ஆக. 01-03 தேதியிட்ட நக்கீரனில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துறைகளின் முறைகேடுகள் பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் பலதடவை முயன்றும் துணைவேந்தர் பாஸ்கரின் விளக்கம் கிடைக்கவில்லை என்றும், அவரது விளக்கம் கிடைப்பின் அதையும் பிரசுரம் செய்ய உள்ளதையும் பதிவு செய்திருந்தோம்.
நக்கீரன் இதழ் வெளியான பிறகு நம்மைத் தொடர்புகொண்ட துணைவேந்தர் பாஸ்கர், தன்னுடைய தரப்பு விளக்கத்தையும் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
""பணி நியமனம் போன்றவை உட்பட மற்றவைகளிலும் முறைகேடுகள் நடக்கவில்லை. அனைத்தும் வெளிப்படைத்தன்மை கொண்டவை. முறைகேடுகளில்லை. ஆனால் "மூட்டா' அமைப்பினரோ, "நாங்கள் இந்தப் பகுதி கல்லூரிகளைப் பற்றித் தெரிந்தவர்கள், நாங்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்போம். அதே போன்று நீங்களும் எங்களுக்கு அனுகூலமாக இருக்க வேண்டும்' என்றார்கள். அதற்கு, "பல்கலைக் கழகத்தின் விதிமுறைப்படிதான் செயல்பட முடியும். நீங்கள் எனக்கு அனுகூலமாக இருக்க வேண்டாம். நான் துணைவேந்தர் பொறுப்பைக் கவனிக்கிறேன்' என்று சொன்னதும் அவர்களுக்குக் கோபம்.
நான் 2016-ல் பொறுப்பிற்கு வந்தபோது தேசத்தில் உள்ள எண்ணூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் என்.ஐ.ஆர்.எப். எனப்படுகிற தேசிய கமிட்டியின் தரவரிசையில் பின்தங்கியிருந்த பல்கலைக்கழகத்தை முன்னுக்குக் கொண்டுவந்தேன். அதன் வெளிப்பாடுதான் தற்போது "நாக்' கமிட்டி அளித்துள்ள அங்கீகாரம். ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்வீடன் போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. அதைப் போன்றே ம.சு. பல்கலைக்கழகம் உலகத்தரத்திற்கு இணையாக வரவேண்டும் என்பது என்னுடைய கனவு'' என்கிறார் துணைவேந்தர் பாஸ்கர்.
-பரமசிவன்
படம் : ப.இராம்குமார்
ஸ்மார்ட் வகுப்பு! பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கியதில், ரூ.500 கோடி மோசடி நடந்துள்ளது என ஆகஸ்ட் 01-03 தேதியிட்ட நக்கீரனில் "பள்ளிக்கல்வியில்‘ஸ்மார்ட்’ கொள்ளை! - 500 சி மோசடி!'’ என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். கமிஷன் நோக்கில் அவசரஅவசரமாக டெண்டர் ஒதுக்கியதோடு, டெண்டர் கூட்டத்தில் முறையான பதில்கள் தராததால் சிறு நிறுவனங்கள் முணுமுணுப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தோம்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தந்துள்ள விளக்கத்தில், “2012-ஆம் ஆண்டு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசாணை வெளியானது. அடுத்தடுத்து நிர்வாக காரணங்களால் டெண்டர்கள் ரத்தாகின. பிறகு டெண்டர் ஏஜெண்டாக தமிழ்நாடு பாடநூல் கழகத்தை அரசு நியமித்தது. 2017-ஆம் ஆண்டு தொழில்நுட்ப விவரங்களுக்காக உயர்மட்டக்குழுவை நியமித்தது அரசு. அதன் பரிந்துரைகளின்படி பள்ளிக்கல்வி இயக்குநர் கருத்துரு வழங்க, அதையேற்று அரசாணையும் வெளியானது. ஜூன் மாதம் டெண்டர் கோரப்பட்ட நிலையில், ப்ரீ-பிட் மீட்டிங்கில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு தெளிவுரைகள் கோரின. இதற்கான பதில்கள் தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் குறித்த தெளிவுரைகளும், விளக்கங்களும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் அரசு டெண்டர் வெப்சைட்டில் வெளியிடப்படும்''’என விளக்கமளித்து, மோசடி எதுவும் நடைபெறவில்லை என தெளிவுபடுத்துகிறது.
-கீரன்