முப்பது ஆண்டுகளில் 136 மரணங்கள் -50 பெண்கள் -26 தற்கொலைகள் -ஆயிரம் விதவைகள் -நிச்சயிக்கப்பட்டு நின்றுபோன 128 திருமணங்கள்.
யார் இவர்கள்? மக்கள்நலப் பணியாளர்கள்!
அரசின் நலத் திட்டங்களை பயனாளிகளுக்கு விளக்கி சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு, பேரிடர்கால கண்காணிப்பு, மா. ஆட்சித் தலைவர் களிடம் மக்கள் குறைகளை வெளிப்படுத்தல், தாலுகா அலுவலகங்களின் திருமண உதவி, ஊனமுற்றோர், முதியோர் உதவித்தொகை, ஃபோலியோ, ரத்தவங்கி, கொசு ஒழிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சிப் பணி, ஏரிகள், குளம் குட்டைகள், வாய்க்கால் தூர்வாருதல், மடைகளை பழுது நீக்குதல், போஸ்ட்ஆபீஸ் த.உ. கணக்கு, குடிஒழிப்பு போன்ற எளியமக்கள் சேவைக்காக 1990-ல் அன்றைய முதல்வர் கலைஞரின் திட்டம். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பலி 13500 ம.நலப் பணியாளர்கள் பணி நீக்கம்.
சங்கம் அமைத்து அரசுடன் போராடி நீதிமன்ற வாசல்களைத் தட்டினார்கள்.
மக்கள் நலப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்படவில்லை. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த பணி நியமனம் நடைபெறவில்லை என்ற அ.தி.மு.க. அரசின் அட்டர்னி ஜெனரல் நவநீதகிருஷ்ணன் (ஊல,ங.ட.), வாதத்தை மறுத்து, வழக்கறிஞர் வைகை, எல்.சந்திரகுமார் வாதத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. சுகுணா அவர்கள், ‘’""ம.ந.பணியாளர் பணி தொழில் நுட்பப்பணி அல்ல. மக்களின் நுண் சத்து, வாழ்க்கைத்தரம், சுகாதாரம் சார்ந்தது. வேலைவாய்ப்பு சட்டம் 1959-ன்படி இப் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரை அவசியமல்ல. அரசு ஊழியர்களின் குழுக்காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டு, காலமுறை ஊதியம் பெறும் இவர்களில் கிராம அடித்தட்டு மக்களைத் தவிர வேறு யாராவது பணியாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்களா? என்ற கேள்வி எழாத நிலையில் இடஒதுக்கீடு வாதம் தேவையற்றது. பணி நீக்கம் செல்லாது'' என்றதுடன் அரசு ஆணைக்கு இடைக்காலத் தடையும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பணியில் தொடர அனுமதி அளித்தும், விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். அரசின் விளக்கத்தை ஏற்காத நீதிமன்றம், ""பணியாளர்கள் அனைவரையும் நாளை காலைக்குள் பணியில் சேர்க்க வேண்டும். அரசின் இறுதி அறிக்கையை நாளை மறுநாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்'' என அறம்மிக்க தீர்ப்பை வழங்கினார்.
ஆனால் ,ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
பணியாளர்களின் வக்கீல் வில்சன் ""உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்'' என்றார். தமிழக அரசுக்காக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘’""போதிய கல்வித் தகுதி கிடையாது. பணி நிரந்தரம் செய்ய இயலாது. வேலை பார்க்காத நிலையில் அரசு சம்பளம் அளிக்கத் தேவையில்லை''’என்று வாதிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதி மன்றம்.
26-4-12 உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வேணுகோபால், எல்.பி.தர்மராஜ் பணியாளர்களை திடீரென்று நிறுத்தியதால் 5 மாத சம்பளம் கொடுக்க வேண்டும் மற்றவை அரசு கொள்கை முடிவு என்றும் அறிவித்ததும், 2014 பேர் அரசுகொடுத்த சம்பள டி.டி.யை வாங்காமல், "எங்களுக்கு வேலைதான் வேண்டும்' என்று அரசு செயலாள ரிடம் திருப்பிக் கொடுத்ததும் தனிக் கதை.
மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்க மாநிலத் தலைவர் இரா.தனராஜ் தனது பணிக்காலத்தில் பல மொடாக்குடியர்களை மதுவின் போதையில் இருந்து மீட்டவர். தான் இறந்தால் என் பாடையைக் கூட குடித்திருப்பவர்கள் தொடக் கூடாது என்று சபதம் இட்டவர். மா.பொ.செயலாளர் க.ஏழுமலை இவர்களுடன் இணைந்த 27 பேர் கொண்ட போராட்டக்குழு முன்னாள் நீதியரசர் நாக.முத்தையா தலைமையில் வழக்கை தூசி தட்டி 29-11-19 தேதி முதல் 16-12-20 வரை ஏழுமுறை விசாரணைக்கு வரவைத்தும் வாய்தா வாங்கியே ஓடி ஒளிகிறது விவசாயி எடப்பாடி அரசு.
அரசியல் புயலில் சூறையாடப்பட்டு இருளில் தவிக்கும் மக்கள் நலப் பணியாளர்கள், தங்கள் வாழ்வில் எப்போது சூரிய வெளிச்சம் வரும் என எதிர்பார்க்கிறார்கள்.
-சுந்தர் சிவலிங்கம்