காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருவதோடு, பல கேள்விகளையும் எழுப்பிவருகிறது.
அந்த வீடியோவில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் தௌரஹாரா சர்க்கிள் ஆபிசர் பி.பி.சிங், ஒரு கிராமத்தைச் சேர்ந்த, காவல்நிலைய சாவுக்கு உள்ளான குடும்பத்திடமும், அவருக்கு ஆதரவாகப் பேசவந்த கிராமத்தினரிடமும் பேசுகிறார்.
"நாங்க, நீங்க சொல்கிற காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவும் முடியாது. நீங்க கேட்கிற 30 லட்சம் நிவாரணம் தரவும் முடியாது. செத்துப்போனவனோட உடலை எத்தனை நாள் விரும்பறீங்களோ அத்தனை நாள் அடக்கம்பண்ணாம வெச்சுக்கங்க. அது 2 நாளோ… 3 நாளோ… 4 நாளோ… எத்தனை நாள் வேணா இருக்கட்டும். நாங்க கிளம்புறோம்''’என்றபடி எழுந்து கிளம்புகிறார்.
தனது பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ வின் கீழ் பிரியங்கா காந்தி, “"இந்திய அரசியலமைப்புச் சட்டம் தலித்துகளுக்கும், அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் உரிமைகளை வழங்கு கிறது. நீதிபெற்றுத் தருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் மதிக்கப் படுவதில்லை. அழுத்தப்பட்ட மக்களின் உரிமைகளும் மதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு நிகழ்ந்த அட்டூழியங்களைப் பற்றி கேள்வியெழுப்பியபோது, பா.ஜ.க. அரசாங்கம் நடந்து கொண்ட விதத்தைப் பாருங் கள்’என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து அதே வீடியோவை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் பகிர்ந்து, “"பா.ஜ.க. ஒரு இதயமற்ற கட்சி'’ எனப் பதிவிட, விவகாரம் தேசிய அளவில் கவனத் துக்கு வந்துள்ளது.
சரி அங்கு என்னதான் நடந்தது?
லக்கிம்பூர் கெரி பகுதியிலுள்ள ஒரு கிராமம் ஹூலசிபூர்வா. இங்கு வசித்து வந்தவர் ராமச்சந்திர மௌர்யா. சில தினங் களுக்கு முன் காட்டுக்கு விறகுவெட்டச் சென்றிருக்கிறார் ராமச்சந்திரன். அதே சமயம் அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த காவல்துறை ராமச்சந்திரனையும், அவனது கூட்டாளிகளையும் கள்ளச்சாராயம் காய்ச்சும்போது பிடித்ததாகக் கூறுகிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் இயற்றப் பட்டுள்ள குண்டர் சட்டத்தில் ராமச் சந்திரனைக் கைதுசெய்திருக்கிறது.
ஜனவரி 6-ஆம் தேதி கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த இடத்துக்குச் சோதனைக்குச் சென்றபோது, தப்பி ஓடிய ராமச்சந்திரன் நெஞ்சு வலி வந்து இறந்துவிட்டார் என்கிறது காவல்துறை. மாறாக, அவனது குடும்பமோ, கஸ்டடியில் மிருகத்தனமாக அடித்திருக்கிறது.. ராமச்சந்திரனது நிலை மோசமாக இருந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவர் உயிரிழந்திருக்கிறார் என்கிறது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளரான பவான் கௌதம், "மருத்துவர் குழு போஸ்ட் மார்ட்டத்தை மேற்கொண்டது. பிரச்சனை களைத் தவிர்ப்பதற்காக அது வீடியோவாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. போஸ்ட்மார்ட்ட முடிவுகளின்படி மரணம் அதிர்ச்சியால் நடந்துள்ளது. உடல் உள்ளுறுப்புகள் எதுவும் சேதமடையவில்லை''’என்கிறார்.
ராமச்சந்திரனின் மனைவி பூனம்தேவி தனது கணவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாகக் கூறுகிறார். கிராமத்தினர் பலரும் அதை ஆமோதிக்கின்றனர்.
இறந்த ராமச்சந்திரனை மிருகத்தனமாக தாக்கிய காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரவேண்டும். ராமச்சந்திரனுக்கு இழப்பீடாக 30 லட்ச ரூபாய் தரவேண்டும் எனக் கோரி அவரது உடலுடன் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறது. போலீஸ் அந்தக் குடும்பத்தினரிடமிருந்து உடலை வலுக்கட்டாய மாகப் பிடுங்கிச்சென்று, லக்கிம்பூரில் போஸ்ட் மார்ட்டம் செய்திருக்கிறது. அவரது உடலை போலீசார் திரும்பக் கொண்டுவந்து தரவந்த போது கிராமத்தினர் இருசக்கர வாகனங் கள், ட்ராக்டர் கொண்டு மறித்து உடலைப் பெற்று போராட்டம் செய்திருக்கின்றனர்.
அப்போதுதான் சர்க்கிள் இன்ஸ் பெக்டர் பிபி சிங், சமாதானம் பேசவந்து விட்டு ஈரமில்லாத அந்த வார்த்தைகளைப் பேசியிருக்கிறார். இதையடுத்து சுற்று வட்டாரத்திலுள்ள காவல்நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள் குவிக்கப்பட்டு போராடியவர்கள் மீது லத்தி சார்ஜ் மேற்கொள்ளப்பட்டு கும்பல் கலைக்கப்பட்டிருக்கிறது.
இதே லக்கிம்பூர்கெரியில்தான் 2021-ல், போராட்டம் நடத்திய விவசாயிகள் கூட்டத்தில் உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் கார் புகுந்து நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். பிரியங்கா காந்தி வெளியிட்ட வீடியோவால் உ.பி. மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.