(104) குளிருக்கு சூடு ஏற்ற புது டெக்னிக்!

சுமன் ஹீரோவாக நடித்து, ஃபெஃப்சி விஜயன் மாஸ்டர் இயக்கிய’"மஹா யக்னம்'’தெலுங்குப் படத்தின் ஃபைட் ஸீனில் நடிப்பதற்காக குல்லு-மணாலி போயிருந்தபோது... மிகத் த்ரில்லான அனுபவம் கிடைத்தது.

இந்தியா-சீனா பார்டரில் இருக்கும் ரோத்தாங் பாஸ் பனிமலைப் பகுதியில் ஷூட்டிங்.

பார்க்குமிடமெல்லாம் வெள்ளைப்பனி படர்ந்திருந்ததால்... அதைப் பார்க்கும்போது ரிப்ளக்ஷன் காரணமாக கண்கள் கூசும் என்பதால், எல்லோரும் கூலிங்கிளாஸ் அணிந்துகொண்டோம்.

Advertisment

மாருதி மினி வேனில் ரோத்தாங் பாஸ் மலை மீது போய்க்கொண்டிருந்தபோது... வேன் டிரைவர் சுற்றும் முற்றும் மலையை கூர்ந்து பார்த்துக்கொண்டே... ஒருவித படபடப்புடன் வேனை ஓட்டிக்கொண்டிருந்தார்.

""ஏன் இப்படி வெறிச்சு வெறிச்சு பார்த்துகிட்டே வண்டியை ஓட்டுறீங்க?''’என நாங்கள் கேட்டோம்.

radharavi

Advertisment

பதில் சொல்லத் தயங்கினார் டிரைவர்.

நாங்கள் வற்புறுத்திக் கேட்டோம்.

""இந்த மலை அபாயகரமானது. அடிக்கடி பாறைகள் உருளும். அதனாலதான் கவனிச்சு ஓட்டுறேன்''’என்றார்.

எங்களுக்கு தூக்கிவாரிப் போட்டது.

டிரைவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு இது சர்வசாதாரணமாக இருக்கலாம். வரும் ஆபத்திலிருந்து சுதாரிப்பாக தப்பிக்கிற அனுபவம் இருக்கும்.

ஆனால்... எங்களுக்கு?

""வண்டியை நிறுத்துங்க. இவ்வளவு ரிஸ்க் இருக்கிற இடத்துக்கு வரமாட்டோம்''’எனச் சொன்னோம்.

இதனால் குல்லுவில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வண்டி திரும்பியது.

மறுநாள்... வேறு ஏதாவது லொகேஷனில் ஷூட்டிங் வைத்துக்கொள்ள முடிவானது.

தங்குமிடத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். இரவு... கடுமையான பனிமழை பொழிந்தது.

"32 வருஷத்துல இல்லாத கடும் பனிப்பொழிவு'’என்றனர் உள்ளூர்க்காரர்கள்.

குல்லுவிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் இருக்கும் மணாலியில் பனி மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

அந்த கடும்குளிரிலும் பேண்ட்டும், கட் பனியனும் மட்டும் போட்டுக்கொண்டு மிகத் தைரியமாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார் சுமன். "சுமனோட உடம்பு இரும்பா?'’என வியப்பாக இருந்தது மொத்த யூனிட்டுக்கும்.

எனக்கோ குளிர் தாங்கவில்லை. பிராந்தியை உள்ளங்கையில் ஊற்றி, உடல் முழுக்க தேய்த்துக்கொண்டேன்... சூட்டுக்காக.

சண்டைக்காட்சி எடுத்து முடிக்கப்பட்டதும்... குல்லுவில் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினோம்.

சுமனுக்கு கண் திருஷ்டியாகிவிட்டதோ... என்னவோ.... குளிரால் அவருக்கு கைகால் விறைத்துக்கொண்டது.

அந்தப் பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு நிலமை மோசமாக இருந்ததால்... தொலைத்தொடர்பு பெரும்பாலும் துண்டிக்கப்பட்டிருந்தது. கரண்ட்டும் இல்லை.

