கொரோனாவினால் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை இன்னும் அறிவிக்கவே இல்லை. ஆனால், அதற்குள்ளாகவே, சில தனியார் பள்ளி நிறுவனங்கள் உடனே கல்வி, மற்றும் பேருந்து கட்டணத்தை செலுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்துவருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

கும்பகோணம், திருபுவனம், அசூர் பைபாஸ் பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகள், கல்வி கட்டணத்தை உடனே டெபாசிட் செய்யுமாறு மாணவர்களின் பெற்றோரை கட்டாயப்படுத்தி நச்சரிக்க துவங்கியுள்ளனர். அதோடு, வருகிற கல்வி ஆண்டில் முதல் பருவ கட்டணம் ரூ 17 ஆயிரம், மற்றும் நோட்டு, புத்தகங்களுக்கு ரூ 18 ஆயிரம் கட்ட வேண்டும் என வாய்மொழி உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

ss

பள்ளி பேருந்தில் செல்லும் மாணவர்கள், வரும் ஆண்டு கட்டணம் முழுவதையும் உடனே செலுத்த வேண்டும் என்றும், கொரோனா காலங்களுக்கு முன்பு பெற்றோர்கள் கொடுத்த கல்வி கட்டண காசோலைகளின் கணக்கில் வங்கிகளில் பணம் செலுத்த வேண்டும் என்றும், மாற்று சான்றிதழ் கேட்டு பெற்றோர்கள் விண்ணப்பித்தால் ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகத்தின் பல்வேறு உத்தரவுகளால் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை படிக்க வைத்த நடுத்தர, ஏழை குடும்பத்து மாணவர்களின் பெற்றோர்கள் கலங்கி தவிக்கின்றனர்.

இது குறித்து பெயரை வெளியிட விரும்பாத பெற்றோர்கள் சிலர் நம்மிடம் பேசியபோது, ""தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் குடும்பம் நடத்தவே சிரமப்படும் போது, கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம். தனியார் பள்ளிகளில் ஊரடங்கின் போது மாணவர்களிடம் கல்வி கட்டணம் கட்டாய வசூல் செய்யப்படுவது குறித்து எங்களது கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவரது எச்சரிக்கைகளை ஒரு பொருட்டாகவே கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளிகள் எடுத்துக்கவில்லை.

கொரோனா கட்டுப்பாட்டால் அனைத்து வகையான தொழில்களும், வணிகமும் முழுமையாக முடங்கி விட்டது.வருவாய் இல்லாமல் வாடி வருகிறோம்.இந்த நேரத்தில் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறுவது வருத்தமளிக்கிறது. கல்வி கட்டணத்தை எப்படி செலுத்துவது, அரசு இதில் தலையிட்டு எங்களுக்கு உதவிட வேண்டும்'' என்று மிகுந்த கவலையோடு கூறுகின்றனர்.

மேலும், கும்பகோணம் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டண கொள்ளைக்கு பல்வேறு பொதுமக்க ளும், சமுக ஆர்வலர்களும், சமூக வலை தளங்கள் மூலம் எதிர்ப்புகளை பதிவு செய்து எதிர்த்து வருகின்றனர்.

இந்த பிரச்சனை குறித்து மாவட்ட கல்வி அலுவலரின் கவனத்திற்கு கொண்டுசென்றோம். ""இதுவரை எங்க ளுக்கு எந்தவித புகாரும் வரவில்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார்கள்.

- க.செல்வகுமார்