ரு எழுத்தாளரால், எழுத்து மூலம் தன்னையும் தன் வலியையும் பிறருக்கு எளிதாகக் கடத்திவிடமுடியும். அப்படி ஒரு வலியைத்தான் பொதுவெளியில் கடத்தியிருக்கிறார், ஒரு பெண் எழுத்தாளர். அவருடைய மனக்குமுறல், அவரது வரிகளிலேயே..

"நீண்டகாலமாக உடலரசியல் புத்தகம் எழுதணும்னு இருந்தேன். புத்தகத்தை பப்ளிஷ் பண்ணணும்னு இருந்தேன். ஒரு பப்ளிகேஷன் முதலாளி அவர் பப்ளிகேஷனில் எழுத முடியுமா என்று கேட்டிருந்தார். சரி என்று அதைப்பற்றி பேச, ஒரு மாலில் காபி சாப்பிட்டுக் கொண்டு பேசலாம் என்று சம்மதித்திருந்தேன்.

புதிதாக மரியாதைக்குரிய பெரியவரை சந்திக்கச் செல்கின்றேன் என்று நல்ல நீட்டான சல்வாரில் துப்பட்டாவை எல்லாம் மடித்துப் போட்டுக்கொண்டு, மறைக்க வேண்டியதை எல்லாம் மறைத்துக்கொண்டு சென்றும், அவருடைய பார்வை அவ்வப்போது என் உடலை அளவெடுத்துக் கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது. என்னைவிட ஒரு இருபது வருடங்கள் மூத்தவராக இருக்கக்கூடும். இருந்தும் சுற்றி வளைத்து அவர் சொன்னது இதுதான். அவரின் உடல் தேவைக்கு நான் மனது வைக்க வேண்டும் என்று.

Advertisment

rr

இங்கு நான் உடலரசியல் எழுதுகிறேன். உடல் தேவை யைப் பற்றி பேசுகிறேன் என்றால் என்னையே கூப்பிட்டு விடுவார்களா? என்று மனதுக்குள் பற்றி எரிந்தாலும், அமைதியாக மிகத் தெளிவாக பொறுமையாக அவரிடம் எடுத்துச் சொன்னேன். “நான் குடும்பத்தில் இருக்கிறேன், கணவரோடும் குழந்தையோடும் மிக மிக சந்தோஷமாக இருக்கின்றேன். எனக்கும் ஆண் நண்பர்கள் உண்டு. அவர்கள் எப்போதும் வெறும் நண்பர்கள் மட்டும்தான். எப்போது எல்லைகள் மீறுகிறார்களோ, அப்போது அந்த உறவு அத்தோடு துண்டிக்கப்பட்டுவிடும்.” என்று பொறுமையாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

திடமாக, திமிராகப் பேசிவிட்டு வந்துவிட் டாலும், உள்ளுக்குள் அத்தனை அழுத்தமாக அவமானமாக இருந்தது. பலவந்தப்படுத்த வில்லைதான். ஆனாலும், இதுபோன்ற ஆண்களின் மனப்போக்கு அவமானத்திற்குள் தள்ளுகிறது.

இத்தகைய ஆண்கள் எதன் பொருட்டு வருகிறார்கள்? எதன் பொருட்டு அன்பு செலுத்து கிறார்கள்? பின்பு எது கிடைக்கவில்லை என்று விட்டுவிட்டு செல்கிறார்கள்? என்பதே பல சமயம் புரியாத குழப்பத்தோடு இருக்கும்போது, நானெல் லாம் எதுக்கு எழுதறேன்? எனக்கெல்லாம் என்ன வெங்காயம் தெரியும்? என்று உள்மனம் செருப்பால் அடிக்குது''’ என்று கொட்டித் தீர்த்திருக்கிறார்.

அந்தப் பெண் எழுத்தாளருக்கு ‘மனக் காயத்தை’ஏற்படுத்தியவர் யார்?

