(123) துணிவே துணை!
நான் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றிருந்தாலும் "டத்தோ' பட்டம் மிக முக்கியமானது.
மலேசிய தலைவர்களில் ஒருவரான டத்தோ ஸ்ரீ சாமுவேல் அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. என் மகனின் திருமணப்பத்திரிகை வைப்பதற்காக நான் சென்றிருந்த சமயம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருந்தது. ‘"அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா அம்மா முதல்வராவார்கள்' என எனது அரசியல் கணிப்பைச் சொன்னபோது... ""உனக்கென்ன பைத்தியமா? எங்களுக்கு கிடைத்த தகவல்படி... நீ சொல்வதுபோல நடக்க சாத்தியமில்லை'' என்று சொன்னார்.
தேர்தல் ரிசல்ட் நான் சொன்னதுபோலவே வந்ததும் அதிகாலை நான்கு மணிக்கு எனக்கு போன் செய்து ""உன் வாய்க்கு சர்க்கரை போடணும்'' என்றார்.
மலேசிய தொலைக்காட்சியில் "நாதஸ்வரா' என்கிற புரோக்ராமை தயாரித்த சந்திரசேகர் சுப்பையா அவர்களும், அப்பு அவர்களும்... இப்படி பலரும் எனக்கு நண்பர்கள்.
மலேசியாவில் செராம்பன் என்கிற இடத்தைச் சேர்ந்த வேணுகோபால் "அகிடோ' என்கிற கராத்தே போன்ற தற்காப்பு கலையில் நிபுணர். அவர் சென்னையில் "அகிடோ பயிற்சி நிலையம்' நடத்த விரும்பியபோது... வாடகை எதுவும் வாங்கிக்கொள்ளாமல் எங்கள் வீட்டு மொட்டை மாடியை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தேன். அப்போது என் அப்பாவும் இருந்தார். அதனால் வீடு இடித்துக் கட்டப்படவில்லை. பெரிய மொட்டைமாடியாகவே இருந்தது.
இப்படி பலவருட நண்பரான வேணுகோபால் மூலம் தொழிலதிபர் திருமதி ஆன் அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. ஆன் அவர்கள் மலேசிய இளைய மகாராஜாவுக்கு பரிட்சயமானவர்.
நான் நாடகக் கலைக்கு ஆற்றிய பணிகளையும், நாடகக் கலைஞர்களுக்குச் செய்த உதவிகளையும், 14 ஆண்டுகள் நடிகர்சங்க தலைவராகவும், நான்கு வருடங்கள் கமிட்டி மெம்பராகவும், ஒன்பது வருடங்கள் செயலாளராகவும் இருந்து நடிகர்சங்க உறுப்பினர்களுக்கும், திரைத்துறைக்கும் செய்த பணிகளையும், ஏழு ஆண்டுகள் பெஃப்சி அமைப்பின் உப தலைவராக இருந்து செய்த பணிகளையும், 33 ஆண்டுகள் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவராக இருந்து செய்த பணிகளையும், சில மாதங்கள் இயல், இசை, நாடக மன்றத்தில் இருந்து செய்த பணிகளையும், எனது நெடிய சினிமாத்துறை அனுபவங்களையும், லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் யூனியன் சிட்டி அமைப்பின் மூலம் டி.கே.சாமி தலைமையில், எஸ்.வீ.சேகர் உள்ளிட்ட சிலரின் உதவியோடு "ள்ங்ழ்ஸ்ங் ற்ட்ங் க்ங்ஹக்' என்ற திட்டத்தில் அனாதையாக இறந்தவர்களின் உடல்களைப் பெற்று, உரிய முறையில் அடக்கம் செய்து வருகிறோம். அதில் நான் ஆற்றிய சேவைகளையும்... தொகுத்து, தஸ்தாவேஜ்கள் தயாரித்த நண்பர் வேணுகோபால் மற்றும் திருமதி ஆன் இருவரும்... அதை மலேசியா -மலாக்கா மகாராஜாவிடம் தெரிவித்து, எனக்கு "டத்தோ' விருதுக்குப் பரிந்துரை செய்தனர். மலாக்கா கிங் எனக்கு ‘டத்தோ’ விருதுதர ஒப்புதல் அளித்தார். விருதைப் பெற நான் குடும்பத்தினருடன் ஜோ ஜகார்த்தா நகருக்கு சென்றிருந்தேன். ஆனால் "தமிழனுக்கு தமிழனே எதிரி' என்கிற நியதிப்படி... மலேசியத் தமிழர்கள் சிலர் எனக்கு "டத்தோ' விருது தர எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் விழா அங்கு நடைபெறவில்லை. மலேசியாவில் ராஜாவின் இடத்தில் வைத்து எனக்கு "டத்தோ' விருது தரப்பட்டது.
