1977-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை கைது செய்ய போலீஸார் நுழைந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து, "கைவிலங்கு எங்கே. நான் கைவிலங்கு இல்லாமல் வரமாட்டேன்' என்றார் இந்திரா.
ஜனதா அரசு செய்த மிகப்பெரிய தவறாக அந்த கைது நிகழ்ச்சி அமைந்தது.
2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி காலை 8:30 மணி. லக்னோவில் முதல்வர் ஆதித்யநாத் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரியை சந்திக்க புறப்பட் டார் பிரியங்காகாந்தி. போலீஸ் அவருடைய காரைத் தடுத்தது.
""என்னை உங்களால் தடுக்க முடியாது. மீறி என்னை கைது செய்தால் அதற்கும் தயாராகத்தான் வந்திருக்கிறேன்'' என்று காரைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினார். அவரை தடுக்கும் முயற்சியில்தான் பெண் காவலர் ஒருவர் பிரியங்காவின் கழுத்தைச் சுற்றி கைகளால் வளைத்தார். அவருடைய செயல் பிரியங்காவின் பாதுகாப்பு விதிகளை மீறியது என்ற சர்ச்சையை உருவாக்கியது. காங்கிரஸார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒரு பெண்ணை கைதுசெய்வது இந்திய அரசியலில் எப்போதுமே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்திராவின் பேத்தி பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேசத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு நடத்தும் விதம் மக்கள் மத்தியில் அவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறதா தெரியவில்லை. ஆனால், தன்னை சாமியார் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா நன்றாகவே செக் வைக்கிறார்.
பிரியங்காவும் ராகுலும் குழந்தைகளாக இருக்கும்போதே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதன் விளைவாக பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிலேயே படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டிய சந்தோஷத்தையே இருவரும் இழந்தார்கள். அதன்பிறகு, அவர்களுடைய தந்தை ராஜீவ் கொல்லப்பட்டார். அதையடுத்து, இருவருடைய கல்லூரிப் படிப்புமே ரகசியமாகிவிட்டது. ராகுல்காந்தியின் பெயரையே "ராவ்ல் வின்ஸி' என்று மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தொடக்கத்திலிருந்தே தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தபிறகு பாதுகாப்பை மீறி மக்களிடம் நெருங்கிப் பழகுவதை வாடிக்கையாக்கியிருக்கிறார்கள். இந்நிலையில்தான் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா, அந்த மாநில அரசுக்கு அச்சுறுத்தலாகி வருகிறார். ஆதித்யநாத் அரசுக்கு எதிராக மாயாவதியும், அகிலேஷ் யாதவும் பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்டாத நிலையில், சமீபகாலமாக யோகி அரசின் நடவடிக்கைகளை பிரியங்கா கடுமையாக எதிர்க்கிறார்.
அவருடைய அணுகுமுறை காங்கிரஸாரிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஜார்கண்ட் மாநில தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு ராகுல் மற்றும் பிரியங்காவின் அதிரடி பிரச்சாரம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
2017, மார்ச் மாதம்வரை இந்தியாவின் 71 சதவீத நிலப்பரப்பில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் இருந்தது. ஆனால், இப்போது அது 35 சதவீதமாக குறைந்துவிட்டது. அதாவது, காங்கிரஸ் கட்சியை துடைத்தெறியப் போவதாக கூறிய அமித்ஷா, பா.ஜ.க.வையே காலிசெய்து வருகிறார் என்ற விமர்சனம் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. பா.ஜ.க.வின் இந்துத்துவா செயல்திட்டத்திற்கு மக்கள் ஆதரவில்லை என்பதை அமித்ஷா இன்னும் உணரவேயில்லை.
பா.ஜ.க.விடம் உள்ள மாநில அரசுகளில் உத்தரப்பிரதேசம் மட்டுமே இப்போதைக்கு பெரிய மாநிலம் ஆகும். இங்கு 2022-ல் தேர்தல் நடைபெறப் போகிறது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் பலவகையில் சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாக்குகள் அதன் கையை விட்டுப் போய்விட்டன. அந்த வாக்காளர்கள் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஆதரவாகத் திரும்பினர்.
இப்போது அவர்களுக்கு எதிராக பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. முதல்வர் ஆதித்யநாத் நிகழ்ச்சிக்கு வரும் தலித் மக்கள் சுத்தமாக குளித்துவிட்டு வரவேண்டும் என்று அவர்களுக்கு சோப்பும் ஷாம்பும் கொடுத்து அசிங்கப்படுத்தினார்கள். அதை எதிர்த்து 2017-ஆம் ஆண்டு குஜராத்திலிருந்து 45 தலித்துகள் சோப்பில் செய்யப்பட்ட புத்தர் சிலையை எடுத்துக்கொண்டு லக்னோவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை உ.பி.அரசு கைதுசெய்தது.
அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான எஸ்.ஆர்.தாராபுரி. தலித் அதிகாரியான இவர் தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடிகள் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் நலனுக்காக சேவை செய்துவருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் இருமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார். குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக உ.பி.யில் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். அந்தப் போராட்டத்தில் 18 பேரை உ.பி. போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்தப் போராட்டத்தைத் தூண்டி கலவரம் ஏற்படுத்தியதாகவும் கொலை செய்ய முயன்றதாகவும் பல பிரிவுகளில் தாராபுரிமீது வழக்கு பதிவுசெய்து டிசம்பர் 18 ஆம் தேதியே கைதுசெய்தனர். ஆனால் 20-ஆம் தேதிதான் அவர் கைது செய்யப்பட்ட விவரத்தை வெளியிட்டனர்.
முன்னதாக, "பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துகிறவர்களை பழிதீர்ப்போம்' என்று முதல்வர் ஆதித்யநாத் கடுமையாக எச்சரித்திருந்தார்.
அவருடைய இந்த எச்சரிக்கைக்கு “""காவி உடை அணிந்துகொண்டு, வெறுப்பை பரப்புகிறார். இந்து மதம் உண்மை யையும் இரக்கத்தைதான் போதிக்கிறது'' என்று பிரியங்கா பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில்தான், லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாராபுரி விடுதலையாகி வீட்டுக்கு வந்தார். அவரைச் சந்திக்க பிரியங்கா சென்றபோதுதான் உ.பி. போலீஸார் அவருடைய காரை மறித்தனர்.
அவரைச் சந்தித்த பிறகு பேட்டியளித்த பிரியங்கா, ""நாடு ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறது. இப்போது நாம் நமது குரலை உயர்த்தவில்லை என்றால் அதைக்காட்டிலும் கோழைத்தனம் இருக்க முடியாது. பாதிக்கப் படும் ஒவ்வொரு குடிமகனுக்கு ஆதர வாகவும் நான் நிற்பேன். கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பொறுப்பாளரான நான் எங்கு செல்ல வேண்டும் என்று போலீஸ் சொல்லக்கூடாது'' என்றார்.
ஆனால், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் கட்சி தனியாகவே சந்திக்கும் என்று பிரியங்கா கூறியிருப்பதுதான் புரியவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அதேசமயம், பா.ஜ.க.வை துடைத்தெறிய கம்யூனிஸ்ட்டுகளே காங்கிரஸுடன் கைகோர்க்க தயாராகிவிட்ட நிலையில், விலகி நிற்கும் பகுஜன் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு பிரியங்கா செக் வைக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
-ஆதனூர் சோழன்