எட்டுவழிச் சாலையை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூலை 12-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதற்குள் நில அளவீட்டை முடித்துவிட வேகம் காட்டுகிறார்கள் அரசு அதிகாரிகள்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நில அளவீடுப் பணிகளை முடித்த அதிகாரிகள், 124 கி.மீ. பயணமாகும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிகளைத் தொடங்கியுள்ளனர். செங்கம் அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தில் ஒன்றுகூடிய விவசாயிகள், "எங்க அனுமதியில்லாம எங்க நிலத்துல நீங்க எப்படி இறங்கலாம்?' எனக்கேட்டு வாக்குவாதம் செய்ய, 150 போலீசார் அவர்களை சுற்றிவளைத்து உளவியல் ரீதியில் தாக்கினர். சாலைமறியல் செய்ய முயன்றவர்களை, "15 நாள் உள்ள வச்சிடுவோம்' என மிரட்டியதால் வேறுவழியின்றி ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட அதிகாரிகள் கலைந்துசென்றனர்.
நார்த்தாம்பூண்டியைச் சேர்ந்த முதியவர் முருகன், ""நிலத்தை அளக்கும்போது, நிலத்தைத் தரமறுத்தா போலீசை வச்சு மிரட்டுவீங்க. அரசாங்கத் திட்டத்தை எதிர்த்து ஒண்ணும் பண்ணமுடியாது. என்னோட 4 ஏக்கர் நிலத்துல குறுக்கால ரோடு வரப்போகுது. ரோட்டுக்கு அந்தப்பக்கம் 40 செண்ட்டும், இந்தப்பக்கம் 80 செண்ட்டும் மீதியிருக்கும். அதையும் சேர்த்து எடுத்துக்கிட்டு, மார்க்கெட் மதிப்புப்படி பணம் கொடுங்க. நான் எங்கயாவது போறேன்''’என பரிதாபமாகக் கேட்க, சேட்டிலைட் அளவுமுறையில் கூட்டவோ குறைக்கவோ முடியாதென அதிகாரிகள் மறுத்துள்ளனர். "மீதி நிலம் யாருக்கும் பிரயோஜனம் இல்லாம போயிடும்' என புலம்பியபோது, கலெக்டருக்கு மனு எழுதித் தரச்சொல்லி கல்லை நட்டுவிட்டு பக்கத்து நிலத்திற்கு சென்றனர்.
தென்னகரம் விவசாயி அருள் நம்மிடம், “""என் 8 ஏக்கர் நிலத்துல நடுவுல ரோடு வருமாம். ரோடுக்காக 2 ஏக்கர் நிலம் எடுத்ததுபோக, ரெண்டு பக்கமும் 3 ஏக்கர் நிலம் வீணாகுது. இந்த நிலத்தை வச்சு விவசாயமும் பண்ணமுடியாது. அரசாங்கம் எடுக்கற நிலத்துக்கு இழப்பீடு தரும், இப்படி வீணாப்போகும் நிலத்துக்கு இழப்பீடு யார் தர்றது?'' என கேள்வி எழுப்பியவர், ""இந்தத் திட்டத்தை எதிர்த்து போராடினா ஜெயிலுக்குதான் போகணும்னு சொல்றாங்க. அதுக்கு மனசுல தைரியமும், உடம்புல தெம்பும் இல்ல. அதனால, கல்லு நடும்போது கம்முன்னு இருக்கேன்''’என்றார் டீ சாப்பிட்டபடி.
நில எடுப்பு தாசில்தார் ரவியிடம் மோப்பத்துறையைச் சேர்ந்த மூதாட்டி சகுந்தலா, ""விதவையான மகள், கல்யாண வயதில் பேத்தியிருக்கு, எங்களுக்கு நிலம்தான் சோறு போடுது. என் பேத்திக்கு கல்யாணமாகுற வரைக்குமாவது நிலம் எங்ககிட்ட இருக்கட்டும் சாமி'' எனக் கெஞ்ச... "எங்களால ஒண்ணும் பண்ணமுடியாது' எனக்கூறி நிலத்தில் அளவு கல்லை நட்டுவிட்டுச் சென்றார். "போச்சே' என கதறியவர்... அங்கேயே அமர்ந்திருந்தார்.
