நெல்லை தி.மு.க.வின் சிறுதாவூர் ஆன கேரளா

chairman

Advertisment

நெல்லை மாநகராட்சியின் மொத்தமுள்ள 55 வார்டுகளிலும், தி.மு.க. தனித்து 44, கூட்டணிக் கட்சிகள் 6 என்று 50 வார்டுகளையும், அ.தி.மு.க 4, சுயேட்சை ஒரு வார்டு என்ற எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளன. நெல்லை மேயர் பதவியை தி.மு.க. கைப்பற்றுவது உறுதியானாலும் மேயர் பதவிக்கான வேட்பாளர் பெயரை கட்சித் தலைமை அறிவிக்காத ccநிலையில், 3வது வார்டில் வெற்றிபெற்ற தி.மு.க.வின் சுப்பிரமணியன், மேயராகும் நோக்கில் கவுன்சிலர்களை வளைக்க முற்பட, இதனால் தி.மு.க. கவுன்சிலர்களுக்குள் சலசலப்பு ஏற்படுவதைக் கண்ட நெல்லை மாநகர தி.மு.க. மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான அப்துல் வகாப், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட அன்றிரவே சுற்றுலா செல்வதாகச் சொல்லிவிட்டு 40 கவுன்சிலர்களை அள்ளிக்கொண்டு கன்னியாகுமரி டூர் சென்றவர், அப்படியே தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் பாறசாலையிலிருக்கும் பூவார் ரிசார்ட்டிற்கு கொண்டு சென்று தங்கவைத்துப் பாதுகாக்க ஆரம்பித்து விட்டாராம். கேரள பாறசாலையின் பூவார் ரிசார்ட் பற்றிய முழு விஷயங்கள் நக்கீரனில் ஏற்கனவே இரண்டு முறை வெளிப்படுத்தி யிருந்தோம். அடர்த்தியான மரங்களைக் கொண்டதால் பூவார் ரிசார்ட்கள் வெளிச்சம்படாத சூழலைக் கொண்டது. கடலுக்குள்ளே படகு வீடுகளைப் போன்ற ரிசார்ட்டுகளுமிருக்கின்றன. பணக்கார மேல்தட்டு வர்க்கத்தின் சொர்க்கபுரியான இங்கே, கரன்சியைக் கொட்டினால் அதன் வெயிட்டைப் பொறுத்து தேவைக்கும் மேலான கவனிப்பு கிடைக்கும் என்பதும் பரவலான பேச்சு.

சங்கரன்கோயில்! சூடத்தை அணைக்கச் சொல்லி ரிப்பீட் வசூல்!

cc

சங்கரன்கோவில் நகராட்சி யின் 13வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த மாரியப்பன், வாக்குச்சேகரிப்பின் போது வோட்டுக்கு 500 என்று சப்ளை செய்திருக்கிறார். சக்திக்கு மீறிச் செலவழித்தும் தோல்வி யடைந்த விரக்தியில், தான் செலவழித்த பணத்தைத் திரும்பப் பெற நூதனமான முயற்சியில் இறங்கி னார். தன்னிடம் வோட்டுக்குப் பணம் வாங்கிய அத்தனை வீடுகளுக்கும் போனவர், சூடத்தைக் கொளுத்தி வைத்து, "எனக்கு வோட்டுப் போட்டீங்கன்னா சூடத்தை அணைத்து சத்தியம் பண்ணுங்க!'' என்றிருக்கிறார். சத்தியம் செய்யப் பயந்தவர்களிடம், தான் வோட்டுக்குக் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கியிருக்கிறார். இப்படியாகவே சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்வரை திரும்ப வசூலித்து விட்டாராம்!

கவுன்சிலர் பேரம் புட்டுக்கிச்சு!

