"சிறைத்துறை ஒழுங்கீனங்கள்! மத்திய சிறை ஒன்றில் மட்டமான செயல்கள்'’என்னும் தலைப்பில், மதுரை மத்திய சிறை உயர்அதிகாரிகளின் வரம்புமீறலான சங்கதிகளை, நக்கீரன் இணையதளத்தில் கடந்த 22-ஆம் தேதி அம்பலப்படுத்தினோம். தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகள், மாநில பெண்கள் சிறப்புச் சிறைகள், மாவட்ட சிறைகள், சீர்திருத்தப் பள்ளிகள், கிளைச் சிறைகள் என எங்கெங்கும் இச்செய்தி வைரலானாலும், மதுரையில் மட்டுமே கைதிகளிடமிருந்து ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணைக்காகச் செல்லும் கைதிகள் மதுரை மத்திய சிறைக்குத் திரும்பும்போது, ஆசனவாயில் மறைத்துவைத்து கஞ்சா கடத்தி வருகிறார்கள்’’ என்று தங்களுக்குக் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், நிர்வாண சோதனை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் சிறைத்துறையினர். கஞ்சா கடத்துபவர்களை மட்டும் அல்லாமல் எல்லோரையும் இப்படி சோதனை செய்வது மனிதஉரிமை மீறல் அல்லவா? என்று உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த கைதிகளுக்கு சிறை அதிகாரிகளின் தரமற்ற நடவடிக்கைகளை நக்கீரன் இணையதள செய்தி பற்றிய விவரமும் தெரியவர ஆவேசமானார்கள்.
கலவரக்காடான சிறை!
இது 23-ஆம் தேதி நடந்த நிர்வாணச் சோதனையின்போது எதிரொலித்தது. குறிப்பிட்ட இரு கைதிகள் தங்களது அறையில் கஞ்சா மற்றும் பிளேடு போன்ற ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என விசாரணைக்காக இழுத்துச் சென்றபோது, சிறைக் காவலர்களிடமிருந்து அவர்களை மீட்க சககைதிகள் முயற்சித்தனர். இதையடுத்து, சிறைக் காவலர்கள் தாக்குதலில் இறங்க, கைதிகள் கல்வீச்சில் இறங்கினர்.
சிறைவட்டம் பல அடுக்குகளை தாண்டிதான் மெயில் ரோட்டில் உள்ள காம்பவுண்டு சுவருக்கே வரமுடியும். ஆனால் அந்தச் சுவரின்மேல் 20-க்கும் மேற்பட்ட இளம் கைதிகள் கைகளில் சாப்பிடும் தட்டை இரண்டாக உடைத்து, அதை தங்கள் உடம்பில் கிழித்துக்கொண்டு ரத்தம் வழிய கற்களை வீசிக்கொண்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் (ஸ்டோர்கீப்பர்) ராஜவேலை கெட்டவார்த்தையால் திட்டி கத்திக்கொண்டிருந்தார்கள். கீழே மக்கள் போக்குவரத்திற்கான ரோடு முழுவதும் கற்கள், கண்ணாடித்துகள்கள் சிதறிக்கிடக்கின்றன. அதிரடி போலீஸார் குவிந்தவண்ணமிருக்க... ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.பி. ஊர்மிளா உள்ளே போனார். அவரைத் தொடர்ந்து வந்த டி.ஐ.ஜி., பழனியை எதிர்த்து கோஷமிட்டனர் கைதிகள். பத்திரிகையாளர்களைப் பார்த்து "நல்லா எடுத்துக்கோ... இவய்ங்க போலீஸா? இல்ல... எங்களை விட மோசமானவய்ங்க. அனைவருமே கொள்ளையடிக்கிறாய்ங்க. சமையல் ஸ்டோர் ரூமில் உள்ள அனைத்து பலசரக்கு சாமான்களும் இவய்ங்க வீட்டுக்கு போயிடும். சோதனை என்ற பெயரில் அவர்களுக்கு பிடிக்காதவர்களை அனைவரின் முன்னால் நிர்வாணமா நிற்க வைத்து கேவலப்படுத்துவாங்க'' என்று கத்திக்கொண்டேயிருக்க... இரண்டுமணிக்குமேல் ஆகியும் யாரும் கீழே இறங்காததால், அந்தப்பகுதி மிகுந்த பதட்டமாகவே காணப்பட்டது. உள்ளே எஸ்.பி. ஊர்மிளா தலையில் ஹெல்மெட் எதுவும் போடாமல் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலிருந்த கைதிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உறுதிமொழி கேட்டு, அதற்கு உத்தரவாதம் கொடுத்து பின்பு அன்பால் அவர்களை கீழே இறங்க வைத்தார் எஸ்.பி. ஊர்மிளா.
