"புல்லட்டெல்லாம் இல்லீங்க... வெத்து தோட்டா'' என்கின்றன பெரியகுளம் இள வட்டங்கள்.
புல்லட் நாகராஜன், வயது 52. மனைவி சுசிலா ஒரு துணை நடிகை. இரண்டு மகன்களோடு சென்னையில் வசிக்கிறார். தொடர்பில்லை. ஆனாலும் மனைவியின் பெயரை இடது கை தோள்பட்டை இறக்கத்தில் பச்சை குத்தியிருக்கிறார் புல்லட்.
1995இல் தேனியில் 5 பவுன் தாலி சங்கிலி அறுத்ததுதான் புல்லட் நாகராஜன் மீது பதிவான முதல் வழக்கு. அன்று தொடங்கி இந்த சங்கிலி பறிப்புத் தொழிலைத்தான் தொடர்ந்து 23 வருடங்களாக செய்துகொண்டிருந்தாராம் புல்லட். மொத்தம் 71 வழக்குகளில் பல ஊர் சிறைகளைப் பார்த்தவர் புல்லட். ஒருமுறை சிறையிலிருந்து கோர்ட்டுக்குப் போகும்போது சாகக் கிடக்கும் தன் அம்மாவை பார்க்கணும் என போலீஸிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஒரு வீட்டுக்குள் நுழைந்து பின்பக்கமாக எஸ்கேப்பான புல்லட் நாகராஜனின் ஸ்டைல்தான் "மருதமலை' படத்தில் அர்ஜுனையும் வடிவேலுவையும் வைத்து சூப்பர்ஹிட் ஜோக்கானது.
புல்லட் நாகராஜனின் அண்ணன் முருகன், தன் மனைவி மஞ்சுளாவைக் கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனை பெற்று மதுரை சிறையில் இருந்தார். 25.8.18 அன்று விடுதலையாகி வெளியே வந்த முருகன், தன் தம்பி புல்லட் நாகராஜனிடம் ""தம்பி மதுரை ஜெயில்ல தூக்க மாத்திரை கேட்டதுக்கு போட்டு அடியடினு அடிச்சாங்கடா'' என்றாராம். அந்தக் கோபத்தில்தான் மதுரை சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளாவுக்கும், தேனி மாவட்ட ஆட்சியருக்கும், தேனி எஸ்.பி.க்கும் செல்போன் மிரட்டல் ஆடியோக்களை அனுப்பியது.
""சிறைச்சாலைக்கு சம்பந்தமே இல்லாத பெரியகுளம் தென்கரை காவல்நிலைய ஆய்வாளர் மதனகலாவுக்கு எதற்கு மிரட்டல் ஆடியோ அனுப்பினாய்?'' என்று கேட்டதற்கு, ""சங்கிலி பறிக்கும் என் தோஸ்த்துகள் பலரை இரக்கம் இல்லாமல் பிடித்து உள்ளே போட்டுவிட்டார் அவர்... அதற்காகத்தான்'' கூலாகச் சொல்லியிருக்கிறார் புல்லட்.
மிரட்டல் ஆடியோக்களை அனுப்பியதும், புல்லட் நாகராஜனைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைத்தார் மதுரை மாநகர ஆணையர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம்.
10-9-18 பந்த் நாளில் பெரியகுளத்தில், ஓ.பி.எஸ்.சின் டீக்கடை அருகில் ஏ.டி.எஸ்.பி. சுருளிராஜன், தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலா, ஏட்டையா காசிராஜன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஒரு சந்துக்குள் இருந்து, ஹெல்மெட் இல்லாமல் டூவீலரில் வந்த புல்லட் நாகராஜனை ஏட்டையா காசிராஜன் பார்த்துவிட்டார். அவர் துரத்த, ஜீப்பில் ஏ.டி.எஸ்.பி.யும் இன்ஸ்பெக்டரும் துரத்தினார்கள். அரை கி.மீ. தொலைவில் அகப்பட்டார் புல்லட். பிடரியில் போட்டு தென்கரை காவல்நிலையத்திற்குக் கொண்டுசென்றார்கள் பிரம்மாண்டமாக பில்டப் செய்யப்பட்ட புல்லட் நாகராஜன் என்ற சங்கிலித் திருடனை.
-சக்தி