சேனல் ஒன்றில் "புதையல்' என்ற பெயரில் எழுத்தாளர்கள் வாழ்க்கை குறித்த ஆவணப்படங் களையும், சிற்றிதழ்களின் வரலாற்றையும், 22 வாரங் களுக்கு அரைமணி நேர நிகழ்ச்சியாக வழங்கியவர் செந்தூரம் ஜெகதீஷ். இவர், அந்தப் பெண் எழுத்தாளருடனான வலைத்தள அரட்டையில், "உன்னை நான் கைப்பிடிச்சு இழுத்தேனா? உனக்கு சம்மதம்னா இணங்கு, புத்தகம் பிரசுரிக்கிறேனு தானே சொன்னேன். என்கிட்ட எந்த பொண்ணு வந்தாலும் இணங்கிப் போய்தான் புக்கு போடுவா. பெரிய சீதாப்பிராட்டினு நெனப்பா உனக்கு? சும்மா செய்வாங்களா உதவி உனக்கு? என்கிட்ட ஏற்கனவே புக்கு போட்ட பொண்ணு நீ என்னை பத்தி போஸ்ட் போட்டத எடுத்துட்டு வந்து தந்தா. பப்ளிக்கா போஸ்ட் போடவேண்டியதுதான? அவதான் என்கிட்ட சொன்னா, நீ பலபேருகிட்ட போகக்கூடிய பொம்பளைனு. என்னை கிழவன்னு எழுதிருக்கியாம். கிழவன்னா கசக்குமா உனக்கு? உடலளவில் நான் கிழவன் இல்லை' என்று பிதற்றியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் செந்தூரம் ஜெகதீஷ், "ஒரு சிறிய பிரியத்தைத்தான் கேட்டேன். எதுவும் வேண்டாம். என்னிடம் உனக்கு விருப்பம் இல்லை என்று பலமுறை நீயும் சொல்லிவிட்டாய். உன்னை நீ மூடிக்கொள். உனக்கு பிடித்தவர்களுடன் பேசு. எனக்கு எதுவும் வேண்டாம். என்னைவிட்டு தூரமாகவே விலகியிரு. நானும் என்றாவது உன்னை விட்டு விலகிவிடுவேன்''’ என்று உருகியிருக்கிறார்.

அந்தப் பெண் எழுத்தாளரோ, "புள்ளைப்பூச்சினு நினைச்சேன். அப்படி இல்லை போல. ஒரு பெண் அவனைப் (செந்தூரம் ஜெகதீஷ்) பத்தி அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட்டுகள், நூறுக்கும் கிட்ட. பொண்ணுங்க சர்லின்னு சொன்னா சர்லின்னு புரியாம திரும்பத் திரும்ப டார்ச்சர் பண்றதுக்கு பேரு அறிவீனம். அவனுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் இருக்கு. என் கணவருக்கு இந்த விவகாரம் தெரிந்துவிட்டதால், என்னால் இதை எளிதாகக் கையாள முடிகிறது''’ என்று குமுறலை வெளிப்படுத்திய நிலையில்... அவருடைய கணவர் செந்தூரம் ஜெகதீஷிடம் பேசியிருக்கிறார். அவரிடம் செந்தூரம் ஜெகதீஷ், "உன் மனைவிதான் விரும்பி வந்து என்னைச் சந்தித்தார்''’எனக் கூறி அதிரவைத்துள்ளார்.

"பெண்கள்மீது பழிபோட ஆண்களுக்கா தெரியாது?'’என்று வெறுத்துப்போன எழுத்தாளரின் கணவர், “"சாக்கடையில் கல் எறிஞ்சா நம்ம மேலதான் தெறிக்கும்'’என்று மனைவியை ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்.

இந்த ஆபாச அழைப்பு குறித்து இன்னொரு பெண் எழுத்தாளர், "புறத்தகத்தின் கருவை அடிப்படையாக வைத்து இயங்கும் பதிப்பகங்கள் பல உள்ளன. எனினும், முற்காலம் போல, புத்தகப் பதிப்பிப்பிற்காக, என்னென்ன வோ நடப்பதெல்லாம், நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பதெல்லாம் கேட்கவே விசித்திரமாக உள்ளது. எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள் இவர்களெல்லாம்?''’எனக் கேள்வி எழுப்புகிறார்.

செந்தூரம் ஜெகதீஷை தொடர்பு கொண்ட போது, "என்னைப் பற்றி யாரோ திட்டமிட்டு பொய்யான தகவல்களை போலியான ஆபாச ஷாட்கள் மூலம் பரப்பியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றிரண்டு வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். நானும் என் மீது குற்றம் சுமத்திய பெண் எழுத்தாளரும் சமாதானமாகி விட்டோம். நானும் அவர் சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கிவிட்டேன்''”எனப் பதற்றத்துடன் பேசினார்.

புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம். ஆனால், பொறாமை கூடாது’ என்றுதானே சொல்லி வந்திருக்கிறோம். இதை வேறுவிதமாகச் சொல்ல வைத்துவிட்டார்களே?

Advertisment