தென்னிந்தியாவின் கோவா என வர்ணிக்கப்படும் புதுச்சேரி, இளசுகளின் சுற்றுலா தலமாக மாறிவிட்டது. வார இறுதிநாட்களில் தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள், ஐ.டி. ஊழியர்கள், கல்லூரி மாணவ- மாணவியர்கள் குவிகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் சென்னை மகாபலிபுரத்தில் நடத்திக்கொண்டிருந்த கம்பெனி மீட்டிங்குகளை தற்போது புதுச்சேரியில் நடத்த துவங்கியுள்ளன. காரணம், இங்கு சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை, இரவெல்லாம் பார்ட்டி நடத்தலாம், மது, மாது, போதை வஸ்துகள் சாதாரணமாகக் கிடைக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய உள்ளூர் பிரமுகர்கள் இருவர், "திருமணம் உட்பட சுப நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ரூம் புக்செய்யச் சென்றால் வாடகையைக் கேட்டு மயக்கம்வருகிறது. சாதாரண அறையின் வாடகையே 2000 என்கிறார்கள். பெரிய ஹோட்டல்களில் 5000, பீச் ரெஸார்ட்களில் 10,000 என்கிறார்கள். வார இறுதி நாட்களில் இது கூடுதலாகிவிடுகிறது. என்ன இவ்ளோ வாடகை எனக் கேட்டால்? நீயெல்லாம் எதுக்கு வர்ற என்பதுபோல் பார்க்கிறார்கள், உள்ளூர்க்காரனை மதிப்பதில்லை. சமீபத்தில் ஒரு நண்பர் சென்னையிலிருந்து குடும்பத்துடன் வாரஇறுதி நாளில் புதுவை வந்து சுற்றிப்பார்த்து ஒருநாள் இரவு தங்கிவிட்டுச்செல்ல ஆசைப்பட்டார். பேமிலி அறை கேட்டபோது, நாள் வாடகை 10 ஆயிரம் எனச் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சி யாகிவிட்டார். இதனால் ஒன்டே ட்ரிப்பாக காலை யில் வந்து இரவு புறப்பட்டு சென்றுவிட்டார். இங்கு நடுத்தரவர்க்க சுற்றுலாப்பயணிகள் அறையெடுத்துத் தங்கவே பயப்படுகிறார்கள்.
இளைஞர்கள் கேங்காக வந்து விடியற்காலை வரையிலான பார்ட்டி முடிந்ததும் காரை பார்க் செய்துவிட்டு பீச் ரோட்டிலேயே ஹாயாக படுத்து உறங்கிவிட்டு காலையில் ஊர் சுற்றிவிட்டுச் செல்கிறார்கள். பெங்களுரூவில் இருந்துவந்த கல்லூரி இளைஞர்கள், ஹோட்டல் அறை வாடகையைக் கேட்டு அதிர்ச்சியானவர்கள், தங்களுடன் கேர்ள்ஸ் இருந்ததால் ஒரு ரூம் எடுத்து அவர்களுக்கு மட்டும் தந்துவிட்டு இவர்கள் காரிலேயே படுத்துறங்கினார்கள். இது மட்டுமல்ல புதுவை மற்றும் ஆரோவில் பகுதிகளில் ஹோட்டல் அறை மட்டுமல்ல, உணவு விலையும் தாறுமாறாக இருக்கிறது. ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளைப்போல சுற்றுலா பயணிகளைப் பார்த்ததும் விலையை தாறுமாறாக ஏற்றிவிற்கிறார்கள் பலரும். உள்ளூர் மக்கள் ஆசைப்பட்டு ஒருநாள் சாப்பிட லாமே என ஹோட்டல்களுக்குக்கூட செல்லமுடிவதில்லை. சாலையோர உணவகங்கள்தான் ஓரளவு ரீசனான விலை வைத்துள்ளார்கள். இந்த கொள்ளைகளால் புதுவையில் இரண்டு நாள் தங்கிவிட்டு போகலாம் என வருபவர்கள்கூட ஒரேநாளில் ஓடிவிடுகிறார்கள். இதனால் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது, வேலைவாய்ப்பு குறைகிறது''’என கவலையுடன் பேசினார்கள்.
அதேநேரத்தில்... அறைகள் புக்காவ தில்லை, வருமானமில்லை, நஷ்டத்தை சமாளிக்கமுடியாததால் 100 ஹோட்டல்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாக சிறிய ஹோட்டல்கள் தரப்பிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் பரவியது.
இதுகுறித்து புதுச்சேரி ஹோட்டல்கள் சங்க தலைவர் பாஸ்கரிடம் கேட்டபோது, "சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பது இங்கு குறையவில்லை. சராசரியாக வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். முன்பைவிட அதிகமாக வருகிறார்கள். வாரஇறுதி நாட்களில் அதிகளவில் வாடகை உயர்த்தி வாங்குகிறோம் என்பது உண்மை யல்ல. எனது ஹோட்டலில் 200 சொச்சம் அறைகள் உள்ளன. சாதாரண நாட்களில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வாங்குகிறோம். அதுவே வாரஇறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மட்டும் 5 ஆயிரம் வாங்குகிறேன். மற்ற நாட்களில் தர்றதை தாங்க எனச்சொல்கிறோம். காரணம் என்னிடம் 125 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எஃப் கட்டுகிறோம், நல்ல சம்பளம் தருகிறோம், சி.சி.டி.வி. பாதுகாப்பு, அரசுக்கு செலுத்தவேண்டிய ஜி.எஸ்.டி வரி போன்றவை செலுத்துகிறோம். அதேபோல் சின்ன சின்ன ஹோட்டல்கள் அதிகமாகிவிட்டன. இதனால் ஹோட்டலில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. உணவு வருமானம்கூட எங்களைப்போன்ற பெரிய ஹோட்டல்களுக்கு கிடையாது. நெருக்கடி யில்தான் தொழில் செய்கிறோம். அரசாங்கத்திடம் பதிவு செய்யாமல் வீடுகளை தங்கும் விடுதிகளாக்கி வாடகைக்கு விடுகிறார்கள். எந்தவித பாதுகாப்பு வசதியுமில்லாத, சுத்தம் செய்யாத, ஒன்றிரண்டு பணியாளர்களை வைத்துக்கொண்டு விடுதி நடத்தும் அவர்கள் அரசுக்கு எந்தவித வரியும் கட்டுவதில்லை. வீட்டு சர்வீஸில் மின்சாரம் பயன்படுத்துகிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக நடத்தும் அவர்களால் தான் இங்கு சிக்கலே. வீடுகள் விடுதிகளாக மாறுவதால் பெரிய ஹோட்டல்களில் நட்டம் வருகிறது. சட்டவிதிகளை மீறி விடுதி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசுத் தரப்பிலிருந்து கூறியுள்ளார்கள்''” என்றார்.
புதுவை சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, "தற்போது பாண்டி மெரினா, ரூபி கடற்கரை, பேரடைஸ் பீச் என செயற்கை கடற்கரைகளால் அழகு பெற்று மிளிர்கிறது. இரவுநேரக் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் புதிதாக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தங்கும் ஹோட்டல்கள் மூடப்படும் நிலையில் உள்ளது என்பது அரசுமீது அவதூறு பரப்ப சொல்லப்படுவது''’ என்கிறார்கள்.
எளிய மக்கள் விரும்பி வந்து சுற்றிப் பார்த்த ஊர், இப்போது வசதியான சுற்றுலா பயணிகளுக்கான ஊராக மாறிக் கொண்டிருக்கிறது.