கடந்த 2021 தேர்தலின்போது தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதில் நெல்லை தொகுதியுடன் அருகிலுள்ள மானூர் யூனியன் இணைக்கப்பட வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு கூடியது. தொகுதியில் தாழ்த்தப்பட்ட, பட்டியலின சமூகத்தவர்கள், யாதவர்கள், முக்குலத்தோர், பிள்ளை ஆகியோர் கணிசமான அளவில் காணப்படுகின்றனர்.
2021 தேர்தலின்போது தி.மு.க. சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டவர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன். இதற்கு முந்தைய தேர்தலில் அவர் வெற்றிபெற்றிருந்ததால் 2021-ல் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உருவானதால் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. தலைமையிடம் அனுமதி கோராமலேயே நெல்லை தொகுதி வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு பிரச்சாரக் களத்தில் இறங்கினார். அதேசமயம், அவரை தொந்தரவு செய்யாமல் பா.ஜ.க.வின் தலைமையும் அவரை வேட்பாளராக்கியது.
அ.தி.மு.க. -பா.ஜ.க. புதிய கூட்டணி உருவானதால் அந்த முதல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட நயினார், தான் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்ததால் கூட்டணித் தலைவர்களும் தொண்டர்களும் தனக்கு அறிமுகமானவர்கள் என்பதால், அவர்களின் துணையோடு வெற்றி பெற்றுவிடலாம் என்று திடமாக நம்பினார். அந்தத் தேர்தலில் தன்னுடைய அனைத்து தேர்தல் வியூகங்களையும் பயன்படுத்தினார். மதச்சார்புள்ள கூட்டணி. பண்ணை நயினார் கரையேறுவது சிரமம் என்று நெல்லை அரசியல் வட்டாரம் கணக்கிட்டுக்கொண்டிருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் தொகுதியிலுள்ள தன் சமுகம் சார்ந்த வாக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தார். தன் சமூகத்தவர் பிற கட்சிகளில் இருந்தாலும் தன் சகாக்களோடு அவர்களைத் தேடிச்சென்று அவர்களுக்குத் தேவையான ஹாட்பாக்ஸ்களை வழங்கி அவர்களைத் தன்பக்கம் திருப்பினார். இந்த வியூகத்தில் தொகுதியிலுள்ள தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள், நிர்வாகிகள்கூட சிக்கினர்.
இப்படியாக பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வானார். அதேசமயம், அந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமை தேர்தல் செலவுக்காக அனுப்பிய பசை பாக்ஸ்களை திறக்காமல் தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.எஸ் லட்சுமணன் மூடிக்கொண்டதால் அவர் வாய்ப்பிழக்க நேரிட்டது.
தற்போதைய நிலையில் கூட்டணி பலமில்லாமல் தள்ளாட்டத்திலிருக்கும் என்.டி.ஏ. அணியைவிட எந்தச் சூழலிலும் நிலைகுலையாமல் கூட்டணி பலத்தோடு வலுவாக இருக்கிற தி.மு.க. கூட்டணியே வேட்பாளர்களின் சாய்ஸாக இருக்கிறது.
எம்.எஸ்.சி., எம்.பில்., முடித்த ஐ.டி. துறையில் இருப்பவரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவருமான துரை சக்திசீதா, இவரது கணவரான துரை, மாநில பொறியாளர் அணியின் துணைச் செயலாளர். இவரும் ரேஸில் உள்ளார். 2006-ல் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த நெல்லை மாலைராஜாவும் வேட்பாளர் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். தற்போதைய தி.மு.க. மேயரான கிட்டு என்கிற ராமகிருஷ்ணன், நெல்லையின் மெஜாரிட்டியான பிள்ளை சமூகம் சார்ந்தவர். எந்தவித பின்பலமும் இல்லாத சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவர். தி.மு.க.வின் பழம்பெரும் புள்ளி. தன்னுடைய எளிமையும், கட்சிக்காக தான் மேற்கொண்ட செயல்பாடுகளுமே தனக்குக் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் வேட்பாளர் வாய்ப்பிற்காகக் காத்திருப்பவர். துணைமேயர் கே.ஆர்.ராஜு, நெல்லை மாநகர தி.மு.க. செயலாளரான சுப்பிரமணியனும் இந்த வேட்பாளர் ரேசில் அடக்கம். மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையி-ருக்கிறார்.
தி.மு.க. தலைமை இம்முறை வேட்பாளர் தேர்வில் சறுக்கிவிடக் கூடாது, எந்த ஒரு தொகுதியும் கைநழுவிப் போய்விடக்கூடாது என்ற அக்கறையில் வாய்ப்பு கேட்பவரின் பின்னணி, தனிப்பட்ட செயல்பாடுகள், அவர் மக்கள் பணிக்கு பொருத்தமானவர்தானா என்று அனைத்து அம்சங்களையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி, தேர்வு செய்யவுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
அ.தி.மு.க.விலோ, வற்புறுத்தலின் பேரில் நெல்லைத் தொகுதிக்காக 30 பேர் வாய்ப்பு கேட்டு விருப்பமனு கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் நெல்லை மாநகரச் செயலாளரான தச்சை கணேச ராஜா, கட்சியின் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் சங்கரலிங்கம், கல்லூர் வேலாயுதம், கவுன்சிலர் சந்திரசேகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கூட்டணி அடிப்படையில் நெல்லை தொகுதி பா.ஜ.க.வின் மா.த. நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கப்படவிருப்பதால், காலங்காலமாக அ.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுவந்த நெல்லை தொகுதி தற்போது தங்களுக்குக் கிடைக்காமல் பறிபோகும் நிலையால் ர.ர.க்கள் நெல்லைக்கான வேட்பாளர் ரேஸில் அத்தனை சுரத்தில்லாமல் இருப்பதாகப் பேசப்படுகிறது.
நெல்லை மாநகர அ.தி.மு.க.வில் நிலவிவருகிற இதுபோன்ற கடும் அதிருப்திகள் பா.ஜ.க. மா.த. நயினார் நாகேந்திரனையும் எட்டியிருப்பதால் இதற்கான மாற்று வழியைத் தேடிக்கொண்டிருப்பதாக தாமரைப்புள்ளிகளே கூறுகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/10/nellai-2026-02-10-15-01-24.jpg)