பாட்டுக்குப் பட்ட பாடு!

சோகனை கதாநாயகனாக வைத்து கே.சங்கர் இயக்கிக்கொண்டிருந்த "இது சத்தியம்' படப்பிடிப்பு ஊட்டியில் நடந்துகொண்டிருந்தது. என்னை சங்கரிடம் அறிமுகப்படுத்திய நண்பர் பழனிச்சாமி... கோவை வட்டாரத்தில் பிரபலமான தொழிற் சங்கவாதியான என்.ஜி.ஆர். என தொழிலாளர்களால் அழைக்கப்படும் என்.ஜி.ராமசாமிக்கு நிதிதிரட்ட... ஒண்டிப்புதூரில் விழா நடத்தவும், அதில் கலந்துகொள்ள அழைக்க வந்திருப்பதாகவும் தெரிவிக்கவே... சங்கரும் சம்மதித்தார்.

விழாவைக் காண மக்கள் கூட்டம் பெருமளவில் திரண்டிருந்தது. அசோகன், சங்கர் உள்ளிட்ட படக்குழுவினரும் விருந்தினர் களாக வந்தனர். அசோகன் பேசப்பேச... மக்களிடையே பெரும் சிரிப்பலையும், கேலியும், கிண்டலும் எழுந்தது. காரணம்... விழா நாயகர் பெயரை என்.ஜி.ராமசாமி என விளிப்பதற்குப் பதிலாக... "ஜி.என்.ராமசாமி' என்றே தன் பேச்சு முழுக்க குறிப்பிட்டார்.

நான் பேசும்போது... ""வில்லனாக நடித்துக்கொண்டிருந்த அசோகனை கதாநாயகனாக வைத்து "இதுசத்தியம்' படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணி. அதனால் தயாரிப்பாளர் மீது தனக்கிருக்கும் நன்றி யுணர்ச்சியால்தான்... அவர் நினைப்பில் ஜி.என்.வேலுமணி இருப்பதால்தான்... என்.ஜி.ராமசாமியைக்கூட... ஜி.என்.ராமசாமி என குறிப்பிட்டுப் பேசினார் அசோகன். இந்த இடத்தில் அசோகனின் நன்றியுணர்ச்சியைத்தான் நாம் பார்க்க வேண்டும்'' என சமாளித்துப் பேசினேன்.

Advertisment

மக்கள் மட்டுமின்றி... சிறப்பு விருந்தினர்களும் நான் சமாளித்துப் பேசியதை கைதட்டி வரவேற்றதுடன்... அசோகனின் நன்றி யுணர்ச்சிக்கும் பலத்த கைதட் டலைத் தந்தார்கள்.

கோவையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த டைரக்டர் சங்கரின் அழைப்பின் பேரில் அவரைச் சந்தித்தேன். வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். என் இலக்கியப் புலமை மீது அவருக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டது.

""உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது புலவரே...''

Advertisment

""நன்றிங்க...''

""நீங்கள் கோவையில் இருப்பதைவிட சென்னைக்கு வந்தால்... அதற்கான வாய்ப்புகள் அமையும். சென்னைக்கு வரமுடியுமா?''

""நீங்கள் அழைத்தால் வருகிறேன்...''

pp

""நல்ல சந்தர்ப்பம் அமையும்போது நான் சொல்கிறேன். இது என்னுடைய வீட்டு போன் நம்பர். ஏதாவதுன்னா... பேசுங்க...''’ எனச் சொன்னார்.

நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன்.

அதன்பின்.... சென்னைக்கு போன் செய்து சங்கருடன் அடிக்கடி பேசினேன்.

ஒருநாள்...

""புலவரே... நீங்க நிரந்தரமா சென்னையில் தங்கும் திட்டத்தோடு வாருங்கள்'' என்றார்.

""விரைவில் வருவதற்கு தயாராகிறேன்'' என்றேன்.

என் மாமா மகள் தமிழரசியை எனக்குத் திரு மணம் செய்து வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தது.