இதுபோன்ற கலவரம் இனியும் தொடரக்கூடாது என, 23-ஆம் தேதி நள்ளிரவு கடந்தும், மதுரை மத்திய சிறையில் விசாரணை நடத்தியிருக்கிறார் சட்ட உதவி மேஜிஸ்ட்ரேட். சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, எஸ்.பி. ஊர்மிளா முன்னிலையில் கைதிகளிடம் விசாரணை நடந்திருக்கிறது.
சிறைத்துறை அதிகாரிகளின் அத்துமீறலான காரியங்களும், ஊழல் நடவடிக்கைகளும், மதுரை மத்திய சிறையில் காலம்காலமாக தொடர்கின்றன. கலவரத்தின் பின்னணி குறித்து நமக்குக் கிடைத்த தகவல்கள் இதோ!
பிரச்சினையின் பின்னணி!
""மதுரை மத்திய சிறைச்சாலையின் உயர் பொறுப்பில் இருக்கும் எஸ்.பி. ஊர்மிளாவை சகலத்திலும் ஆட்டுவிக்கிறார் ஸ்டோர் கீப்பரான ராஜவேல். பெயருக்குத்தான் ஸ்டோர் கீப்பரே தவிர, சிறையில் ஆல்-இன்-ஆல் அழகுராஜாவே அவர்தான். மதுரையில் பிரபல பெல் ஜம்போ ஓட்டலில் சூப் குடித்துவிட்டு ரூ.12 ஆயிரத்தை டிப்ஸாக கொடுக்கும் அளவுக்கு அவர் செல்வாக்கானவர். தமிழகத்தில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்புக்கு மொத்தம் ஐந்து சீட்டுகளே உள்ள கல்லூரியில், ஊர்மிளாவின் மகனுக்கு சீட் கிடைக்கச் செய்தவர், தலைமைச் செயலகம் வரையிலும் நெருக்கமாக உள்ள ராஜவேல்.
இத்தனைக்கும் எஸ்.பி. ஊர்மிளா தவறான வழியில் பணம்சேர்க்க விரும்பாத நேர்மையானவர். ஆனால் அவருக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அப்படி கிடையாது. பணமே பிரதானம் என்று நாளும் லஞ்சத்தில் திளைப்பவர்கள். அந்தச் சிறையில் சுமார் 1400 கைதிகள் இருக்கிறார்கள். சாப்பாடு முதலிய செலவினங்களுக்கு ஒரு நாளில் ஒரு கைதிக்கு இவ்வளவு என்று அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையில் பெருமளவு சுரண்டப்படுகிறது. அதனால், கைதிகளுக்குக் கிடைக்கின்ற உணவு தரமானதாக இருப்பதில்லை.
அதிகாரிகளின் உறுத்தலான செயல்கள்!
சிறை வளாகத்தில்தான் எஸ்.பி. ஊர்மிளாவின் வீடு உள்ளது. அவரின் காருக்கு அருகில்தான் தனது புல்லட் பைக்கை நிறுத்துவார் ராஜவேல். சிறை அலுவலர்கள் கையெழுத்து வாங்குவதற்காக அங்கு செல்லும்போது, சில நேரங்களில் கைலியுடன் ஹாயாக அமர்ந்திருப்பார். எங்கே மீட்டிங் நடந்தாலும் எஸ்.பி. ஊர்மிளாவுடன் ராஜவேலும் உடன் செல்வார். சிறைத்துறை என்பது மிகவும் கட்டுப்பாடாகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் கைதிகளிடம் உள்ள ஒழுங்கீனங்களைத் தடுக்க முடியும். துறை சார்ந்தவர்களே ஒழுங்கீனங்களுக்கு இடமளித்தால் அது கைதிகளிடம் வேறுவித போக்குகளை உருவாக்கிவிடும் என்பதற்காகத்தான், இதையெல்லாம் நாங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது''’என்றார் அந்த சிறைவட்டார சோர்ஸ்.
பழகிப் பழகி பணம் குவிக்கின்றனர்!
விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கி சிறைக்கு வரும் வருவாய்த்துறை அதிகாரிகளை வளைத்துப் போடுவார் ராஜவேல். அப்போது சிறையில் இவர்மூலம் கிடைக்கும் சலுகைகளுக்காக காலமெல்லாம் நன்றிக்கடன் செலுத்துவார்கள் அந்த அதிகாரிகள்.
