கொரோனா தாக்குதலில் புதுச்சேரியும் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் ஜூன் 5 அன்று சட்டமன்ற வளாகத்தில் செய்தி யாளர்களை சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டிய படியே, காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் நிலவுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு அமைச்சர்கள் எந்தவித மறுப்பும் தெரிவிக்காத பலவீனமான அரசாக இந்த அரசு செயல்படு வதைவிட முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசு பதவி விலக வேண்டும் எனவும் சந்தடி சாக்கில் ஆட்சி மாற்ற ஆலோசனை(!)யை தெரிவித்தார்.

pondy

ஏற்கனவே பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கொடுத்து ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

நாராயணசாமியின் நம்பிக்கைக்கு உரியவரான முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.வோ, வருகின்ற 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் மக்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து (3லட்சத்து 50 ஆயிரம்) ரேஷன் அட்டை தாரர்களுக்கும் தலா ரூ .10,000 ரூபாய் வழங்கலாம். இதற்கு ரூ. 350 கோடி மட்டும் தான் தேவைப்படும் . இந்த வருடத்திய பட்ஜெட் திட்ட செலவுகளுக்கு ஒதுக்கப்படும் உத்தேச தொகை ரூ. 2500 கோடியில், ரூ. 350 கோடியை நேரடி பணம் மாற்றம் மூலம் மக்களுக்கு சென்றடைந்தால் கொரோ னாவால் பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் ஓரளவிற்கு மீள்வார்கள். எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு திட்டங்களை தவிர வேறு அனைத்து அடிப்படை கட்டமைப்பு திட்டங்களையும் ஓராண்டிற்கு தள்ளி வைத்து விட்டு இதை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல ஆலோசனைகளை முதலமைச்சரிடம் மனுவாக அளித்ததுடன் பொது வெளியிலும் அதனைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Advertisment

முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்த துணை சபாநாயகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான எம்.என்.ஆர்.பாலனும் ஊடகங்களிடம் பேசும்போது, “அதிகாரிகளை சரியாக வேலை வாங்கவில்லை என அதிருப்தி வெளியிட்டார். விஜயவேணி, தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் பெயர்களும், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் பெயர்களும் அதிருப்தி லிஸ்ட்டில் அடிபடுகிறது.

இந்த திடீர் போர்க்கொடிக்கு என்ன காரணம்? “துணை சபாநாயகராக உள்ள பாலன், அமைச்சர் பதவிகள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். அதன்மூலம் எம்.எல்.ஏக்களும் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும் எனத் திட்டமிடுகிறார். பதவியில் இருந்து பலன் பார்க்கும் அமைச்சர்கள் இதை ஏற்பார்களா? அதுதான் எம்.எல்.ஏ.க்களை அதிருப்திக்குள்ளாக்குகிறது. தனவேலு ஏற்கனவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார். சீனியர் எம்.எல்.ஏவான லஷ்மி நாராயணன் ‘அரசின் நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையீடு கூடாது’ என அரசுக்காக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தியவர். அவரும் அதிருப்தியடைய காரணம், வைத்தி லிங்கம் எம்.பி ஆனதும் சபாநாயகர் பதவி தனக்கு கிடைத்தால் கவுரவம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி சேர்மேன் பதவியும் கிடைக்கவில்லை. தனக்காக நெல்லித்தோப்பை விட்டுக்கொடுத்த ஜான்குமாரை காமராஜ் நகர் தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் முதல்வர். ஆனால் அவருக்கும் தொகுதியில் உள்ள முதல்வரின் ஆதரவாளர்களுக்கும் ஒத்துப்போக வில்லை. ஊரடங்கு விதிமீறல் வழக்கு ஜான் குமார் மீது பாய்ந்ததால் அவர் தன் வீட்டு வாசலில் இருந்த கட்சிக்கொடியை இறக்கும் அளவுக்கும் நிலைமை போயிருக்கிறது.

pondy

Advertisment

pondy

அமைச்சர் நமச்சிவாயத்தை பொறுத்த வரை காங்கிரஸ் தலைவர் பதவியை பிடுங்கியதால் கடுப்பில் உள்ளார். மல்லாடியோ தன் மீதான ஊழல் புகார்களை கிரண்பேடி துரிதப்படுத்தும் நிலையில் நாராயணசாமி ஆதரவாக இல்லை எனக் கருதுகிறார். இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க அமைச்சர் கந்தசாமி அடுத் தது முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என நினைத்து காங்கிரஸ் கட்சி எம்.எல். ஏக்களை கூட கண்டுகொள்ளாமல் தினமும் ஆட்சிக்கு எதிராக அறிக்கை விடும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி பாண்டியன் மற்றும் சில என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க எம்.எல்.ஏக்களிடம்தான் நெருக்கமாக இருக்கிறார் எனும் கடுப்பு வேறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு என்கின்றனர் புதுச்சேரி அரசியல் பார்வையாளர்கள்.

முன்னாள் முதல்வர் என்.ஆர்.காங்கிரஸ் இதனை தனக்கு சாதகமாக்க காய் நகர்த்துகிறார். பா.ஜ.கவோ அமித்ஷாவின் ஆலோசனைப்படி ஆட்சி மாற்றத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ என்.எஸ். ஜெ.ஜெயபால், அ.தி.மு.க எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் ஆட்சி கவிழ்ப்புக்காக பேரம் பேசப்பட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயவேணி சபாநாயகரிடம் புகார் அளித்தார். தற்போது கொரோனா ஊரடங்கிலும் ஆரோவில்லில் முகாமிட்ட பா.ஜ.க. புள்ளிகள் இதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டனர். சட்ட மன்றத் தேர்தலுக்கு முன் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கக்கூடாது என்பதுதான் வியூகம்.

புதுதில்லிக்கும், புதுச்சேரிக்குமாக அரசியலில் பல அவதாரங்களை எடுத்தவர் முதல்வர் நாராயணசாமி. இந்த முறை என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

-சுந்தரபாண்டியன்