முத்தரசன்பூண்டி மல்லிகார்ஜுன் குடும்பத்தினர், ""எங்களோட 4 ஏக்கர் நிலத்துல 2 வருஷத்துக்கு முன்னாடிதான் வீடு கட்டினோம். 2.5 ஏக்கர் நிலத்தை ரோட்டுக்காக எடுக்கிறதால, வீட்டை இடிச்சிட்டு இழப்பீடு தர்றதாக சொல்றாங்க. அதைவச்சு மீதி நிலத்துல வீடு கட்டிட்டா, என்ன வேலைசெய்து வாழறதுன்னு தெரியல''’என வேதனைப்படுகின்றனர். நிலத்தை அளந்துமுடித்த அதிகாரிகள் சிலர் அவர்களிடமே தண்ணீர் கேட்டதுதான் வேதனையின் உச்சம்.
லட்சுமி பாட்டியோ, ""30 வருஷ போராட்டத்துக்குப் பிறகுதான் இந்த நிலத்துல நல்ல விளைச்சல் வருதேன்னு சந்தோஷப்பட்டோம். அந்த நிலத்தைப் புடுங்கிட்டாங்களே… பாவிங்க நல்லாயிருப்பாங்களா?'' என சாபம்விட்டுக் கொண்டிருந்தார். தன்னை நோக்கி போலீஸ் வருவதைப் பார்த்து பதறியவர், "நான் எதுவும் பேசல, ரோடு வர்றது நல்லதுதான்' என தன் வேதனையைக்கூட வெளிப்படுத்த முடியாமல் குறுகிப்போனார்.
செய்யாறு நகரை ஒட்டிய எருமைவெட்டி கிராமத்தில், எட்டுவழிச் சாலைக்காக விவசாய நிலங்களை அளந்து அடையாளக் கற்களை அதிகாரிகள் ஊன்றினர்.
தங்கள் ஐந்து ஏக்கர் கரும்பு வயலுக்குள் ஊன்றிய கற்களை அகற்றாவிட்டால், தீக்குளிப்பேன் என்று மண்ணெண்ணெய் கேனை திறந்தார் விவசாயி ரமேஷின் மனைவி மீனாட்சி. அந்தக் கேனைப் பறித்தார்கள் அதிகாரிகள். அடுத்த நொடி, தன் கையில் இருந்த கத்தியால், தன் கழுத்தை அறுத்துக்கொண்டார் மீனாட்சியின் மகள். கழுத்தில் ரத்தம் கசிவதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கரும்பு வயலுக்குள் பதித்த கற்களை அகற்றிவிட்டுக் கிளம்பினர்.
பல விதங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை மத்திய அரசு திட்டத்தை எதிர்த்தால் சிறைதான் என அதிகாரிகள் போலீசை வைத்து மிரட்டுகின்றனர். ஒன்றுசேர்ந்து போராட நினைத்தால், ‘"உன் நிலமா பாதிக்கப்படுது, நீ ஏன் தலையிடுற... உன் வேலையைப் பாரு'’என உளவுஆட்கள் மூலம் பிரித்தாளும் வேலையையும் சிறப்பாக செய்கின்றனர். ‘ஜூலை 1-ஆம் தேதி திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் மாணவர்கள் போராட்டம்’ என்ற செய்தி பரவியதால், அலர்ட்டான எஸ்.பி. பொன்னி கல்லூரி நிர்வாகங்களை தொடர்புகொண்டு எச்சரிக்கை விடுத்தார். முன்னெச்சரிக்கையாக ஜூன் 29-ந் தேதி இரவு 12 மணிக்கு, விஜயகுமார், மணிவண்ணன், பவன்குமார் ஆகிய 3 இளைஞர்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது போலீஸ்.
போராட்டமும், எதிர்ப்பும் திட்டத்தை நிறுத்தாது என்ற பிரச்சாரத்தால் வாழ்வாதாரங்களை இழக்கும் பொதுமக்கள், அரசிடமிருந்து கூடுதல் இழப்பீடு பெறவும், நிலம் தருவோருக்கு வாரிசு வேலைவாங்கவும் என்ன செய்யணும் என ஆலோசனை கேட்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதே கள யதார்த்தமாக உள்ளது.
-து.ராஜா