2011-ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு 13 ஆண்டுகள் கடந்தும் இதுநாள் வரையிலும் எந்தப் பதவி உயர்வும் இல்லாததால் பெரும் மனஉளைச்சலில் இருக்கிறார்களாம்.
தமிழகக் காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் காவல்துறை தலைமை இயக்குநர்கள் வரை சுமார் 1,75,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் மாநில அரசால் இரண்டாம் நிலைக் காவலர்கள், நேரடி உதவி ஆய்வாளர்கள் மற்றும் நேரடி காவல் துணை கண்காணிப்பாளர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். மத்திய அரசின் யூ.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நேரடி ஐ.பி.எஸ். அதிகாரிகள் காவல் உதவி கண்காணிப்பாளர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள்.
மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு வதில் நேரடி உதவி ஆய்வாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் இளரத்தம் உள்ளவர்கள் வேகமாகச் செயல்படுவார்கள் என்று அரசு நேரடி உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்துவருகிறது. ஆனால் நேரடி உதவி ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்த வர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு தரப்படாமல் காலம் தாழ்த்துவதால், நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வுசெய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆட்பட்டு பணியில் உற்சாகமின்றி இருந்துவருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதிலும் சுணக்கம் ஏற்படுகிறதாம்.
தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு உதவி ஆய்வாளர்கள் வரை நான்கு படிநிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதேபோல நேரடிக் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல்துறை தலைவர் வரை நான்கு படிநிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசுப் பணிக்கு வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு காவல்துறை தலைமை இயக்குநர்வரை 6 படி நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வுசெய்யப்படுபவர்கள் காவல் துணை கண்காணிப்பாளர் வரை இரண்டு படிநிலைகள் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதுவும் பலருக்கு எட்டாக் கனியாக இருந்துவருகிறதாம்.
2011-ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளர்களாகத் தேர்வுசெய்யப்பட்ட 1000 உதவி ஆய்வாளர்கள் 13 ஆண்டுகள் முடிந்தும் காவல் ஆய்வாளர் பதவி உயர்வு கிடைக்குமா என்று ஏங்கித்தவிக்கின்றனர். மற்ற அரசுப் பணிகளில் சேருபவர்களுக்கு 5 முதல் 7 ஆண்டுகளில் அடுத்த பதவி உயர்வு கிடைக்க, காவல்துறையில் மட்டும் பதவி உயர்வு எட்டாக்கனியாக இருந்துவருகிறது.
நேரடி உதவி ஆய்வாளர் தேர்வு செய்யப்படும் அளவிற்கு ஆய்வாளர் பதவியும், காவல் துணை கண்காணிப்பாளர் பதவியும் ஏற்படுத்தப்படவில்லை. இதை கருத்தில்கொண்டு முன்னால் காவல்துறை தலைமை இயக்குனர் மாநிலம் முழுவதும் கொள்ளை மற்றும் கொலை அதிகம் நடக்கும் 420 காவல் நிலையங்களை ஆய்வாளர் படிநிலைக்கு தரம் உயர்த்த வேண்டி அரசுக்கு கடிதம் அனுப்பிவைத்தார். ஆனால் நிதிநிலையை கருத்தில் கொண்டு அரசு அதை நிலுவையில் போட்டுவிட்டது.
மற்ற மாநிலங்களில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியே (எஸ்.எச்.ஓ.) காவல் ஆய்வாளர் நிலையில் உள்ளார். ஆனால் தமிழ் நாட்டில் 423 காவல் நிலையங்கள் காவல் ஆய்வாளர் இல்லாமல் தவித்துவருகிறது. மரணம் மற்றும் கொடும் குற்ற வழக்குகளை விசாரணை செய்வது அதுசம்பந்தமாக அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்புவது எல்லாம் காவல் ஆய்வாளர்தான். நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பாக அவர்களே அறிக்கை தாக்கல்செய்ய இயலும். கொடும் குற்ற வழக்குகளில் ஆய்வாளர்கள் இல்லாததால் பல வழக்குகள் தண்டனையில் முடியாமல் குற்றவாளிகள் விடுதலை ஆகிவிடுகிறார்கள்.
இருக்கும் காவல் ஆய்வாளர்களும் இரண்டு மூன்று காவல் நிலையங்களைப் பார்ப்பதால் கடும் பணிச்சுமைக்கு ஆளாகிறார்கள். புதிய காவல் மாவட்டம்/ஆணையரகங் களை உருவாக்கும்போது சில பதவி நிலையை ஒப்புவித்து புதிதாக பதவியை உருவாக்குவார்கள். அதுபோல 423 உதவி ஆய்வாளர்கள் பதவியை ஒப்புவித்து ஆய்வாளர் பதவியை உருவாக்கமுடியும். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் கண்டுகொள்ளாத போக்கினாலும் இந்த நிலை நீடிக்கிறது.
ஒரு காலத்தில் இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் இதேநிலை இருந்தபோது முன்னால் முதல்வர் கலைஞர், இரண்டாம் நிலை காவலர் 10 ஆண்டுகளில் முதல்நிலைக் காவலர்களாகவும், 15 ஆண்டுகளில் தலைமைக் காவலர்களாகவும், 25 ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வுபெறும் வகையில் வழிவகை செய்தார். இது காவலர்களின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போதும் அதேபோல ஒரு இக்கட்டே நிலவுகிறது. காவலர்களின் இடர் தீர்க்குமா அரசு?