பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, இரட்டை குடியுரிமை, வாக்குரிமை அடிப்படையில் இந்திய யூனியன் பிரதேசமாக இணைந்தது. ஆனாலும், நிதிநெருக்கடியில் சிக்கி தவித்த புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து வேண்டும் என்பது நெடுநாள் அரசியல் கோரிக்கை. இதை மையமாக வைத்து என்.ரங்கசாமி தனிக்கட்சி தொடங்கி, 2011-ல் ஆட்சியைப் பிடித்தார். அதன்பிறகு, அந்தக் கோரிக்கையை வலியுறுத்தாமலேயே விட்டுவிட்டார்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற கிரண்பேடி மாநிலத்தை ஆளும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். எனவே, முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி கைவிட்ட தனிமாநில கோரிக்கையை முதல்வர் நாராயணசாமி கையிலெடுத்துள்ளார். 20-க்கு மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளார்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைத்துவிடுமா?’
நாராயணசாமி -புதுச்சேரி முதல்வர்
""தொடக்கத்தில் மத்திய அரசு புதுச்சேரிக்கு 42 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியைக்கொண்டு புதுச்சேரி மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடிந்தது. பின்னர் மத்திய அரசு, நிதியை பாதியாகக் குறைத்தது. எனவே, புதுச்சேரி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வளம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற அரசிடம் நிதியில்லை. நிதி கேட்கும்போதெல்லாம் "யூனியன் பிரதேசத்திற்கு இவ்வளவுதான்' என மத்திய அரசு சொல்கிறது. ஆனால், ஜி.எஸ்.டி. வரி வசூலின் போது மட்டும் புதுச்சேரியை மாநிலமாக கருதுகிறது. நிதி ஒதுக்க கோரும்போதெல்லாம் எங்களை யூனியன் பிரேதசம் எனச் சொல்லி புறக்கணிக்கின்றனர்.
நிதிச் சிக்கலை சீர்செய்ய மாநில அந்தஸ்து பெறுவதுதான் ஒரே தீர்வாக இருக்கும் என சட்டமன்றத்தில் விவாதித்து, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்தோம். மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை வைத்து திரும்பினோம். ஏற்கனவே யூனியன் பிரதேசங்களாக இருந்த பகுதிகளுக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி புதுச்சேரிக்கும் அதேபாணியில் மாநில அந்தஸ்து கொடுக்கும்படி கேட்டுள்ளோம். தனி மாநில அந்தஸ்துக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் புதுச்சேரிக்கு உள்ளதால் எங்களது கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறோம். யார் எதிர்த்தாலும் எங்களது கோரிக்கை நிறைவேறும்வரை எங்களது முயற்சி தொடரும்''.
ராமச்சந்திரன் -மாஹே தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (சுயேட்சை)
""புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி மக்கள் தமிழும், மாஹே பகுதியில் மலையாளமும், ஏனாம் பகுதியில் தெலுங்கும் பேசி வருகின்றனர். இந்த நான்கு பகுதிகளும் பூகோள அடிப்படையில் தமிழகம், கேரளம், ஆந்திரம் என மூன்று மாநில எல்லைகளுக்குள் தனித்தனியே பிரிந்துள்ளன. அதனால் புதுச்சேரியை தனி மாநிலமாக அறிவிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.
தற்போதைய ஆட்சியாளர்கள் வலியுறுத்தும் மாநில அந்தஸ்து கோரிக்கை எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை. ஒருவேளை மத்திய அரசு இசைவு தெரிவித்தாலும், ஒவ்வொரு உறுப்பினருடைய பலகட்ட விவாதங்களுக்குப் பின்னரே அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியும். இந்த விஷயத்தில் நான் என் தொகுதி மக்களின் விருப்பப்படிதான் செயல்படுவேன். இது சம்பந்தமாக புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் விவாதமும் எழுப்பப்படும்''.’
ஏனாம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மல்லாடி கிருஷ்ணராவ், தனி மாநில அந்தஸ்து குறித்து, அமைதிகாத்து வருவதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் டில்லி சென்றபோது, அந்தப் பயணத்திலும் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இப்படியென்றால், பா.ஜ.க.வின் புரோமோட்டராக செயல்படும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, “""புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் விரும்பவில்லை''’என்று தனது கருத்தை மக்கள் கருத்தாக கூறிவருகிறார்.
உண்மையாகவே கவர்னர் சொல்வதுபோல புதுச்சேரி மக்கள் மாநில அந்தஸ்தை விரும்பவில்லையா என்பதை தெரிந்து கொள்ள புதுச்சேரியின் பா.ஜ.க. தலைவர் சுவாமிநாதனிடம் பேசினோம். அவர், “""புதுச்சேரி மக்களுக்கு எது நல்லதோ, எது அவர்கள் விருப்பமோ அதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடும்''’என யதார்த்தமாக பதிலளித்தார்.
-சிவரஞ்சனி (இளம் பத்திரிகையாளர்)