“""அவனுக்கு பொண்ணத் தர்றதுக்கு... கிணத்துல தள்ளிடலாம்... ரெண்டும் ஒண்ணுதான்'' என்றார் என் மாமா.

எனக்கோ... தமிழரசியின் சம்மதம்தான் முக்கியமாக இருந்தது. அதுவுமில்லாமல்... என்னுடன் சென்னை வந்து புதிய சூழலில் வாழப்போகிறவள் அவள்தானே...

""திருமணமானதும் என்கூட சென்னைக்கு வருவியா? அங்க என்ன கஷ்ட-நஷ்டம் வந்தாலும் பங் கெடுத்துக்கிட்டு என்னோட வாழ சம்மதமா?'' எனக் கேட்டேன்.

தீர்க்கமாக சம்மதம் சொன் னாள்.

1963-ஆம் ஆண்டு... ஒண்டிப் புதூரில் எனக்கும், தமிழரசிக்கும் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது.

அந்தச் சமயம்... சென்னையில் வசிப்பதற்கான ஒரு குறைந்தபட்ச உத்தரவாதமாக... சென்னை சாந்தோம் பள்ளியில்... தமிழாசிரியர் வேலைக்கான அப்பாயின்மெண்ட் ஆர்டர் வாங்கியிருந்தேன். நண்பர் புலவர் பண்ணன் வீடு ராயப்பேட்டையில் இருந்தது. அந்த முகவரியையும் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

ரயிலில்... நானும், என் மனைவியும்... சென்னைக்கு கிளம்பினோம்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தோம்.

பயம், பதட்டம், பரபரப்பு, வியப்பு... என எல்லாவித உணர்வும் கொஞ்சகொஞ்சம் கலந்த மனநிலையாக இருந்தது. ஆயினும் நம்பிக்கையின் சதவிகிதம் மற்றதைவிட அதிகமாக இருந்தது. ஸ்டேஷனுக்கு வெளியே வந்து... சென்னை மண்ணை மிதித்தோம்.

கையிலும், பையிலுமாக மொத்தம் ஏழு ரூபாய் இருந்தது. ஒரு ரூபாய் ஐம்பது காசில் ஒரு டாக்ஸி பிடித்து ராயப்பேட்டை வந்தோம். புலவர் பண்ணன் வீட்டில் பத்து நாட்கள் தங்கினோம்.

ddசாந்தோம் ஸ்கூலில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தேன். ஸ்கூலுக்கு அருகிலேயே முத்து கிராமணி தெருவில் 25 ரூபாய் மாத வாடகையில் வீடுபிடித்தோம். சக வாத்தியார் ரத்தினசாமி தன் வீட்டு பகுதியிலேயே இந்த வீட்டை பார்த்துக் கொடுத்தார். அட்வான்ஸ் தொகையாக ஒருமாத வாடகையான 25 ரூபாயையும் ரத்தினசாமிதான் கொடுத்தார்.

நான் குடும்பத்துடன் சென்னை வந்துவிட்ட தையும், ஆசிரியர் பணியில் சேர்ந்திருப்பதையும் சங்கரிடம் சொன்னேன். மகிழ்ச்சி தெரிவித்தார். விரைவில்... திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத்தருவதாகவும் சொன்னார்.

""புலவரே... சிவாஜி சார் நடிக்கிற படம் ஒன் றுக்கு பாட்டெழுத உங்களை சிபாரிசு செஞ்சிருக் கேன்... போய்ப் பாருங்க...''’’ என்றார் சங்கர்.

தயாரிப்பாளர் பெரியண்ணனின், தயாரிப்பு நிறுவனமான சாந்தி ஃபிலிம்ஸ் அலுவலகத்திற்குச் சென்றேன்.

பிரபல மியூஸிக் டைரக்டர் சுதர்ஸனம்... பாடல் கம்போஸிங் செய்துகொண்டிருந்தார். ஒரு சிச்சுவேஷனைச் சொல்லி பாட்டெழுதச் சொன் னார். நான் அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்து சில பல்லவிகளையும், சில சரணங்களையும் எழுதிக் கொடுத்தேன். வாங்கிப்பார்த்த சுதர்ஸனம்... மாற்றி எழுதச் சொன்னார்.

