ஒருவார காலமாக மாணவர்களின் செல்போன் டார்ச் ஒளிர்கிறது. கறுப்பு பேட்ஜ் தெரிகிறது. கோரிக்கை மனுக்கள் கோட்டைக்கு அனுப்பப்படுகின்றன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள்தான் தொடர்ந்து போராடுகின்றனர். 2013ல் ஜெ. ஆட்சியில் இதனை அரசுடைமையாக்கி, இதுவரை 2000 கோடி ரூபாய் அரசு நிதி வழங்கப்பட்டிருந்தாலும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் போலவே முதுகலை மருத்துவ மாணவர்களின் கல்வி கட்டணமாக 9.6 லட்சம் மற்றும் இளங்கலை மருத்துவ கல்வி கட்டணமாக 5.5 லட்சம் அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் பல் மருத்துவம் முதுநிலை ரூ 8 லட்சமும், இளநிலைக்கு ரூ 3.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது.
இது கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும் என்று சட்ட மன்றத்திலேயே முதல்வர் அறிவித்தார். அப்படியிருந்தும் இந்தக் கட்டணக் கொள்ளை என்பதால் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றுகூடி தொடர் போராட்டங்களை மேற்கொள் கின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் கேட்டபோது, ""உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது'' என்றார்.
கட்டணக் குறைப்புக்கு அரசும் பல்கலைக்கழகமும் செவிமெடுக்காததால் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் பல்கலைக்கழக வாயிலில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக்களத்தில் இருந்த டாக்டர் ரவீந்திரநாத், ""அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றதை வரவேற்கிறோம். இந்த நிலையில் தற்போது அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் இந்தக் கல்லூரியில் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம் தனியார் கல்லூரியை விட அதிகமாக உள்ளது. எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உடனடியாக உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள இந்தக் கல்லூரியை மருத்துவத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்து ஏழை பிள்ளைகளின் மருத்துவ கனவை நனவாக்க வேண்டும்.
மேலும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் நீதிமன்ற உத்தரவுப்படிதான் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறியது ஏற்புடையது அல்ல. அவர் கூறுவதுபோல் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்பதுதான் உண்மை. சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் பல்கலைக்கழகத்தைத் தாண்டி தமிழக அளவில் விரிவுபடுத்தப்படும்'' என கூறினார்.
-காளிதாஸ்