மூன்றுநாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ் நாடு வருகை தந்தார். இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ் வரம் மண்டபம் பகுதிக்கு வந்தார்.
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது. ராமேஸ்வரத்தில் கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில் தமிழகத்திற்கு போதிய நிதி வழங்காமல் மத்திய அரசு பாராமுகம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தென் மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை காட்ட முயற்சிப்பதாகவும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. மீது தொடர் விமர்சனங் களை தி.மு.க. அரசு முன்வைத்து வரும் நிலையில், பிரதமர் மோடி, இராமேஸ்வரம் கடலில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் ராமேஸ்வரத்திலுள்ள ராமநாத சுவாமி கோயி லில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரை விமானம் நிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
மதுரை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் வரவேற்று வழியனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பிரதமர் மோடியை வழியனுப்ப சென்ற அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முகத்தில் கருப்பு மாஸ்க் அணிந்திருந்தது இணையத்தில் டிரெண்டிங் ஆனது.
இதுகுறித்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்கள், "எங்க அண்ணே சம்பவக்காரருக்கெல்லாம் பெரிய சம்பவக்காரர் சார்! மோடி வந்த அன்று, கேரளாவின் முதல்வர் பினராய் விஜயன், பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோர் மதுரையில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் கலந்துகொள்ள வந்த நிலையில், அன்று காலையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டு, தடபுடலாக விருந்து பரிமாறப் பட்டு குடும்பத்தோடு வெகு நேரம் உரையாடினார்கள். அப்போது எந்த மாஸ்க்கும் அவர் அணிந்திருக்கவில்லை. ஏன், கடந்த இரண்டு வருட மாகவே அவர் மாஸ்க் அணி வதை நிறுத்திவிட்டார். அப்படியிருக்கும்போது அன்று மாலையில் அரசு புரோட்ட கால்படி மோடியை சந்தித்து வழியனுப்பச் சென்றவர், தன் எதிர்ப்பை வேறு வழியில் காட்ட நினைத்து, தன் முகத்தை மறைத்து "கருப்பு மாஸ்க்'கில் மோடிக்கு காட்சி தந்திருக்கிறார். கொஞ்சம் குசும்புக்காரர்தான் எங்க அண்ணே'' என்றார்கள்.