நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல், டீசல் போல ஜவுளி உற்பத்திக்கு மூலப் பொருளான நூல் விலை உயர்வும் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து ஏறி வருகிறது. இதனால் துணி உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் உழைப்பைக் கொடுத்தும் கடனாளியாக வேண்டிய நிலைதான்…

வேறுவழியே இல்லாமல்தான் துணி உற்பத்தியை நிறுத்தி விசைத்தறிக் கூடங்களைப் பூட்டிவிட்டனர் ஈரோடு பகுதியிலுள்ள விசைத்தறியாளர்கள்.

cc

ஈரோடு, அசோகபுரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை, சூரம்பட்டி, சித்தோடு, லக்காபுரம் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதியில் செயல்பட்டு வரும் விசைத்தறிகளில் 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உற்பத்தி செய்யப்படும் இந்த ரயான் ரகம் குஜராத், மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

Advertisment

இந்த நிலையில் சமீபகாலமாக ரயான் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நூல் விலை உயர்ந்த அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் ரயான் துணி ரகத்தின் விலை உயரவில்லை. தீபாவளியன்று ஒரு கிலோ ரயான் நூலின் விலை ரூபாய் 150-க்கு விற்பனையானது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி கிலோ ரூபாய்.168-க்கு விற்பனையானது. தொடர்ந்து டிசம்பர் 25 ஆம் தேதி கிலோ ரூபாய் 230 ஆக அதிகரித்தது.

இதனால் ரயான் ரகம் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இதையடுத்து ரயான் ரக உற்பத்தியை 11 நாட்களுக்கு நிறுத்திவைப்பது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு விசைத்தறியாளர்கள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. சென்ற 11-ஆம் தேதி முதல் விசைத்தறிக் கூடங்களில் ரயான் ரகம் மட்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பத்துநாளைக் கடந்தும் ரயான் உற்பத்தி நிறுத்தம் நீடித்துவருகிறது.

ஈரோடு பகுதியிலுள்ள 30,000 விசைத்தறிகளில் நாளொன்றுக்கு சுமார் 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி நடைபெறாமல் பாதிக்கப் பட்டுள்ளது. தினமும் ரூபாய்.7.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை ரூபாய் 82 கோடி மதிப்பிலான வர்த்தகம் அப்படியே முடங்கியுள்ளது.

Advertisment

அதேசமயம் மற்ற ரகங்கள் தயாரிப்பு பணிகள் வழக்கம் போல நடைபெற்றுவருகிறது. மூலப் பொருளான பஞ்சு விலை உயரும்போது மட்டுமே நூல் விலை உயரும். ஆனால் பெருமுதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக நூல்கள் பதுக்கப்பட்டு செயற்கையாக விலை ஏற்றுகிறார்கள்.

cc

குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை நூல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யவேண்டும். ஆனால் இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல மத்திய பா.ஜ.க.மோடி அரசு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்குகிறது. சிறு, குறு விசைத்தறியாளர்கள் ரயான் நூலை விலைக்கு வாங்கிதான் ஜவுளி ரகம் உற்பத்தி செய்கிறார்கள். அப்படி உற்பத்தி செய்யப்படும் ஜவுளி வணிகமும் பெரும்பாலும் மொத்த வியாபாரிகள் கையில்தான் உள்ளது.

நூல் விலையை உயர்த்துவதும் பெரு வியாபாரிகள்தான். உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களுக்கு குறைவான விலையை நிர்ணயம் செய்வதும் பெருமுதலாளிகள்தான். கடைசியில் உழைப்பைக் கொடுக்கும் தொழிலாளர்கள் கடனாளியாக அவல வாழ்க்கைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

மத்தியில் ஜவுளித் துறைக்கென்று அமைச்சர் ஸ்மிருதி இரானி இருக்கிறார் அவரிடம் போய் விசைத்தறியாளர்கள் முறையிட்டால் ""நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போல் நான் ஒரு அமைச்சர் மட்டுமே. விலையேற்றம் என் கையில் இல்லை"" என்கிறாராம்... அப்படியென்றால் இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் பொருட் களுக்கு விலையை உயர்த்துவது யார்? எல்லாவற்றையும் தங்களது சுயலாபத்திற்காக பெரு முதலாளிகள்தான் உயர்த்துகிறார்கள்.

நூலுக்கு மூலப்பொருள் பஞ்சு. அதை விளைவிக்கும் விவசாயியிடம் பஞ்சு வாங்குவது பத்து வருடமாக அதே விலைதான். இதைப்பெற்று நூலாக உருவாக்கும் நூல் மில்களுக்கும் அதே விலைதான். இந்த நூலை வாங்கிப் பதுக்கும் பெருமுதலாளிகள்தான் அவர்களின் கொள்ளை லாபத்துக்காக நூல் விலையை ஏற்றுகிறார்கள். சரி நூல் விலையை ஏற்றும் இந்த கொள்ளைக் கூட்டம் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களுக்கு விலையை அதிகரிக்காமல் ஏற்கனவே குறைக்கப்பட்ட பழைய விலையை நிர்ணயம் செய்து அந்த விலைக்குதான் வாங்குவோம் என ஜவுளி உற்பத்தியாளர்களை நசுக்குவது கொடுமையல்லவா?

நமது தேசத்தில் கார்ப்பரேட் உயர, மற்ற உழைக்கும் ஜாதிகளின் கடன் மட்டும்தான் உயர்ந்துகொண்டிருக்கிறது. இதை உணராமல் ஆள்வைத்து எழுதித் தரப்பட்ட ஔவையார் பாடல்வரிகளை மேடையில் நின்றபடி திக்கித்திணறி வாசித்தால் போதும் என்றிருக் கிறார் நமது பிரதமர்.

-ஜீவாதங்கவேல்