மிழ்நாட்டின் 39 தொகுதிகளோடு புதுச்சேரி எம்.பி. தொகுதியும் தனிக்கவனம் பெறுகிறது. காங்கிரசில் சபாநாயகர் வைத்திலிங்கம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.எஸ் சுப்ரமணியம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வைத்திலிங்கம் அறிவிக்கப்பட்டார். அமைச்சர், முதலமைச்சர், சபாநாயகர் என மாநிலத்தின் முக்கியமான பதவிகள் வகித்த வைத்திலிங்கத்திற்கு மத்திய அமைச்சராகவும் ஆக வேண்டும் என்பது 35 ஆண்டுகால அரசியல்வாதியின் நீண்டகால விருப்பம்.

p

தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி நிர்வாகியும், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கேசவனின் மகனுமான 29 வயது நாராயணசாமிதான் வேட்பாளர் என முடிவெடுத்து வைத்திருந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, காங்கிரஸ் யாரை அறிவிக்கிறார்கள் என கடைசி வரை காத்திருந்து அறிவித்தார்.

கடந்த 2014 தேர்தலில் வெற்றிபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் 2,55,826 வாக்குகள் பெற்றுள்ளது. அதனுடன் அ.தி.மு.க. + பா.ம.க. வாக்குகள் சேரும்போது பலம் அதிகரிக்கிறது. அதேசமயம் காங்கிரஸ் 1,94,972 வாக்குகள் பெற்றுள்ளது. அதன் தற்போதைய கூட்டணிக் கட்சிகளான தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் வாக்குகள் சேர்ந்தாலும் பெரிய பலம் இல்லை. ஆனாலும் 2016 சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுக்கு ஓட்டு சதவீதம் குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை பொறுத்தவரை எந்த கெட்ட பெயரும் இல்லாதவர் என்கிற ‘இமேஜ்’ உள்ளது. அதேசமயம் மைனஸ் பணம். கட்சி தலைமையும், அமைச்சர்களும் அவருக்காக செலவழிக்க வேண்டியிருக்கும். இது முணுமுணுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

p

அதேசமயம் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு பிளஸ் பணமும், வன்னியர் சமூக வாக்குகளும் மருத்துவக் கல்லூரி சேர்மன் என்பதால் பணத்தை தாராளமாக செலவிடுவார் என்றே ரங்கசாமி, நாராயணசாமியை நிறுத்தியிருக்கிறார். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கூட்டணி பலத்தையும் நம்பியுள்ளார்.

Advertisment

காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம் தனது கட்சி வேட்பாளர்களுக்காக தீவிரமாக களமிறங்கினால் வன்னியர் வாக்கு வங்கியையும் காங்கிரசுக்கு கவரலாம். கூட்டணியில் தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ.க்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் தெற்கு மாநில அமைப்பாளர் சிவக்குமாருக்கு கொடுப்பதில்லை என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம். இதை சரிப்படுத்த வேண்டியவர் முதல்வர் நாராயணசாமி.

ஆட்சியில் அமர்ந்த மூன்று ஆண்டுகளில் பெரிய திட்டங்கள் எதையும் செய்யவில்லை. கிரண்பேடியுடன் சண்டை போட்டுக்கொண்டு மாநிலத்தின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளி விட்டனர் என்கிற பிரச்சாரத்தை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி எடுத்து செல்கிறது. ஆனால் கிரண்பேடி மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாக இருந்துகொண்டு வேண்டுமென்றே காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த குடைச்சல்கள் கொடுத்து வருகிறார். அவருக்கு ரெங்கசாமியும் ஆதரவு கொடுத்து மாநிலத்தில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாமலும், நிதி ஒதுக்காமலும் வஞ்சனை செய்து வருகின்றனர் என காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது.

அ.ம.மு.க. சார்பில் தமிழ்மாறன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் முத்தியால்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பரமணியன், நாம் தமிழர் கட்சி சார்பில் பரிதாபேகம், புதுச்சேரி வளர்ச்சி கட்சி பாஸ்கரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து, மத்திய நிதிக்குழுவில் சேர்த்தல், சென்னை-புதுவை ரயில் திட்டம், புதுச்சேரி துறைமுகம் முழுமைப்படுத்தல், 8420 கோடி கடனை ரத்து செய்தல் என மாநிலத்தின் முக்கியமான பிரச்சினைகள் தேர்தல்களத்தில் எதிரொலிக்கும்.

-சுந்தரபாண்டியன்