பலமுறை நான் மாற்றி மாற்றி எழுதிக் கொடுத்தும்... அவருக்கு திருப்தியில்லை. அதாவது... என்னை பாடலாசிரியராக அறிமுகப்படுத்துவதில் சுதர்ஸனத்திற்கு விருப்பமில்லை என்பதை உணர்ந்தேன். அதனால்தான் நான் சிறப்பாக எழுதிக்கொடுத்தும் அவர் தட்டிக்கழித்தார்.

""தேவைப்பட்டா உங்களை கூப்பிட்டுக் கிறேன்'' என சுதர்ஸனம் சொல்லிவிட... ஏமாற்றத் துடன் கிளம்பினேன். பாட்டு ஓ.கே. ஆகாத பதட் டத்தில் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. துவண்டு போய் வீட்டிற்கு வந்தேன். என் புலம்பலைப் பார்த்துவிட்டு... என் மனைவி என்னை சமாதானப் படுத்தினாள்.

நாட்கள் நமக்காக நிற்குமா? ஓடிக்கொண்டி ருந்தது. பல வீடுகள் மாறி... ராயப்பேட்டை வீரபத்திரன் தெருவிற்கு குடிவந்தோம். வறுமையும் எங்களுடனேயே வீடு மாறிக்கொண்டிருந்தது.

அந்தச் சமயம் என் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு... ராயப்பேட்டை ஜி.ஹெச்.சில் அட்மிட் ஆனேன். ஒரு மாதம் மருத்துவமனை படுக்கையில் கிடந்தும்... உடல் நலம் திரும்பவில்லை.

மகனை கையில் பிடித்துக்கொண்டும், மகளை இடுப்பில் வைத்துக்கொண்டும்... தினசரி... வீட்டுக்கும், மருத்துவமனைக்கும் நடையாய் நடந்தாள் என் மனைவி.

ஒருநாள்....

“இவரு இனி உயிர் பிழைக்கிறது கஷ்டம் தான்...’’ என என்னைக் குறிப்பிட்டு வார்டு முழுக்க பேச்சாக இருந்திருக்கிறது. அந்த அதிர்ச்சியிலேயே என்னைப் பார்த்துப் பேசிய என் மனைவி.... கண் களில் நீர் கசிய... குழந்தைகளோடு வீட்டுக்கு கிளம்பினாள்.

தினமும் என்னை மருத்துவமனையில் வந்து சந்திக்கும் என் மனைவியின் மனநிலைக்கும், இப் போது வந்து பார்த்தபோது இருந்த மனநிலைக்கும் வித்தியாசத்தை என்னால் உணரமுடிந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக எனக்குள் ஒரு உள்ளுணர்வு உறுத்தியது.

என் பெட்டுக்கு எதிர் பெட் நோயாளி... நன்கு குணமடைந்து... ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகவிருந்தார். அதனால்.... வார்டைவிட்டு வெளியே போய்வருவார். அவரை அழைத்து.... “ஐயா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். என் மனைவியை சந்திச்சு.... “உங்க வீட்டுக்காரர இன்னும் சில நாட்கள்ல டிஸ்சார்ஜ் பண்ணீரலாம்னு டாக்டர் சொல்லீருக்கார்னு சொல்லணும்...''’ என்றேன். வீட்டு முகவரியும் கொடுத்தேன்.

என் தவிப்பைப் புரிந்துகொண்ட அந்த நபர்... “""இப்பவே போய் சொல்லிட்டு வர்றேன்'' எனக் கிளம்பினார்.

காபி போட்டு குழந்தைகளுக்கு கொடுப்ப தற்கும், தான் குடிப்பதற்கும் தயாராகிக் கொண்டி ருந்திருக்கிறாள் என் மனைவி. பால் கலந்த அந்த காபியில் பால்டாயிலும் கலந்திருந்தது....

(சொல்கிறேன்)