தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்த மசோதாவுக்கு கல்வியாளர்களும், எதிர்க்கட்சிகளும், கூட்டணிக்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.
நடந்துமுடிந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதாவில் கல்லூரி நில வரையறையை கொண்டுவந்துள்ளனர். அதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றில் 45, 35, 25 ஏக்கர்கள் இருந்தால் பல்கலைக்கழகம் உருவாக்கிக் கொள்ளலாம் என நில வரையறை ஏற்படுத்தியுள்ள னர். இதனால் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களாக மாறக்கூடுமென் றும், இதனால் ஏழை எளியோர் பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், பழங்குடி மக்களின் உயர்கல்வி பாதிக்கப்படுவ தோடு, பேராசிரியர்களும் பாதிக் கப்படுவார்கள் என்பதால் இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த மசோதா, வெறுமனே நில வரையறை குறித்தானது இல்லை, இது புதிய கல்விக்கொள்கையிலுள்ள தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழுள்ள நில வரையறை. 2030ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த கல்வியும் தனியார் மயமாக்குதல் தான் அதன் திட்டமே. குறிப்பிட் டுள்ள நில வரையறையை பூர்த்திசெய்யும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் விரும்பினால் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியாராக மாறும் எண்ணத்திலேயே இருக்கின்றன. ஏனென்றால், தற்போது அவர்களால் அதிக கட்டணம் வசூலிக்க முடியவில்லை. 10% பேரை தான் கல்லூரி நிர்வாகம் நியமனம் செய்யும், 90% பேர் இட ஒதுக்கீட் டின்மூலம் வருவதால் அதிக வருமானம் பார்க்கமுடியவில்லை.
தற்போது தமிழகத்திலுள்ள 161 அரசு உதவிபெறும் கல்லூரிகளில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். பேராசிரியர்கள் 8,367 பேரும், 3,508 அலுவலர்களும் பணி புரிந்துவருகிறார்கள். இவர்களுக்கு மாதம் 1 லட்சம் முதல் மூன்றரை லட்சம்வரை சம்பளமாகக் கொடுக் கப்படுகிறது. இச்சூழலில் தனியார்மய மாக்கப்பட்டால், அவர்களுக்கான பணி, ஊதியம், சலுகைகளுக்கு உத்தரவாதமில்லை. மாணவர்கள் எண்ணிக்கையை பொறுத்தே சம்பளம் நிர்ணயிக்கப்படும். மாணவர்களுக்கான கல்விக்கட்டணம், இட ஒதுக்கீடு, சலுகைகளும் கேள்விக்குறியாகும்.
இந்தியாவிலேயே கல்வியில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தில் ஏன் இதுபோன்ற மாற்றத்தை கொண்டுவரவேண்டும்? ஒன்றிய அரசுக்கு எதிராக சமூகநீதி பேசும் அரசு, புதிய கல்விக்கொள்கையை ஏற்கமறுத்து போராடும் அரசு, திடீரென இந்த சட்டமசோதாவை ஏன் கொண்டுவர வேண்டுமென்ற கேள்வியை கல்வியாளர்கள் எழுப்புகிறார்கள்.
இந்த பிரச்சனைக்கு, ஒன்றிய அரசும், முந்தைய அ.தி.மு.க. அரசும் செய்த மோசடியே முழுக்காரணமாக முன்னிற்கிறது. 2021ஆம் ஆண்டு, யூனிவர்சிட்டி கிரான்ட் கமிஷன் மூலமாக புதிய கல்விக்கொள்கையை திணித்தது ஒன்றிய அரசு. அதனை ஏற்கமறுத்தது தமிழக அரசு. ஆகையால் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசின் 80% நிதியை தராமல் நிறுத்திவைத்தது. மீதமுள்ள 20% தான் தமிழக அரசு கொடுக்கவேண்டியது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த நான்காண்டுகளில் ஒரு ரூபாய் நிதிகூட ஒன்றிய அரசு வழங்காமல் நிறுத்திவைத்துள்ளதால், ஒட்டுமொத்த நிதிச்சுமையும் அரசின் தலையில் விழுந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/27/highereduction1-2025-10-27-16-32-55.jpg)
இப்படி ஒன்றிய அரசின் நெருக்கடிச்சூழலில், மறுபுறம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவசங்களுக்காக, தமிழகப் பல்கலைக்கழகங்களில் இருந்த கார்பஸ் நிதியை முழுமையாக வழித்தெடுத்துவிட்டது. உதாரணமாக, மெட்ராஸ் யூனிவர்சிட்டியிலிருந்த 5000 கோடி பணத்தை எடுத்து, அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மூலமாக ஜெ.விடம் ஒப்படைத்து, பல்வேறு செலவினங்களுக்கு எடுத்ததாகக் கணக்குகாட்டி னர். இப்படி ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு நிதியை மாற்றுவது வழக்கம்தான், ஆனால் அந்த நிதியை மீண்டும் கொண்டுவந்து சேர்த்தாக வேண்டும். அதை செய்யாமல், ஒட்டுமொத்தமாக அனைத்து யூனிவர்சிட்டி யிலும் நிதியை பூஜ்ஜியமாக்கி வைத்துள்ளனர். இந்த இரண்டையும் சரிக்கட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பல பிரச்சனைகள், பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் தொடர்கின்றன. பிரச்சனைகளில் மாநில அரசு தலையிட் டால் அதை அக்கல்லூரிகள் மதிப்பதேயில்லை. ஒன்றிய அரசின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக்கூறி, மாநில அரசை உதாசீனப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. கடந்த 2008ஆம் ஆண்டில், கலைஞர் முதல்வராக இருந்தபோது, இதுபோன்ற மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது எதிர்ப்பு எழுந்ததால், கல்லூரி பேராசிரியர்களுக்கோ, மாணவர் களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவிதமான முடிவை யும் இந்த அரசு எடுக்காது என்று அவர்களுக்கு உறுதி யளித்து கடிதம் எழுதியிருந்தார். இந்த மசோதா தாக்கல் மூலமாக அரசு உதவிபெறும் கல்லூரிகளின் பிரச்சனை களை பொதுவெளிக்கு கொண்டுவர நினைக்கிறதா? அல்லது ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு இணக்கமாகச் செல்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
இம்மசோதாவுக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்த மசோதா திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இம்மசோதா மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
-சே
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/27/highereduction-2025-10-27-16-32-42.jpg)