Advertisment

cc

சங்கரன்கோவில் நகராட்சியின் 30 வார்டுகளில், அ.தி.மு.க. 12, கூட்டணி கட்சி 01 என 13 வார்டுகளை யும், தி.மு.க. 12, சுயேட்சைகள் 5 வார்டுகள் என்ற விகிதாச்சாரத்தில் கைப்பற்றியுள்ளனர். சேர்மன் பதவியை வசமாக்க தி.மு.க.விற்கு நான்கு கவுன் சிலர்கள் தேவைப்படுவதால் மாவட்ட தி.மு.க. தரப்பு 4 சுயேட்சை களுக்கு வலைவீச, அவர்களுக்கான ஆஃபர் ரேட்டில் சர்ச்சை ஏற்பட, இடையே புகுந்த அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சரான ராஜலட்சுமி ஆதர வாளர்கள், சுயேட்சைகள் எதிர்பார்க்கும் ரேட்டில் பிராக்கெட் போட்டுவிட்டார்களாம். சேர்மன் தேர்வின்போது நிலைமை எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம் என்கிறார்கள்.

குற்றாலம் கவுன்சிலரின் விலை 50’எல்!’

சுமார் 2700 வாக்குகளை உள்ளடக்கிய 8 வார்டுகளைக் கொண்ட குற்றலம் பேரூராட்சி தமிழகத்திலேயே ஆகச்சிறிய பேரூராட்சி. வருமானத்திற்கு வறட்சியற்ற சுற்றுலா நகரில், மிகச்சொற்ப வாக்காளர்களைக் கொண்டிருப்பதால், தேர்தலின்போதே தி.மு.க. தரப்பு வோட் டுக்கு பத்தாயிரம் சப்ளை செய்ய, அ.தி.மு.க.வோ வோட்டுக்கு பதினைந்தாயிரம் என அடித்துவிட, முடிவில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 4:4 என சமபலத்தில் வந்துவிட்டன. சேர்மன் வேட்பாளர் தி.மு.க. தரப்பில் குமார் பாண்டியன், அ.தி.மு.க. தரப்பில் கணேஷ் தாமோதரன் என்று பேச்சுக்கள் கிளம்பிய நிலையில், தி.மு.க. தரப்பு தேவையான ஒரு கவுன் சிலருக்காக அ.தி.மு.க.தரப்பு கவுன்சிலரை வளைக்கும் முயற்சி யில் இறங்க, அ.தி.மு.க. தரப்போ தி.மு.க. தரப்பில் ஒருவரைக் கவர்செய்ய டீலிங் நடத்திவருகிறதாம். ஆக, அந்த 'ஒரு' கவுன் சிலருக்கான ஆஃபர், தி.மு.க. தரப்பில் 25 'எல்' எனவும், அ.தி.மு.க. தரப்பில் அதைவிட டபுளாக 50'எல்' எனவும் எகிறியுள்ளதாம்!

Advertisment

cc

களக்காடு சுயேட்சைகள் கடத்தல்!

27 வார்டுகளைக் கொண்ட நெல்லை மாவட்டத்தின் களக்காடு பேரூராட்சியில் தி.மு.க. 10, சுயேட்சைகள் 11, அ.தி.மு.க. 06, என்ற அளவில் வார்டுகளைக் கைப்பற்றியுள்ளன. பேரூராட்சித் தலைவி பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட, தி.மு.க.வின் ந.செ.வான மணிசூரியன் வைஸ் சேர்மன் ஆகும்பொருட்டு சூட்டோடுசூடாக 10 சுயேட்சைகள், அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் என வளைத்துக் கொண்டு ஊட்டிக்குச் சென்று பதுங்கிவிட்டாராம். அதே சமயம், பேரூராட்சியின் எக்ஸ் தலைவரும் தி.மு.க. ஒ.செ.வுமான ராஜனும் வைஸ் சேர்மன் பதவியைப் பிடிக்க கடத்தப்பட்ட சுயேட்சை கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களிடமும் போன் மூலமாகவே டீலிங்கை தீவிரப் படுத்த, தி.மு.க.விற்குள்ளேயே போட்டி தகிப்பிலிருக்கிறதாம்!

