""ஹலோ தலைவரே, அ.தி.மு.க.வோடு இணைந்து செயல்பட விருப்பம்னு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா திடீர்னு அறிவிச்சிருக்காரே!''
""புத்தாண்டில்தான் தீபாவின் தூக்கம் கலைஞ்சுதான்னு மீம்ஸ் போடுறாங்களே?''
""ஜெ. இறந்தபிறகு, அவரது சாயலில் இருந்த தீபா அரசியலுக்கு வரணும்னு தொண்டர்கள் விரும்பினாங்க. ஜெ.வின் அண்ணன் மகளான தீபா, தன் கணவர் மாதவனோடு சேர்ந்து அரசியல் களத்தில் குதிச்சார். "எம்.ஜி.ஆர்-அம்மா தீபா பேரவை'ங்கிற பேரில் கட்சியையும் தொடங்கி ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி னார். பின்னர், தன் கணவர் மாதவனை ஓரம் கட்டிவிட்டுத் தன் கார் டிரைவரா இருந்த ராஜாவைக் கட்சிப் பொறுப்பாளராக்கியதில் சர்ச்சைகளும் புகார்களும் கிளம்பிச்சு. அவருக்கு சப்போர்ட்டா இருந்த புகழேந்தியும் அண்மையில் அவரைவிட்டு விலகிச் சென்ற நிலையில்தான் 6-ந் தேதி சேலத்தில் தன் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டினார் தீபா. அதில் கலந்துகொண்டவர்கள், வருங்கால சி.எம்., பி.எம்.ங்கிற ரேஞ்சுக்கு அவரைப் புகழ்ந்திருக்காங்க. இந்தக் கூட்டம் முடிந்து வெளியே வந்த தீபா, "நாங்கள் அ.தி.மு.க.வோடு இணைய விரும்புகிறோம்'னு அதிரடியா பேட்டிகொடுத்து, தன் கட்சிக்காரர்களையே அதிரவச்சிருக்கார். இது தொடர்பாக தீபாவின் நட்பு வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, சசிகலா அ.தி.மு.க.வோடு இணைந்து, அதிகாரத் தைக் கைப்பற்றும் முன்பாகவே, கட்சிக்குள் தன் ஆதிக்கத்தைச் செலுத்தணுங்கிறதுதான் தீபாவின் நோக்கம் என்கிறார்கள் புன்னகையோடு. தீபாவின் வரவை ஓ.பி.எஸ். உற்சாகமாக வரவேற்றிருக்கிறார். அவரும் சசிக்கு பிரேக் போட நினைக்கிறாரு. ஆனா முதல்வர் எடப்பாடி தரப்பு இறுக்கமாகவே இருக்கு''’
""அமைச்சர்கள் மீது எழும் புகார்களும் எடப்பாடியை எரிச்சல்படுத்துதுன்னு சொல்லப் படுதே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தமிழகம் முழுக்க சொந்த பட்டா நிலத்தில் மண் எடுக்கவே ஏகப்பட்ட வசூல் நடக்குதாம். குறிப்பா தேனி மாவட்டத்தில் டி.ஐ.ஏ.ஏ. என்ற உரிமம் வழங்கும் கமிட்டியில் இருக்கும் சுரங்கத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அத்தனை பேருக்கும் தலைக்கு ஒரு லட்ச ரூபாய் மொய் எழுதணுமாம். அதேபோல் சுற்றுச் சூழல்துறையைக் கவனிக்கும் அமைச்சர் கருப்பணனின் பி.ஏ.வான முருகனையும், கனிம வளத்துறையை கவனிக்கும் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பி.ஏ.வான எத்திராசையும் வெயிட்டா சந்திச்ச பிறகுதான், உரிமமே சம்பந்தப்பட்டவர்களின் கைக்கு வருமாம். பி.ஏ.க்கள் மூலம் மாண்புமிகுக்கள் வரை விவகாரம் போவதால் எரிச்சலான எரிச்சலில் இருக்கிறாராம் எடப்பாடி''’
""முதல்வரில் தொடங்கி அமைச்சர்கள் வரை அவர்களின் சொந்தம் - சுற்றம் கோலாகலமா இருக்கு. அதிகாரிகளும் கொண்டாட்டமா இருக்காங்க.''’
""ஆமாங்க தலைவரே, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநரான அசோக்குமார், அண்மையில் தன் 56 ஆவது பிறந்தநாளை, அங்கிருக்கும் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் ஏகப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களோடு ஏக தடபுடலாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கார். ஆரவாரக் கூச்சலால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும் மருத்துவர்களும் ரொம்பவே டிஸ்டர்ப் ஆகியிருக்காங்க. அதனால் இது தொடர்பான புகார்கள் துறைச் செயலாளர் முதல் முதல்வர் வரை போயிருக்கு. இந்த டாக்டர் அசோக்குமார், போன எம்.பி. தேர்தலிலேயே அ.தி.மு.க.வில் சீட் கேட்டிருந்தாராம். அதனால் இந்த முறையாவது சீட் வாங்கிடணும்ங்கிற துடிப்பில்தான் விளம்பர அலப்பரை பண்றாராம்''’
""தமிழக அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு, விரைவில் சேர்மன் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல் வருதே?''’