சுமனுக்கு வெப்பம் தேவை. அதனால் அவரைப் படுக்கவைத்து, சுற்றிலும் மெழுகுவர்த்தியை ஏற்றினோம். ஏதோ... பெர்த்டே கேக் போல மெழுகுவர்த்திகளுக்கு நடுவில் படுக்கவைக்கப்பட்டிருந்தார் சுமன். சுமனின் கால் பாதங்களை நானும், விஜயன் மாஸ்டரும்... கைகளால் தேய்த்துவிட்டோம்.

மறுநாள் சரியாகிவிட்டது சுமனுக்கு.

இந்த அவஸ்தைகளுக்கு மத்தியில் ஷூட்டிங் நடத்துவதற்கு... இதர செலவுகளுக்கான பணத்துடன் வந்து சேர்ந்தார் தயாரிப்பாளர் ஜோதிபிரசாத்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நடந்து கடந்து... சமதளமான இடத்திற்கு வந்ததும்... அங்கிருந்து டாக்ஸி பிடித்து... அடுத்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் இடத்துக்கு முன்புவரை பயணிப்பது. மறுபடி நடப்பது... என இப்படியே பணத்துடன் வந்து சேர்ந்தார் ஜோதிபிரசாத்.

நல்ல பாதை இருந்தாலே... ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு பணம் கொண்டுவர யோசிக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில், இவ்வளவு ரிஸ்க்கான வழியில் பயணித்து பணத்தைக் கொண்டுவந்த ஜோதிபிரசாத்தின் பொறுப்பு... ஆச்சரியமாக இருந்தது.

குல்லுவின் நிலைமை எங்களை பதைபதைக்க வைத்துக்கொண்டிருந்தது. போன் ஒர்க் பண்ணாத நிலையில் அந்தச்சமயம்... திடீரென ஹோட்டல் போன் பெல் அடித்தது.

ஊழியர் வந்து... "ராதாரவி'’எனச் சொல்ல... நான் போனை நோக்கி ஓட... எல்லாருமே என் பின்னால் ஓடிவந்தார்கள்.

நான் குல்லுவுக்கு ஷூட்டிங் கிளம்பும்போதே... என் நண்பர்... பல்லடம் டி.எம்.எஸ்.பழனிச்சாமியிடம்... “""ஷூட்டிங் முடிந்ததும் நேராக பெங்களூருவில் நாடகம் போட வருவேன். நீங்களும் அங்க வாங்க''’எனச் சொல்லியிருந்தேன்.

பழனிச்சாமிதான் பேசினார்.

""இங்க இவ்வளவு பிரச்சினை இருக்கு. இன்னைக்கி கிளம்ப முடியாது. பெங்களூரு நாடகம் கேன்ஸல். அதை அவங்களுக்கு தெரியப்படுத்தணும்''’என நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே... யூனிட்டில் இருந்த பலரும்... “"உங்க நண்பர்கிட்ட என் வீட்டு போன் நம்பரை சொல்லுங்க. அவர் எங்க வீட்டுக்கு தகவல் சொல்லட்டும்'’என ஆளாளுக்கு பதட்டமாகச் சொல்லும்போதே... லைன் கட்டாகிவிட்டது.

தூங்கியும், தூங்காமலும் அந்த இரவு கழிந்தது.

காலையில் என் அறை ஜன்னலை யாரோ தட்ட... திறந்து பார்த்தால்... புரொடக்ஷன் மேனேஜர் சுடச்சுட காபியுடன் நிற்கிறார்.

அதாவது... ஜன்னல்வரை பனி கொட்டிக்கிடக்க... அதில் ஏறிவந்து காபி கொடுத்தார்.

அங்கு எனக்கு பழக்கமான ஒரு மிலிட்டரிகாரர் மூலம் சென்னையில் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. காலேஜ் அருகில் இருக்கும் மிலிட்டரி ரெக்ரூமெண்ட் அலுவலகத்திற்கு... நான் பாதுகாப்பாக இருப்பதை என் வீட்டாருக்கு தெரியப்படுத்தும்படி சொன்னேன்.

எனக்கு ஒரு நாள் ஷூட்டிங்தானே. அது முடிந்ததால்... நானும், எனது டச்-அப் உதவியாளர் குமாரும்... நடந்தும், டாக்ஸியிலுமாக... குல்லு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம்.