இந்தியாவில் இந்த விருதைப் பெற்றவர் இந்தி நடிகர் ஷாரூக்கான். தென்னிந்திய அளவில் "டத்தோ' விருது பெற்ற ஒரே நபர் நான்.
மலாக்கா கிங் மிகச் சரளமாக தமிழ் பேசுகிறார். அவரின் வம்சாவழி பூர்வீகம் தமிழகம்.
நான் மலேசிய பிரஜையாக இருந்தால், இந்த "டத்தோ' விருது எனக்கு அரசின் பல சலுகைகளைத் தரும்.
இந்த விருதைப்பெற சில தமிழ் நடிகர்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாக அறிகிறேன். சமூகத்திற்கு சர்வீஸ் பண்ணியிருந்தால் கண்டிப்பாக இந்த விருது கிடைக்கும்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், தானைத் தலைவர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மா ஜெயலலிதா, தி.மு.க.தலைவர் தளபதியார் உட்பட பல்வேறு பிரபலங்களைப்பற்றி பார்த்த, பழகிய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.
நான் பிறந்த மண்ணான திருச்சி -சங்கிலியாண்டபுரம் மற்றும் எங்களின் காலனி வீடு அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். சென்னையில் எங்கள் தேனாம்பேட்டை வீட்டின் கதைகளையும் உங்களோடு பகிர்ந்துகொண்டேன். தி.நகர் ஹோலி ஏஞ்சல்ஸ், சாந்தோம் செயின்ட் ஜோஸப் பள்ளிகளில் படித்த அனுபவங்களையும், லயோலா கல்லூரி, நியூ காலேஜ் மற்றும் சட்டக்கல்லூரி அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டேன்.
என் அப்பா "நடிகவேள்' எம்.ஆர்.ராதா அவர்களின் வாழ்க்கையோடு கலந்த எனது வாழ்க்கை அனுபவங்களையும் மனம்விட்டு உங்களிடம் பேசியிருந்தேன். எனது நாடக அனுபவங்களையும், சினிமா அனுபவங்களையும் ஓரளவு பகிர்ந்துகொண்டேன்.
நடிகர்சங்கத் தலைவராக, செயலாளராக, கமிட்டி மெம்பராக, பெஃப்சி அமைப்பின் உபதலைவராக இருந்தபோது நான் மேற்கொண்ட பணிகளையும் உங்களோடு பேசினேன்.
ஆயினும் இன்னும் பல விஷயங்கள் பேசுவதற்கு இருக்கின்றன.
சுமார் 350 படங்களில் நடித்திருக்கிறேன். இப்போதும் ஏழெட்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
இன்னும் பல அனுபவங்கள் இருக்கின்றனு.
ஆனால் "கர்ஜனை' என்ற பெயரில் இரண்டு பெரிய புத்தகங்களாக வெளியிட நாங்கள் முடிவெடுத்திருப்பதாலும், படங்களில் பிஸியாக நடித்துவருவதாலும், நடிகர் பாஸ்கி சார் அவர்களின் அரிகிரி தியேட்டர்ஸ் நாடகக் குழுவில் "இ.பி.கோ.கேசவன்' என்ற நாடகத்தில் நடிக்கவிருக்கிறேன். இந்த மேடை நாடகத்தில் பொதுநல வழக்குப் போடும் கேசவன் கேரக்டரில் நான் நடிக்கிறேன். இதற்கான ரிகர்ஸல் தொடங்கிவிட்டது. வரும் நவம்பர் 16-ஆம் தேதி முதல் இந்த நாடகம் மேடைகளில் நடக்கவிருக்கிறது.
இதற்காக என்னை தயார் செய்து வருவதாலும்... "நக்கீரன்' வாசகர்களிடமிருந்து விடை பெறுகிறேன். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் சந்தித்துப் பேசலாம்.
"கர்ஜனை' தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து என்னை உற்சாகப்படுத்திய அரசியல், சினிமா மற்றும் சமூகப் பிரபலங்கள், வாசகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
"நக்கீரன்' இதழில் "கர்ஜனை' தொடர் மூலம் என் வாழ்க்கைப் புத்தகத்தை புரட்டிப்பார்க்கிற அனுபவத்தை, தொடரை எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கிய "நக்கீரன்' ஆசிரியர் அன்புச் சகோதரர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் சொல்லச் சொல்ல, அதை சிறப்புடன் தொகுத்து எழுதிய "நக்கீரன்' முதன்மை துணை ஆசிரியர் சகோதரர் இரா.த.சக்திவேல், தலைமை புகைப்படக் கலைஞர் சகோதரர் எஸ்.பி.சுந்தர், என் உதவியாளர் பிரபாகர், எனது டிரைவர் முத்து, புகைப்படங்களை தந்து உதவிய "போட்டோ' ஞானம் உட்பட அனைவருக்கும் என் நன்றி.