""உண்மைதாங்க தலைவரே, இந்த ஆணையத்தின் மிக முக்கியமான சேர்மன் பதவி காலியாகவே இருக்கு. அதனால் அதன் போர்டு உறுப்பினர்களாக இருக்கும் தொழில்துறை, வீட்டு வசதித்துறை, குடிசைமாற்று வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள்தான், இதன் பணிகளைக் கவனிச்சிக்கிட்டு இருக்காங்க. இவர்கள் அண்மையில் கூடி, விரைவில் சேர்மனை நியமியுங் கள்னு அரசுக்குப் பரிந்துரை செய்திருக்காங்க. அதேபோல் மத்திய அரசும், சேர்மன் பதவியை நிரப்பச் சொல்லி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்குது. இந்தப் பதவியை கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதி காரிகள் பல ரும் குறிவச் சிருக்காங்க. வரும் 23, 24-ல் சென்னையில் உலக முதலீட் டாளர்கள் மாநாடு நடப் பதால், அது முடிந்ததும் இந்தப் பதவியை நிரப்ப முடிவு செய்திருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி''’
""பரபரப்பா அறி விக்கப்பட்ட திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தா யிடிச்சே!''’
""ஆமாங்க தலைவரே, கஜா புயலின் மோசமான பாதிப்பில் இருந்து டெல்டா மாவட் டங்கள் இன்னும் முழுதாக மீளலை. இந்தச் சூழலில் அதன் பகுதிகளில் ஒன்றான திருவாரூரில் இடைத் தேர்தலை நடத்துவது என்பது, அப்பகுதி மக்களின் மனதைப் புண்படுத்துவதாக அமையும்னு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருதின. இந்த நிலையில் இடைத் தேர்தலை தள்ளி வைக்கணும்னு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். அதேபோல் விவசாயிகள் சார்பில் மாரிமுத்து, ரத்தினகுமார் ஆகியோரும் வழக்கு தொடர்ந்திருந் தாங்க. இந்த நிலையில்தான் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருக்கு. வழக்கு போட்ட விவசாயிகளில் ஒருவரான மாரிமுத்துவுக்கு காங்கிரஸின் சீனியர் லாயர் கபில்சிபல் ஆஜராகியிருந்தார். நிறைய ஃபீஸ் வாங்கக்கூடிய சீனியர் லாயரை, சாதாரண விவசாயியான மாரிமுத்து எப்படி அமர்த்திக்கொண்டார்னு பலரும் யோசிக்க, இதன் பின்னணியில், தி.மு.க.வும் காங்கிரஸும் இருப்பதாக இப்ப விறுவிறுப்பான டாக் அடிபடுது''’
""நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் தொடங்கப் போறா ராமே?''’
""எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக வர்ற 27-ந் தேதி மதுரை வரும் மோடி, அங்கேயே தன் முதல் பிரச் சாரத்தைத் தொடங்கப் போறாராம். அதற்காக பா.ஜ.க. அரசு மூலம் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்த திட்டங்களைப் பற்றிய குறிப்புகளோடு அவருக்கான உரை பிரிப்பேர் செய்யப்படுகிறதாம். மோடி வருவதற்கு முன்பாக 21-ந் தேதியே பா.ஜ.க. தலைவரான அமித்ஷா சென்னைக்கு வருகிறாராம். இங்குவந்து கட்சியின் மாநில, மாவட்டப் பிரமுகர்களோடு தேர்தல் பணிகள் குறித்து ஆலோ சிக்கப்போறாரு அமித்ஷா. பா.ஜ.க. அரசின் மக்கள் நலத் திட்டங்களை தமிழ் நாட்டு மக்களிடம் சரியா எடுத்துச் செல்லவில்லை என்ற எரிச்சலில் இருக்கும் அமித்ஷா, அது குறித்த கோபத்தைத் தங்களிடம் வெளிப்படுத்துவாரோ என்ற நடுக்கத்தில் இருக்கிறார்கள், பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப் பாளர்கள்''’
""சபரிமலை விவ காரத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் அடா வடிகள், கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் எடுபடவில்லை போலி ருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, பெண்களை சபரிமலைக்கு அனுமதிக் கணும்னு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கலவரத்தை அங்கே கட்டவிழ்த்துக்கிட்டு இருக்காங்க. அதையும் மீறி, பிந்து, கனக துர்காங்கிற இரண்டு பெண்களை பலத்த பாதுகாப் போடு பினராய் விஜயனின் அரசும் போலீஸும் கோயிலுக்கு அழைத்துச் சென்றும், அவர்களைக் கடைசி நேரத்தில் கோயிலை நெருங்கும் முன்பாகவே துரத்தியடித்துவிட்டனர். இதையும் மீறி இலங்கையைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்ணை, பலத்த பாதுகாப்போடு கோயிலுக்கே அழைத்துச்சென்று, கேரள அரசு சாதித்ததோடு, இதன் வீடியோ பதிவையும் வெற்றிகரமாக வெளியிட்டி ருக்கிறது''’
""இது தொடர்பான இன்னொரு தகவலை நான் சொல்றேன்... ஆர்.எஸ்.எஸ். தங்கள் வீரதீரப் பராக்கிரமங்களை வரும் 21-ந் தேதி தங்களின் வெற்றித் திருநாளாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தது. இதையறிந்த கேரள அரசு, அவர்களின் வெற்றித்திருநாள் கனவை, சசிகலாவின் பிரவேசம் மூலம் உடைத்தெறிந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 4,600 ஐயப்ப பெண் பக்தைகள், சபரிமலைக்கு வருவதற்காகத் தங்கள் பெயரைக் கேரள அரசிடம் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதையும், இதில் 20 பேர் வெளிநாட்டு பக்தைகள் என்பதையும், அங்கிருக்கும் அட்வகேட் ஜெனரல், அரசுத் தரப்பின் வாதமாக கேரள நீதிமன்றத்தில் அதிரடியாகப் பதிவு செய்திருக்கிறார்.''