-பி.சிவன்

சிவகங்கை தனி மெஜாரிட்டியில் தி.மு.க!

news

சிவகங்கை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 11, அ.தி.மு.க. 5, காங். 3, அ.ம.மு.க. 3, சுயேட்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள் ளனர். இதில் அ.தி.மு.க. உறுப்பி னர் சரவணன் தி.மு.க.வில் இணைந்துவிட்டார். தி.மு.க.வில் சீட் கிடைக்காமல் 23-வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற ராஜபாண்டியன் மற்றும் 4 சுயேட்சைகள், அமைச்சர் பெரிய கருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். தலைவர் பதவிக்கு நகரச் செயலாளர் துரை.ஆனந்தும் துணைத் தலைவர் பதவிக்கு கொரோனா காலகட்டத்தில் சிறந்த மக்கள் சேவையாற்றியதற்காக மு.க.ஸ்டாலினிடம் விருது வாங்கிய 21-வது வார்டு கவுன்சிலர் அயூப் கானும் தேர்வாக உள்ளனர். தனி மெஜாரிட்டியுடன் தி.மு.க. வசம் வந்துள்ளது சிவகங்கை நகராட்சி.

-கோடை குமார்

ஆவடி துணை மேயராகும் அமைச்சரின் வாரிசு!

திருவள்ளூர் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சி மொத்தம் 48 வார்டுகளைக் கொண்டது. இதில் தி.மு.க. கூட்டணி 45 வார்டுகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது, எதிர் கட்சிகளுக்கு பல வார்டுகளில் டெபாசிட் பறிபோயுள்ளது. இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட அமைச்சர் நாசரின் மகன் மு.நா.அசிம் ராஜா துணை மேயராக வாய்ப்புள்ளது. பட்டிய லினத்தவருக்கு ஒதுக்கப் பட்டுள்ள மாநகராட்சி மேயர் பதவிக்கு வீரபாண்டியன், ரமேஷ் மற்றும் உதயகுமார் ஆகியோரிடையே கடும் போட்டியிருந்தாலும் தலைமை கை காட்டுபவருக்கே மேயர் கிரீடம் கிடைக்கும்.

காஞ்சிபுரம் மேயர் கனவில் மோதும் பெண்கள்!

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 34 வார்டுகளைக் கைப்பற்றி யுள்ளது. தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்ற 6 சுயேட்சை வேட்பாளர்களும் தாய்க் கழகத்திலேயே இணைந்தனர். மேயர் பதவி பெண்களுக்கானது என்ற நிலையில், இதற்கான ரேஸில் இருப்பவர்களென ஏற்கனவே நக்கீரனில் குறிப்பிட்டுள்ள அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க.வின் மல்லிகா ராமகிருஷ்ணன், சாந்தி சீனிவாசன், சன் பிராண்டு ஆறுமுகம் மகள் சசிகலா மற்றும் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் சாந்தி சீனிவாசன் மொத்தம் பதிவான 2200 வாக்கில் 1850 வாக்குகளைப் பெற்றதில் எதிர்த்துநின்ற அனைவரின் டெபாசிட்டும் காலியானது. எனவே அவர் மிகுந்த எதிர்பார்ப்பிலுள்ளார். அதேபோல மல்லிகா ராமகிருஷ்ணனும் இந்த ரேஸில் கவனிக்கத்தக்கவராக உள்ளார். காஞ்சிபுரத்தில் முதலியார் சமுதாய வாக்கு மிகுதியாக இருந்தபோதிலும், சிட்டிங் எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்ட செயலாளர் என அனைவரும் வன்னியர் சமூகமாக இருப்பதால், மேயர் பதவி தங்கள் சமூகத்துக்கு வேண்டுமென்று குரலெழுப்புகிறார்கள். மண்டலக்குழுத் தலைவர் பதவிக்கான ரேஸில், இளைஞர் அணியைச் சேர்ந்த கார்த்திக், சந்துரு, யுவராஜ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

தாம்பரம் துணை மேயர் எதிர்பார்ப்பில் காமராஜ்கள்!

