1964-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் இருந்தபோது முதுகலைப் பட்டமாக தமிழ் கொண்டுவரப்பட்டது. அதே பல்கலைக்கழகம் இப்போது தமிழகத்திலேயே முதல்முறையாக தமிழ்ப் பாடப்பிரிவுக்கு தடைவிதித்தது, தமிழறிஞர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பிரதான நோக்கமே தமிழ் வளர்ச்சிதான் என்று இருந்ததை மாற்றியமைத்தது கவர்னரும் அவருக்குப் பின்னாலிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்தான் என்கிறார்கள் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்கள். பல்கலைக்கழகத்தின் 14 செனட் உறுப்பினர்களில் 9 பேர் பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் 5 பேர் வெளியிலிருந்தும் தேர்வாகின்றனர்.
அதில் கவர்னர் இரண்டு பேரை நியமனம் செய்வார். அப்படி நியமனம் செய்யப்பட்ட இருவருமே ஆர்.எஸ்.எஸ். தலைமையால் பரிந்துரைக்கப்பட்டு வந்தவர்கள். இவர்களின் முழுக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது பல்கலைக்கழகம்.
பல்கலைக்கழகத்தின் அனைத்து கமிட்டிகளிலும் இவர்கள் இருவருமே முக்கிய பங்குவகிக்கிறார்கள். தமிழார்வலர்கள், முற்போக்கு சிந்தனை உள்ளவர்களை இனம்கண்டு ஒதுக்குவதாக இவர்களின் செயல்பாடுகள் உள்ளன என குற்றச்சாட்டு எழுகிறது. துணைவேந்தர் கிருஷ்ணனிடம் இதுகுறித்துப் பேசினோம்...…""யு.ஜி.சி. அறிவுறுத்தல்படி ரெகுலர் கல்லூரியில் என்ன பாடம் உள்ளதோ அதுதான் தொலைதூர பாடத்திட்டத்திலும் இருக்கவேண்டும் என்பது விதி. அதன்படி முதுநிலை பாடப்பிரிவிலுள்ள சமூக அறிவியல், காந்தியன் டாக், மனித உரிமை போன்றவை ரெகுலர் பாடத்திட்டத்தில் இல்லாததால் அதை எடுத்துள்ளோம்''’என்கிறார்.
"தமிழ்ப் பாடத்திட்டம் ரெகுலரில் இருக்கிறதே,…ஏன் எடுத்தீர்கள்?' என்றதற்கு...
""நாங்கள் எடுக்கவில்லை முதுநிலையில் யாரும் தமிழ் படிக்க முன்வராததால் எடுத்தோம்''’ என்கிறார்.
"அப்படிப் பார்த்தால் கடந்த வருடங்களில் சமஸ்கிருதம் படிக்க ஆட்களே முன்வரவில்லை? அப்படியிருந்தும் அது இன்றளவும் நீடிக்க காரணம் என்ன' என்பதற்கு அவரிடம் பதிலில்லை. “""தமிழ் வேண்டும் என்று அப்ரூவலுக்கு அனுப்பியுள்ளேன். நான் தமிழுக்கு எதிரானவன் இல்லை. யூ.ஜி.சி. தமிழுக்கு அப்ரூவல் கொடுத்தால் கட்டாயம் எம்.ஏ. தமிழ் மற்றும் காந்தியன் டாக் பாடப்பிரிவு சேர்க்கப்படும்''’என்று முடித்துக்கொண்டார்
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், ""இளங்கலை தமிழுக்கு அதிகமான மாணவர்கள் படிக்க வருவது எப்படி? நடப்பாண்டு எவ்வளவு பேர் எம்.ஏ. தமிழுக்கு விண்ணப்பம் போட்டார்கள் என்ற புள்ளிவிபரம் வெளியிடுங்கள். வேண்டுமென்றே தமிழைப் புறக்கணிக்க டில்லி மேலிடம் முடிவெடுத்துவிட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழுக்குத் தடையென்பது தமிழராகிய நமக்கு வெட்கக் கேடு''’என்று வேதனையுடன் முடித்தார்.
-அண்ணல்