக் மருவி... என் அப்பா சொன்னதாக பரவிவிட்டது. டைரக்டர் மணிவண்ணன்கூட ஒரு பேட்டியில் ‘""எம்.ஆர்.ராதா இப்படிச் சொல்வார்'' எனச் சொல்லியுள்ளார்.