Skip to main content

போராடினால் போட்டுத் தள்ளு! மோடி-எடப்பாடியின் 'தூத்துக்குடி மாடல்!'

தூத்துக்குடியில் நடந்ததுபோல இனி இந்தியாவிலேயே எங்கும் மக்கள் போராட்டம் நடக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மத்திய அரசின் துணையோடு எடப்பாடி அரசு தனது காவல்துறையை வைத்து அராஜகத்தை தொடங்கியிருக்கிறது.

tutyprotest

கொலை செய்யப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவு, துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிஷன் என்று அறிவித்துக்கொண்டே, மறுபக்கம் தனது கோர முகத்தை காட்டுகிறது எடப்பாடி அரசு.

தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸார் எந்தத் தொந்தரவும் தரக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜூன்-1 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. ஆனால், உத்தரவை மதிக்காமல் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆறுபேரை போலீஸார் கைது செய்தனர்.

கோட்டையன், சரவணன், கருப்பசாமி ஆகிய மூவருடன், நெல்லை டவுனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கலியலூர் ரஹ்மான், முகமது அஷ்ரத், முகமது அனஸ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். 24 மணிநேரம் இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்கிற விவரமே சொல்லப்படவில்லை. ஊடகங்களில் செய்தியான பிறகே தகவல் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு, இவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்களில் முகமது அனஸ் நான்காம் ஆண்டு ஹோமியோபதி மருத்துவ மாணவர்.

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக போலீஸார் பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர். ஒரு சினிமா திரைக் கதைக்கு நிகரானதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு நன்கு திட்டமிட்டு பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆறுபேரில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சரவணனிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். “""தூத்துக்குடி கலவரத்துக்கு நானும் எனது தோழர்களுமே காரணம். இந்தக் கலவரத்தை முன்னின்று நடத்தியது மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரி ராகவன் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த தங்கப்பாண்டியன்'' என்று சரவணன் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

modi-eps

இந்த வாக்குமூலம் குறித்து வழக்கறிஞர்கள் கூறும்போது, “""தூத்துக்குடி கலவரத்திற்கு எங்களையும் மக்கள் அதிகாரம் அமைப்பினரையும் பலிகடா ஆக்கும் முயற்சி நடக்கிறது. எங்களை கடுமையான சட்டப்பிரிவுகளில் சிறையில் அடைத்து, மக்களை அச்சுறுத்தவும், அந்த அச்சத்தை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவும் மத்திய- மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. போராட்டத்தில் காலை 9 மணிமுதல் 11:30 மணிவரை மடத்தூர் விலக்கு அருகே எங்களை எஸ்.பி. மகேந்திரன் தலைமையிலான குழு தடுத்து நிறுத்தியிருந்தது. இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது. ஆனால் அதேநேரத்தில் நாங்கள் தூத்துக்குடி பனிமயமாதா கோவில் முன்புகூடி நகருக்குள் வந்து வேன் கவிழ்ப்பு, தீவைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த பின்னர்தான் நாங்கள் மூன்றாம் மைல் பகுதிக்கே வரமுடிந்தது'' என்கிறார்கள்.

""மே-22 போராட்டத்தை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரலை செய்துள்ளன. நகரம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்களும், காவல்துறை வீடியோகிராபர்கள், டிரோன் விமானக் கேமராக்களும் படம்பிடித்துள்ளன. அனைத்து வீடியோ பதிவுகளையும் அரசு வெளியிடட்டும். அவற்றில் நாங்களோ, மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகளோ, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினரோ வன்முறையில் ஈடுபட்டதற்கு ஆதாரம் இருந்தால், உடனே சிறைசெல்லத் தயாராக இருக்கிறோம்'' என்றும் வழக்கறிஞர்கள் சவால்விடுக்கின்றனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மருது நம்மிடம் கூறும்போது… ""போலீஸாரால் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் இரண்டு பேர் மட்டுமே அமைப்புரீதியாக தொடர்புள்ளவர்கள். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஜெயராமன், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தமிழரசன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் உள்ளூர் அப்பாவி பொதுமக்கள். ஆனால், அனைவருக்கும் அமைப்புரீதியாக சாயம் பூசுவதுதான் வேதனை. எங்கள் குழுவின் துணையால்தான் சட்டப்பாதுகாப்பு காரணமாகத்தான் மக்கள் போலீஸாரின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக கருதுகிறார்கள். எனவேதான் எங்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டாஸ் சட்டம் ஆகியவற்றை பாய்ச்சுகிறார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு "தூத்துக்குடி மாடல்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தியாவில் இனி எங்கு மக்கள் போராட்டம் நடந்தாலும் தூத்துக்குடி மாடல் செயல்படுத்தப்படும். இப்போதும் கைது என்கிற பேரில் சிலரை கொலை செய்ய எடப்பாடி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது'' என்றார்.

