"காங்கிரஸ் இல்லா புதுச்சேரி' என்ற இலக்குடன் கடந்த ஓராண்டாகவே களமிறங்கியுள்ள பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையையும் தற்போது ஆரம்பித்துள்ளது. அவர்களின் பிடிக்குள் சிக்கியுள்ளார் அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நமச்சிவாயம்.

2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் 15 இடங்களை காங்கிரஸ் பிடித்த நிலையில், தேர்தலில் நிற்காத நாராயணசாமி டெல்லியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி முதலமைச்சரானார்.

pondy

ஒருவருக்கு ஒரு பதவி என்கிற காங்கிரஸின் கோட்பாட்டின் படி கடந்த 2020 மார்ச்சில் நமச்சிவாயத்தின் கட்சித் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, நாராயணசாமியின் ஆளான காரைக்காலை சேர்ந்த ஏ.வி.எஸ். சுப்பிரமணியம் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதிருப்தியடைந்த நமச்சிவாயம், ஆட்சிமுடியும் தறுவாயில் காங்கிரசிலிருந்து விலகுவதாக முடிவெடுத்து கடந்த 25-ஆம் தேதி சட்டசபைக்கு சென்று சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவருடம் ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தானும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

ஜனவரி 27-ஆம் தேதி பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்த நமச்சிவாயம், கையோடு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து புதுச்சேரியில் தாமரை மலர தன்னாலான பணிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் “ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் அரசியல் விளையாட்டை ஆடத் தொடங்கியிருக்கும் பா.ஜ.க., காங்கிரஸிலிருந்து ஆட்களை இழுக்கும் திட்டத்தின் அடுத்தகட்டமாக நமச்சிவாயத் தின் செல்வாக்குக்கு உட்பட்ட சில எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளையும், அதிருப்தியாளர்களையும் வளைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா பங்கேற்கும் கூட்டம் 31-ஆம் தேதி புதுச்சேரியில் நடக்க உள்ளது. அக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்தும் முக்கிய நிர்வாகி கள், முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகளை இணைக்க உள்ளனர்.

இந்த நெருக்கடியான சூழலில் கடந்த 24-ஆம் தேதி புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ""கட்சியில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதனை அமர்ந்து பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். பா.ஜ.க.வின் ஜம்பம் புதுச்சேரியில் பலிக்காது. பா.ஜ.கவில் இணைபவர்கள் விரைவில் காணாமல் போய்விடுவார்கள்'' என்று பேசி நிர்வாகிகளை தன்வயப்படுத்த முயற்சித்தார். பா.ஜ.க.வின் கரன்ஸி, பதவி, மத்திய ஆளும்கட்சி என்ற மும்முனை ஈர்ப்பை, புதுச்சேரி காங்கிரஸ்காரர்கள் தாக்குப்பிடிப்பார்களா… இனிமேலும் பெருந்தலைகள் அணிமாறாமலிருக்க காங்கிரஸ் என்ன வியூகத்தை மேற்கொள்ளப்போகிறது?

Advertisment