தாம்பரம் மாநகராட்சி மொத்தம் 70 வார்டுகளில் 55 சீட்டுகளை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கைபற்றியுள்ளது, மேயர் பதவிக்கு பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தால் இங்கு துணைமேயர் பதவிக்குத்தான் கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மைத்துனர் காமராஜுக்கும், தாம்பரம் சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் காமராஜுக்கும் இடையே கடுமையான போட்டியிருப்பதால், தலைமையின் முடிவே இங்கு இறுதியாகக்கூடும். அமைச்சர் தா.மோ.அன்பரசனின் ஆதரவாளரான பெட்ரோல் பங்க் கருணா, பெருங்களத் தூர் சி.சேகர், வே.கருணாநிதி மற்றும் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் அண்ணன் ஜோசப் அண்ணாதுரை, அவரின் ஆதரவாளர் டி.வி.ராஜா ஆகியோர் மண்டலக்குழுத் தலைவர் ரேஸில் உள்ளனர். மேயர் வேட்பாளராக 32வது வார்டு வசந்தகுமாரிக்கு வாய்ப்புள்ளது. இந்த ரேஸில் லிங்கேஷ்வரிபாபு மற்றும் சித்ராதேவி ஆகியோரும் போட்டியை ஏற்படுத்து கிறார்கள்.

-அரவிந்த்

திண்டுக்கல் முதல் பெண் மேயர் யார்?

திண்டுக்கல் மாநகராட்சியில் பெரும் பான்மையான வார்டுகளை தி.மு.க. கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. திண்டுக்கல் மாநகராட்சியிலுள்ள 48 வார்டுகளில் 30 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. கூட்டணிக் கட்சிகள் 7, தி.மு.க.வில் இணைந்த சுயேட்சைகள் 5-உடன் தி.மு.க.வின் பலன் 42-ஆக உள்ளது. தி.மு.க. சார்பில் களமிறங்கிய 20 பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். ஆறாவது வார்டில் வெற்றிபெற்ற சரண்யாவின் மாமனார் சந்திரசேகர் ஏற்கனவே யூனியன் சேர்மனாக இருந்தவர். பெண் மேயர் என்பதால் தனக்குப் பதில் மருமகளை தீவிரமாக களமிறக்கி இருக்கிறார். அதுபோல் முன்னாள் யூனியன் சேர்மன் பெருமாள்சாமியும் தனது மனைவி சாந்திக்கு மேயர் பதவியைப் பிடிக்க போட்டி போட்டு வருகிறார். 3-வது வார்டில் வெற்றிபெற்ற இந்திராணிக்கு தலைமைவரை செல்வாக்கு. லட்சுமி, நித்தியா, ஜெயந்தி, ஆரோக் கியசெல்வியின் உறவினர்களும் மோதி வருகிறார்கள். கடும் போட்டிகளுக்கு இடையே சரண்யா அல்லது இந்திராணி ஆகிய இருவரில் ஒருவர் மேயர் சீட்டில் உட்கார வாய்ப்பிருக் கிறது

போடி ஓ.பி.எஸ். தொகுதியில் ஆளுங்கட்சி சேர்மன்!

உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் போடி தொகுதியிலுள்ள போடி நகராட்சியை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது. போடி நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 20 வார்டு களையும் கூட்டணிக் கட்சிகள் 2 வார்டுகளையும் கைப்பற்றியதன் மூலம் போடி நகர்மன்றம் தி.மு.க. வசமாயிருக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 9 வார்டுகளை யும் பா.ஜ.க. 2 வார்டுகளையும் கைப்பற்றியிருக் கின்றன. தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான சங்கர் 29-வது வார்டிலும் அவரது மனைவி ராஜராஜேஸ்வரி 1-வது வார்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சங்கரின் மனைவி ராஜராஜேஸ்வரிதான் சேர்மன் என்ற பேச்சு தேர்தலுக்கு முன்பே அடிபட்டது. அதோடு வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆசியும் இருப்பதால் ராஜராஜேஸ்வரிக்கே சேர்மனாகும் வாய்ப்பு வலுவாக இருக்கிறது.

-சக்தி

news

தஞ்சை மேயர் நாற்காலியில் முதன்முறை அமரப்போவது யார்?

