"காங்கிரஸ் இல் லாத இந்தியா' என்று செயல்பட்டுவரும் மத்திய பா.ஜ.க. அரசு, யூனியன் பிரதேசமான புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களை வளைத்து காங்கிரஸ் ஆட்சியை பெரும்பான்மை இழக்கச் செய்துள்ளது. அகில இந்தியாவிலும் கோலோச்சிய காங்கிரஸ், ராஜஸ்தான், பஞ்சாப் என விரல்விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களிலேயே ஆட்சியில் உள்ளது.
அரசியலில் எதற்கும் ஒரு விலையுண்டு என்பதை தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் பா.ஜ.க., மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர்களை வளைத்ததுபோலவே, புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர்களையும் கடந்த சில வாரங்களாக வளைத்து வருகிறது.
கடந்த சில வாரங் களுக்கு முன்பு, புதுச்சேரி காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைச்சரவையில் இரண்டாவது நிலை அமைச்சராக இருந்த நமச்சிவாயத்தை வளைத்தது பா.ஜ.க. அதையடுத்து அவர் தனது அமைச்சர், எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார். அவருடன் ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந் தானும் ஜோடிசேர்ந்து கொண் டார். அதேபோல் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் கடந்த 15-ஆம் தேதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
25 ஆண்டு காலம் எம்.எல். ஏ.வாக பணியாற்றிய மல்லாடி அரசியலிலிருந்தே விலகப் போவதாக அறிவித்ததோடு, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பிவைத்தார். அதனைத் தொடர்ந்து காமராஜ் நகர் எம்.எல்.ஏ. வாக இருந்த ஜான்குமார் 16-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தத் தொடர்ந்த அடிகளால் நாராயணசாமி திக்குமுக்காடி போய்விட்டார்.
மல்லாடி கிருஷ்ணராவுக்கும் கிரண்பேடிக்கும் ஆரம்பம் முதலே ஒத்துப்போக வில்லை. அதனால் "அமைச்சர் பதவி ராஜினாமா' , "அரசியல் துறவறம்' என அறிவித்த அவர் டெல்லி பா.ஜ.க தலைவர்களை சந்தித்து எம்.எல்.ஏ. பதவி ராஜினாமாவுக்கு ஒத்துக்கொண்டார். அவரது ஒரே கண்டிஷன் "கிரண்பேடியை புதுவையி லிருந்து மாற்றவேண்டும்' என்பது தானாம். மல்லாடி, நமச்சிவாயம் இருவரின் அமைச்சர் பதவி காலியானதில், நாராயணசாமியால் ‘பெற்றெடுக்காத பிள்ளை’ என அழைக்கப்பட்ட ஜான் குமார், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து, நாராயணசாமியிடமிருந்து ‘க்ரீன் சிக்னல்’ கிடைக்காததால் பா.ஜ.க வலையில் வீழ்ந்து விட்டார்.
2016 சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 15 உறுப்பினர்கள் கிடைத்தனர். தி.மு.க உறுப்பினர் 2, சுயேட்சை 1 என 18 உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 11 ஆகக் குறைந்துள்ளது. புதுச்சேரி மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை வாக்குரிமை கொண்ட நியமன எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 29 ஆக உள்ள நிலையில் 15 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் காங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும்.
சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, ""மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி புதுச்சேரி அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டுள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவெடுத் துள்ளோம்'' என்றார். ஆனால் முதலமைச்சர் நாராயணசாமியோ ‘""நாமாக ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? இன்னும் ஒரு மாதத்தில் முடியப் போகிற ஆட்சி. அவர்களாகவே எது செய்தாலும் செய்யட்டும். ஆட்சியைக் கவிழ்த்தால் அதை முன் வைத்து தேர்தலை சந்திக்கலாம்''’என கருதுகிறாராம்.
இதனிடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை நீக்கி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதலாக புதுச்சேரி துணை ஆளுநர் பொறுப்பை குடியரசுத் தலைவர் கொடுத்துள்ளார். கிரண்பேடி பொறுப்பேற்கும்போது, ‘""இரண்டு ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்தை விட்டு சென்றுவிடுவேன்'' என்று கூறினார். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக பேடி நாராயணசாமியுடனும், நாராயணசாமி பேடியுடன் சண்டைபிடிக்காத நாளே இல்லை என்பதைப்போல மோதிக்கொண்டிருந்தனர்..
ராஜினாமா செய்த மல்லாடி, ஜான்குமார் மட்டுமல்லாது என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க என எல்லோருமே கிரண்பேடி மாற்றப்படவேண்டும் என மத்திய பா.ஜ.கவிடம் கோரிக்கை வைத்தார்கள்.
பா.ஜ.க. அணிசேர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கப்போகிறதா… இல்லை தனக்கு உகந்த சூழல் வரும்வரை ஆளுநர் ஆட்சியிலே பாண்டிச்சேரியை வைத்துவிட்டு, தாமதமாக தேர்தலை அறிவிக்கப்போகிறதா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி என்ன வியூகம் வகுக்கப்போகிறார், தி.மு.க.வுக்கு புதுச்சேரி முதல்வர் நாற்காலிமேல் ஆசையிருக்கிறதா என அனைத்தும் இனிதான் தெரியவரும்.
அடிபட்ட புலியாக காங்கிரஸ் சிலிர்த் தெழுந்து தேர்தலை சந்திக்கப்போகிறதா… அல்லது முக்கியப் பிரமுகர்கள் அணிமாறியுள்ள நிலையில் அது காலத்துக்கும் நொண்டிக்கொண்டிருக்கப் போகிறதா… என புதுச்சேரி காங்கிரஸ்காரர்கள் கவலை கலந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
பா.ஜ.க.வின் ஒவ்வொரு நகர்வையும் சமூக வலைத்தளங்களில் சூடாக விமர்சிக்கும் ராகுல்காந்தி, பிப்ரவரி 17-ல் புதுச்சேரிக்கு வருகை தந்த வேளையில் பா.ஜ.க. தனது ஆட்டத்தை ஆடியிருக்கிறது.