தமிழ் பதிப்புத்துறையில் நீண்ட காலப் பாரம்பரியப் பெருமைமிக்கது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். நூற்றாண்டுப் பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த பதிப்பகத்தை, 1920ஆம் ஆண்டில், திருவரங் கம் பிள்ளை, வ.சுப்பையா பிள்ளை இருவருமாக இணைந்து, திருநெல்வேலியிலும் சென்னையிலு மாக தொடங்கினார்கள். சென்னையிலுள்ள நிறுவனத்தை வ.சுப்பையா பிள்ளை கவனித்துக் கொண்டார். 105 ஆண்டுகள் கடந்து வெற்றிகரமாக 5வது தலைமுறையாக தற்போது இந்நிறுவனத்தை சுப்பையா முத்துக்குமாரசாமி நிர்வகித்துவருகிறார்.
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமானது, அன்றைய காலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை அச்சிட்டு வழங்கி, தமிழ் மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது. தமிழ் இலக்கி யத்திலுள்ள நூல்கள் பலவற்றையும் பதிப்பித்து, தமிழ் மொழி ஆர்வலர்களிடமும், மாணவர்களிட மும் கொண்டுசென்ற பெருமைக்குரியது இந்நிறுவனம்.
இலக்கிய மாநாடுகளில் உரையாற்றவுள்ள தமிழறிஞர்களின் உரையை முன்கூட்டியே பெற்று, அவற்றை பதிப்பித்து, அம்மாநாடுகளிலேயே நூலாக வெளியிட்டு, தமிழ் மொழி வளர்ச்சியில் புத்தாக்க சிந்தனையுடன் செயல்பட்டது. இந் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மு.வரதராசனின் திருக்குறள் தெளிவுரை நூல், நூற்றுக்கும் மேற் பட்ட பதிப்புகள் கண்ட சாதனைக்குரியது. வ.சுப் பையா பிள்ளையின் பதிப்பத்துறை சாதனை களைப் பாராட்டி, மைய அரசானது, 1969ஆம் ஆண்டில் அவருக்கு, நம் நாட்டின் உயரிய விருது களில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.
இந்நிறுவனத்தின் நிர்வாகி சுப்பையா முத்துக்குமாரசாமியை சந்தித்தோம். "எங்கள் நிறுவனம், தமிழ் மொழி, தமிழர் நலனை தனது செயல்பாட்டின் ஒரு பகுதியாகவும், சைவ சித்தாந் தத்தை பரவச்செய்யும் நூல்களை பதிப்பிப்பது இன்னொரு பகுதியாகவுமாக, இரண்டையும் இரு கண்களெனக்கொண்டு செயல்பட்டுவருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு பாடநூல்களை பதிப்பித்து வந்த எங்களுக்கு, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு, மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள், துணைப்பாடங்கள் வெளியிடுவதற் கான தேவையில்லாமல் போனது. அதுநாள்வரை இந்நிறுவனத்துக்கு பாடநூல் விற்பனை வழியாக வந்துகொண்டிருந்த வருவாய் குறைந்துபோனது ஓர் இழப்பு தான். இருந்தபோதிலும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், மிகக்குறைந்த விலையில் மாணவர்களுக்கான நூல்களை வழங்கியது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
பதிப்பகத்துறையின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பபாசி, முதன்முதலில் ஹிக்கின் பாதம்ஸ் மாடியில் தான் செயல்பட்டது. பபாசி யால் நடத்தப்பட்ட முதல் புத்தகக் கண்காட்சி, 1977ஆம் ஆண்டில், அண்ணாசாலையிலுள்ள மதரஸா-இ-ஆசாம் பள்ளியில் நடந்தது. அதில் மொத்தம் 22 பதிப்பகங்கள் பங்கெடுத்தனர். அதன்பின் பல இடங்களில் நடைபெற்று, பின்னர் காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர், தற்போது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடர்ச்சி யாக நடத்தப்பட்டு வருகிறது.
புத்தகக் கண்காட்சியைப் பொறுத்தவரை, 2000ஆம் ஆண்டுக்கு முன்புவரை, சென்னையில் 10 நாட்கள் நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியில், 70,000 வரை பார்வையாளர்கள் பங்களிப்பு இருந்தது. தற்போது 900 அரங்குகளுக்கு மேல் பதிப்பாளர்கள் பங்கெடுக்கும் சூழலில், பார்வையாளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதேபோல் சர்வதேச புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட்டு, பல மொழி நூல்களின் மொழிபெயர்ப்புக்கான வழிவகை செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்.
கடந்த சில ஆண்டுகளாக, மாவட்டந் தோறும் புத்தகக்கண்காட்சியை நடத்துவதில், தமிழ்நாடு அரசு வெற்றிகண்டுள்ளது. அதேவேளை, இந்த கண்காட்சிகளில் தமிழ்ப் பதிப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள முடிந்ததா என்றால் கேள்விக்குறியே. பதிப்புத்துறையில், அலுவலகங்களையும், விற்பனைக்கூடங்களையும் வைத்து நடத்துபவர்களுக்கு அனைத்து கண்காட்சிகளிலும் கலந்துகொள்ள வாய்ப்பும் வசதியும் இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த கண்காட்சிகளில் நிறுவனமாகக் கலந்து கொள்ளும்போது நிர்வாகச்செலவு அதிகரிப்பது சிரமமாக உள்ளது. இந்நிலையில், மாவட்ட புத்தகக்கண்காட்சிகளில் கலந்துகொள்ளும் பதிப்பகங்களிடம் நூல்களைப் பெறுவதற்கு மாவட்ட நூலகங்களுக்கு ஆட்சியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையால் சில பதிப்பகங்கள் மட்டுமே பயனடைகின்றன. இதனை தவறென்று சொல்லிவிட முடியாது எனினும், முழுநேரப் பதிப்பகங்களாக செயல்படுபவர்களுக்கு பலன் கிட்டுவதில்லை. தங்கள் பதிப்பகங்களை நிர்வகித்துக்கொண்டே, மாவட்ட கண்காட்சிகளிலும் பங்கெடுப்பது, நிர்வாக ரீதியில் அவர்களுக்கு சவாலானதாக இருக்கிறது.
அடுத்ததாக, பொதுநூலகத்துறை நூல்களை தேர்வுசெய்து, எத்தனை படிகள் பெறுவதென்று ஆணை பிறப்பிப்பதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முந்தைய காலகட்டத்தில் நூலகத் தேர்வுக்குழு புத்தகங்களைத் தேர்வுசெய்து, 800, 1000 படிகளென்று வாங்குவார்கள். அதனால் பல்வேறு நூல்களை பதிப்பிப்பதில் பதிப்பாளர்கள் ஆர்வங்காட்டிவந்தார்கள். ஆனால் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், மிகக்குறைவான படிகள் எண்ணிக்கையில் நூல்கள் வாங்குவது பதிப்பகங்களுக்கு பெரிதும் பலனளிப்பதில்லை.
புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர் கள் மற்றும் பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக கலைஞரால் உருவாக்கப்பட்ட பதிப்பாளர் நல வாரியத்தின் செயல்பாட்டை தற்போதுள்ள அரசு மேலும் துரிதப்படுத்தினால், இவ்வாரியத்தில் உறுப்பினர்களாகவுள்ள அனைவரும் பெருமளவு பயனடைய முடியும் என்றும், முதல்வரும், கல்வித்துறை அமைச்சரும் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் பதிப்பகத்தினர் விரும்புகிறார்கள்'' என்று தெரிவித்தார்.
அரசு கவனத்தில் கொள்ளுமா?