இதற்கிடையே கலவரம் நடந்த அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்தது, வி.வி.டி. சிக்னல் அருகே போலீஸ் பூத்தை உடைத்தது, வண்டியைக் கவிழ்த்தது என பல்வேறு சம்பவங்களில் தொடர்புபடுத்தி மகேஷ், பாண்டி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இசக்கிதுரை, பால்ராஜ் மற்றும் பிரையெண்ட் நகர்ப்பகுதியைச் சேர்ந்த இருவர் என கிடைத்தவர்களையெல்லாம் வாரிக்கொண்டு போகிறது போலீஸ். மறுபக்கம், கலவரம் நடந்த அன்று அலுவலகம் வரும்போது போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டோம் என்று ஆட்சியர் அலுவலக பணியாளர்களிடம் எழுதி வாங்குகிறது காவல்துறை.

tuty-lawyers

இப்படிப்பட்ட சூழலில்தான் தூத்துக்குடிக்கு முதல்வர் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னர் மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்ட கருத்து அவருடைய பயணத்தையே ரத்து செய்துவிட்டது. ""ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், அங்கிருந்து காப்பர் பெற முடியவில்லை. எனவே, தமிழகத்தில் ட்ரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் சப்ளையில் தடை ஏற்படுகிறது என்று பேரவையில் ஜூன் 8 ஆம் தேதி தங்கமணி பதில் அளித்தார்.

lawyer-maruthuஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சாக்குப்போக்கு தேடுகிறார்கள் என்கிற எண்ணத்தை அமைச்சரின் பேச்சு உருவாக்கியது. மேலும், ""ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் காப்பரை ட்ரான்ஸ்பார்மருக்கு பயன்படுத்த முடியாது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மின்சாரத்துக்காக காப்பர் வாங்கப்படுவதை நிரூபிக்க முடியுமா?'' என்று தூத்துக்குடி மக்கள் கொந்தளித்தார்கள்.

ஆண்டுக்கு எத்தனை ட்ரான்ஸ்பார்மர்கள் புதிதாக நிறுவப்படுகிறது? கடைசியாக ட்ரான்ஸ்பார்மர் வாங்க எப்போது கொள்முதல் ஆணை போடப்பட்டது? என்று விவரமறிந்தோர் சமூகவலைத்தளங்களில் போட்ட பதிவுகள் அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தின. இதையடுத்து, ஜூன்-9 ஆம் தேதி தூத்துக்குடி செல்லவிருந்த முதல்வர் எடப்பாடி தனது பயணத்தை கேன்ஸல் செய்துவிட்டார்.

தூத்துக்குடி கலவர சூழல் முடிவுக்கு வராத நிலையில், மக்கள் போராட்டங்களை ஒடுக்க "தூத்துக்குடி மாடல்'’ ஒடுக்குமுறையை பயன்படுத்தி, போராட்டக்காரர்களை கைது செய்யவும், என்கவுன்ட்டர் என்ற பெயரில் போட்டுத்தள்ளவும் எடப்பாடி அரசின் காவல்துறை ரெடியாகி வருகிறது.

-நாகேந்திரன்

அன்றே எச்சரித்த நக்கீரன்! குறி வைக்கப்பட்ட பெ.மணியரசன்!

pa-maniarasanஉத்தரப்பிரதேசத்தைப் போல தமிழகத்தையும் கலவரபூமியாக்க எடப்பாடி அரசு உதவியுடன் பா.ஜ.க. தனது வேலையைத் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் அரசியல் களத்தில் வெளிப்படுகிறது.

அரசுக்கு எதிரான போராட்டக் குரல் ஓங்கி ஒலிப்பதை அடக்க பெ.மணியரசன், சீமான், அமீர், கௌதமன், திருமுருகன் காந்தி ஆகியோரை தமிழ்நாடு அரசு குறிவைத்திருப்பது பற்றி நக்கீரன் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது.

அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் கோவையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் அமீருக்கு எதிரான பா.ஜ.க.வின் தாக்குதல் முயற்சி இருந்தது.