‘"கர்ஜனை' தொடரில் உங்களோடு பகிர்ந்துகொண்ட விஷயங்களுடன், பகிர்ந்துகொள்ளாத பல சுவாரஸ்யமான விஷயங்களுடன் "கர்ஜனை' நூல் வெளிவர ஏற்பாடு செய்துவருகிறோம். அந்த நூலுக்கும் வாசகர்கள் தங்களின் ஆதரவைத் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நேரத்தில் வாழ்க்கையை சுமுகமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் குறித்த ஒரு பொதுவான அம்சத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நான் சிறுவயது முதலே வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டே பழக்கப்பட்டவன். இதற்குக் காரணம்... தைரியசாலியான என் அப்பா "நடிகவேள்' எம்.ஆர்.ராதா அவர்களும், மனோதிடம் நிறைந்த என் தாயார் தனலட்சுமி அம்மாள் அவர்களும்தான்.
அவர்களிடம் நான் கற்றுக்கொண்ட இந்தப் பாடம்தான் என் வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது. என் பெற்றோரை நான் வணங்காத நாளில்லை. அவர்களின் ஆன்மா என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறது. அவர்கள் எனக்குத் தந்துவிட்டுச் சென்ற தைரியத்தை நான் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.
நான் இப்போது சொல்லப்போவது ஒரு கதைதான். ஆனால் அதில் வாழ்க்கைக்கான யதார்த்தம் நிரம்பியிருக்கிறது.
சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு பணக்காரன் அஷ்ட லட்சுமிகளையும் பூஜித்துவந்தான். அவனுக்கு எல்லாச் செல்வங்களையும் வாரி வழங்கிக்கொண்டிருந்தார்கள் அஷ்ட லட்சுமிகளும். லட்சுமிகளை உரிய மரியாதையுடன் பூஜித்து வந்தான் அவன்.
எதிர்பாராத சூழலில் அவன் வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டது.
ஒருநாள் அஷ்ட லட்சுமிகளும் அவனிடம் ""நீ எங்களையெல்லாம் நன்றாக கவனித்து, மிக உயர்வாக நடத்தினாய். நாங்கள் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. நீ எங்களை வழிபட்ட தூய அன்பிற்காக உனக்கு ஒரு உதவி செய்ய நினைக்கிறோம். அஷ்ட லட்சுமிகளாகிய எங்களில் நீ யாரை விரும்புகிறாயோ... அந்த லட்சுமி உன் வீட்டிலேயே இருப்பாள். யார் வேண்டும் சொல்?'' என கேட்டனர்.
""தைரிய லட்சுமியை என்னுடன் விட்டுச் செல்லுங்கள்'' என்றான்.
அப்படியே செய்துவிட்டு மற்ற லட்சுமிகள் கிளம்பிவிட்டனர்.
நாட்கள் ஓடின...
அவனைத்தேடி வந்தாள் ஒரு லட்சுமி. அடுத்த சில நாட்களில் இன்னொரு லட்சுமி வந்து சேர்ந்தாள். இப்படியே வெளியேறிய ஏழு லட்சுமிகளும் அவனுடைய வீட்டுக்கு வந்துவிட்டனர்.
""என்னாச்சு?'' எனக் கேட்டான் அவன்.
""நாங்கள் ஒவ்வொருவரும் பல திறமைகள் கொண்டவர்கள்தான். ஆனாலும் எதைச் செய்யவும் பயமாக இருக்கிறது. யாருக்கும் வரம் தரவும் அச்சமாக இருக்கிறது. மன பலம் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. தைரியலட்சுமியோடு இருந்தால்தான் நாங்கள் கவலையில்லாமல் காரியங்களைச் செய்ய முடியும். அதனால் நாங்களும் இங்கேயே இருக்கிறோம்'' என ஏழு லட்சுமிகளும் சொன்னார்கள்.
தைரியம் இருந்தால்... எதையும் சாதிக்கலாம்.
அரிவாளைத் தூக்கி வெட்டுவது, புலி எதிரே வந்தால் ஓடாமல் நிற்பது... இதையெல்லாம் தைரியம் எனச் சொல்ல முடியாது. இது அறிவில்லாத செயல். தைரியம் என்பது நம்மீது நமக்கு உண்டாகும் நம்பிக்கையே ஆகும். நம்மை நாமே சுயநிர்ணயம், சுய மதிப்பீடு செய்துகொள்வதே தைரியமாகும்.
அறிவார்ந்த தைரியத்துடன் அனைவரும் வாழுங்கள்.
நன்றி... வணக்கம்! மீண்டும் சந்திப்போம்!