மதுரையில் ‘லக்கி’ என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தும் பெரும் செல்வந்தரும், டிராவல்ஸ் மேனேஜரும் வழக்கில் சிக்கி மதுரை மத்திய சிறையில் அடைபட்டிருந்தனர். அப்போது வழங்கப்பட்ட சொகுசு வாழ்க்கைக்காக, தன்வீட்டு திருமண நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டி.ஐ.ஜி. பழனி, எஸ்.பி. ஊர்மிளா மற்றும் ஸ்டோர் கீப்பர் ராஜவேலை அழைத்து சகல மரியாதையுடன் கவனித்தார் அந்த டிராவல்ஸ் அதிபர். மத்திய சிறைக்குள் வந்துசெல்லும் முக்கிய பிரமுகர்களிடமும், வெளிவட்டாரத்திலும் பழகிப் பழகி பணம் குவிப்பதெல்லாம், மதுரையில் ஒரு நடைமுறையாகிவிட்டது.
குண்டர் சட்டத்தை உடைப்பதற்கான ரூட்!
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைதாவதும், எளிதாக உடைத்து விடுதலை ஆவதும் தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இதற்குக் காரணம் -சிறைத்துறைதான். குண்டாஸில் சிறையில் அடைபடும் கைதியின் பெயரில் சிற்றேடுகள் (க்ஷர்ர்ந்-ப்ங்ற்) மூன்று தயாராகும். அவற்றில் ஒன்று கைதியிடம் சேர்க்கப்படும். இன்னொன்று ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறைக்குப் போய்விடும். மற்றொன்று காவல் நிலையத்தின் வசம் இருக்கும். குண்டாஸ் கைதிக்கும் வழக்கறிஞரான அழகுமணிக்கும் லிங்க் ஏற்படுத்தித் தருவார் மதுரை மத்திய சிறை அலுவலர் கென்னடி. இதற்காக நல்ல தொகை ஒன்று அவருக்கு கமிஷனாக சென்றுவிடும்.
மகளிர் சிறையில் ஜொள்ளு டார்ச்சர்!
மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் பெண் கைதிகளிடம் சில்மிஷம் செய்து மாட்டிக்கொண்டார் டாக்டர் சாமி. அதன்பிறகு, அந்தமாதிரி புகார்கள் எதுவும் இல்லை. ஆனாலும், பெண் கைதிகளைப் பார்ப்பதற்கு வரும் உறவுக்காரப் பெண்களை ‘மதினி’ என்றழைக்கும் வார்டன் சுந்தரபாண்டியனின் தவறான தொடர்புகளால் அவ்வப்போது பிரச்சனைகள் எழுவதுண்டு. இரவு நேரங்களில் மகளிர் சிறைகளுக்குப் போன் செய்து, இரட்டை அர்த்தத்தில் பேசி சுந்தரபாண்டியன் ஜொள்ளுவிடுவது வாடிக்கையாக நடப்பதுதான்.
பெர்சனல் வேண்டாம்!
மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளாவை தொடர்புகொண்டு அவர் குறித்த புகார் தொடர்பாக பேச முற்பட்டபோது, நம்மை முற்றிலும் தவிர்த்துவிட்டார். அடுத்து ஸ்டோர் கீப்பர் ராஜவேல் நம் லைனில் வந்தார். “""நான் கைலியுடன் எஸ்.பி. வீட்டில் இருந்தேன் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். பைக் ஸ்டேன்டில் நிறுத்தினால், என்னுடைய புல்லட்டின் சைடு மிரரைத் திருப்பி விடுகிறார்கள். அதனால்தான், எஸ்.பி. கார் அருகில் நிறுத்துகிறேன். ஓட்டல் ஊழியர்களுக்கு இரவு நேரத்தில் பணம் கொடுத்தது உண்மைதான். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக கடனாக கொடுத்தேன். மற்ற பெர்சனல் சமாச்சாரத்தை விடுங்க... ப்ளீஸ்'' என்றார்.
சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனியிடம் வில்லங்க விவகாரங்கள் குறித்து பேசியபோது, அனைத்தையும் உள்வாங்கிக்கொண்ட அவர், “"இந்த விவகாரத்தையெல்லாம் போனில் எப்படி பேசுவது?'’என்று மிகவும் தயங்கினார். பேசுவது ரெகார்ட் ஆகி வலைத்தளங்களில் லீக் ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோ என்னவோ, அவரைப் பேசவிடாமல் தடுத்தது.
வரம்புமீறலாக மனம்போன போக்கில் நடந்துகொள்ளும் சிறை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டு கைதிகளாக இருப்பவர்கள் மட்டும் சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று கறார் முகம் காட்டியிருக்கின்றனர். நக்கீரன் இணையதள செய்தியின் தாக்கத்தை மறைக்க நினைத்த அதிகாரிகளின் சாயம் கைதிகள் கலவரத்தால் வெளுத்துவிட்டது.
-ராம்கி
படங்கள்: அண்ணல்