அங்கிருந்து அவரை தனியரசு தனது காரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அப்போது தனியரசு காருக்கு பின்னே சென்ற இன்னொரு காரை பா.ஜ.க.வினர் தாக்கினர். இந்த நிகழ்வைக் கண்டித்து தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், பா.ஜ.க.வினரின் சதிகளை பட்டியலிட்ட அவர்,

""தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையில், நடுவண் அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த மாநிலத்தை உத்தரப்பிரதேசத்தைப் போல கலவரபூமியாக்க பா.ஜ.க.வினர் முயற்சி செய்கிறார்கள். இதை எதிர்த்து மனித உரிமை காப்பு என்ற அடிப்படையில் தமிழர்கள் இணைய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

அறிக்கையை வெளியிட்ட சில மணிநேரத்தில் தஞ்சையிலிருந்து சென்னை செல்வதற்காக சீனு என்கிற தனது இயக்கத் தோழர் ஒருவரின் உதவியோடு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றிருக்கிறார். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்த இன்னொரு பைக்கில் வந்த நபர்கள் மணியரசன் வைத்திருந்த பையைப்பிடித்து இழுத்து அவரை கீழே தள்ளினர். இதில் மணியரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நிகழ்வை அறிந்த பலரும் மருத்துவமனைக்கு வந்தனர். "பையைத் திருட நடந்த சம்பவம்' என்று போலீஸார் திசைதிருப்ப முயற்சிக்கும் நிலையில், மணியரசனின் பேக், கைக்கடிகாரம் உள்ளிட்டவை அவர் தாக்கப்பட்ட அதே இடத்தில் கிடக்கும்போது, வழிப்பறி முயற்சி என்று எப்படி கருதமுடியும் என்று வினா எழுப்புகிறார்கள்.

அமீர், மணியரசனைத் தொடர்ந்து அடுத்து யார் என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், திருவண்ணாமலை அருகே பணியை ஒழுங்காக செய்யாத பெண் மருத்துவரைப் பற்றி முகநூலில் பதிவு போட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சட்டப்பூர்வமாக கருக்கலைப்புக்காக வந்த பெண்ணை ஆபாசமாக கேலி செய்துள்ளார் அந்த டாக்டர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல அமைப்புகள் புகார் கொடுத்துள்ளன.

-பகத்சிங், ராஜா

ஐ.ஜி.யை மாற்றிய அதிரடி ரிப்போர்ட்!

IGs

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து பெரிய மாற்றம் தமிழ்நாடு காவல்துறையில் நடைபெற்றிருக்கிறது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த மகேந்திரன், உடனடியாக மாற்றப்பட்டாலும் சென்னை நகரில் மிக முக்கியமான பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தெற்கு மண்டல ஐ.ஜி.யான சைலேஷ்குமார் யாதவ் மாற்றப்பட்டுள்ளார்.

அவரது மாறுதல்பற்றி நம்மிடம் பேசிய காவல்துறை வட்டாரத்தினர், ""தூத்துக்குடியில் நடந்த பொதுமக்கள் போராட்டத்தை கையாள்வதுபற்றி அக்கறை காட்டாத சைலேஷ்குமார் யாதவ், துப்பாக்கியால் எப்படி சுட வேண்டும் என்கிற உத்தரவை மட்டும் தெளிவாகப் பிறப்பித்தார். துப்பாக்கிகளை தயாராக வைத்திருக்கும்படி தூத்துக்குடி ஆயுத கிடங்கு அதிகாரிக்கு 100-ஆம் நாள் போராட்டத்திற்கு முந்தைய இரவே உத்தரவிட்டுள்ளார். இதுபற்றிய ரிப்போர்ட்டை காவல்துறை அதிகாரிகளே கொடுத்துள்ளனர்'' என்கிறார்கள்.

சைலேஷ்குமார் யாதவிற்கெதிரான ரிப்போர்ட்டை கொடுத்தது யார் எனக் கேட்டதற்கு, ""துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகான அசாதாரணமான சூழலை சமாளிக்க சண்முகராஜேஸ்வரன், டேவிட்சன் தேவாசிர்வாதம், வரதராஜுலு ஆகிய மூன்று உயர் போலீஸ் அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வந்தார்கள். சகஜ நிலையைக் கொண்டு வந்தார்கள். அவர்கள்தான் சைலேஷ்குமார் யாதவ்பற்றி ரிப்போர்ட் கொடுத்தார்கள். அவரது மாறுதலுக்கு அந்த ரிப்போர்ட்தான் காரணம்.

