சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடியுடனான மல்லுக்கட்டுக்கு நடுவே, ஜூலை 20ந் தேதி 9000 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் நாராயணசாமி.
""மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே கூட்டத்தொடர் தொடங்குவதால் ஜனநாயக முறைப்படி ஆளுநர் பங்கேற்கலாம்''’என்று கிரண்பேடிக்கு நாராயணசாமி அழைப்பும் விடுத்திருந்தார். அதற்கு கிரண் பேடி, ""யூனியன் பிரதேச சட்டப்படி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகே பட்ஜெட் தாக்கல் செய்யவேண் டும். எனவே, காலம்தாழ்த்தாமல் உடனடியாக சரியான கோப்புகளை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பு வேறு ஒரு தேதியில் சட்டப்பேரவை கூட்டலாமே'' என்று கேள்வியெழுப்பியிருந்தார். பட்ஜெட்டில் முதல்வர் நாராயணசாமி பல அறிவிப்புகளை வெளி யிட்ட நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ரொட்டி, பால் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, "கலைஞர் கருணாநிதி சிற்றுண்டி திட்டம்' செயல்படுத்தப்படும் என அறிவித்தது சட்டசபைக்குள்ளும், வெளியிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சட்டசபையிலேயே தனது எதிர்ப்பைத் தெரிவித்த அ.தி.மு.க சட்டப்பேரவை கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ, ""புதுச்சேரியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலைவைக்க கோரியதற்கு நடவடிக்கை யில்லை. தி.மு.க.வை மகிழ்ச்சிப்படுத்த ராஜீவ் பெயரிலான திட்டத்தை கருணாநிதி பெய ருக்கு மாற்றியுள்ளீர்கள். அரசு நிர்வாகத்தை தி.மு.க.விடம் அடகுவைக்காதீர்கள்'' எனக்கூறி வெளிநடப்பு செய்தனர். அதேசமயம் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்தன், வெங்கடேசன் ஆகியோர் 'அ.தி.மு.க உறுப்பினர்கள் கலைஞரை அவமதித்துப் பேசியதையும், அதனை கண்டிக்காத அமைச்சர்களைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.
மங்களம் தொகுதி முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் முரளிதரன், ""கடந்த 20-ஆம் தேதி ராஜீவ் காந்தி சிலை அருகே தீப்பந்தம் ஏற்றி காலைச் சிற்றுண்டி திட்டத்துக்கு ராஜீவ் பெயர் வைக்கப்படா ததற்கு கண்டனத்தை தெரிவித்தார். தி.மு.க எம்.எல்.ஏ சிவா, ஏற்கனவே கலைஞர்க்கு சிலை அமைக்க குழு அமைக்கப்பட்டதோடு எந்த நடவடிக்கையும் இல்லை. 2 சாலைகளுக்கு பெயர் சூட்டுவதாக சொன்னார்கள். அதுவும் என்ன ஆனதென தெரியவில்லை. அ.தி.மு.க. வுடன் ஆளுந்தரப்பினர் சிலர் ரகசிய தொடர்பு வைத் திருக்கிறார்கள். அதனால்தான் வெளிநடப்பு செய் தோம்'' என்கிறார். முதல்வர் நாராயணசாமியோ, ""ராஜீவ்காந்தி பால்வள திட்டத்தில் காலையில் ரொட்டி, பால் வழங்கப்படும், கலைஞர் சிற்றுண்டித் திட்டத்தில் காலை உணவில் இட்லி, கிச்சடி வழங்கப்படும். இதில் மாணவர்கள் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் தேர்வுசெய்து பயன்பெறலாம். மற்றபடி இதை அரசியலாக்க வேண்டாம்'' என விளக்கமளிக்கிறார்.
-சுந்தரபாண்டியன்