விமானம் மூலம் சண்டிகர் வந்தோம். சண்டிகரிலிருந்து டெல்லிக்கு டாக்ஸியில் வந்தோம். அந்தச் சமயம் பஞ்சாப் பகுதியில் ஏதோ பெரிய கலவரம் நடப்பதாகச் சொன்னார்கள். டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தோம்.

எனக்கு தெலுங்கு சரளமாக பேசவராது. ஆனால் கதைப்படி வில்லனான நான் நீண்ட வசனம் பேசி நடிக்கவேண்டும்.

நான் ஃபெஃப்சி விஜயன் மாஸ்டரிடம் சொன்னதும்... எனக்காக சில மாறுதல்களைச் செய்தார். கண்ணாடி அறைக்குள் இருந்து நான் பேசுவதாகவும், கண்ணாடி அறைக்கு வெளியே இருந்து கேமரா என்னை படம்பிடிப்பதாகவும் மாற்றினார்.

கண்ணாடி அறைக்குள்... நான் கண்டபடி வாயசைத்து நடித்தேன்.

எனக்கும், ஃபெஃப்சி விஜயன் மாஸ்டருக்கும் இன்றளவும் நட்பு நீடிக்கிறது. என் மகன் ஹரியும், மாஸ்டர் மகன் சபரியும் நண்பர்களாக இருக்கிறார்கள்.

("புலன் விசாரணை'’படத்திற்காக நான் போட்ட கெட்-அப்பைப் பற்றி கேள்விப்பட்டு விஜயகாந்த்தும், இப்ராஹிம் ராவுத்தரும் வந்து பார்த்தனர்)

நட்பின் அடையாளம்!

radharavi

பல்லடத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, தீவிரமான டி.எம்.எஸ். ரசிகர். அதனால் அவர் ‘டி.எம்.எஸ்.பழனிச்சாமி’ என்றே அழைக்கப்பட்டார். டி.எம்.எஸ். அவர்கள் தனது பழைய அம்பாஸிடர் காரை விற்க முடிவெடுத்ததும்... அபிமானம் காரணமாக நல்ல விலை கொடுத்து அந்த அம்பாஸிடரை வாங்கியவர் பழனிச்சாமி. சிறுவயதிலேயே எங்கள் அண்ணன் எம்.ஆர்.ஆர்.வாசுவிடம் சேர்ந்தவர் பழனிச்சாமி. தன் அப்பாவின் ஆசைக்காக தன் அப்பாவின் தங்கை மகளையும், தன் அம்மாவின் ஆசைக்காக தன் அம்மாவின் அண்ணன் மகளையும் திருமணம் செய்துகொண்டவர் பழனிச்சாமி. அவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். "ராஜதந்திரம்'’படப்பிடிப்பிற்காக நான் போயிருந்தபோது... பழனிச்சாமியின் ‘"டி.எம்.எஸ். ஆடியோ-வீடியோ ஷாப்'பை திறந்து வைத்தேன்.

அப்துல்கலாம் அய்யாவை பழனிச்சாமி சிலமுறை சந்தித்து உரையாடியுள்ளார். அய்யாவின் ஆலோசகரான பொன்ராஜ் அவர்களுடனும் பழனிச்சாமிக்கு பழக்கம். கிராம பஞ்சாயத்து நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் இருந்துள்ளார்.

நான் மீட்டிங்கிற்காகவோ... ஷூட்டிங்கிற்காகவோ அல்லது குடும்பத்துடன் ஓய்வுக்காகவோ கோத்தகிரி செல்லும்போதும் ஒருநாள் பழனிச்சாமி வீட்டில் தங்குவது வழக்கம்.

திருப்பூர் விஜயன், அவரின் தம்பி ரவி, அங்கப்பன், சொக்கலிங்கம், கோவை சிவா-தனா தம்பதி, டாக்டர் பாலாஜி-டாக்டர் செல்வி தம்பதி என என் நண்பர்கள் எல்லோருக்கும் பழனிச்சாமியைத் தெரியும். கொங்குமண்டல நண்பர்களுக்கு ஏதாவது தகவல் சொல்ல வேண்டுமென்றால் பழனிச்சாமியிடம் சொல்லிவிடுவேன். அவர் எல்லோருக்கும் தெரியப்படுத்திவிடுவார். இன்றுவரை எங்கள் குடும்பமும் பழனிச்சாமியின் குடும்பமும் நட்புறவுடன் இருக்கிறோம்.