அவர் வகித்த தென்மண்டல ஐ.ஜி. பதவிக்கு சண்முகராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட்சன் தேவாசிர்வாதத்தை மதுரை கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வாலுக்கு பதில் நியமித்துள்ளனர். ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமானவர் என்பதால், சசிகலாவின் கூவத்தூர் ஆபரேஷன் போது அங்கே போலீஸை அனுப்பினார் என்பதற்காக தூக்கியடிக்கப்பட்டவர் டேவிட்சன்.

அவர் மறுபடியும் ஓ.பி.எஸ். ஆதரவில் உளவுத்துறை தலைவராக வரலாம் என்கிறது காவல்துறை வட்டாரம்.

-தாமோதரன் பிரகாஷ்

எஸ்.பி.யை பதற வைத்த போலீஸ்!

sp-muraliபோலீசின் பல்வேறு அத்துமீறல்களுக்குள்ளானவை தூத்துக்குடியின் அண்ணாநகர் மற்றும் அதனை ஒட்டிய பிரையண்ட் நகர் பகுதிகள்.

இதில் அண்ணாநகர் பகுதி மட்டும் போலீசின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது அந்தப் பகுதியில் காவலுக்கிருந்த ஏட்டு ஒருவர், இரவு நேரம் அருகில் உள்ள மொட்டை மாடியில் ஏறி அங்கு உறக்கத்திலிருந்த தம்பதியரை கள்ளத்தனமாகக் கண்டு ரசித்திருக்கிறார். பகுதி மக்களிடம் ஏட்டு சிக்கிவிட, அடி பின்னியெடுத்தவர்கள், அவரை மத்தியபாக காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று, அவர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளே வைக்கணும். உடனடியா எஸ்.பி. இங்க வந்தேயாகணும்னு கடுமையாக நின்ற தகவலால், அங்கு வந்த எஸ்.பி.முரளி ரம்பா, நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்னவர் அந்த ஏட்டை வேறு மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றி அனுப்பிவிட்டாராம்.

கடந்த 4-ம் தேதியன்று இரவு நெருங்கும் சமயம், அந்தப் பகுதியிலுள்ள சிலர், பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசைப் பார்த்து, ""பதிமூணு பேத்தச் சுட்டுக் கொன்னுப்புட்டு. தைரியமா இங்கே இருக்கீகளா. வாங்கலேய். மோதிப் பாப்பமா. கையில ஆயுதமிருக்குன்னு தைரியமா. இப்பவாங்கடா. ஒருத்தர் உசுரும் உடம்புலருக்காது'' என்று ஆவேசக் குரலெழுப்ப... பயத்தில் கிறுகிறுத்துப்போன போலீஸ் ஒருவர், அதைத் தன், செல்லில் பதிவு செய்திருக்கிறார்.

மிரட்டலால் அரண்டு போன அந்த நான்கு ஆயுதப்படை காவலர்களும், தங்களின் முன்னே, செல்ஃபி எடுப்பதைப் போன்று அந்த செல்லை வைத்துக் கொண்டு, ""எஸ்.பி. ஐயாவுக்கு வணக்கம். அய்யா அண்ணா நகர்ல நிலமை ரொம்ப மோசமா இருக்கு. அங்க உள்ள வாலிப பசங்க எங்க மேல (போலீசு) ரொம்ப வெறியா இருக்காங்க. எந்த நேரமும் என்னவும் நடக்கலாம்யா. அவங்க கொலவெறியோட பேசுனதயும் பதிவு பண்ணி உங்களுக்கு அனுப்பிருக்கோம்யா. தயவு பண்ணி, எங்கள , சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இங்க பிக்கெட்டிங் போடாதீங்கய்யா. அப்படிப் போட்டீங்கன்னா எங்க உசுருக்கு உத்தரவாதமில்லய்யா. தயவு பண்ணி போடாதீங்கய்யா'' என்று நான்கு பேரும் கெஞ்சிக் கையெடுத்துக் கும்பிட்டபடி கண்ணீர் விட்டு அழுததைப் பதிவாக்கி, அதை அப்படியே எஸ்.பி.முரளி ரம்பாவின் செல்லுக்கு மட்டும் ஃபார்வேர்ட் செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்து மிரண்டு போன எஸ்.பி., வெளியே சொன்னா போலீஸ் மானம் காற்றில் பறக்கும். நிலைமையும் சரியில்லாத குழப்பத்தால் என்ன செய்வதென்று தவியாய்த் தவித்து வருகிறாராம்.

-பரமசிவன்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்