முதன் முறையாக மேயரைத் தேர்வு செய்யவுள்ள தஞ்சையின் மேயர் நாற்காலியை தி.மு.க. கூட்டணியே அலங்கரிக்கவுள்ளது. மொத்தமுள்ள 51 வார்டுகளில் 40 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி, 7 வார்டுகளில் அ.தி.மு.க கூட்டணி, அ.ம.மு.க. 1, சுயேட்சைகள் 2 பேரும் வெற்றிபெற்றுள்ளனர். பல தேர்தல்களில் வாய்ப்பை எதிர்பார்த்துவரும் இளைஞரணி சண்.ராமநாதன், இம்முறை மேயர் நம்பிக்கையில் உள்ளார். கலைஞர் குடும்பத்தின் நன்மதிப்பைப் பெற்ற அஞ்சுகம் பூபதி, ஏற்கனவே கலைஞரால் தஞ்சாவூர் தொகுதியில் களமிறக்கப்பட்டவர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாகக் களமிறக்கப்பட்டு, தேர்தலில் வெற்றியோடு, ஆண் குழந்தை யையும் பரிசாகப் பெற்றதுபோல, மேயர் பதவியும் கிடைக்குமென்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். மாநகரப் பொருளாளரும், எம்.எல்.ஏ. நீலமேகத்தின் ஆதரவாளருமான நீலகண்டன் மற்றும் கட்சியின் சீனியர் மேத்தா ஆகியோரும் மேயர் வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர். மேயர் இல்லையென்றால் துணைமேயர் பதவி என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

-இரா.பகத்சிங்

கோவை தகர்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் கோட்டை!

கோவை மாநகராட்சியின் தி.மு.க. பெண் மேயர் என்ற பரபரப்பு தமிழகமெங்கும் விவாதமாகியுள்ளது. கோவையின் 100 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 96 வார்டுகளை அபாரமாக வென்றுள்ளது. மாஜி அமைச்சர் வேலுமணியின் அடாவடி களை முறியடித்து கோவையில் தி.மு.க.வுக்கு உயிர்ப்பூட்டிய மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளரான சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி மேற்கு மாவட்ட மாநகர பொறுப்பாளர் சேனாபதியின் மகளான 22 வயது நிவேதா, மு.மா.சண்முகசுந்தரத்தின் மருமகள் சாந்தி முருகன், எக்ஸ் கவுன்சிலர் மீனா லோகு என மூவரின் பெயர்களும் மேயருக்கான பரிசீலனையில் தி.மு.க. மேலிடத்தில் உள்ளது. க.அ.தெய்வயானை தமிழ்மறை பெயரும் பரிசீலனையில் உள்ளது. பாரம்பரிய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த இவரது கணவர் அ.தமிழ்மறை, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராகவும், மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார். அ.தி.மு.க.வின் கொங்கு மண்டல கோட்டையை தகர்த்து தி.மு.க. கோட்டையாக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜியின் கையில்தான் மேயர் பதவி சாய்ஸ் உள்ளது.

திருப்பூர் அமைச்சரின் ஆசிபெற்ற மேயர்!

திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில், தி.மு.க. கூட்டணி 37 வார்டுகளை வென்றுள்ளது. அ.தி.மு.க. 19, பா.ஜ.க. 2, சுயேச்சைகள் 2 வென்றுள்ளனர். மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மேயருமான செல்வராஜ் கடுமையாக உழைத்தும் கூட்டணிக் கட்சிகளின் தோல்வியால் முழுப்பயனை எட்ட முடியவில்லை. அமைச்சர் சாமிநாதனின் ஆதரவாளரும் திருப்பூர் மாவட்ட கழகப் பொறுப்பாளருமான இல.பத்மநாபனுக்குட்பட்ட 10 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வென்றுள்ளது. மேயர் பதவிக்கு அமைச்சரின் முதல் சாய்ஸாக இல.பத்மநாபன் உள்ளார். எம்.எல்.ஏ. செல்வராஜின் பரிந்துரைப்படி தினேஷ்குமார் இருக்கிறார். எக்ஸ் எம்.எல்.ஏ. கோவிந்தசாமியும் கட்சித் தலைமையோடு தொடர்பில் உள்ளார். துணை மேயர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்படுகிறது.

-ஜீவாதங்கவேல்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்கள்!

மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க. 100 வார்டுகளில் 15-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 31 வார்டுகளில் காப்புத்தொகையை இழந்தது. தி.மு.க.வும் அதன் கூட்டணியும் 79 இடங்களில் வெற்றி பெற்றன. எடப்பாடியால் மதுரையின் மும்மூர்த்திகள் என்று சொல்லப்பட்ட செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி. உதயகுமாரின் பாச்சா இந்த முறை பலிக்கவில்லை மதுரையை மீட்க, தி.மு.க. வில் அமைச்சர் மூர்த்தி, .நிதி யமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் பொன்முத்துராமலிங்கம், தளபதி ஆகியோர் திட்டமிட்டு வேலை செய்தனர். அதன் பலன் ரிசல்ட்டில் தெரிந்தது. மேயர் ரேஸில் இந்துராணி, பொன் வசந்த் செல்வி, பொன்முத்து மருமகள் விஜயா மவுஸ்மி, வாசுகி சசிகுமார், ரோஹினி ஆகியோர் இருக்க, துணைமேயர் ரேஸில் மா.ஜெயராமனே பெரும்பாலானவர் களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது மதுரை மாவட்டத்தில் தி.மு.க. மீண்டும் எழுச்சி பெற்றதால் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர்களின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குவதைப் பார்க்க முடிந்தது.

-அண்ணல்

கிருஷ்ணகிரி ஓசூர்: மேயர் மல்லுக்கட்டு

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்று கொண்டாட்டத் தில் இருந்தாலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் மேயருக்கு சுயேட்சைகளின் தயவு தேவைப்பட்டிருக்கிறது தி.மு.க.வுக்கு. மொத்தமுள்ள 45 வார்டுகளில் தி.மு.க. 22, அ.தி.மு.க. 16, சுயேட்சை 6, பா.ஜ.க. 1 என வெற்றியைக் கைப்பற்றியுள்ள நிலையில், மெஜாரிட்டியை தி.மு.க வைத்திருந்தாலும் அ.தி.மு.க., பா.ஜ.க., சுயேட்சை கைகோர்த் தால் மேயர் வாய்ப்பு தி.மு.க.விடமிருந்து கைநழுவும். அ.தி.மு.க. மேயர் கேன்டிடேட்டான பால் நாராயணன், சுயேட்சைகளைத் தன்பக்கம் இழுக்கும் நோக்கில், அவர்களுக்கு 1 கோடி வரையிலும் பணம்தருவ தாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ஓசூர் தி.மு.க. மா.செ.வான ஒய்.பிரகாஷ் 6 சுயேட்சைகளையும் அணுகி, உரிய மரியாதைகளைச் செய்து தி.மு.க. வில் இணைத்துள்ளார். தற்போது தி.மு.க. மேயர் யார் என்பதில் முன்னால் எம்.எல்.ஏ.வும் நகரமன்ற தலைவருமான எஸ். சத்யா, ஆனந் தய்யா, சென்னீரப்பா, மாதேஸ் ஆகியோர் மேயருக்கு மல்லுக்கட்டி வருகின்றனர்.

-அ.அருண்பாண்டியன்

ஈரோடு பெரியார் மண்ணை ஆள்வது யார்?

60 வார்டுகளைக் கொண்ட ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க. 43, காங்கிரஸ் 3, ம.தி.மு.க., கொ.ம.தே.க. தலா ஒரு வார்டு களைப் பெற்றுள்ளன. தி.மு.க.வுக்கு போட்டி யாகக் களமிறங்கிய 6 பேர் வென்றுள்ளார் கள். அ.தி.மு.க. வென்றது 6 வார்டுகள். மேயர் பதவி பெண்கள் பொது என அறிவிக்கப் பட்டுள்ளது. தி.மு.க. மாநகரச் செயலாளர் காசிபாளையம் சுப்பிரமணியின் மனைவி நாகரத்தினம், மாவட்ட தி.மு.க.வின் துணைச்செயலாளரும், முன்னாள் ஈரோடு தி.மு.க. சேர்மனுமான அரங்கராசனின் மகள் செல்லப் பொன்னி, முன்னாள் கவுன்சிலர் மேனகா நடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் மணிராசுவின் மனைவி கோகிலவாணி மற்றும் கவுன்சிலர் கீர்த்தனா என ஐந்து பேர் மேயருக்கான ரேஸில் உள்ளனர். துணை மேயருக்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் ப.க.பழனிச்சாமி, கருங்கல் பாளையம் பகுதி செயலாளர் தண்டபாணி உட்பட ஐந்து பேர் மோதுகிறார்கள்.

-ஜீவாதங்கவேல்